Published:Updated:

அழாத கண்கள் அழகாவதில்லை... Teardrop angel நயன்தாரா! #HBDNayanthara

நயன்தாரா
நயன்தாரா

மனதுக்குள் எரிமலை வெடிக்க, அந்த உஷ்ணம் உடலின் நீரை கண்களின் வழியே மட்டுமல்லாமல், நாசிகளின் வழியேவும் வெளியேற்றும். காற்று, மாற்றுப்பாதை எடுத்து வாயின் வழி பயணிக்கும். உள் நுழையும் காற்றும், மேலெழும் அவலக் குரலும் மோத, அந்த அதிர்வுகள் மொத்த உடலையும் உலுக்கும்.

சினிமா நம்மை எளிதில் ஆட்கொண்டுவிடக் காரணமாக இருப்பது கதைகளும் கதாபாத்திரங்களும்தான். நல்ல கதைகள், நம்மைத் திரைக்குள் இழுத்து அந்தச் சூழலுக்குள் உலாவச் செய்யும். நல்ல கதாபாத்திரங்கள், திரையை விட்டு வெளியேறி நமது சூழலில் நம் கைப்பிடித்து நடக்கத் தொடங்கும். இவை இரண்டும் சிறப்பாக அமையும்போது, திரைக்குள் நம்மைச் சிறைவைத்துவிடுகிறது சினிமா. இந்தக் கதைகள் ஏற்படுத்தும் தாக்கம்கூட சில நாள்களில் மறைந்துவிடும். ஆனால், கதாபாத்திரங்களோ விரைவில் மறையாது, மறக்காது... ஒன்று, நம் கண்களுக்குள்ளேயே இருக்கும் ஒருவரை ஒத்திருக்கும். இல்லையேல், கண்ணாடியாய் நின்று நம்மைப் பிரதிபலிக்கும். அதனால்தான், சில கதாபாத்திரங்களை நாம் நகல் எடுக்கத் தொடங்குகிறோம். சில சமயங்களில் அப்படியான கதாபாத்திரங்களை தேடத் தொடங்குகிறோம்.

காதல், இந்த இடத்தில்தான் சினிமாவோடு நேர்கோட்டில் பயணிக்கிறது. சாதாரணமாக, நாம் மிக உன்னிப்பாக கவனிக்கும் மனிதர்கள் இரு வகையாகத்தான் இருப்பார்கள். ஒன்று, அப்படியே நம்மைப்போல் இருப்பவர்கள். மற்றொன்று, 100 சதவிகிதம் நமக்கு நேரெதிரானவர்கள். இந்த ஸ்பெக்ட்ரத்தின் இரு முனையிலும் இருப்பவர்களோடு சீக்கிரம் பழகிவிடுவோம். நடுவில் இருப்பவர்களோடு பழகத்தான் நாள்கள் எடுத்துக்கொள்ளும். அங்குதான் புரிதல் என்ற பெரும் தலைவலி முக்கியப் பங்காற்றும். இதே உளவியல்தான் சினிமாக் கதாபாத்திரங்கள் நம்மை ஈர்ப்பதற்கான காரணம். இப்படித்தான் எனக்கு அந்த இரண்டு கதாபாத்திரங்கள் பிடித்துப்போனது. ஆனால், அந்தக் கதாபாத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் இடையிலிருக்கும் திரையை என்னால் உணர முடிந்ததே இல்லை. அந்தக் கண்கள் நிழல், நிஜம் என்ற இரண்டு பரிமாணத்திலுமே ஸ்கோர் செய்யும்! அதனால்தானோ என்னவோ அவர் மீது அப்படியோர் ஈர்ப்பு. `கோமளவள்ளி' என்கிற கீர்த்தி, ரெஜினா… இந்த இருவர் மீதான ஈர்ப்பு, அந்த ஒருவர்மீது அளவுகடந்த காதலாக கரைபுரண்டது... அவர் நயன்தாரா!

நயன்தாரா
நயன்தாரா

அழுகை… நான் அறிந்து இந்த வார்த்தை அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதே இல்லை. கண்ணீர் என்பதையே பயன்படுத்திப் பழகிவிட்டோம். கவிதையின் நயத்தைக் கூட்டுவதால், அதுவே சோகத்தின் வெளிப்பாடாக்கப்பட்டுவிட்டது. அதனாலேதான் அந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை யாரும் பெரிதாக உணர்வதில்லை. அந்த வித்தியாசம், நயன்தாராவிடமிருக்கும் வித்தியாசத்தை தெளிவாய்ச் சொல்லும். சூர்யா திருமணத்துக்கு வரவில்லை. வீட்டிலும் இல்லை. அமெரிக்கா சென்றுவிட்டதாக அவன் அப்பா சொல்கிறார். கட்டிய கோட்டையின் அஸ்திவாரம் ஆட்டம் காணத் தொடங்குகிறது. அந்த இடத்தில் ரெஜினா அழுத அழுகை…அந்த நயன்தாராவின் அழுகை உலுக்கியெடுக்கும். வெறுமனே கண்கள் மட்டும் கண்ணீர் சிந்தாது. மொத்த உடலும் அழுதுகொண்டிருக்கும். மனதுக்குள் எரிமலை வெடிக்க, அந்த உஷ்ணம் உடலின் நீரை கண்களின் வழியே மட்டுமல்லாமல், நாசிகளின் வழியேவும் வெளியேற்றும். காற்று, மாற்றுப்பாதை எடுத்து வாயின் வழி பயணிக்கும். உள் நுழையும் காற்றும், மேலெழும் அவலக் குரலும் மோத, அந்த அதிர்வுகள் மொத்த உடலையும் உலுக்கும். நயன்தாராவின் உடலை… ரெஜினாவின் உடலை… காதலின் பிரிவைக் கடந்த ஒவ்வொரு உடலையும் உலுக்கும் அந்த அழுகை.

`நீ அழுதா எனக்கும் அழுகை வருது’ என்று சொல்லும் தன் தந்தையிடம் `அழமாட்டேன்’ என்று சொல்லி தன்னைத் தேற்றிக்கொள்ள முயற்சி செய்வார். அந்த 2 நொடிகள், உணர்வுகளின் உச்சத்தைக் கொட்டியிருப்பார் நயன்தாரா. கண்ணீர் நின்றிருக்கும். ஆனால், அடங்க மறுக்கும் மனதின் குமுறலால் உடல் நடுங்கிக்கொண்டிருக்கும். சோகம் தன் உச்சியைத் தொட, அடிவயிற்றில் எழும் கதறலோசையை தொண்டைக்குள் விழுங்க முயற்சி செய்வார். அப்படியும் அந்த குமுறல் அவரை மீறி வெளியேறத் துடிக்கும்போது கைகள் கொண்டு வாயைப் பொத்திக்கொள்வார். அதுவரை உலுக்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு உடலையும் உறையவைப்பார் நயன்தாரா. ரெஜினா எனும் கதாபாத்திரம் பார்வையாளர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும். சிலருக்கு ரெஜினாவாகவே இருந்திருக்கும். ஆனால், பலருக்கும் அவர்களையே பிரதி எடுத்துக் காட்டியிருக்கும். உயிராய் நினைத்தவரைப் பிரிந்த ஒவ்வொரு உயிரின் கதறல் அது!

நயன்தாரா
நயன்தாரா

ஒரு கதாபாத்திரத்தின் வெற்றி பார்வையாளர்களை அனுதாபம் கொள்ளச் செய்வதல்ல. It’s not about sympathy. But about empathy! பொதுவாக, நமக்கு யாரென்று தெரியாத ஒருவர் கஷ்டப்படும்போது நமக்கு அவர்கள்மீது சிறு அனுதாபம் ஏற்படும். ஆனால், நமக்கு மிகவும் நெருங்கியவர்களுக்குக் கஷ்டம் எனும்போதுதான் பச்சாதாபப்படுவோம். நெஞ்சம் பதைபதைக்கும். அந்தக் கஷ்டம், கவலையாய் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். அந்த வலியின் தன்மையை உணர்வோம். அதற்கு ஆறுதல் தேட நினைப்போம். இங்கு, ரெஜினாவின் அழுகை அப்படியொரு நிலைக்கு நம்மைத் தள்ளும். ஏர்போர்ட் பயணிகள் பதிவில் சூர்யாவின் பெயர் இருந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தை நம் மனதுக்குள் விதைத்திருக்கும்.

அது வெறும் நடிப்பாக இருந்திருந்தால் ஜஸ்ட் லைக் தட் கடந்திருக்கலாம். ஆனால், அப்படி யாராலும் கடந்திருக்க முடியாது. அது ரோலிங்குக்கும் கட்டுக்கும் இடையே கொட்டப்பட்ட கிளிசரின் துளிகள் இல்லை. அது உணர்வுகளின் குவியல். முன்பு சொன்னதுபோல், காதலின் பிரிவைக் கண்ட ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிம்பமாகவே தெரிந்திருப்பாள் ரெஜினா. காரில் அவள் அழும் அந்த அழுகை, அவர்கள் ஒவ்வொருவரின் அழுகையாகவே தெரிந்திருக்கும். அதற்கு நேரெதிராக இருப்பவர்களுக்கு, ஜானுக்குக் கொடுத்த அதே ஆச்சர்யத்தைப் பரிசளித்திருப்பாள் அவள் - `இந்த அளவுக்கு ஒரு பொண்ணு ஒரு பையனை லவ் பண்ணிட முடியுமா?’ எப்படியோ, அந்த இரு வேறு மனநிலை கொண்டவர்களையும் வசீகரித்திருப்பாள். நம் உலகத்துக்குள் அவதரித்திருப்பாள்! பார்வையாளர்களின் உலகத்துக்குள் அந்தக் கதாபாத்திரத்தை உலாவச் செய்வதுதானே அந்த நடிகருக்கான வெற்றி! நயன்தாரா இதில் அசாத்திய வெற்றி கண்டவர். அழுகையின் வழியே ஆற்றாத வலியைக் கடத்தியவர்!

நயன்தாரா
நயன்தாரா

இன்னொரு முக்கியமான விஷயம்… கண்ணீரை உணர்வுகளின் வெளிப்பாடு என்று சொல்லிவிட முடியாது! உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கும்போதும் கண்ணீர் வரும், தூசு விழுந்தாலும் கண்ணீர் வரும், கிளிசரின் ஊற்றினால், குலுங்கிச் சிரித்தால், காரமாய்ச் சாப்பிட்டால், ஏன்… வெங்காயம் உரித்தாலும்கூடக் கண்ணீர் வரும். ஆனால், அழுகை அப்படியில்லை. அங்கு கண்ணீரும் கதறலும் தேவையில்லை. நடுங்கும் தோள்கள், பிடிப்பைத் தேடும் கரங்கள், மூளையின் கட்டளைகளை மறுத்து, மரத்துக் கிடக்கும் இமைகள், வெறித்துக் கிடக்கும் கண்கள்… இவை சொல்லிவிடும் அந்த உயிர் அழுதுகொண்டிருக்கிறது என்பதை… ஸ்கேன்களுக்குள் அகப்படாத மனம் எனும் மாய உறுப்பு உடைந்து நொறுங்கிக்கிடக்கிறது என்பதை. `யாரடி நீ மோகினி' கீர்த்தியின் உயிர், இரண்டாம் பாதி முழுதுமே அழுதுகொண்டிருக்கும். சில இடங்களில் கண்ணீர் சிந்தி, சில இடங்களில் குற்றம் சிந்தி.

குற்றத்தைச் சுமப்பதைவிடவும் கொடுமை எதுவும் இருந்துவிடமுடியாது. அதுவும் Ctrl-Z அழுத்த முடியாத சில குற்றங்களை உள்ளம் உணர்ந்து வருந்தத் தொடங்கிவிட்டால், அதைவிடக் கடினமான தண்டனையும் யாராலும் கொடுத்துவிட முடியாது. கீர்த்தி, அந்தக் கடும் தண்டனையைக் கண்களில் சுமந்துகொண்டேதான் இருப்பாள். வாசுவின் முகத்தைப் பார்க்கும் தைரியத்தை அவளால் வளர்த்துக்கொள்ள முடியாது. அவன் இருக்கும் இடத்தில் சகஜமாக இருக்க முடியாது. `தேங்ஸ்’ என்ற வார்த்தையைச் சொல்லும்போதுகூட உதடுகளோ கண்களோ சிரிக்க மறுக்கும்.

நயன்தாரா
நயன்தாரா

முதல் பாதியில் அவனை அருவருப்பாய்ப் பார்த்து நிராகரித்து விரட்டிய ஒரு கதாபாத்திரம், கிளைமாக்ஸில் அவனைக் கட்டிப்பிடிக்கிறது. இதற்குள் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது? அதை எப்படி நியாயப்படுத்துவது? கீர்த்தி மனம் மாறியதை, அவளுக்குள் காதல் ஏற்பட்டதை எந்த இடத்திலும் யாரிடமும் சொல்லமாட்டாள். ஆனால், காருக்குள் வாசுவின் கையைப் பிடிக்கும்போது எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடிந்தது? அதுதான் நயன்தாராவின் பார்வைகள் செய்த மாயம்!

`உன்னாலே பல ஞாபகம், என் முன்னே வந்தாடுதே’ என்ற வரிகள் சோகத்தைக் கடத்த, அடுத்த ஃப்ரேமில் நயன்தாரா கொடுக்கும் ரியாக்ஷன் அந்தச் சோகத்தைவிட வலி நிறைந்த உணர்வொன்றைக் கடத்தும். மொத்த உயிரும் உடலைவிட்டு வெளியேறிவிட்டது என்பதுபோல் இருக்கும், விரிந்திருக்கும் அந்தக் கண்கள். சோகத்தின் கறைகளை எச்சிலோடு சேர்த்து தொண்டை மட்டும் விழுங்கிக்கொண்டிருக்க, வாசு பாடிய அந்த `வெண்மேகம்', உள்ளுக்குள் கண்ணீர் மழை பொழிந்துகொண்டிருக்கும். படுக்கையில் கிடக்கும் பாட்டியிடம் தன் தந்தையைப் பற்றி வாசு சொல்லும்போது, அந்தக் குற்றம் பெருக்கெடுத்து கண்ணீராகவே வழிந்தோடும். தன் நிச்சயத்தின்போது அருகில் வந்து அமரும் வாசுவைக் கீர்த்தி பார்க்கும் அந்தப் பார்வை… `உன்னால் எப்படி இங்கு உட்கார முடிகிறது’ என்ற கேள்வியையும் கேட்கும், `என்னால் இங்கு உட்கார முடியவில்லை’ என்றும் சொல்லும். அந்த இடத்தில்தான், கீர்த்தியின் மாற்றம் புரியத் தொடங்கும். எல்லாம் நயன்தாராவின் மௌன அழுகையிலேயே சொல்லப்பட்டிருக்கும்.

நயன்தாரா
நயன்தாரா

இதுதான் நயன்தாரா. உணர்வுகளைத் திரை தாண்டிக் கடத்துவதில் வல்லவர்! `அறம்' படத்தில், குழிக்குள்ளிருந்த அந்தச் சிறுமி மீட்கப்பட்ட பிறகு ஆனந்தமும் ஆசுவாசமும் கலந்து அழுததாகட்டும், ஶ்ரீ ராம ராஜ்ஜியத்தில், ராமனின் அறையில் தன் சிலையைக் கண்டு நெகிழ்ச்சியும் காதலும் கலந்து அழுவதாகட்டும், `புதிய நியமம்' மலையாளப் படத்தில் கோபமும் ஆற்றாமையும் கலந்து உள்ளுக்குள் குமுறுவதாகட்டும்… ஒவ்வொரு உணர்வையும் அப்படியே பிரதிபலிப்பவர் அவர். கண்ணாடியின் முன்பு நின்றதைப்போல் தெரிந்ததாலோ என்னவோ கீர்த்தி, ரெஜினா இருவரின் மீதும் அப்படியொரு ஈர்ப்பு. ஆனாலும், சீதையாக, காதம்பரியாக, அப்சராவாக ஒவ்வொரு முறையும் அவர் திரையில் அழும்போதெல்லாம் அந்த பாரம் தொற்றிக்கொண்டுவிடும். அழகை ரசிப்பதுபோல், அந்த அழுகையையும் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும். கலங்கிக்கிடக்கும் அந்தக் கண்களைக் காதலிக்கத்தோன்றும்.

நயன்தாரா
நயன்தாரா

`அழாத கண்கள் அழகாவதில்லை’ என்றார் இத்தாலிய நடிகை சோஃபியா லாரன். உண்மைதான்போல. கண்கள் அழும்போது அழகாகும்போல. அதனால்தான், அவரின் கண்கள் அப்படி ஈர்க்கின்றன... அவர் பெயரும் அதைத்தானே சொல்கிறது... `நட்சத்திரத்தின் கண்கள்!’

அடுத்த கட்டுரைக்கு