பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஒவ்வொரு மணிக்கும் ஒரு பரிசு!

சைந்தவி, ஜி.வி.பிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சைந்தவி, ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி... பள்ளிக்காலத்திலிருந்தே இசையோடும், காதலோடும் வளர்ந்த இணையர்கள் இவர்கள். ஹீரோவாகிவிட்டாலும் இசையமைப்பதை விட்டுவிடவில்லை ஜி.வி. கணவர் இசையில் பாடுவது சைந்தவிக்கு எப்போதும் ஸ்பெஷல்.

இந்தக் கூட்டணியின் சமீபத்திய ஹிட் ‘எள்ளுவய பூக்கலையே... ஏறெடுத்தும் பாக்கலையே’ பாடல். ஜி.வி.பிரகாஷுக்கு ஷூட்டிங்கும் சைந்தவிக்கு ரெக்கார்டிங்கும் இல்லாத ஒரு நாளில் அவர்களைச் சந்தித்தேன்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

“சைந்தவி ரொம்ப பொசசிவ்னு கேள்விப்பட்டோமே!’’ என்றதற்கு, “ஆமா. ரொமான்ஸ் சீன் வரும்போது என்னைப் பார்த்து முறைப்பா. மத்தப்படி ஒண்ணுமில்லை” என்ற ஜி.வியிடம், ‘எப்படி அவங்களுக்குப் புரியவெச்சீங்க?’ எனக் கேட்டதற்கு, “என்னுடைய படங்கள் எதுவும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்ததில்லை. ப்ரிவியூ ஷோ, பிரஸ் ஷோன்னு எதுக்கும் வரமாட்டா. அவளுக்கு ஆடியன்ஸ் மத்தியில உட்கார்ந்து அவங்க ரெஸ்பான்ஸ் தெரிஞ்சுக்கத்தான் பிடிக்கும். அதே மாதிரி அவளுடைய கச்சேரிக்கோ, மத்த ரெக்கார்டிங்குக்கோ நான் போகமாட்டேன். எங்க குடும்பத்துல எல்லோருமே அப்படித்தான். காரணம், அங்க போய் அவங்க வொர்க் ஸ்பேஸ்ல தலையிடக்கூடாதுன்னு நினைப்போம். வீட்ல இருந்தா சினிமா பத்திப் பேசிக்கவே மாட்டோம்” என்ற ஜி.வி.பிரகாஷை ஆமோதிக்கிறார் சைந்தவி.

ஜி.வி.பிரகாஷின் நடிப்பு பத்திப் பேசும்போது, “ஒவ்வொரு படத்துக்கும் அவருடைய நடிப்பு மேம்பட்டுக்கிட்டே இருக்கு. ‘டார்லிங்’ பார்த்தபோதே எனக்கு ஷாக். காரணம், புது நபர்கள்கிட்ட அவர் அவ்வளவா பேசமாட்டார். பேட்டிகளிலுமே ரொம்ப அமைதியாதான் பதில் சொல்வார். ஆனா, அந்தப் படத்துல செம ஜாலியா நடிச்சிருந்தார். ஒவ்வொரு படத்துக்கும் அவருடைய ஆக்டிங் கிராஃப் வளர்ந்துகிட்டிருக்கு. குறிப்பா, ‘நாச்சியார்’ல பாலா சார் வேற லெவல்ல இவரைச் செதுக்கினார்.

ஒவ்வொரு மணிக்கும் ஒரு பரிசு!

‘சர்வம் தாளமயம்’ படம் பண்ணும்போது மிருதங்கம் க்ளாஸ் எல்லாம் போனார். எதையும் சாதாரணமா அணுகாமல் அதுக்காக நிறைய மெனக்கெடுறதுதான் அவர் வளர்ச்சிக்குக் காரணமாப் பார்க்குறேன். அவர் நடிச்ச படங்கள்ல இந்த ரெண்டு படங்களும் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். ஏன்னா, அவர் ஜாலியான படங்களா பண்ணிட்டு இருந்தபோது இந்த ரெண்டு படங்கள்தான் அவர் பர்ஃபார்ம் பண்றதுக்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ‘நாச்சியார்’ காத்தவராயனும் ‘சர்வம் தாளமயம்’ பீட்டரும் என் மனசுக்கு நெருக்கமான கேரக்டர்கள்” என சைந்தவி சொல்லும்போது அவர் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி.

‘`காதலிக்கும்போது கண்ட கனவுல நனவான ஏதோ ஒண்ணுன்னா எதைச் சொல்வீங்க?’’ என்ற கேள்விக்கு உடனடி பதில் வருகிறது ஜி.வி.பிரகாஷிடமிருந்து. “கல்யாணமான பிறகு, சொந்தமா ஒரு வீடு கட்டணும். அப்போ நம்ம வீட்ல இது இப்படி இருக்கணும், அது அப்படி இருக்கணும்னு நிறைய பேசி வெச்சிருந்தோம். அந்தக் கனவு போன வருஷம்தான் நனவாச்சு. எப்படி, எங்க வீடு நல்லாருக்கா?” என்று நம்மிடம் ஃபீட்பேக் கேட்டார், ஜி.வி.

ஒவ்வொரு மணிக்கும் ஒரு பரிசு!

“ஸ்கூல்ல என் க்ளாஸ் மூணாவது மாடி, இவருடைய க்ளாஸ் கிரவுண்ட் ஃப்ளோர். இவரைப் பார்க்கணும்னு என் ஃபிரெண்ட்ஸை எல்லாம் கூட்டிக்கிட்டு மூணாவது மாடியில இருந்து கீழே வந்து சாப்பிடுவேன். என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் ‘எதுக்குடி இப்படிப் பண்ற?’னு திட்டுவாங்க. என் ஃபிரெண்ட் மானஷா, அவர் ஃபிரெண்ட் ப்ரீத்தி. இவங்க ரெண்டு பேரைத் தவிர யாருக்கும் நாங்க லவ் பண்றது தெரியாது. ஸ்கூல்ல யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நேர்ல பேசிக்கமாட்டோம். சும்மா அவர் க்ளாஸ் ரூம் வழியா அடிக்கடி போவேன். அவரைப் பார்த்து நான் ஸ்மைல் பண்ணுவேன். அவரும் யாருக்கும் தெரியாமல் என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ணுவார்” என்று புன்னகைக்கிறார் சைந்தவி.

‘`உங்க இசையில சைந்தவி பாடும்போது அந்தப் பாட்டு பயங்கரமா பேசப்படுதே!’’ என்றதற்கு, “சத்தியமா தெரியலைங்க. சில காம்பினேஷன் க்ளிக்காகிடும். நானும் தனுஷும் சேர்ந்து வொர்க் பண்ணுன ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’, ‘அசுரன்’னு நாலு படமுமே பெருசா பேசப்பட்டது. அதே போல, ‘ஒத்த சொல்லால’, ‘சண்டாளி’, ‘கத்தரி பூவழகி’ன்னு என் இசையில வேல்முருகன் பாடும்போது சூப்பரான அவுட்புட் வருது. அது மாதிரிதான் இதுவும்னு வெச்சிக்கலாம். எல்லாப் படத்துக்கும் ஒரே மாதிரிதான் உழைப்பைக் கொடுக்கிறேன்” என்ற ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்தார், சைந்தவி.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

“நடிப்போ, கம்போஸிங்கோ வேலைதான் அவருக்கு முக்கியம். அதுக்குப் பிறகுதான் எல்லாம். கம்போஸிங் முடிச்சுட்டு 2 மணிக்கு வந்துட்டு காலையில 5 மணிக்கு எழுந்து நடிக்கக் கிளம்பிடுவார். சில நேரங்கள்ல காலையில இருந்து நடிச்சுட்டு வீட்டுக்கு வராம நேரா ஸ்டூடியோவுக்குப் போய் வேலை எல்லாம் முடிச்சுட்டுதான் வீட்டுக்கு வருவார். மியூசிக் - நடிப்புன்னு சமாளிக்கிறது சிரமம்தான். ஆனா, அவருக்குப் பிடிச்சிருக்கு” என்றார். ‘’மனைவிகூட நேரம் செலவழிக்க முடியலையேன்னு வருத்தம் இருக்கா?’’ என்ற கேள்விக்கு, “அப்படியெல்லாம் இல்லை. எவ்ளோ வேலை இருந்தாலும் அவங்ககூட நேரம் செலவழிச்சுக்கிட்டேதான் இருக்கேன். ஷூட்டிங் இல்லைன்னா எங்கேயாவது வெளியே போயிடுவோம். இல்லைன்னா, எங்க ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு வருவாங்க. எல்லோரும் சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு ஜாலியா இருப்போம். நாய்க்குட்டிகள் இருக்கு. அதுங்க கூட விளையாடிக்கிட்டிருப்போம். புது வீட்டுக்கு வந்த பிறகு, சைந்தவிகூட அதிகம் நேரம் செலவழிக்கிறேன்” என்கிறார் ஜி.வி.

ஒவ்வொரு மணிக்கும் ஒரு பரிசு!

“என்னை சர்ப்ரைஸ் பண்றதுல அவளுக்கு அவ்ளோ சந்தோஷம். எங்களுக்கு ஜூலை 27 கல்யாண நாள். கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகுற வரை ஒவ்வொரு மாசமும் 27-ம் தேதிக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தா. கல்யாணமாகி என்னுடைய முதல் பிறந்தநாளின்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒவ்வொருத்தர் மூலமா ஒவ்வொரு கிஃப்ட் கொடுத்து அனுப்பினா. இந்த மாதிரி அடிக்கடி நடக்கும். நானும் நிறைய கிஃப்ட் கொடுப்பேன். ஆனா, அவங்க மாதிரி சர்ப்ரைஸ்லாம் பண்ணத்தெரியாது. அவங்ககிட்டயே ‘உனக்கு என்ன வேணும்?’னு கேட்டு வாங்கிக் கொடுத்துடுவேன். எப்படி நம்ம ஐடியா?’’ என்று மனைவியைப் பார்த்து ஜி.வி கண்ணடிக்க, சைந்தவி முகத்தில் புன்னகை மலர்கிறது. ‘`உங்க கணவர்கிட்ட நீங்க வைக்கிற ஒரு ரெக்வெஸ்ட்னா என்ன சொல்வீங்க?’’ என்ற கேள்விக்கு, “நாங்க ரெண்டு பேரும் தோனியுடைய தீவிர ரசிகர்கள். அவரைப் பார்க்கப் போனா என்னை மறக்காம கூட்டிட்டுப் போகணும்னு சொல்லி வெச்சிருக்கேன். தோனிக்கூட ஒரு போட்டோ எடுத்துக்கணும், அவ்ளோதான்” என்றவருக்கு, “உன்னைக் கூட்டிட்டுப் போகாமல் நான் மட்டும் எப்படிப் போவேன்? நிச்சயமா ஒருநாள் தோனியை மீட் பண்ணலாம்” என்று தன் மனைவி கைகளைப் பற்றிக்கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.