Published:Updated:

கண்ணீரில் கேரள சினிமா... கிரிமினல் வழக்கறிஞர் சச்சி, கதை சொல்லியானது எப்படி?! #RIPSachy

`அய்யப்பனும் கோஷியும்' படப்பிடிப்பில் சச்சி
`அய்யப்பனும் கோஷியும்' படப்பிடிப்பில் சச்சி

பிரபல மலையாள சினிமா கதாசிரியரும், இயக்குநரும், சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற `அய்யப்பனும் கோஷியும்' படத்தின் இயக்குநருமான சச்சி மாரடைப்பால் காலமானார்.

இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் `அய்யப்பனும் கோஷியும்'. அய்யப்பன் நாயர் - கோஷி குரியன் இந்த இருவருக்கும் இடையே நடக்கும் பழிவாங்கல்தான் கதை. ஆனால், படம் தரமாக இருக்கும். அய்யப்பன் நாயராக பிஜூ மேனனும், கோஷி குரியனாக பிரித்விராஜும் கலக்கி இருப்பார்கள். லாக்டெளனில் பெரும்பாலானோர் பார்த்து சிலாகித்தப் படம் இது. இந்தப் படத்தின் இயக்குநர் சச்சி நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். இந்தச் செய்தி மலையாள திரை உலகிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சச்சிதானந்தன் என்கிற சச்சி. எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று எட்டு ஆண்டுகள் கிரிமினல் வழக்கறிஞராக பணியாற்றியவர். பின், சினிமா ஆசையில் திரையுலகம் வந்து சேதுநாத்துடன் சேர்ந்து திரைப்படங்களுக்கு கதை எழுதினார். இந்தக் கூட்டணியின் முதல் படம் `சாக்லேட்'. இந்தப் படத்தின் வெற்றி இருவரையும் அடுத்தடுத்து இணைந்து பயணிக்க வைத்தது. `ராபின்ஹுட்', `மேக்கப் மேன்', `சீனியர்ஸ்', 'டபுள்ஸ்' உள்ளிட்ட படங்கள் இவர்களது கூட்டணியில் வெளியாயின. இவர்கள் எழுதிய கதையில் மம்முட்டி நடித்த `டபுள்ஸ்' எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. சேதுநாத் - சச்சி இருவருக்குமிடையே மனக்கசப்பு வர இருவரும் பிரிந்து தனித்தனியே படங்களுக்கு கதை எழுத ஆரம்பித்தனர்.

இயக்குநர் சச்சி
இயக்குநர் சச்சி

அப்படி சச்சி தனியாக வந்து எழுதிய முதல் படம் மோகன்லால் நடித்த `ரன் பேபி ரன்'. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்! `ராம்லீலா', `ஷெர்லாக் டாம்ஸ்', `டிரைவிங் லைசன்ஸ்' உள்ளிட்ட கதைகளை எழுதி தனக்கான தனி முத்திரையை மலையாள திரையுலகில் பதித்தார். கிரிமினல் வழக்கறிஞராக தனக்கு இருந்த அனுபவத்தை படத்தில் புகுத்தி த்ரில்லர் ஜானரில் கலக்கினார், சச்சி. ஆக்‌ஷன், டிராமா, காமெடி எனப் படம் என்னவாக இருந்தாலும் நிச்சயம் த்ரில்லர் இருக்கும். த்ரில்லர் விரும்பிகளின் மோஸ்ட் ஃபேவரிட் இயக்குநராக வலம் வந்தார். கடந்த ஆண்டு வெளியான `டிரைவிங் லைசன்ஸ்' படத்திற்கு இவர்தான் கதை. நடிகர் லாலின் மகன் ஜீன் பால் லால்தான் இயக்குநர். ஒரு சினிமா நட்சத்திரத்திற்கும் அவருடைய ரசிகனுக்குமிடையே நடக்கின்ற ரிவெஞ்ச்தான் கதை. எளிமையான களம்தான். ஆனால், அதில் பயங்கரமாக ஸ்கோர் செய்திருப்பார். இந்தப் படத்தின் ரீமேக் உரிமை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல விலைக்கு பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு உரிமையை நடிகர் ராம்சரண் வைத்துள்ளார்.

`அனார்கலி', `அய்யப்பனும் கோஷியும்' எனும் இரண்டு படங்கள்தான் சச்சி இயக்கத்தில் வெளியாகியிருக்கின்றது. இந்த இரண்டு படங்களிலும் பிரித்விராஜ், பிஜுமேனன்தான் நாயகர்கள். இவர் எழுதிய பெரும்பாலான படங்களில் இந்த இருவரும் இருப்பார்கள். இதில் நஞ்சயம்மா பாடிய பாடல் செம வைரல். ஒரு மொழியில் படம் ஹிட்டானால் உடனே அடுத்த மொழியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம்.

இயக்குநர் சச்சி
இயக்குநர் சச்சி

ஆனால், பல மொழிகளில் ரீமேக் உரிமை பெறப்படுகிறது என்றால் படம் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். `அய்யப்பனும் கோஷியும்' அந்த ரகம். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ரீமேக் உரிமை பெறப்பட்டு அதில் யாரை நடிக்க வைக்கலாம், யாரை இயக்கச் சொல்லலாம் என பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

இந்தியில் நடிகர் ஜான் ஆப்ரஹாம் இப்படத்தின் ரீமேக் உரிமையை வைத்துள்ளார். தனது மூன்றாவது படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார் சச்சி. ஏற்கெனவே இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட இவர் இரண்டாவது சிகிச்சைக்காக திரிசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துவிட்டது. மலையாள திரை உலகில் இவரது இழப்பு மிகப்பெரும் இழப்பு.

இயக்குநர் சச்சி
இயக்குநர் சச்சி

இர்ஃபான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங், இயக்குநர் மற்றும் நடிகர் விசு, பரவை முனியம்மா, சேதுராமன், ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் என இந்த லாக் டெளனில் பல திரையுலகக் கலைஞர்கள் நம்மைவிட்டு நீங்கிவிட்டனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் சச்சியும் இணைந்துவிட்டார் என்பதுதான் சோகம்.

அடுத்த கட்டுரைக்கு