Published:Updated:

``அந்த நீண்ட முத்தம் ஏன் நிகழவேண்டும்... - வெற்றி மாறனும் மாறாத வெற்றியும்!" பகுதி 2 #Screenplay

பொல்லாதவன்
News
பொல்லாதவன்

ரவி ஏன் இந்தக் கதையின் வில்லனாக இருக்கிறான், ரவி என்கிற கதாபாத்திரம் இந்தக் கதைக்குத் தேவைதானா, செல்வமும் போதை மருந்து கடத்தும் மாஃபியாதான். செல்வமே பிரபுவின் பைக்கை கடத்தியிருந்தாலும், இதேதான் நிகழப்போகிறது. ஏன் தனியாக ரவியின் பார்வையிலும் இந்தத் திரைக்கதை நகர்கிறது?!

வெற்றி மாறனின் திரைக்கதை நுணுக்கங்களைக் கண்டுணர்ந்து எழுத, காலமும் காகிதமும் நிறையவே பிடிக்கும். திரைக்கதை வடிவமைப்பில் 'பொல்லாதவன்' தொடங்கி, 'அசுரன்' வரை ஒவ்வொரு படத்திலும் அடுத்தகட்டப் பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டே வந்திருக்கிறார் அவர். திரையெழுத்துக் கலையில் வெற்றி மாறனின் ஆதிக்கத்தை முழுவதும் உணர ஆதியிலிருந்தே தொடங்குவோம்.

வெற்றி மாறன்
வெற்றி மாறன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``தம்மாத்தூண்டு இருந்துட்டு எவ்ளோ தவ்லத்தா பேசுது பார்த்தியா, ஷார்புடா!" - பொல்லாதவன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதேநேரம், வீண் மிகைப்படுத்தல் அற்ற, நிகழச் சாத்தியமான சம்பவங்களைக் கொண்ட திரைக்கதை, மிக யதார்த்தமான வசனங்கள்... என யதார்த்த சினிமாவுக்கான கூறுகளையும் பெற்றிருக்கிறது. ஆக, `பொல்லாதவன்' வணிக சினிமாவா அல்லது யதார்த்த சினிமாவா' எனக் கேட்டால், `இரண்டுமே!'. வணிக சினிமாவுக்கான கூறுகளையெல்லாம் முடிந்தளவிற்கு யதார்த்த மொழியில் பேச முனைந்திருப்பதே அதற்குக் காரணம். இந்த முனைப்பை முதல் படத்திலேயே காட்டியதில் தொடங்குகிறது, வெற்றி மாறனின் வெற்றிப் பயணம்.

Polladhavan
Polladhavan
screenshot taken from Sun NXT

ஒருவனுக்கு அவன் எதிர்பார்த்த எல்லா மகிழ்ச்சியையும் அள்ளித் தந்த பைக், திடீரென திருடுபோகிறது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு தன் பைக்கை அவன் மீட்டெடுக்கிறான். இது 'பொல்லாதவ'னின் ஒருவரிக் கதை. இதில், `எல்லா மகிழ்ச்சி', 'பல போராட்டங்கள்' என்ற வார்த்தைகள்தான் கதையை வளர்ப்பதற்கான தன்மையைக் கொண்டிருக்கின்றன. காதலில் ஜெயிப்பது, உத்தியோகம் கிடைப்பது, குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவது போன்றவைதான் அவன் எதிர்பார்க்கும் மகிழ்ச்சி என்பதே கதைக்குப் போதுமானதுதான். ஆனால், இவை அனைத்தையும்விட பைக்தான் அவன் எதிர்பார்க்கும் பெரும் மகிழ்ச்சி என்பது கதைக்கும் கூடுதல் திடம் சேர்த்துவிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபு கதாபாத்தித்தை ஏன் பைக் காதலனாக வடிவமைக்க வேண்டும்? சொன்னதுபோல, கதையைத் திடப்படுத்துவதே முதன்மையான நோக்கம். பிரபுவின் கதைக்கான முதல் காட்சியையே அதிலிருந்துதான் கட்டி எழுப்புகிறார். வலுவான அடித்தளம்! ஏன் பிரபு கதாபாத்திரத்தை நினைத்தவுடன் வண்டி வாங்கிவிட முடியாத கீழ் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக வடிவமைக்கிறார்?! காரணம், பைக் வாங்குவது அவனுக்குப் பெரும் கனவாக மாறுகிறது. 'ஒரு ரூபாய் கொடுத்தால் காரே எடுக்கலாம்' என பிரபு சொல்கையில், 'மாசமாசம் டியூ யாருடா கட்டுறது' என்கிறார், பிரபுவின் அப்பா. ஆக, டியூ-வில்கூட பைக் வாங்கமுடியாத அளவில் இருக்கிறது அவன் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல். இதன்மூலம், `இப்படியொரு சூழலில் கஷ்டப்பட்டு வாங்கிய பைக் திருடுபோனால் நீங்கள் சும்மாவா இருப்பீர்கள், அதற்காக ரிஸ்க் எடுப்பீர்கள்தானே' எனத் தன் தரப்பு நியாயத்தை இன்னும் அழுத்தமாக வைத்துவிடுகிறார், வெற்றி மாறன்.

Polladhavan
Polladhavan
screenshot taken from Sun NXT

இன்னொன்று, பைக் வந்தபிறகு பிரபுவின் வாழ்க்கைச் சூழல் நல்ல நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் மிக எளிதாகவே உணர்த்திவிட முடியும். இங்கு, அப்படியொரு கீழ் நடுத்தர வர்க்கத்து இளைஞனுக்குத் திடீரென பைக் வாங்கும் அளவிற்கான பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதையும் தர்க்கரீதியாகச் சொல்லவேண்டிய கட்டாயம் திரைக்கதை ஆசிரியருக்கு ஏற்படுகிறது. அதற்கான காட்சிதான், குடிபோதையில் மிதக்கும் பிரபுவுக்கும், கோபத்தின் உச்சியிலிருக்கும் அவன் அப்பாவுக்கும் பணத்தை மையமாகக் கொண்டு நடக்கும் விவாதம். அந்த விவாதத்தில் குடிபோதையில் இருந்ததால் மட்டுமே பிரபுவால் அவ்வளவு துடுக்காகப் பேசமுடிந்தது என்பதும் கூடுதல் டீட்டெயிலிங். அதற்கு முன் எந்தக் காட்சியிலும் அப்பாவிடம் நேரெதிர் நின்று சத்தமாக ஒரு வார்த்தை பேசியிருக்கமாட்டான்.

பைக் அவன் வாழ்க்கையை அப்படி என்ன மாற்றியது, பைக் ஷோரூமில், `நானும் மூணு வருடமா பார்த்துட்டு இருக்கேன்' என பிரபு சொல்கையில், `அதேதான் மூணு வருடமா பார்த்துட்டேதான் இருக்க, வாங்குறமாதிரி தெரியல' எனக் கடுப்பாவார், அங்கிருக்கும் அதிகாரி. ஹேமா பயணிக்கும் பேருந்தில், `பாஸ், சிக்ஸ் மன்த்தா நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் பாஸ்' என ஒருவன் கெஞ்ச, `நான் ரெண்டரை வருடமா சுத்தின்னு இருக்கேன்டா' என்பான், பிரபு. `படிப்பு முடிஞ்சு மூணு வருடம் ஆகுது. இன்னும் ஏன்டா வேலைக்குப் போகலைன்னு கேட்காம இருக்கோம் பாரு. நம்மளைப் பார்த்தா சிரிப்பு சிரிப்பாதான் வரும்' எனத் தனக்குத்தானே நொந்துகொள்வார், பிரபுவின் அப்பா.

Polladhavan
Polladhavan
screenshot taken from Sun NXT

இப்படி, படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல், வெறும் பைக் விலையைக் கேட்பதும், ஹேமாவைப் பின் தொடர்வதுமாகவே மூன்று வருட வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறான், பிரபு. இந்த மூன்று வருடங்களாக நிகழ்ந்துவிடாத அத்தனை ஆசைகளும் பைக் வந்த சில நாள்களிலேயே நடந்துவிடுகிறது. காரணம், பைக்! சொந்தமாக பைக் இருக்கிறது எனும் காரணத்திற்காகவே வேலை கிடைக்கிறது. `என் காலேஜ் வழியாதானே போற, உன் பைக்ல டிராப் பண்ணிடுறியா' என்பதுதான் பிரபுவிடம் ஹேமா பேசும் முதல் வார்த்தை.

இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது. டிராப் பண்ணச்சொல்லி ஹேமா கேட்பதற்கான சூழல் ஏன் வருகிறது. சாலையில் டிராஃபிக். ஏன் டிராஃபிக் ஜாம், செல்வம் நடுரோட்டில் வைத்து ஒருவனைக் கொலை செய்துகொண்டிருப்பதால். இங்குதான் வெற்றி மாறனின் திரைக்கதை நேர்த்தியைப் புரிந்துகொள்ள முடியும். அவர் எந்தக் காட்சியையும் வீணாக்குவதில்லை. கிடைக்கும் இடத்திலெல்லாம் கதை சொல்லிவிடுகிறார். பிரபுவுக்கும் ஹேமாவுக்குமான முத்தத்தில் அங்கு நடந்த மின்வெட்டுக்கும் பங்கிருக்கிறது. அங்கு மின்வெட்டு நடந்தது யாரால்?! கவுன்சிலரைக் கொலை செய்ய வந்த ரவியால். ஹேமாவை வீட்டில் விட்டுவிட்டு உடனே வந்திருந்தால், பைக் திருடுபோகாமல் தடுத்திருக்கலாம்.

ஆனால், அந்த நீளமான முத்தம்தான் பிரபுவை நீண்ட நேரம் அங்கேயே இருக்கச்செய்கிறது. சரி, அந்த நீண்ட முத்தம் ஏன் நிகழ வேண்டும்?! துணிக்கடையில் பிரபுவுக்கும் ஹேமாவுக்கும் இடையே நிகழும் சண்டை, அதைத் தொடர்ந்த சமாதானம். ஊடலுக்குப் பின்னான கூடல்! இப்படி திரைக்கதையில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும் திடீரென நடந்துவிடாமல், 'பட்டாம்பூச்சியின் விளைவை'ப்போல சின்னச் சின்னதான ஆரம்பப் புள்ளிகளைச் சொல்வதுதான் வெற்றி மாறனைத் திரைக்கதையின் மாஸ்டர் ஆக்குகிறது.

பைக் திருடுபோனதைப் போலீஸிடம் சொன்னால்போதுமே, கண்டுபிடித்துத் தருவார்களே! ஏன், பைக்கைத் தேடி பிரபுவே அலைய வேண்டும். கம்ப்ளைன்ட் பேப்பருக்குப் பின்னால், ஒரு நூடுல்ஸ், ஒரு கொத்து பரோட்டா என உணவுப் பட்டியல் எழுதும் காவல் அதிகாரி, எப்படி பிரபுவுக்குள் நம்பிக்கை ஏற்படுத்துவார்? `இன்சூரன்ஸ் க்ளைம் பண்ணி புது பைக் வாங்கிக்கலாம் மச்சான்' என நண்பன் மாற்று யோசனை சொல்லும்போது, `அதுலாம் தெரியாது, எனக்கு என் பைக் வேணும்' எனப் பிடிவாதமாய் நிற்கிறான், பிரபு. பிடிவாதத்திற்கான காரணம், அந்தப் பைக்கிற்கும், அவனுக்குமிடையேயான பந்தம். ஷோரூமுக்குள் நுழைந்ததும் கண்ணில்படும் ஏதோவொரு பைக்கை அவன் வாங்கி வரவில்லை. அது அவனைப் பிடித்து இழுக்கிறது. இந்த உணர்வுபூர்வமான உறவு அங்கிருந்தே தொடங்குகிறது. ஒருமுறை அவன் உயிரையேகூட காப்பாற்றுகிறது. இந்த உறவுதான் அவனை உந்துகிறது என எல்லா தர்க்கரீதியான கேள்விகளுக்கும் தர்க்கரீதியான ஒரு பதிலைக் கதைக்குள்ளேயே வைத்திருக்கிறார். நாம் யூகிக்க, அனுமானிக்க எல்லாம் தேவையே இல்லை.

Polladhavan
Polladhavan
screenshot taken from Sun NXT

சரி, ரவி ஏன் இந்தக் கதையின் வில்லனாக இருக்கிறான்? ரவி என்கிற கதாபாத்திரம் இந்தக் கதைக்குத் தேவைதானா. செல்வமும் போதைமருந்து கடத்தும் மாஃபியாதான், செல்வமே பிரபுவின் பைக்கை கடத்தியிருந்தாலும், இதேதான் நிகழப்போகிறது. ஏன் தனியாக ரவியின் பார்வையிலும் இந்தத் திரைக்கதை நகர்கிறது... என யோசித்துப் பார்த்தால், பட்டாசான பதில்கள் கிட்டும். சாக்கடைக்குள் ரவியின் கழுத்தில் பேனாவைப் பதித்துப் பிரபு பேசும் வசனத்தில்தான், இவை அனைத்திற்குமான பதில் அடங்கியிருக்கிறது. 'உன்கூட சண்டைபோட்டு என்னால ஜெயிக்க முடியாது. செல்வம் தம்பிடா நீ.' வெற்றி மாறன், தன் நாயகன் கதாபாத்திரத்தை எத்தனை அடியாட்கள் வந்தாலும், எவ்வளவு வலிமையான வில்லன் வந்தாலும் அடித்து நொறுக்கி, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் சாதாரண வணிக சினிமாவுக்கான நாயக கதாபாத்திரமாக வடிவமைக்கவில்லை.

ரவி மாதிரியான ஒரு ரௌடியைப் பிரபு மாதிரியான ஒரு சாதாரண இளைஞனால் ஒன்றுமே செய்யமுடியாது. அதுதான் யதார்த்தம். ரவியைக் கொல்லும் அளவிற்கான வலிமை அவனைப் போன்ற இன்னொரு ரௌடிக்கு மட்டுமே உண்டு. இதற்காகவே அவுட் எனும் கதாபாத்திரத்தை வடிவமைக்கிறார், வெற்றி மாறன். ரவிக்கும், பிரபுவுக்கும் இடையேயான பகையுணர்ச்சியை வளர்க்கும் அதேநேரத்தில், ரவிக்கும் அவுட்டுக்குமான பகை உணர்ச்சியையும் திரைக்கதை வளர்க்கிறது. செல்வமும், ரவியும் இருக்கும் காட்சிகளிலெல்லாம் அவுட்டைப் பற்றிய பேச்சுகளே நிரம்பியிருக்கின்றன.

Polladhavan
Polladhavan
screenshot taken from Sun NXT

செல்வத்திற்கும், அவுட்டுக்கும் இடையேயான உறவுதான் ரவியைப் பழிதீர்க்க அவுட்டை உந்துகிறது. செல்வத்திற்கும், அவுட்டிற்குமான அதே உறவுதான் ரவியின் மனதில் அண்ணனையே கொல்லும் அளவிற்கான வன்மத்தை வளர்க்கிறது. இந்தக் கதைகளையெல்லாம் விரிவாக விவரிக்கவே, ரவியின் பார்வையிலும் திரைக்கதை நகர்வதாகச் சொல்லி, ரவி கதாபாத்திரத்திற்கும் அதிக வெளி அமைத்துக்கொடுத்து. கண்ணாடிப் பிரதிபலிப்பு போன்ற திரைக்கதையைக் கட்டமைக்கிறார்.

முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தைப்போல, வெற்றி மாறனின் திரைக்கதைகள் எப்போதும் கண்ணாடியைச் சார்ந்திருக்கின்றன. முதல் பாதியின் பிரதிபலிப்பு இரண்டாம் பாதி. முதல் கதையின் பிரதிபலிப்புதான், இரண்டாம் கதை என்பதாக இருக்கிறது. இவ்வளவு நேர்த்தியாக இது அமையக் காரணம், கதாபாத்திர வடிவமைப்பிலும் அதே யுக்தியைப் பயன்படுத்துவதுதான். பிரபுவுக்கு நல்ல வேலைக்குச் சென்று, காதலியைக் கரம் பிடித்து, வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்கிற நோக்கம். ரவிக்குத் தனியாக தொழில் செய்து, பெரிய கேங்ஸ்டர் பெயர் எடுத்து, வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்கிற நோக்கம். கிட்டத்தட்ட, இருவருக்குமே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்கிற சுயநல நோக்கங்கள்தான்.

காதலி செருப்பால் அடிப்பேன் என சைகையில் உணர்த்தினால், 'டென் ஸ்டெப்ஸ் பேக்' என நகர்ந்துவிடுபவன், பிரபு. காதலிக்க மறுத்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றியவன் ரவி. இதுதான் இருவரில் நல்லவன், கெட்டவன் எனத் தரம் பிரிக்க வைக்கிறது. ஏன், ரவியை ஒப்பிடுகையில் அத்தனை கொலை செய்த கேங்ஸ்டர் செல்வமே நமக்கு நல்லவன்தான். செல்வம் போன்ற ஒரு நல்ல கேங்ஸ்டர், நிச்சயம் பைக் திருட்டில் ஈடுபடமாட்டான். முக்கியமாக, செல்வம் மாதிரியான ஒரு ரௌடிதான் பைக் திருடு போனதற்கான காரணமென்றால், 'பைக் திருடுபோனது போனதுதான்' எனப் போகவேண்டியதுதான். கதையும் சென்டர் ஸ்டாண்ட் போட்ட வண்டிபோல் நகரவே நகராது.

Polladhavan
Polladhavan
screenshot taken from Sun NXT

`பொல்லாதவன்' படத்தின் முதல் காட்சி இதுதான். இருள் படர்ந்த ஒற்றைச் சந்து, அதன்மேல் 'பொல்லாதவன்' என இளஞ்சிவப்பு வண்ணத்தில் தோன்றி மறைகிறது, பெயர். இதே பாணியைத்தான் தன்னுடைய எல்லாப் படங்களிலும் தொடர்கிறார், வெற்றி மாறன். அதற்கு என்ன காரணம். அடுத்தப் பகுதியில் இன்னும் விரிவாக அலசுவோம்.

- வெற்றி தொடரும்