Published:Updated:

பிடுங்கப்பட்ட கேமரா... முதல் படத்திலேயே தேசிய விருது... கே.வி.ஆனந்த் எனும் மகா கலைஞன்!

ஒளிப்பதிவில் புதுப்புது விஷயங்களைச் செய்தவர், இயக்குநராக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர், விவசாயியாக மாறியவர் எனப் பன்முகம் கொண்ட, கே.வி.ஆனந்த்தின் முகத்தை இனி காணமுடியாது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட, கே.வி.ஆனந்தின் அப்பா வங்கி மேலாளர். புகைப்படக் கலை மீது ஆர்வமிருந்த அதே சமயம், விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் ஆர்வமாக இருந்திருக்கிறார் கே.வி.ஆனந்த். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை படிக்க நினைத்து விண்ணப்பித்தவருக்கு சீட் கிடைக்கவில்லை. பிறகு, இயற்பியல் துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதன்பின், ஃப்ரீலான்ஸ் போட்டோகிராஃபராக பத்திரிகைகளில் பணியாற்றி இருக்கிறார். பிறகு, 'நாயகன்' படம்பார்த்து ஒளிப்பதிவு மீது ஈடுபாடு வந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக 'கோபுர வாசலிலே', 'அமரன்', 'தேவர் மகன்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

கே.வி. ஆனந்த்
கே.வி. ஆனந்த்

இயக்குநர் ப்ரியதர்ஷன் 'தென்மாவின் கொம்பத்து' படத்திற்காக ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமை கேட்டபோது, அவர் பிஸியாக இருந்ததால் கே.வி.ஆனந்த்தை அந்தப் படத்திற்கு பரிந்துரைத்திருக்கிறார். மோகன்லால்தான் இந்தப் படத்தின் நாயகன். தான் ஒளிப்பதிவு செய்த முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றார். 'மின்னாரம்', 'சந்திரலேகா', 'டோலி சாஜா கே ரஹ்னா' எனத் தொடர்ந்து இயக்குநர் ப்ரியதர்ஷனுடன் பணியாற்றி வந்தார். இந்தப் படம் 'காதலுக்கு மரியாதை' இந்தி ரீமேக். ஜோதிகாவின் கரியரில் முதல் படம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு இவர் பெயரை பாலிவுட்டில் பேசவைத்தது.

இதனைத் தொடர்ந்து, 'காதல் தேசம்' படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இவரின் ஒளிப்பதிவு மிகவும் பாராட்டப்பட்டது. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றாலும் தமிழில் 'காதல் தேசம்' படத்திற்குப் பிறகுதான், அனைத்து இயக்குநர்கரின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக மாறினார் கே.வி.ஆனந்த். 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'இந்தியன்' எனத் தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் ஜீவாவுடன் பணியாற்றி வந்த இயக்குநர் ஷங்கர், 'முதல்வன்' படத்திலிருந்து கே.வி.ஆனந்துடன் பணியாற்றத் தொடங்கினார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பெரிதும் பேசப்பட்டது.

கே.வி. ஆனந்த்
கே.வி. ஆனந்த்

இந்தப் படம் ப்ளாக்பஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, இதன் இந்தி வெர்ஷன் 'நாயக்', அதற்கும் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவுதான். இந்தப் படம் அவருக்கு ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்று தந்தது. ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் 'தி லெஜெண்ட் ஆஃப் பகத் சிங்', 'காக்கி' என இரு படங்களில் பணியாற்றினார். ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் 'பாய்ஸ்', 'சிவாஜி' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். 'சிவாஜி' திரைப்படத்தின் ஒளிப்பதிவு அதன் பிரமாண்டத்தைப் பற்றி தனியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. குறிப்பாக, வாஜி வாஜி, ஒரு கூடை சன்லைட் பாடல்கள் மிகப்பெரிய டிரெண்ட்செட்டர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'கனா கண்டேன்' படத்தின் மூலம் திடீரென்று இயக்குநர் அவதாரம் எடுத்தார். அடுத்தது, 'அயன்'. கமர்ஷியல் என்டர்டெய்னராக ஹிட் அடித்த 'அயன்', சூர்யாவுக்கும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது மட்டுமல்லாது கே.வி.ஆனந்த்தை முன்னணி இயக்குநராக அனைவருக்கும் அடையாளம் காட்டியது. இதனைத் தொடர்ந்து, 'கோ'. பத்திரிகைத்துறையில் இருந்ததால் அவர் சந்தித்த சில சுவாரஸ்யமான சம்பவங்களையும் உள்ளடக்கி இந்தப் படத்தை இயக்கினார். இவர் புகைப்பட பத்திரிகைக்காரராக இருந்தபோது, ஒரு கட்சியினர் ஹைவேயில் வரம்பை மீறி கட்டடம் கட்டியிருக்கிறார்கள் என்ற செய்தியை சேகரிக்கச் சென்றிருக்கின்றார். அந்த கட்டடத்தை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த அந்தக் கட்சியினர், ஆனந்தை மிரட்டி கேமராவை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர். அவர்கள் இவரைப் பார்த்தது தெரிந்தவுடன், உடனே கையிலிருந்த கேமராவை பையில் வைத்து பையில் இருந்த இன்னொரு கேமராவை எடுத்து கையில் வைத்திருக்கிறார். அந்தச் சூழலில் சாதுர்யமாக யோசித்து, இவ்வாறு செய்துதான் எடுத்த புகைப்படங்களை காப்பாற்றி இருக்கிறார். இந்த நிகழ்வைத்தான் 'கோ' படத்தில் ஜீவா கேரக்டருக்கு வைத்திருக்கிறார்.

கே.வி. ஆனந்த்
கே.வி. ஆனந்த்
பா. காளிமுத்து

அடுத்ததாக, 'மாற்றான்'. எதிர்பார்த்தபடி படம் போகவில்லை என்றாலும் கே.வி.ஆனந்த் தன் மனதுக்கு பிடித்த படம் என்று பலமுறை இதைச் சொல்லியிருக்கிறார். 'காப்பான்' திரைப்படத்தை தவிர, இவர் இயக்கிய எல்லா படங்களிலும் எழுத்தாளர்கள் சுபா கதை, திரைக்கதையில் பணியாற்றினர். நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களை, சமூக பிரச்னைகளை போகிற போக்கில் தன் படத்திற்குள் கொண்டு வருவது இவரின் வழக்கம். 'அயன்', 'கோ' படங்களை ரீமேக் செய்யும் ஆஃபர்கள் வந்தும் அதில் உடன்பாடு இல்லாமல் 'நோ' சொன்னவர். இது குறித்து ஒரு பேட்டியில், "எது சொதப்பினாலும் புதுசா சொதப்பணும்" என்று வேடிக்கையாகச் சொல்லியிருந்தார்.

"அருமையான கதை சொன்னார் கே.வி.ஆனந்த்... அடுத்து அவரோடு படம் பண்ண இருந்தேன்" - கலங்கும் சிம்பு

சிம்பு வெளியிட்ட அறிக்கையில், அவருக்குக் கதை சொல்லியிருப்பதாகவும் தினமும் அது குறித்து இருவரும் பேசியதாகவும் கூறியிருந்தார். இயற்கை விவசாயம் மீது அதீத ஆர்வம் கொண்டு, திருவள்ளூர் அருகே 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். ஒளிப்பதிவில் புதுப்புது விஷயங்களைச் செய்தவர், இயக்குநராக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர், விவசாயியாக மாறியவர் எனப் பன்முகம் கொண்ட, கே.வி.ஆனந்த்தின் முகத்தை இனி காணமுடியாது. நம் கண்களுக்கு கலர்ஃபுல்லான விஷுவல்களை கொடுத்த அவரது கண்கள் இனி திறக்காது.

அவருக்கு கனத்த இதயத்துடன் விகடனும் அஞ்சலி செலுத்துகிறான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு