Published:Updated:

நானும் நீயுமா? - 1 : உச்சத்தில் ஒருவர், ஒரு படி கீழே இன்னொருவர்... தொடரும் இருபெரும் ஆளுமைகளின் கதை!

நானும் நீயுமா? - 1

தமிழ் சினிமாவில் தொடரும் இருபெரும் ஆளுமைகள் குறித்து சுரேஷ் கண்ணன் எழுதும் புதிய தொடர்... நானும் நீயுமா?

நானும் நீயுமா? - 1 : உச்சத்தில் ஒருவர், ஒரு படி கீழே இன்னொருவர்... தொடரும் இருபெரும் ஆளுமைகளின் கதை!

தமிழ் சினிமாவில் தொடரும் இருபெரும் ஆளுமைகள் குறித்து சுரேஷ் கண்ணன் எழுதும் புதிய தொடர்... நானும் நீயுமா?

Published:Updated:
நானும் நீயுமா? - 1
நம்மைச் சுற்றிலும் உள்ள பல விஷயங்களைக் கவனியுங்கள். அவை பெரும்பாலும் இருமைகளால் நிறைந்திருப்பதைக் காணலாம். நன்மை x தீமை, பிறப்பு x இறப்பு, உண்மை x பொய் என்பது போல் ஏராளமான விஷயங்கள்... நாம் அன்றாட வாழ்வில் கலந்து விட்ட கணினியின் அடிப்படை அலகு கூட 0 x 1 என்கிற இருமைதான்.

இந்த இருமைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பிரிக்க முடியாத இணைப்பாக அமைந்து இருக்கும். ஒன்றையொன்று சார்ந்திருக்கும். தொடர்ச்சியாக அமைந்திருக்கும். எதிரெதிர் முனைகளில் நின்று கொண்டிருப்பதான பாவனையைத் தரும். ‘'இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்து விடு'’ என ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய வரியில் இதை அற்புதமாக உணரலாம்.

ஓகே... எதற்காக இந்த மினி வியாக்கியானம் என்றால் எந்தவொரு துறையிலும் இருபெரும் சக்திகள் மட்டும் முன்னணியில் இருக்கும். எதிரும் புதிருமாக நின்று கொண்டிருக்கும். ஒன்றுடன் ஒன்று வலுவாகவும் தொடர்ச்சியாகவும் போட்டியிட்டுக் கொண்டிருக்கும். அப்படி இருந்தால்தான் அந்தத் துறை உயிர்ப்பாக இருந்து வளர்ச்சியடையும். இல்லையெனில் சீக்கிரமே அழிந்து போகும். இந்த இருமைகள் தற்செயலாக உருவாவதல்ல. வெற்றிடத்தை காற்று நிரப்புவது போல இயற்கையே இதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ச்சியாகக் கட்டமைக்கும்.

தியாகராஜ பாகவதர்
தியாகராஜ பாகவதர்

சற்று யோசித்துப் பாருங்கள். நமக்கு இரவு என்கிற விஷயமே இல்லாமல் பகல் என்பது மட்டுமே உண்டு என்றால் அது எத்தனை சலிப்பான, தாங்க முடியாத அனுபவமாக இருக்கும்?! ஒரு திரைப்படத்தில் நாயகன் மட்டுமே இருக்கிறான். தொடர்ந்து வெற்றியடைகிறான். ஆனால் வில்லனே இல்லை என்றால் அந்தத் திரைப்படம் நிச்சயம் தோல்விதானே?!

இந்த இருமைகளின் வரிசையில் தமிழ் சினிமாத் துறையும் விதிவிலக்கல்ல. (ஹப்பாடா... ஒருவழியா டிராக்கிற்கு வந்துட்டேன்!). எந்தவொரு காலகட்டத்திலும் இருபெரும் நடிகர்கள் முன்னணியில் எதிரும் புதிருமாக நின்று கோலோச்சிக் கொண்டிருப்பார்கள். அந்தத் துறையையே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்கள். சூரியன் x நிலவு போல இவர்கள் இருந்தார்கள் என்றால் மீதிமிருக்கும் நடிகர்களால் அவ்வப்போது மின்னும் நட்சத்திரங்களாக மட்டுமே இருக்க முடியும்.

இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரைத் தொடரில் பல்வேறு தகவல்களுடன் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

இந்த வரிசையின் துவக்கத்தில், ‘தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பா் ஸ்டார்’ என்கிற அந்தஸ்துடன் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஒருபுறம் ரகளையாக கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அதன் மறுமுனையில் பி.யு.சின்னப்பா பிரகாசித்துக் கொண்டிருந்தார்.

பாகவதருக்குப் புகழும் செல்வமும் ரசிகர்களின் அபரிதமான வரவேற்பும் ஏராளமாக இருந்தது. தங்கத்தட்டில் சாப்பிடும் அளவிற்கு அவர் ராஜவாழ்க்கை வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

இதைப் போலவே பி.யு. சின்னப்பாவும் சினிமா மூலம் தான் சம்பாதித்த பணத்தில் வீடுகளாக வாங்கிக் குவித்தார். ‘'புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இனி சின்னப்பா வீடு வாங்க தடை செய்யப்படுகிறது’' என்று அறிவிப்பு வெளியிடும் அளவிற்கு செல்வத்தில் மிதந்தார். இருவருமே அசாதாரணமான திறமைசாலிகள். அபாரமான பாடகர்கள். நாடகத்துறையிலிருந்து கிளம்பி மிகவும் சிரமப்பட்டுதான் இந்த உச்சியை அடைந்தார்கள். போலவே அவர்களின் வீழ்ச்சியும் ஏறத்தாழ ஒற்றுமையுடன் பரிதாபகரமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

*********************

நடிகர் பி.யு சின்னப்பா
நடிகர் பி.யு சின்னப்பா

முன்னணியில் ஆட்சி செய்யும் இது போன்ற இரண்டு ஆளுமைகள், நேரெதிரான அடையாளங்களையும் திறமைகளையும் அதே சமயத்தில் அதிசயக்கத்தக்க ஒற்றுமைகளையும் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவர்தான் இதன் உச்சத்தில் இருப்பார். அடுத்தவர் ஒருபடி கீழே இருப்பார். திறமை, புகழ், மக்கள் செல்வாக்கு, வணிக மதிப்பு போன்ற பல அளவீடுகளின் மூலம் இந்த வித்தியாசத்தைக் காணலாம்.

தியாகராஜ பாகவதர் காண்பதற்கு பேரழகர். ஆண்களே மயங்கும் அளவிற்கு அழகு என்றால் பெண்களுக்கு கேட்கவா வேண்டும்? பாகவதரைப் பார்த்து அவரது அழகில் மயங்கி பெண்கள் மூர்ச்சையாகி கீழே விழுந்ததாகக்கூட கதைகள் உண்டு. அதிலும் நேரில் கூட அல்ல. திரையில் பார்த்ததற்கே இந்தக் கதை. போலவே பாகவதரின் குரலிலும் ஆலாபனையிலும் தேன் சொட்டும்.

ஆனால், பாகவதரோடு ஒப்பிடும் போது சின்னப்பா தோற்றத்தில் சற்று கரடுமுரடானவர். ஆனால் குரல் வளம் அபாரமானது. பாகவதருக்கு ஈடானது. இளம் வயதிலேயே சிலம்பம், குஸ்தி போன்றவற்றையும் கற்றிருந்தார் சின்னப்பா. தமிழில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த ஹீரோ இவர்தான். 1940-ல் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் அது.

இது போன்ற ஆளுமைகளுக்கு இடையேயுள்ள போட்டியானது ‘ஆரோக்கியமான போட்டி’ என்று ஊடகங்களில் ரொமான்டிசைஸ் செய்யப்படுவதில் ஓரளவிற்கு உண்மையிருந்தாலும் இருவருக்கு உள்ளேயும் ஒருவரையொருவர் விஞ்ச வேண்டும் என்கிற கடுமையான போட்டி இருக்கும். மக்களின் வரவேற்பை தாங்களே அதிகம் பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பார்கள். இதற்குள் வெளியில் அறியப்படாத பல ரகசிய வரலாறுகளும் முட்டல் மோதல்களும் கண்ணுக்குத் தெரியாத விரோதங்களும் நட்புகளும் இருக்கலாம். (மணிரத்னம் அற்புதமாக இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தை இங்கு நினைவுகூருங்கள்).

ரஜினி
ரஜினி

கோஷ்டி என்கிற விஷயம் இல்லாமல் மனிதக்கூட்டம் உண்டா என்ன? எனவே இது போன்ற ஆளுமைகளுக்கு தனித்தனியான ரசிகக்கூட்டமும் தன்னிச்சையாகவே உருவாகி விடும். இந்த இரு ரசிகர் கோஷ்டிகளும் தங்களுக்குள் மோதிக் கொள்வார்கள். தங்களுக்குப் பிடித்த நடிகர்தான் உயர்வானவர் என்பதற்காக அடித்துக் கொள்வார்கள். இந்தப் போக்கை சமூகவலைத்தளங்களில் இன்றும் கூட பார்க்கலாம்.

ஒரு நடிகரை ஏன் ஒரு சராசரி நபருக்கு பிடிக்கிறது என்பதற்கு புறவயமான காரணங்கள் முதற்கொண்டு அந்தரங்கமான காரணங்களும் நிறைய இருக்கும்.

ரஜினிகாந்த்தின் கறுப்பான தோற்றமும் எளிமையும் முதலில் அவருக்கு சில பின்னடைவுகளை ஏற்படுத்தின. ஆனால் பிற்பாடு அவர் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தை எட்டுவதற்கு அதுவே ஒரு காரணமாக அமைந்ததுதான் வரலாறு. அவரது திராவிடத் தோற்றம், ‘ஹேய்... நம்மளை மாதிரியே இருக்கான்ப்பா’ என்கிற அபிமானத்தையும் உள்ளார்ந்த பிரியத்தையும் ரசிகர்களுக்குள் வளர்த்திருக்கலாம்.

இதன் எதிர்முனையில் எம்.ஜி.ஆரின் தோற்றத்தைக் கவனியுங்கள். பெயரில் சந்திரனை வைத்துக் கொண்டிருந்தாலும் அவர் எந்தவொரு கூட்டத்திற்குள்ளும் வந்து இறங்கும் போதும் ‘'சூரியனே வந்து இறங்கியது போல அந்த இடம் பிரகாசமாக மாறிற்று. அத்தனை சிவப்பாக, தகதகவென்று மின்னினார்'’ என்றுதான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். கறுப்பாக இருக்கிற ரஜினிகாந்த்தும் வெற்றி பெற்றார். சிவப்பாக இருந்த எம்.ஜி.ஆரும் வெற்றி பெற்றார்.

கறுப்பு என்பதற்காகவே ‘ஹேய்... நம்மாள்டா’ என்று ரஜினிகாந்த்தின் மீது தன்னிச்சையான பிரியம் உருவானதைப் போலவே நமக்கு சிவப்பு நிறத்தின் மீதும் உள்ளார்ந்த கிளர்ச்சியும் ரகசிய விருப்பமும் உண்டு. சிவப்பு நிற அழகு க்ரீம்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மிகுந்த லாபத்தை அடைவதின் ரகசியம் இது. இதன் பின்னால் உள்ளது நிற அரசியல். ‘வெள்ளை நிறம் உயர்வானது; அழகானது’ என்று நம் ஆழ்மனதில் விதைக்கப்பட்டிருந்ததற்கு பின்னால் நெடும் வரலாறு உள்ளது. ‘'தாங்கள்தான் நாகரித்தை வளர்த்தவர்கள்; உயர்வானவர்கள். பிற சமூகங்கள் எல்லாம் நாகரிகப்படுத்தப்பட வேண்டியவர்கள்'’ என்று ஐரோப்பியர்களுக்கு உள்ள மேட்டிமைத்தனமான போக்குதான் இதற்கு காரணம். இவ்வகையான வரலாறுகளும் கற்பிதங்களும் இப்போது உடையத் துவங்கியிருக்கின்றன.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் அபரிதமான வெற்றிக்கு அவரின் தோற்றமும் ஒரு முக்கிய காரணமாக இருந்ததை பாகவதருக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

இந்த இருபெரும் ஆளுமைகளில் ஒருவர் மட்டும் எப்படி உச்சியின் முனையை அடைகிறார்; மக்களின் அபரிதமான செல்வாக்கைப் பெறுகிறார், மற்றொருவர் ஏன் ஒருபடி கீழே இருக்கிறார்? கீழே இருக்கிறவர் முன்னவரை விடவும் அதிக திறமைசாலியாக இருந்தும் ஏன் முந்த முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்ள பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

தியாகராஜ பாகவதர் x பி.யு. சின்னப்பா என்கிற இருபெரும் ஆளுமைகளின் வரிசை என்பது பிற்காலத்திலும் அச்சு மாறாமல் அப்படியே தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது வரலாற்றின் கட்டாயம். தேவையும் கூட!

இதைப் பற்றித்தான் அடுத்தடுத்த வாரங்களில் உங்களோடு உரையாடப்போகிறேன்!

இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் மதியம் 12 மணிக்கு 'நானும் நீயுமா?'