Published:Updated:

டு லெட், உறியடி 2, மான்ஸ்டர், ஜீவி 2019-ன் முதல் பாதியில் வசீகரித்த சிறுபட்ஜெட் படங்கள் #HalfYearOfTamilcinema

2019-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியாகி கவனம் ஈர்த்த சிறு பட்ஜெட் படங்கள்.

1
டு லெட்

டு லெட்

இன்றைய சினிமா சூழலில், ஒரு படத்தை எடுப்பதைவிட ரிலீஸ் செய்வதுதான் மிகப்பெரிய சவலாக இருக்கிறது. மக்கள் ரசிப்பதற்கு நல்ல கதை இருந்தால் போதும். பெரிய படம், சின்ன படம் என்பதெல்லாம் தேவையில்லை. நல்ல படங்களை ஆதரிக்க மக்கள் தயாராக உள்ளனர். பெரிய படங்களுக்கு நிகராக நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்களும் வெற்றிநடை போட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற சிறு பட்ஜெட் படங்களின் பட்டியல் இது.

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்தபடம், 'டு லெட்'. சென்னையில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருக்கும் நடுத்தரக் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகள், எதிர்கொள்ளும் சவால்கள் என இயல்பாகப் பேசியிருப்பார் செழியன். பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்று விருதுகளைக் குவித்த படம். கடந்த ஆண்டு சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வாங்கியுள்ளது. ஒரு வீட்டுக்குள்ளேயே படம் நகர்ந்தாலும், கதையும் திரைக்கதையும் யதார்த்தத்தைப் பிரதிபலித்ததால் 'டு லெட்', டூ குட் எனப் பெயர் வாங்கியது.

2
உறியடி 2

உறியடி 2

2016-ம் ஆண்டு அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கி, நடித்து, தயாரித்த படம் 'உறியடி'. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் சாதிப் பிரச்னையைப் பற்றிப் பேசியது அனைவராலும் பாராட்டப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பிறகு, இதன் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்திருந்தார் விஜயகுமார். இதை நடிகர் சூர்யா தயாரித்திருந்தார். 'தத்தகிட தத்தகிட தித்தோம்' என்ற பிஜிஎம் உடன் இந்த முறை முதலாளித்துவத்துக்கு எதிராகக் களமிறங்கினார். '96' படத்துக்குப் பிறகு, கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். புதிய கூட்டணி மூலமாகத் தற்போது நடந்துவரும் அவலங்களுக்கு எதிராக நெற்றியடி அடித்தது, 'உறியடி 2'.

3
மெஹந்தி சர்க்கஸ்

மெஹந்தி சர்க்கஸ்

இயக்குநர் ராஜுமுருகனின் கதையில் அவரின் அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. இளையராஜா ரசிகனுக்கும் சர்க்கஸ் கலைஞராக இருக்கும் ஒரு பெண்ணுக்குமான காதலை அழகியலோடு பேசிய படம். படத்தில் இளையராஜாவின் இசையும் ஒரு கதாபாத்திரம் என்று சொல்லும் அளவுக்குப் படம் முழுக்க நிறைந்திருப்பார் இளையராஜா. அதைக் கொண்டாடி இசையமைத்திருப்பார் ஷான் ரோல்டன். மெஹந்தியின் காதல், ஜாதவ்வின் துரோகம், ஜீவாவின் விரக்தி என ஒவ்வொரு கேரக்டரின் எமோஷன்களும் படத்தைத் தூக்கி நிறுத்தியது.

4
மான்ஸ்டர்

மான்ஸ்டர்

விலங்குகளை மையமாக வைத்துப் படமெடுப்பது இப்போதைய டிரெண்டாக இருந்தாலும், அதை சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாய் சொல்வது கலை. அப்படி உருவான படம்தான், 'மான்ஸ்டர்'. 'ஒருநாள் கூத்து' படத்தில் மூன்று கதைகளை ஒரு புள்ளியில் இணைத்தவர், இந்த முறை எலியோடு விளையாடி இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் ஆகியோருடன் 'ஐஸ் பாய்' விளையாடிய எலி, குழந்தைகளின் ஃப்ரண்டானது. பல கேங்க்ஸ்டர் கதைகள் வரிசைகட்டும் இன்றையச் சூழலில் எலியை மான்ஸ்டராகக் காட்டியதில் இருக்கிறது, இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் மேஜிக்.

5
கேம் ஓவர்

கேம் ஓவர்

'மாயா' படத்துக்குப் பிறகு, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான படம், 'கேம் ஓவர்'. கேம் டெவலப்பராக நடித்திருந்தார் டாப்ஸி. மெமோரியல் டாட்டூ மூலமாக சீரியல் கில்லரால் கொல்லப்பட்ட பெண் ஒருவர் டாப்ஸியின் வாழ்க்கைக்குள் நுழைகிறார். அதை அறிந்த பின், டாப்ஸிக்கு ஏற்படும் அச்சம் திரையரங்கையும் சூழ்ந்தது. இரண்டாம் பாதி முழுக்க டாப்ஸியுடன் நாம் இருக்கும் ஒவ்வொரு நொடியும் த்ரில்லிங்தான். ஒரு வீடு, டாப்ஸி, வினோதினி, இறுதியில் வரும் சீரியல் கில்லர் அவ்வளவுதான் படமே. இவ்வளவு குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு மிக நேர்த்தியாகக் கேம் ஆடி ஜெயித்திருக்கிறார் அஸ்வின் சரவணன். இப்படத்தின் மிகப் பெரிய பலம் இருட்டான திரையரங்கில் நம்மைப் பதறவைக்கும் ரான் ஈதன் யோகனின் பின்னணி இசை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

6
எல்.கே.ஜி

எல்.கே.ஜி.

கலாய்யும் கவுன்டரும் தன் இரு கண்கள் என நினைக்கும் ஆர்ஜே பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்களின் கதையில் உருவான படம், 'எல்.கே.ஜி'. நடப்பு அரசியலை நையாண்டி செய்து நம் நாட்டின் நிலைமையைக் கலாயாகச் சொன்னது, இப்படம். அறிமுக இயக்குநர் கே.ஆர்.பிரபு இதை இயக்கியுள்ளார். தோற்றுப்போன அரசியல்வாதியாக நாஞ்சில் சம்பத் நடித்திருந்தார். இன்று தமிழ் நாட்டு அரசியலில் நடக்கும் அட்ராசிட்டிகள், மத்தியில் அரங்கேறும் நாடகங்கள் எனத் தைரியமாகக் களமிறங்கியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி. முழுக்க அரசியல் ஸ்பூஃப் படம் என்றாலும், வாக்காளனின் 'ஒரு விரல் புரட்சி' சரியாக இருக்க வேண்டும் என்பதை நகைச்சுவையாக வலியுறுத்திய படம் இது.

7
நெடுநல்வாடை

நெடுநல்வாடை

உறவுகளின் உணர்வை யதார்த்தமாகப் பேசிய படம் 'நெடுநல்வாடை'. படத்தில் ஒரு சில நபர்களைத் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள். தன் நண்பன் செல்வக்கண்ணனின் சினிமா கனவுக்காகக் கல்லூரி நண்பர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து, 'க்ரவுட் ஃபண்டிங்' மூலமாக உருவானது இப்படம். தாத்தா கேரக்டரில் நடித்த 'பூ' ராமு பேசும் வசனங்கள் பலரால் பாராட்டப்பட்டது. நம் பக்கத்து வீட்டில் உள்ள பையனுக்கும் எதிர் வீட்டுப் பெண்ணுக்குமான காதலைப் பார்ப்பதுபோல மிக யதார்த்தமாக இருந்தது, காதல் காட்சிகள். பொதுவாக, படத்தின் புரொமோஷன்களைத் தாண்டி படம் பார்த்தவர்கள் சொல்லி ஒரு சில படங்கள் கவனம் பெறும். அந்த வகை படம்தான், 'நெடுநல்வாடை'.

8
ஜீவி

ஜீவி

'8 தோட்டாக்கள்' படத்துக்குப் பிறகு, வெற்றி நாயகனாக நடித்த படம் 'ஜீவி'. த்ரில்லர் கதையைக் கொஞ்சம் அமானுஷ்யத்தோடு சொல்லி, படம் பார்ப்பவரை சீட்டின் நுனியில் அமரவைத்தார், அறிமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத். தொடர்பியல், முக்கோண விதி என ஃபேன்டஸியை வித்தியாசமாக அணுகிய பாபு தமிழின் கதை 'ஜீவி'யில் பெரிய ப்ளஸ். எதையும் அறிவியலாகப் பார்க்கும் நாயகன் ஒரு தவறு செய்கிறார். அதனால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும், தவறு செய்த நாயகனின் வாழ்க்கை சம்பவங்களும் ஒரே மாதிரி இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதனால் இறுதியில் ஏற்பட இருந்த அசம்பாவிதத்தை எப்படித் தவிர்க்கிறார் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளார், இயக்குநர். த்ரில்லரும் அமானுஷ்யமும் ஒரு மையப்புள்ளியில் இணைத்துக் கதை சொல்லியது 'ஜீவி'யின் அசாத்திய வெற்றி.

9

இவை தவிர, விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் நடித்த 'வெள்ளைப் பூக்கள்', பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'K13' ஆகிய இரண்டும் சிறு பட்ஜெட்டில் வெளியாகி அசரடித்த த்ரில்லர் ஜானர் படங்கள். 'அடுத்து இதுதான்' என்ற நம் எண்ணத்துக்கு டாட்டா சொல்லி, கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க வைத்தது, அவர்களின் 'திக் திக்' திரைக்கதை. அழகான காதலில் உள்ள அன்பு, ஈகோ, முரட்டுத்தனமான கோபம் ஆகியவற்றைச் சொல்லி புதுமை சேர்ததது, இரஞ்ஜித் ஜெயக்கொடியின் 'இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்.'

அடுத்த கட்டுரைக்கு