Published:Updated:

வெறிபிடித்தாடிய வினோத்; அசுர வேட்டை நிகழ்த்திய சிவசாமி... தமிழ் சினிமாவின் தங்க மகன் தனுஷ்!

தனுஷ்
தனுஷ்

சச்சினுக்குப் பிறகு யார் என்றார்கள். கோலி வந்து நின்றார். அதுபோல சினிமாவில் சிவாஜிக்குப் பிறகு யார் என்கிற கேள்விக்குக் கமல்ஹாசன் வந்து நின்றார். இப்போது அடுத்த கமல்ஹாசன் யார் என்கிற கேள்விக்கு விடையாய் வந்து முன்வரிசையில் நிற்கிறார் தனுஷ்.

''என்னைக் கலாய்க்காத ஆள்களே கிடையாது. முதல் நாள் கேமரா முன்னாடி நின்னதுல இருந்து இப்பவரைக்கும் கலாய்ச்சுட்டுதான் இருக்காங்க... 'துள்ளுவதோ இளமை' முடிச்சிட்டு இரண்டாவது படம் 'காதல் கொண்டேன்.' விசாகப்பட்டினத்துல ஷூட்டிங் நடக்குது... வினோத் கெட்டப்ல டிராலி பக்கத்துல நான் உட்கார்ந்துக்கிட்டிருந்தேன். அங்க வந்த ஒருவர் ''இந்தப் படத்தோட ஹீரோ யார்?''னு என்கிட்ட கேட்டார். கேள்விலேயே அவர் நான் இல்லைனு முடிவு பண்ணிட்டதால 'இவர்தான் ஹீரோ'னு படத்துல செகண்ட் ஹீரோவா நடிச்சிட்டிருந்த சுதீப்பை காமிச்சிட்டேன். ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டப் பிறகு அவர் அசிஸ்டன்ட் டைரக்டர்கிட்டபோய் திரும்பவும் 'படத்தோட ஹீரோ யார்'னு கேட்டிருக்கார். அந்த உதவி இயக்குநர் என்னைக் கைகாட்ட, 'சும்மா சொல்லாதப்பா... நான் அவர்கிட்டேயே கேட்டுட்டேன். அவர் இல்லை'னு சொல்லியிருக்கார். கடைசியில நான்தான் ஹீரோன்னு எப்படியோ கன்ஃபார்ம் பண்ணிட்டார். அப்போ அவரும் அவர்கூட இருந்தவங்களும், அங்க இருந்த மொத்தக் கூட்டமும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க.

தனுஷ்
தனுஷ்

தெலுங்குல ஏதோ சொன்னாங்க. 'ஏய் ஆட்டோக்கார ஹீரோ... ரிக்‌ஷாக்கார ஹீரோ'ன்னு ஏதேதோ சொல்லி கிண்டல் பண்ணாங்க. என்னால தாங்க முடியல. அப்போ எனக்கு 18 -19 வயசுதான் இருக்கும். என்ன பண்றதுனு தெரியுமா காருக்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சேன். ஒழுங்கா காலேஜ் போய் படிக்கிறேன்னு சொன்னேன்... என்னை இப்படி அவமானப்பட வெச்சிட்டாரேன்னு எங்க அப்பா மேல எனக்கு செம கோபம்...'' தனுஷ் ஒரு பேட்டியில் சொன்ன வார்த்தைகள் இவை. இப்படி அவமானப்பட்டு, கலாய்க்கப்பட்ட தனுஷ்தான் இன்று தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன்.

கிரிக்கெட்டில் கபில்தேவுக்கு அடுத்து யார் எனக்கேட்டார்கள். சச்சின் வந்து நின்றார். சச்சினுக்குப் பிறகு யார் என்றார்கள். கோலி வந்து நின்றார். அதுபோல சினிமாவில் சிவாஜிக்குப் பிறகு யார் என்கிற கேள்விக்குக் கமல்ஹாசன் வந்து நின்றார். இப்போது அடுத்த கமல்ஹாசன் யார் என்கிற கேள்விக்கு விடையாய் முன்வரிசையில் வந்து நிற்கிறார் தனுஷ்.

தனுஷ்
தனுஷ்

தனுஷ் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. 'துள்ளுவதோ இளமை'யில் விடலைப்பையனாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தனுஷ், இடைப்பட்ட ஆண்டுகளில் செய்திருக்கும் சாதனைகள் மிக அதிகம். நடிகராக வெற்றி, இயக்குநராக வெற்றி, பாடகராக, பாடலாசிரியராக உலக டிரெண்டிங், ஷமிதாப்பில் அமிதாப்பையே அதிரவைத்தது, உலக சினிமாவில் கெத்தாக நுழைந்தது, தயாரிப்பாளராகத் தேசிய விருது பெற்றது என தனுஷ் தற்போது ஏறி நிற்கும் உயரம் அசாத்தியமானது. 36 வயதில் இவை அத்தனையையும் செய்து முடித்திருக்கிறார் என்பதுதான் பிரமிக்க வைக்கிறது.

காதல் கொண்டேனில் ''திவ்யா... திவ்யா...'' என மழையில் வெறிப்பிடித்து தனுஷ் ஆடிய ஆட்டம் ஒவ்வொரு காதல் கிறுக்கனும் தன் காதலிக்காக ஆட நினைத்த ஆட்டம். 'காதல் கொண்டேன்' படத்துக்கு அப்படியே நேரெதிர் 'புதுப்பேட்டை'. நிகழ்கால அரசியலை அப்போதே பேசியிருந்தவர் செல்வராகவன். அதற்கு உயிர் கொடுத்தது`கொக்கி' குமார் கதாபாத்திரம். அதற்கு முன் வெளிவந்த 8 படங்களில் யாரும் பார்க்காத தனுஷை `புதுப்பேட்டை'யில் பார்த்தான் ரசிகன். ''அமைதியா கீது... ரொம்ப ரொம்ப அமைதியா கீது... தாங்க முடியல... என் பேரு குமாரு... கொக்கி குமாரு... குமாரு மாநகராட்சி ஸ்கூல்ல சந்தோஷமா படிச்சிட்டிருந்தாரு'' என தனுஷ் பேசப்பேச படத்தைப் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரும்.

அசுரன், ஆயுதம் ஏந்தியவன் மட்டுமல்ல..! - ஓர் அரசியல் பார்வை

காலங்கள் மாறின. அண்ணன் செல்வராகவன் பட்டறையிலிருந்து ஆசான் வெற்றிமாறனின் பட்டறைக்குள் நுழைந்தார் தனுஷ். 2000-களின் இறுதியில் ஒவ்வொரு இளைஞனின் கனவாக இருந்த பல்ஸரை வைத்து ஒரு கதை. சிம்பிள் கதைதான். ஆனால், நடிப்பும் இயக்கமும், திரைக்கதையும் 'பொல்லாதவன்' படத்தையும் தனுஷையும் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் கொண்டுபோய் நிறுத்தின. 'ஒல்லி' என்கிற விமர்சனம் ''ப்பா... ப்ரூஸ் லீ மாதிரி இருக்கான்பா'' எனப் புதிய அடையாளத்தைக் கொடுத்தது.

2011-ம் ஆண்டு அதே வெற்றிமாறனோடு கே.பி.கருப்பாக 'ஆடுகளம்'. இந்த முறை ஆட்டமும் களமும் தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருந்தது. 'நாங்களாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங்கைப் போடுறவைங்க' என்ற ஹீரோயிசமும் `நாம ரெண்டுபேரும் ஒரு கிஸ்ஸ அடிச்சிக்கிருவோமா' என்கிற காதலும்,  `கொண்டேபுடுவேன்' என்கிற வீரமும், `ரெண்டு வட்டம் செயிக்கத் தெரிஞ்சவனுக்கு, மூணாவது வட்டம் செயிக்கத் தெரியாதா...' என்கிற ஆட்ட நுணுக்கமும் கே.பி.கருப்புவை தேசிய விருதுவரை கொண்டு சென்றது.

தனுஷ்
தனுஷ்

''அடுத்து வரப்போற இந்த 15 நிமிஷம் இன்னும் 50 வருஷத்துக்கு அப்படியே இருக்கும்டா'' எனப் பந்தயத்துக்கு முன் சேவலிடம் சொல்வார் தனுஷ். அது உண்மையாகிவிட்டது. 'ஆடுகளம்' படமும் தனுஷின் நடிப்பும் நிச்சயம் இன்னும் 50 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.

''காதல் கொண்டேன் எப்படி என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையோ அதேபோல் விஐபி. விஐபி-க்கு முன், பின் என்றே என் படங்களை வரிசைப்படுத்தலாம்'' என்று சொல்லியிருக்கிறார் தனுஷ். ஆமாம், மிகப்பெரிய பில்ட்அப்போடு தனுஷுக்கு ஹீரோயிச உச்சம் கொடுத்த படம் `விஐபி'. ஆனால், இந்தக் காலகட்டத்தில் தனுஷிடம் என்னவோ ஒன்று மிஸ் ஆனது. அந்த மிஸ்ஸிங்கை முழுமையாக்கினார் வெற்றிமாறன். 'வடசென்னை' அன்புவாக வந்து நின்றார் தனுஷ்.  ஃபங்க் வைத்த துறுதுறு இளைஞனாக, கேரம் ப்ளேயராக, ராஜனின் நீட்சியாக... என இந்தப் படம்தான் தனுஷின் கரியரில் உச்சம் என நிமிர்ந்து உட்கார்ந்தபோதுதான் வந்து விழுந்திருக்கிறான் 'அசுரன்'. முதல் சீனில் ''என்னது 18 வயசு பையனுக்கு அப்பாவா தனுஷ்?'' எனப் புருவங்கள் உயர்ந்தன. ஆனால், அடுத்தடுத்த சீன்களில் ''சிவசாமி மாதிரி ஒரு அப்பா இருந்திருக்கலாம்ல'' என நினைக்க வைத்ததில்தான் தனுஷின் நடிப்பு, நடிப்புக்கான சிலபஸாக மாறி நிற்கிறது.  

தனுஷ்
தனுஷ்
அசுரன்
``ரஜினி நடந்து போன வழியில் இப்போ தனுஷ் போயிட்டிருக்கார்!" - தாணுவின் பார்வை

வினோத், கொக்கி குமார், கே.பி.கருப்பு, ரகுவரன், அன்பு, சிவசாமி... இன்னும் பல நடிப்பு அசுரன்களைப் பார்க்க We are Waiting தனுஷ்!

அடுத்த கட்டுரைக்கு