Published:Updated:

`அதிசய' ரஜினி; `தம்பிமார்கள்' எஸ்.ஏ.சி; `சான்ஸ் கொடுங்க' விஜய் சேதுபதி... உலக நாயகனின் `உங்கள் நான்' விழாவில் நடந்தது என்ன?!

கார்த்தி
ப.சூரியராஜ்
கமல் ஹாசன்
கமல் ஹாசன் ( உங்கள் நான் )

"நீங்கள் சொல்வதுபோல் நான் உலகநாயகன் இல்லை. நான் உலக சினிமா ரசிகன். அன்பினால் நீங்கள் கொடுத்த பட்டம் அது. நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் சினிமாவின் ரசிகன்."

தமிழ் சினிமாவின் தங்கத்தருணங்களில் ஒன்று, 'கமல் 50' நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் காணொளிகள் இன்றும் யூ டியூபில் ஃபேமஸ். ஐம்பது ஆண்டுகள் திரைத்துறையில் இருந்த ஒரு நடிகனுக்கு திரையுலகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கும் முயற்சி அது. அப்போது, கமல் அரசியலில் இல்லை. மக்கள் நீதி மய்யமும் இல்லை. இப்போது, 'கமல் 60' விழாவில் நண்பர் ரஜினி கலந்துகொள்ள, இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடந்தது.

உங்கள் நான்
உங்கள் நான்
கமல் 60 சிறப்பு விழா
`ஈ.பி.எஸ் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்.. ஆனால், அற்புதம் நடந்தது.. நாளை..!’- கமல் விழாவில் ரஜினி

* நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆறு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சிக்கு, நான்கு மணியிலிருந்தே கூட்டம் மெள்ள மெள்ள உள்நுழைய ஆரம்பித்தது. கமல், தன் வாழ்வில் மறக்க முடியாத, நன்றி சொல்லவேண்டிய 60 பேர்களைக் குறிப்பிட்டுப் பேசிய வீடியோ வெளியானது. கமலின் தனிப்பட்ட வாழ்க்கைமீது சிலர் விமர்சனங்கள் வைத்தாலும், அதில் வாணி கணபதி, சரிகா, கௌதமி என மூவரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னார் கமல். அதேபோல், தன் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல், உரிமையுடன் அவர் 'அம்மா' என அழைத்த இன்னொரு பெயர், சாவித்திரி. 'களத்தூர் கண்ணம்மா'வில் கமலின் அம்மா சாவித்திரி.

* தன் படங்களின் எண்ணிக்கையில் இரண்டறக் கலந்திருந்த இளையராஜாவுக்கு, முதல் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கியிருந்தார் கமல். கலைஞானியின் விழாவை இசையோடு தொடங்கிவைத்தார், இசைஞானி. "ஜனனி... ஜனனி... ஜெகம் நீ, அகம் நீ..." எனும் இறைவாழ்த்துப் பாடலை இளையராஜாவின் குரல் பாடத்தொடங்கியதும் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த மனங்கள் அமைதியாகின. இறை நம்பிக்கை அற்ற சில ரசிகர்களின் இதயங்கள், ஜெகமும் அகமுமாக கமலைப் பாவித்துக்கொண்டன.

* எல்லாவற்றையும் முந்திச் செய்த கமலுக்கு, `முந்தி முந்தி விநாயகனே' பாடலாமென மனோவை அழைத்தார் ராஜா. பின்பு ஏதோ யோசித்து, பாடலைப் பாதி சரணத்தில் முடித்துவிட்டு, 'கதை கேளு கதை கேளு...' என `மைக்கேல் மதன காமராஜன்' பாடலை எடுத்து விட்டபோது, அமைதி கலைந்து மீண்டும் ஆர்ப்பரிப்பு. `கதை கேளு கதை கேளு... கமல் சாரோட கதை கேளு' என பாடலின் நிஜ வரிகளை மாற்றி, கமலின் நிஜக் கதையைப் புகுத்தியிருந்தார். கமலின் 60-க்காக, இளையராஜா எழுதிய பிரத்யேக வரிகள் அவை.

* விழா நாயகன் கமல், ரசிகர்கள் அரங்கிலிருந்து மேடைக்கு வந்தார். `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...' பாடலைப் பாடி, மீண்டும் ஒருமுறை இன்னிங்ஸைத் தொடங்கினார். அதன்பிறகு, இளையராஜாவின் இசையில் அவர் முதல்முறையாகப் பாடிய `பன்னீர் புஷ்பங்களே' பாடலைப் பாடினார். அப்போது, பல மலையாளப் படங்களில் நடித்துவந்ததால், இந்தப் பாடலின் பதிவில் அது மலையாள 'பந்நீராக' இருந்ததை நினைவுகூர்ந்தார் ராஜா. அடுத்து, மலையாளத்திலேயே பாடவேண்டிய பாடல். `சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்' பாடலில் கமலின் குரல் உச்சஸ்தாய்க்குச் சென்றுவரும் இடத்தில், உடல் உண்மையிலேயே சிலிர்த்துப்போனது. கமலின் தெலுங்குக் குரலாகவும், அவரின் பெரும்பகுதிப் பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பி, ஏனோ மிஸ்ஸிங். அவர் பாடிய பாடல்களை மனோ பாடினார்.

கமல் ஹாசன் - விஜய் சேதுபதி
கமல் ஹாசன் - விஜய் சேதுபதி
உங்கள் நான்

* `விருமாண்டி'யில் வரும் `உன்னைவிட...' பாடலின்போது, ஒட்டுமொத்த அரங்கமும் கமலோடு கோரஸ் பாடியது. இளையராஜாவின் பாடல்களில் தொடர்ந்து பாடி அசத்தும் விபாஹரி, ஸ்ரேயா கோஷலுக்காகப் பாடினார். `கண்மணி அன்போடு காதலன்...' பாடலின் போதுதான் கச்சேரியே களைகட்டியது. பாடலின் இடையில் `குணா' சிரிப்பதும், பேசுவதுமாக வரும் இடங்களை அப்படியே கமல் மீண்டும் மேடையில் நிகழ்த்திக்காட்ட, சினிமா நட்சத்திரங்களே நாஸ்டால்ஜியில் திளைத்துப்போனார்கள். `மனிதர் உணர்ந்துக்கொள்ள... இது மனித காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது' என கமல் சொல்லிமுடித்த கனம், `புனிதமானது... புனிதமானது...' என அரங்கமே எக்கோ எஃபெக்டில் பாடி மகிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து கமலுக்கு ஒரு சால்வையைப் போர்த்தி, இளையராஜாவுக்கும் ஒரு சால்வையைப் போர்த்திவிட்டு மின்னலென மறைந்தார் `இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான்.

* `ரகுபதி ராகவ ராஜா ராம்...', `பூங்காற்று புதிரானது...', `இசையில் தொடங்குதம்மா...', `புதுச்சேரி கச்சேரி', `சின்னஞ்சிறு வயதில்...' போன்ற பாடல்களை மனோ, மதுபாலகிருஷ்ணன் மற்றும் இளம் பாடகர்கள் பாடினர். `என் ஜோடி மஞ்சக்குருவி' பாடலில் எல்லோரையும் ஆட்டம் போடவைத்தது மனோவின் குரலும் டிரம் கலைஞரின் கரங்களும்.

* ராஜாவின் கச்சேரிக்கும் பிரபலங்களின் வாழ்த்துரைக்கும் இடையே, ஆங்காங்கே பர்ஃபாமன்ஸ் தலைதூக்கியது. தமன்னா அறிமுகம் செய்துவைக்க, ஸ்ருதி கமலின் பாடல்களை `வெஸ்டர்னைஸ்' செய்து பாடினார். `விஸ்வரூபம்' படத்தின் `உன்னைக் காணாது' பாடலுக்கு நடனமாடினார், பூஜாகுமார். கமலின் பல பாடல்களுக்குத் தொடர்ந்து ஆடி ஆச்சர்யப்படுத்தினார், குட்டி ஹாஸன் அக்ஷரா.

கமல் ஹாசன் - இளையராஜா
கமல் ஹாசன் - இளையராஜா
உங்கள் நான்

* "நானெல்லாம் அறுபது வருஷம் வாழ்வேனான்னே யோசிப்பேன். ஆனா, அறுபது வருஷமா ஒருத்தர் சினிமாவுல நிற்கிறார்னு யோசிக்கிறப்பவே பிரம்மிப்பா இருக்கு. அந்த அறுபது வருஷ அனுபவமே அவ்வளவு பிரமாண்டமா இருக்கு. கமல் சார், ரஜினி சார் மாதிரி பல ஆளுமைகள் இருக்குற இந்த மேடையில் நிற்கவே நான் புண்ணியம் பன்ணியிருக்கணும். நான் என் வாழ்க்கையில் பண்ண நல்ல விஷயம், நான் சினிமா பார்க்கவே இல்லை. ஒருவேளை நான் பார்த்திருந்தா, அதுவும் கமல் சார் நடிச்ச படங்களைப் பார்த்திருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேன். அவர் படங்கள் பார்த்து புரியறதுக்கே எனக்கு இத்தனை வருஷம் தேவைப்பட்டது. கமல் சார், தன் ரசிகர்களைக் குறைச்சு எடைபோடுறதே இல்லை. இயற்கைக்கு முன்னாடி நாம ஒண்ணுமே இல்லைங்கிறதை நான் நம்புவேன். கடலுக்கு முன்னாலே நிற்கும்போது, பெரிய மலைக்கு முன்னாலே நிற்கும்போது நாமெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு தோணுமில்லையா. அப்படிதான், கமல் சார் முன்னாடி நான் நிற்கும்போதும் ஃபீல் பண்றேன். அவரை இயற்கையின் உருவமாத்தான் பார்க்குறேன்.

`நம்மவர்' படத்தின் ஷூட்டிங்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்டா போயிருந்தேன். பார்க்கச் சின்னப் பையன் மாதிரி இருக்கேன், காலேஜ் பையன் ரோலுக்கு செட் ஆகாதுனு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. `இந்தியன்-2'ல நடிக்க வாய்ப்பு வந்தது, அதையும் பண்ணமுடியாமப் போயிடுச்சு. ரஜினி சார்கூட நடிச்சுட்டேன், கமல் சார்கூட நடிக்கணும்னு ஆசைப்படுறேன். ஒரு சான்ஸ் கொடுங்க சார், ப்ளீஸ். உங்ககூட வேலை பண்ணணும், நீங்க எப்படி வேலை பார்க்குறீங்கன்னு பார்க்கணும். சினிமாவைப் பொறுத்தவரை கமல் சார், தன் ரசிகனை ஒரு துளிகூட ஏமாற்ற மாட்டார். அரசியலிலும் அதேமாதிரி ஏமாற்ற மாட்டார்னு நம்புறேன். `மக்கள் நீதி மய்யம்'ங்கிற பெயரே அவ்வளவு அழகா இருக்கு" என மனதுக்குள் இருந்ததைப் பேசினார் விஜய் சேதுபதி.

* விஜய்யின் தந்தை எனும் ஆரவாரத்தோடு மேடை ஏறினார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். ''எந்தத் தொழில்ல இருக்கறவங்களும் அரசியலுக்கு வரலாம். ஆனால், சினிமா தொழிலில் இருப்பவன் அரசியலுக்கு வரக்கூடாது. அப்படி சொல்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. கடந்த 50 ஆண்டுகால தமிழக முதல்வர்கள், அரசியலில் இருந்தவர்களே. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என அனைவரும் சினிமாதான். கமல் துணிச்சலோடு அரசியலுக்கு வந்துவிட்டார். முதலில் அந்தத் துணிச்சலை நாம் பாராட்ட வேண்டும். அரசியலுக்கு வருவது சாதாரண விஷயமில்லை. அதேபோல், சூப்பர் ஸ்டார் அவர்களும் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும். தயவுசெய்து ஏமாற்றிவிடாதீர்கள். இருவரும் இரண்டு ஜாம்பவான்கள். கமல் அவர்கள் அரசியலில் பெரிய சாதனை செய்ய வாய்ப்பிருக்கிறது. ரஜினிக்கும் அந்த வாய்ப்பிருக்கிறது. எனக்கிதைச் சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. ஆசை மட்டுமிருக்கிறது. ஆனால், இருவரும் சேர்ந்தால், தமிழகத்துக்கு நல்லது, தமிழர்களுக்கு நல்லது. இந்த சினிமா குடும்பத்தில் சாதி, மதம் எதுவுமில்லை . தமிழகத்தில் இருக்கும் தண்ணீரைக் குடிக்கும் அனைவருமே தமிழர்கள்தான். இங்கு இருக்கும் நடிகர்களில் சிலருக்கு கமல் ஐக்கானாக இருக்கலாம், சிலருக்கு ரஜினி ஐக்கானாக இருக்கலாம். உங்கள் இருவரின் சாயல் இல்லாமல் இங்கு யாருமில்லை.

உங்களைப் பின்னாலிருந்து குத்த யாரும் முற்பட்டால், நாங்கள் அதை வாங்கிக்கொள்கிறோம். பழையன கழிதலும், புதியது புகுதலும் என்பதுதான் இங்கு வழக்கம். ஆண்டவர்கள் புதிதாக வருபவர்களுக்கு வழிவிட வேண்டும். அதைப்போல், நீங்கள் வந்து ஒரு நல்லாட்சியைத் தந்து, ஊழலற்ற, லஞ்சமில்லாத, அடக்குமுறை இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு, நீங்கள் போதுமென்று நினைக்கும்போது, உங்கள் தம்பிமார்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்'' என மெசேஜ் சொல்லிவிட்டுப் போனார் எஸ்.ஏ.சி.

கமல் ஹாசன் - ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா
கமல் ஹாசன் - ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா
உங்கள் நான்

* விழாவின் மிகப்பெரிய சரவெடி வடிவேலு பேசியதுதான். சிவாஜி மறைவின்போது, மனோரமா முன் ஒரு குடிகாரர் செய்த அட்டூழியங்களை நடித்துக்காட்டி அதகளம் செய்தவர், இந்த முறை `தேவர் மகன்' படத்தின் காட்சியைச் சொல்லி சிரிக்கவைத்தே அழவைத்தார். "பரமக்குடியின் பத்தரை மாசத்து தங்கம் எங்க அண்ணன். நான் தரையில உட்கார்ந்து திரையில அண்ணனைப் பார்த்தவன். `சிங்காரவேலன்' படத்துலதான் அவரை முதன்முறையா நேர்ல பார்த்தேன். அஞ்சு வயசு, மன்னிச்சுடுங்க... பிஞ்சு வயசுல எதுவுமே தெரியாம திரையுலகத்துக்கு வந்து, `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே'னு சொன்னார் பார்த்தீகளா, அதைப் பார்த்துதான் என் தாய், தகப்பன் மேல எங்களுக்குலாம் மரியாதை வந்துச்சு. கால் பதிக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிற திரையுலகத்துல, எப்படி அறுபது வருஷம் டிராவல் பண்ணார்னே தெரியலை. எனக்கே கன்னிவெடி வைக்கும்போது, இவருக்கெல்லாம் எத்தனை ஏவுகணையை விட்ருப்பாய்ங்க, எத்தனை பாம் போட்டிருப்பாய்ங்க! தவ்வுற இடத்துல தவ்வுறது, முங்குற இடத்துல முங்குறது, பறக்குற இடத்துல பறக்குறது, மறையுற இடத்துல மறையுறதுன்னு எல்லா வித்தையையும் கத்துக்கிட்டு இங்க நிற்கிறார்னா, இவரை மாதிரி யாரும் உதாரணமே கிடையாது.

`சிங்காரவேலன்'ல நான் நடிக்கும்போது, "இங்க வா, எந்த ஊர் நீ, உனக்கு என்ன தெரியும் வடிவேலு"னு கேட்டார். "நான் மதுரை சார். பாட்டு பாடுவேன், டான்ஸ் ஆடுவேன் சார்"னு சொன்னேன். "அப்படியா... நீ ஒண்ணு செய்யி... ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஆபீஸுக்கு காலையில போய், டி.என்.எஸ்ஸுன்னு ஒருத்தர் இருப்பார். அட்வான்ஸ் கொடுப்பார் வாங்கிக்கோ.`தேவர் மகன்'ன்ற என்னோட அடுத்த படத்துல நீ நடிக்கிற"னு சொன்னார். என்னைப் பார்த்த அஞ்சாவது நிமிஷத்துல கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார். கொஞ்சம் கேப் கிடைச்சாலும் வேற எவனாவது உள்ளே புகுந்துருவாய்ங்கனு அன்னைக்கு சாயங்காலமே ராஜ்கமல் ஆபீஸுக்குக் கிளம்பிட்டேன். டி.என்.எஸ் கண்ணாடி போட்டு நிற்குறார். என்னைப் பார்த்து 'யாரு?'னு கேட்டார். 'நான் வடிவேலு சார். 'சிங்காரவேலன்' படத்துல நடிச்சுட்டு இருக்கேன்னு' சொன்னேன். 'காலையிலதான வரச்சொன்னார்'னு மனுஷன் அதிர்ச்சியாக்கிட்டார். `அது வரைக்கும் தாங்காது சார்'னு சரண்டர் ஆகிட்டேன். "அப்படியா... சரி நில்லுங்க"ன்னு அண்ணனுக்கு போன் பண்ணார். அடுத்த நிமிஷமே 5 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார். வாங்கிட்டு வந்துட்டேன். மறுநாள் ஷூட்டிங்ல, 'என்ன வடிவேலு, விடிஞ்ச பிறகுதானே போகச் சொன்னேன். நைட்டே போயிருக்க' னு அண்ணன் கேட்க, 'நேத்து நைட்டே எனக்கு விடிஞ்சுருச்சுணே'ன்னு சொன்னேன். அதுமாதிரி, இந்த மேடையில ஏறினேன்ல, இங்கேயே எனக்கு விடிஞ்சுருச்சு" என நகைச்சுவை புயலைக் கிளப்பினார் வடிவேலு. `தலைவன் இருக்கின்றான்' படத்தில் வடிவேலு நடிக்கிறார் என்னும் அறிவிப்பு வெளியானது.

* நடிகர்கள் கார்த்தியும் ஜெயம் ரவியும் தங்களின் ஃபேன்பாய் கதைகளைச் சொல்லி, கமலையே ஆச்சர்யம்கொள்ள வைத்தனர். `ஆளவந்தான்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில் தொடங்கி, கமல் மேல் உள்ள ஈர்ப்பினால் அவரைப்போலவே பரதநாட்டியம் கற்றுக்கொண்டது வரை பல கதைகளைப் பகிர்ந்துகொண்டார் ஜெயம் ரவி. 'பருத்திவீரன்' படத்துக்கான நடிப்புப் பெட்டகமாக கமல் எப்படி இருந்தார் என்பதை நினைவுகூர்ந்தார் கார்த்தி. 'வனிதாமணி...' பாடலில் வரும் 'கண்ணே... தொட்டுக்கவா...' வரிகளை கார்த்தி பாடிக்காட்ட, ஜெயம் ரவி 'புன்னகை மன்னன்' தீம் இசைக்கு நடனமாட, விழா செம களைகட்டியது.

* ரஜினி, கமல் 50-ன் நீட்சியாக இதில் பேசினார். அந்த மேடையில் பேசிய அதே 'கலையுலக அண்ணா 'வோடு ஆரம்பித்தார் ரஜினி. ''உலக சினிமா வரலாற்றிலேயே இப்படியொரு நபர் இருந்ததே கிடையாது. அதனாலதான் அவர் உலகநாயகன். சினிமாத்துறையில் அறுபது ஆண்டுகள். இந்த இடத்துக்கு அவர் வருவதற்கு, ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னை மாதிரி மிடில் கிளாஸ்ல இருந்துட்டு , கன்டக்டரா வாழ்ந்துட்டு, அதுக்கப்புறம் நடிக்க வர்றது உடல் சிக்கல். ஆனால், கமலுக்கு இருப்பதெல்லாம் மனச்சிக்கல். அவர், அவ்ளோ பெரிய பணக்காரர். அவர் வீட்டில் எல்லோரும் படித்தவர்கள். அதையெல்லாம் தாண்டி, அவர் சினிமாவுல வாய்ப்புக்கேட்டு, காசில்லாதப்போ சலூன்ல எல்லாம் வேலை செய்திருக்கார்னு நினைக்கறப்போ, அவர்பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லன்னு தோணுது.

நான் பத்து வயசுப் பையனா இருக்கறப்போ பார்த்த படம், 'களத்தூர் கண்ணம்மா'. தமிழ் தாண்டி கன்னடம், தெலுங்குல எல்லாம் அந்தப் படமும், பாட்டும் ஹிட். எங்க ஊர்ல இருக்கிற டூரிங் டாக்கீஸ்ல அந்தப் படத்தைப் பார்த்தேன். அன்னைக்கு நான் கமலை எப்படிப் பார்த்து பிரமிச்சேனோ, அப்படித்தான் இப்பவும் பிரமிக்கிறேன். அந்த சின்னக் குழந்தை இத்தனை வருடங்களா சாதிச்சிட்டுருக்கு. அந்தப் படத்தை டூரிங் டாக்கீஸ்ல பார்த்த இந்தக் குழந்தையும் இத்தனை வருஷமா அவர்கூடவே பயணம் செஞ்சிட்டிருக்கு. இதெல்லாம் அற்புதம், அதிசயம். இப்படி ஒவ்வொரு வாழ்க்கைலேயும் நடக்கும். அதையெல்லாம் நாம ஏதோ நிகழ்வுன்னு நினைக்கறோம். ஆனால், அதெல்லாம் அதிசயம், அற்புதம் .

கமல் ஹாசன் - இளையராஜா
கமல் ஹாசன் - இளையராஜா
உங்கள் நான்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராவார் எனக் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். அவருடைய ஆட்சி இருபது நாள் தாங்காது, ஒரு மாசம் தாங்காது, மேக்ஸிமம் நாலு மாசம், அஞ்சு மாசத்துல கவிழ்ந்துடும்னு சொல்லாத ஆளே இல்லை. அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழல. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்துகொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும்" எனச் சிரிக்க, ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.

கிங்காங், தாராசிங் சண்டையைக் குறிப்பிட்டு, கமல் ரஜினி சண்டைபோட்டுக்கொள்ள வேண்டும் என நண்பர் ஒருவர் சொன்னது பற்றிக் குறிப்பிட்டார் ரஜினி. "என் ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். இனிவரும் காலங்களில், நாம் வேறு தொழில்களில் ஈடுபடலாம். நம் சித்தாந்தங்கள் மாறலாம். ஆனால், எங்கள் நட்பு என்றைக்கும் மாறாது. அன்பா இருங்க. எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம். கமல் நீண்ட நாள் வாழ வேண்டும். கமல் பேசுவது புரியவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ரஜினிக்கே புரிகிறது. உங்களுக்குப் புரியாதா? அவர் இருக்கிற வரையில், அவர் நிம்மதியா நீண்ட நாள்கள் ஆரோக்கியத்துடன், நினைத்ததைச் செய்து நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வேண்டும்" என வாழ்த்தினார் ரஜினி.

* கமலின் திரை வில்லன்கள் சத்யராஜ், நாசர் மற்றும் பசுபதி மூவரும் ஒன்றாக மேடையேறினர். 'சட்டம் என் கையில்' படத்தில் முதன்முறையாக நடிகனாக அறிமுகமான கதையையும் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்தில் முதன்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவான கதையையும் சொன்னார் சத்யராஜ். "ராஜ்கமல் பிலிம்ஸ்ல நான் ஒரு சந்தோஷமான தொழிலாளி. சார்தான் எங்களுக்கு முதலாளி" என்றார். `விருமாண்டி' படத்தின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார் பசுபதி. திரையிலும் நிஜத்திலும் நீண்டகாலமாக அவருடன் பயணித்துவரும் நாசர், 'தேவர்மகன்' ஷூட்டிங்கில் நடந்த சம்பவங்களைச் சொன்னார். ''வாடா என் தேவன் மகனே..." எனும் வசனத்துக்குப் பின்னாலும், "நான் கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதே" எனும் வசனத்துக்குப் பின்னாலும் உள்ள கமலின் சாமர்த்தியத்தை அவர் சொல்கையில், அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

கமல் ஹாசன் - ரஜினிகாந்த்
கமல் ஹாசன் - ரஜினிகாந்த்
உங்கள் நான்

நெகிழ்ந்த கமல்!

* ''எனக்குக் கிடைத்த நண்பர்களும் ரசிகர்களும் என்னை இவ்வளவு தூரம் நடத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. சென்ற முறை இதே மேடையில் 50 விழா கொண்டாடியபோது, தரையைத் தொட்டு வணங்கி அனைவருக்கும் வணக்கம் சொன்னேன். மீண்டும் அதைச் செய்யலாம். இதே வேலையாப் போயிடுச்சு என யாரும் அலுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் அமைதியாக நிற்கிறேன். சென்ற முறை என் பணிவையும் நன்றியையும் தந்தேன். இந்த முறை என்னையே உங்களுக்காகத் தருகிறேன். நான், 'உங்கள் நான் ' எனச் சொல்வதன் முழு அர்த்தம் உங்களுக்கு இன்று புரிந்திருக்கும். உங்களால்தான் இந்த மேடையில் நிற்கிறேன். நான் 'உங்கள் நானாக' இருப்பதுதான் என் வாழ்க்கையின் கடமை.

`ஏன், சினிமாவிலேயே நீங்கள் இருந்து இதைச் செய்யலாம்' என்று சிலர் சொல்கிறார்கள். அரசியல் உனக்குத் தெரியுமா என்று சிலர் கேட்கிறார்கள். இந்த அரசியல் தெரியவேண்டிய அவசியம் எனக்கில்லை. மக்களின் அரசியல் என்னவென்று மக்களுக்கே தெரியும். இங்கு நன்றி சொல்வது கலையுலகத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கேதான். இனி நான் நடிக்கும் படங்கள், நான் செல்லும் பயணங்களுக்கு ஊன்றுகோலாக இருக்குமென நம்புகிறேன். அந்தப் பணிகளை விரைவில் முடித்து உங்களுடன் கலக்க ஆவலாய் இருக்கிறேன். 'இன்னும் ரெண்டு மூணு படம்தான் பண்ணப்போகிறார் , இவருக்காக நாம் ஏன் பேச வேண்டும்' என யாரும் நினைக்கவில்லை. என் சினிமாவுக்கான எதிர்காலத் திட்டங்களை ராஜ்கமல் செவ்வனே செய்து என்னை மகிழ்விக்கும் என நினைக்கிறேன்.

கமல் ஹாசன் - ரஜினிகாந்த்
கமல் ஹாசன் - ரஜினிகாந்த்
உங்கள் நான்
`முதலில் நல்லாட்சி.. அடுத்து தம்பிகளுக்கு வழி!'- கமல், ரஜினி இணைப்பை வலியுறுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர்!

நான் சினிமாவுக்கு வரவில்லை என்றால், மாசம் 15 படங்கள் பார்க்கும் சினிமா ரசிகனாக இருந்திருப்பேன். கால் ஒடிந்து குணமாகும் வரையில், அந்த ஒருமாத காலம் கட்டாய ஓய்வுடன் சந்தோஷமாக இருந்தேன். அது, வலியுடன்கூடிய சந்தோஷம். அந்த மாதம் மட்டும் நான் 90 படங்கள் பார்த்தேன். அந்த ஒரு மாதம், நான் யார் என்பதை எனக்கு ஞாபகப்படுத்தியது. நீங்கள் சொல்வதுபோல் நான் உலகநாயகன் இல்லை. நான் உலக சினிமா ரசிகன். அன்பினால் நீங்கள் கொடுத்த பட்டம் அது. நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் சினிமாவின் ரசிகன். மணிரத்தினத்துடன் இணைந்து இப்படி எடுக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். அதில் சிலவற்றை நினைவாக்கியிருக்கிறோம். என்னால் செய்ய முடியாத கனவுகளை, அவர் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். `இந்தியன் 2'-வுக்குப் பிறகு, தன் சினிமாவின் அடுத்த கட்டத்துக்கு ஷங்கர் செல்ல வேண்டும். உங்களுக்குக் கொடுக்கவேண்டிய உணவை நாங்கள் இப்போது சுவைத்துப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்'' என நன்றி சொன்னார் கமல்!

அடுத்த கட்டுரைக்கு