Published:Updated:

12 ஆண்டுகள், 5 படங்கள், எல்லாமே கிளாசிக்... ஏன் இருளிலிருந்து தொடங்குகிறார் வெற்றிமாறன்? #Screenplay

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிமாறன் எனும் பொக்கிஷம் ஒவ்வொரு படத்திலும் என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்று அலசும் முயற்சியே இந்தக் கட்டுரை. முதல் பகுதியாக வெற்றிமாறனின் திரைக்கதை வடிவமைப்பைப் பற்றிப் பார்ப்போம்.

வெற்றிமாறனும்  மாறாத வெற்றியும்
வெற்றிமாறனும் மாறாத வெற்றியும்

`பொல்லாதவன்' டு `அசுரன்'... 12 ஆண்டுகள்... 5 படங்கள்... எல்லாமே கிளாசிக். You Make Us Proud வெற்றிமாறன். 'இனி வெற்றிமாறன் நினைத்தாலும் மோசமான படம் எடுக்கமுடியாது' எனப் புகழ்கிறார்கள் சினிமா ரசிகர்கள். ஒவ்வொரு படத்திலும் சிறந்த கதை சொல்லலால் ஒவ்வொரு ரசிகனையும் வியக்கவைத்துக்கொண்டேயிருக்கிறார் வெற்றிமாறன். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிமாறன் எனும் பொக்கிஷம் ஒவ்வொரு படத்திலும் என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்று அலசும் முயற்சியே இந்தக் கட்டுரை. முதல் பகுதியாக வெற்றிமாறனின் திரைக்கதை வடிவமைப்பைப் பற்றிப் பார்ப்போம்.

அவன் ஜாக்கியா களத்துல நின்னு ஒரு சண்டையிலகூட தோத்தது இல்ல...

வெற்றிமாறன், தான் சொல்லும் கதைகளை இருள் சூழலிலிருந்தே தொடங்குகிறார். அதுவும் அக்கதையின் அடர்த்தியான ஓர் இரவிலிருந்து. `விசாரணை'யின் கதை அந்த இருளின் பின்கதையாகவும், `பொல்லாதவன்', `ஆடுகளம்' கதைகள் அந்த இருளின் முன்கதைகளாகவும், `வடசென்னை', `அசுரன்' போன்ற கதைகள் அந்த இருளின் முன், பின் கதைகளாகவும் விரிகின்றன.

ஆடுகளம்
ஆடுகளம்
Screenshot Taken from Sun NXT

இப்படி தொடங்குவதற்கான நோக்கம் என்ன என்ற கேள்விக்கு `நோக்கம்' என்பதுதான் பதிலாக இருக்கும். ஒரு கதையின் மிக முக்கியமான ஒரு பகுதியை, அதன் முடிவைச் சொல்லாது முதல் பத்தியில் எழுதியிருக்கிறார்கள் என்றால், அதன் முடிவு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இயல்பாகவே ஆர்வம் தொற்றிக்கொள்ளும் இல்லையா? அப்போது, கதைக்குள் கதைமாந்தர்களுக்குள் இருக்கும் மைய நோக்கங்கள் தாண்டி, அந்த முதல் பத்தியின் முடிவைச் சொல்லிவிட வேண்டுமென்ற மேலோட்டமான நோக்கத்தை அக்கதை இயல்பாய் அடைகிறது. இதுதான், வெற்றிமாறனின் திரைக்கதை எடுத்த எடுப்பிலேயே நம்மைக் கட்டிப்போடுவதற்கான காரணம்.இரண்டாவது, இருளிலிருந்து தொடங்குவதற்கான இன்னொரு காரணம், அவர் சொல்லவிருக்கும் இருண்மையான கதையில் நிகழப்போகும் வன்முறைக்கு நம்மை முன்கூட்டியே தயார்படுத்தவே. அதற்கேற்றார்போல், அடர்த்தியான சம்பவங்கள் எல்லாம் இருளில் நடப்பதுபோன்றும் வடிவமைக்கிறார்.

``இது எல்லாத்துக்கும் காரணம், நான் ஆசைப்பட்டு வாங்கின இந்த பைக்தான்னு சொன்னா நம்பமுடியுதா'' என பிரபு சொல்கையில், 'ஒரு பைக்கால் இவ்வளவு நடக்குமா' எனும் ஆர்வம் பார்வையாளர்களைத் தொற்றிக்கொள்கிறது. ஏன், எப்படி, எதற்கு என்கிற கேள்விகள் மூளையை ஆக்கிரமித்துவிடுகின்றன. கதைமாந்தர்களான பிரபு மற்றும் ரவியின் நோக்கங்களை மையமாகக் கொண்டு கதை நகர்ந்துகொண்டிருந்தாலும், `ஒரு பைக்கால் எப்படி இதெல்லாம் நடந்தது' என்கிற வினாவுக்கு விடையளிக்கும் நோக்கத்திற்காகவே கதை நகர்வதாக புரிந்துகொள்கிறோம்.

பொல்லாதவன்
பொல்லாதவன்
Screenshot Taken from Sun NXT

"அப்படியென்றால், மேலோட்டமான நோக்கத்திற்காக மட்டுமேதான் வெற்றிமாறனின் படங்கள் கொண்டாடப்படுகின்றனவா" எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை. 'இதற்கெல்லாம் காரணம் ஒரு பைக்', `இதற்கெல்லாம் காரணம் ஒரு சேவல்' என ரத்தமும் சதையுமாக ஒரு கதை சொல்வதற்கு தர்க்க ரீதியாக அத்தனை நியாயங்களை திரைக்கதையில் செய்யவேண்டும். தர்க்கங்களை எல்லாம் உதறித்தள்ள அவர் ஒன்றும் ஃபேன்டஸி படங்கள் இயக்கவில்லை. அங்குதான் வெற்றிமாறன் மெனக்கெடுகிறார் அல்லது இயல்பாகவே அது அவருக்கு கைக்கூடி வருகிறது. அந்த நம்பிக்கையில்தான் தனக்குதானே செக் வைத்துக்கொண்டு, அதிலிருந்து தப்பித்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். ஒரு எஸ்கேப் ஆர்டிஸ்ட்டைப் போல...

வெற்றிமாறன் பெரிதும் மெனக்கெடுவது, கதாபாத்திர வடிமைப்பில். முழுமையான பாத்திர வடிவமைப்பே, திரைக்கதையில் பாதி வென்றதற்கு சமம். மீண்டும் `பொல்லாதவன்' எடுத்துக்கொள்வோம். சிறுவயதிலேயே, 50சிசி மொபட்டை விட 150சிசி பைக்கில் பயணிப்பதையே மகிழ்ச்சியாக, பெருமையாகக் கருதுவான் பிரபு. வளர்ந்து பின்நாளில் ஷோரூமில் விலை கேட்பதையே முழுநேர வேலையாக வைத்திருப்பான். ''பைக் அப்புறம் எனக்கு பிடிச்சது ஹேமா'' என்பான். ஆக, காதலியைவிட பைக்தான் அவனுக்கு எல்லாம்!

பொல்லாதவன்
பொல்லாதவன்
Screenshot Taken from Sun NXT

காதல் வெற்றியடைவதும், வேலை கிடைப்பதும், அப்பாவின் அபிமானத்தைச் சம்பாதிப்பதும் என பைக் வந்தபிறகு பிரபுவின் வாழ்க்கை மொத்தமாய் மாறிப்போகிறது. தன் வாழ்வில் அரங்கேறும் அத்தனை மகிழ்ச்சிக்கும் தன் பைக்தான் காரணம் என நினைக்கிறான். ஒரு தருணத்தில் தோட்டாவிலிருந்து அவன் தலையையே காக்கிறது. இப்படி திரைக்கதையின் மூலம், பிரபு தன் பைக்கிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதை இன்னும் ஆழப்பதித்துவிடுகிறார் வெற்றிமாறன். நம் மனமும் அவர் சொல்லும் கதையை ஏற்றுக்கொள்கிறது.

இதேதான் `ஆடுகளம்' படத்தில், ''சேவல் சண்டைக்காக மனிதர்களை பலி கொடுக்கும் அளவுக்குச் செல்வார்களா'' எனும் கேள்விக்கு தன் திரைக்கதையாலும், கதாபாத்திர வடிவமைப்பாலும் `செய்வார்கள்' எனும் நியாயம் செய்திருப்பார். அது வெறும் சேவல் அல்ல, அவர்களின் மானம், மரியாதை, கௌரவம், பெருமை எல்லாம் அந்தச் சேவலில்தான் இருக்கிறது என நியாயம் சொல்லியிருப்பார்.

ஆடுகளம்
ஆடுகளம்
Screenshot Taken from Sun NXT

வெற்றிமாறன் எப்போதும் அதீத சினிமாத்தனங்களை விரும்புவதில்லை. அதற்கான சிறு சுவடுகூட தன் படங்களில் இருக்கக்கூடாதென நினைக்கிறார். `பொல்லாதவன்' பிரபு, கலர் கலராய் ஆடைகள் அணிந்துகொண்டு உலவுவார். அது அன்றைய காலகட்டத்தில், படத்தின் வணிகத்திற்கான தேவையாக இருந்திருக்கலாம். அல்லது தனுஷின் நாயக பிம்பமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், "உன் புள்ளைக்கு மட்டும் இப்படி கலர்கலரா டிரெஸ் போட எங்கிருந்து காசு வருதோ" என பிரபுவின் அப்பா, அவர் மனைவியிடம் புலம்புவதாகக் காட்சியமைத்திருப்பார்.

அவரின் திரைக்கதையிலும் அதீத சினிமாத்தனமான காட்சிகள் இடம்பெறுவதில்லை, அதைவிடுத்து இயல்பாய் நடக்கக்கூடிய சின்னஞ்சிறு சம்பவங்கள்தான் நகர்த்திச் செல்கின்றன. உதாரணமாக, சேவல் வளர்க்க ஐரினிடம் கைமாற்றாக வாங்கிய ஆயிரம் ரூபாயைத் திருப்பித்தருவதற்காகத்தான் டோர்னமென்ட்டில் போட்டி சேவல் தேடி சுற்றிக்கொண்டிருப்பான் கருப்பு. அதைத்தான் ரத்தினசாமியின் ஆட்கள் பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். பிறகு, அது எங்கோ போய் முடியும்.

ஆடுகளம்
ஆடுகளம்
Screenshot Taken from Sun NXT

`வடசென்னை'யிலும் அன்பு எலக்ட்ரானிக்ஸ் கடையில் திருடப்போய்தான் எல்லாம் நடக்கும். அங்குதான் பத்மாவைச் சந்திப்பான். பிறகு, கடைக்காரனுடனான சண்டையில் கட்டைவிரலில் அடிபட்டு கேரம் விளையாடாமல் தோற்பான். தொடர்ந்து, பட்டாம்பூச்சி விளைவுபோல என்னென்னவோ நடக்கும். இப்படி சின்னஞ்சிறு சம்பவங்களைக் கொண்டு திரைக்கதையை நகர்த்துவதும், அதை மிகையாக விவரித்துக் கொண்டிருக்காமல் கடந்துபோகிற போக்கில் சொல்வதுமே வெற்றிமாறனின் திரைக்கதையில் யதார்த்த தன்மையைக் கூட்டுகிறது. அதேபோல், அந்தச் சின்னஞ்சிறு சம்பவங்களுக்கும் தர்க்க ரீதியாக ஒரு லீட் வைப்பது, வெற்றிமாறனின் அபாரத்திறமையே தவிர வேறொன்றுமில்லை. `பொல்லாதவன்' இறுதிக்காட்சியில் துளை வழியாகத் தப்பியோட முயற்சி செய்யும் ரவியை, தலைமுடியைப் பிடித்து உள்ளிழுத்துப் போடுவான் பிரபு. அதற்கு முன்னமே, "விரோதக்காரன் கையில மயிர் மாட்டுச்சுனு வையி, உயிரைக் கையோட எடுத்துனு போயிடுவான்" என செல்வம் சொல்வதாகக் காட்சியமைத்திருப்பார்.

`வடசென்னை'யில் பத்மாவை பைனாக்குலர் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பான் அன்பு. அது அவனுடைய நண்பனின் பைனாக்குலர். அந்த பைனாக்குலரை ராஜன்தான் அன்புவின் நண்பனுக்குத் தந்திருப்பான். ராஜன், அந்த ஊர் மக்களோடு எவ்வளவு இணக்கமாக இருக்கிறான் என்பதையும் இங்கு ஒரு பைனாக்குலரை வைத்துச் சொல்லியாயிற்று. அன்பு-பத்மா காதலுக்கும் பாலம் போட்டாயிற்று!

வடசென்னை
வடசென்னை

''தன் கணவனை துரோகத்தால் வீழ்த்திய நான்கு காய்களை, பழிக்குப்பழி சுண்டாடி குழிக்குள் கவிழ்க்கும் மனைவியின் கதை. அந்தப் பழிவாங்கலில், துரோகம் அவிழ்த்த அதே வெட்கையை கண்ணாடியாய் பிரதிபலிப்பதில் நிற்கிறது திரைக்கதை. பாதியில் முடிந்துபோகும் 'ராஜனின் கதை'யை முழுதாய் எழுதிமுடிக்க சந்திராவுக்கு ராஜன்தான் தேவைப்படுகிறான். ஆனால், அவன் அவனாக இல்லை. அன்புவாக இருக்கிறான்! கேரம், காதல், அரசியல், எதிரிகள் என ராஜனுக்கும் அன்புவுக்குமான ஒற்றுமைகளை காட்சிகளின் வழி விளக்கி, அதில் உலகமயமாக்கல், ராஜீவ் படுகொலை, எம்.ஜி.ஆர் மறைவு போன்ற அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்களைப் புகுத்தி, நான்-லீனியர் வடிவத்தில் மிரட்டலாய் `திரைக்கதை' சொல்லியது `வடசென்னை'.'' - இது வெற்றிமாறன் `வடசென்னை'காகச் சிறந்த திரைக்கதை விருது வென்றபோது நான் எழுதிய பத்தி.

வெற்றிமாறனின் திரைக்கதைகள் எப்போதும் கண்ணாடியை ஒத்திருக்கின்றன. முதற்பாதியின் பிரதிபலிப்பு இரண்டாம்பாதி. முதல் கதையின் பிரதிபலிப்புதான் இரண்டாம் கதை என்பதாக இருக்கிறது. இவ்வளவு நேர்த்தியாக இது அமையக் காரணம், கதாபாத்திர வடிவமைப்பிலும் அதே யுக்தியைப் பயன்படுத்துவதுதான். பிரபுவுக்கு நல்ல வேலைக்குச் சென்று, காதலியைக் கரம் பிடித்து, வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்கிற நோக்கம். ரவிக்குத் தனியாக தொழில் செய்து, பெரிய கேங்ஸ்டரெனப் பெயர் எடுத்து, வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்கிற நோக்கம். கிட்டத்தட்ட, இருவருக்குமே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டுமென்கிற சுயநல நோக்கங்கள்தான். காதலி செருப்பால் அடிப்பேன் என சைகையில் உணர்த்தினால், `டென் ஸ்டெப்ஸ் பேக்' என நகர்ந்துவிடுபவன் பிரபு. காதலிக்க மறுத்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றியவன் ரவி. இதுதான் இருவரில் நல்லவன், கெட்டவன் எனத் தரம் பிரிக்க வைக்கிறது. ஏன், ரவியை ஒப்பிடுகையில் அத்தனை கொலை செய்த கேங்ஸ்டர் செல்வமே நமக்கு நல்லவன்தான்.

ஆடுகளம்
ஆடுகளம்
Screenshot Taken from Sun NXT

`ஆடுகளம்' படத்தில் பேட்டைக்காரன்தான், கருப்பு. கருப்புதான் பேட்டைக்காரன்! "நீ ஒதுங்கிணும்யா, அவன்தான் அடுத்த பேட்டைக்காரன்னு பேசிக்குறாய்ங்கய்யா" எனப் பேட்டைக்காரனின் குரு, துளசி வசனம் பேசுவார். மனக்கஷ்டங்கள் வந்தால் கருப்பு எப்படி பேட்டைக்காரனின் அரவணைப்பைத் தேடி ஓடுகிறானோ, அதுபோல் பேட்டைக்காரன் துளசியின் அரவணைப்பைத்தான் தேடி ஓடுகிறார். பேட்டைக்காரனுக்கு கருப்பும் துரையும் எப்படியோ, அதுபோலத்தான் துளசிக்குப் பேட்டைக்காரனும் ரத்தினசாமியும்.

`விசாரணை'யின் முதற்பாதியில் ஆந்திர போலீஸிடம் மாட்டிக்கொள்வார்கள். இரண்டாம் பாதியில் அப்படியே தமிழக போலீஸிடம். `வடசென்னை'யில் ராஜனுக்கு நடந்த அத்தனையும் அதேபோல் அன்புவுக்கும் நடக்கும். ராஜன்தான் அன்பு, அன்புதான் ராஜன்! `அசுரன்' படத்தின் சிதம்பரம் மற்றும் முருகன் இருவரின் பாத்திரங்களையும் ஒருசேர கொண்டிருக்கும் சிவசாமியின் கதாபாத்திரம். பதின்பருவத்து சிவசாமியிடம் முருகனின் ரௌத்திரமும் சிதம்பரத்தின் விளையாட்டுத்தனத்தையும் காணமுடியும். சிவசாமிதான் முருகனும் சிதம்பரமும், சிதம்பரமும் முருகனும்தான் சிவசாமி!

அசுரன்
அசுரன்

வெற்றிமாறனின் திரைக்கதையில் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. அது அடுத்த பாகத்தில்!

- வெற்றி தொடரும்!
அடுத்த கட்டுரைக்கு