Published:Updated:

`தமிழ் சினிமாவின் முழுமுதல் இளமையான இயக்குநர்... The Name Is Sridhar!'

Director Sridhar
Director Sridhar ( From Vikatan Archives )

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் வரிசையை, எல்லோரும் பாரதிராஜா, பாலசந்திரில் இருந்து துவங்குவார்கள். ஆனால், அந்த வரிசையை எப்போதும் ஸ்ரீதரில் இருந்து ஆரம்பிப்பதே என் வழக்கம். ஏனென்றால், சிகரம், இமயம் என எல்லோரையும் கடந்த வானம் ஸ்ரீதர்!

சன் டிவியில் 'காலத்தை வென்ற காவியங்கள்' என்ற பெயரில், பழைய படங்களைப் போட்டு வருகிறார்கள். சென்ற வாரம் முழுவதும், பக்தி படங்கள் அல்லது காதல் படங்கள். திருவிளையாடல், அன்பே வா என அத்தனையுமே அட்டகாசங்கள்! இந்த வாரம் காமெடி வாரம் என்றதுமே, அதிக உற்சாகம் என்னிடம். கண்டிப்பாக, 'காதலிக்க நேரமில்லை' படம் பட்டியலில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அட, முதல் படமே அதுதான்! ஆழியாரின் அழகில் மயங்க இன்னுமொரு இனிய வாய்ப்பு… மயங்கினேன்.

'காதலிக்க நேரமில்லை' பற்றி என்ன சொல்வது? அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த அத்தனை தங்க விதிகளையும் சுக்குநூறாக உடைத்து சிதறவிட்ட படம் அது! ஸ்ரீதரின் மாஸ்டர் பீஸ்! பெரிய நட்சத்திர கதாநாயகர்கள் இல்லை. கதாநாயகிகளும்கூட அறிமுகப் பெண்கள்தான். ஆனாலும், தியேட்டர்களில் பல தீபாவளிகளைப் பார்த்தது காதலிக்க நேரமில்லை. முதன்முதலில், தமிழில் ஒரு இயக்குநரின் பெயருக்கு தியேட்டரில் கைதட்டல் கிடைத்தது என்றால், அதுவும் காதலிக்க நேரமில்லைக்குதான். ரவிச்சந்திரனுக்கும் அந்தப்படம் மிகப்பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுத்ததாக, தாத்தாக்கள் சொல்வார்கள். இப்போது, 'என்ன பெரிய ரஜினியா...' என்று சொல்வதைப்போல, அப்போது 'என்ன பெரிய ரவிச்சந்திரனா...' என்று சொல்வார்களாம்.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் வரிசையை, எல்லோரும் பாரதிராஜா, பாலசந்தரில் இருந்து துவங்குவார்கள். ஆனால், அந்த வரிசையை எப்போதும் ஸ்ரீதரில் இருந்து ஆரம்பிப்பதே என் வழக்கம். ஏனென்றால், சிகரம், இமயம் என எல்லோரையும் கடந்த வானம், ஸ்ரீதர்! ஒருவகையில், ஸ்ரீதர் அமைத்துக் கொடுத்த நிழலில்தான், தமிழில் பிறகு வந்த அத்தனை இயக்குநர்களும் இளைப்பாறினார்கள் எனலாம். பிரம்மாண்டத்தில், அவர் நாலு ஷங்கருக்கு சமம். மொழிகடந்து வெல்வதில், அவர் ஏழு ஏ.ஆர்.முருகதாஸூக்கு சமம்!

ஸ்ரீதரை எனக்கு அவ்வளவுப் பிடிக்க காரணம், எல்லோரும் ஒரு திசையில் சென்றால், அவர் மட்டும் வேறுதிசையில் செல்வார். திரையில் எதெல்லாம் மாறக்கூடாது என்று சமூகம் நினைக்குமோ, அதையெல்லாம் மாற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்ரீதரிடம் இருந்த இளமை வேகம், அவருக்குப் பின் எந்தத் தமிழ் இயக்குநருக்கும் இருந்ததே இல்லை. தமிழ்சினிமாவில், அவருக்குத்தான் கடைசி வரை 'இளமை ஊஞ்சலாடியது'!

kadhalikka neramillai movie
kadhalikka neramillai movie
From Vikatan Archives

நண்பர் ராஜேஷ் ஸ்ரீதரைப் பற்றிய அவரது கட்டுரையில் ஒரு வரி சொல்லியிருப்பார். 'தமிழில் இளைஞர்களுக்காகப் படமெடுத்த முதல் இயக்குநர் ஸ்ரீதர்' என்று. ஸ்ரீதர் படங்களின் ஒரே ஒரு ஃபிரேமை பார்த்தாலே, அது பெரிய உண்மையென்பது தெளிவாகப்புரியும். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை முதன்முதலில் ஜீன்ஸ் பேண்டோடு உலவவிட்டவர் ஸ்ரீதர்தான். அதுவும், ஒரு படத்தில் நைட்டியோடு ஒரு பாடலே பாடுவார், ஸ்ரீதரின் கதாநாயகி. இது மட்டுமல்ல. 'அத்தான், சுவாமி, நாதா...' எனப் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை, இன்றைய இயல்பான மொழியின் தளத்துக்கு அழைத்து வந்தவரும் ஸ்ரீதர்தான். பராசக்தியெல்லாம் இயல்பான வசனம் அல்ல. அது, மேடை நாடகத்தின் திரை வடிவம்! ஆனால், ஸ்ரீதரின் படங்கள் அப்படியிருக்காது.

சோகம் வழியும் ஒரு காதல் பாட்டோடு படத்தை (கல்யாணப் பரிசு) முடிக்கவும் அவருக்குத் தெரியும். நெஞ்சை அள்ளும் ஒரு துள்ளல் பாட்டோடு படத்தைத் (காதலிக்க நேரமில்லை) தொடங்கவும் அவருக்குத் தெரியும். 'நெஞ்சில் ஓர் ஆலயம்' போல சீரியஸ் படமும் அவரிடமிருந்து வரும். What Not! He is the greatest creator this tamilnadu ever produced! ராஜேஷ் கட்டுரை மிக முக்கியமானது. அந்தக் கட்டுரையில் வரும் ஸ்ரீதர் கார் ஓட்டும் அத்தியாயத்தை விட்டுவிட வேண்டாம். ஸ்ரீதரை எனக்கு மிக நெருக்கமானவராக மாற்றியது, அந்த அத்தியாயம்தான்! கட்டாயம் படிக்கவும்...

எல்லோரையும்விட ஒருபடி முன்னால் நின்று யோசிப்பவர் ஸ்ரீதர் என்று முன்னாலேயே சொன்னேன். அதனால், அவர் அடைந்த அளவுக்கு இழந்ததும் அதிகம். பொதுவாகவே, இளம் வயதிலேயே உலகை ஆட்கொள்ளும் வெறித்திறமையுடன் வருபவர்களை, நிறைய பேருக்கு பிடிக்காது. ஏனென்றால், அந்த 'நிறைய பேர்' பலவருடமாக முயன்றும் சாதிக்க முடியாததை, இவர்கள் 'ஜஸ்ட் லைக் தட்' செய்து முடிப்பார்கள். எனவே, எதைச் செய்தேனும் அந்த இளம் நாயகர்களைத் தடுக்கப்பார்ப்பார்கள். அழுத்தங்களுக்கு மேல் அழுத்தங்கள் பாய்ந்து வரும். ஸ்ரீதருக்கும் அது நடந்தது! ஆரம்பகட்டத்தில் ஒரு எளிய வசனகர்த்தா அளவுக்கே ஸ்ரீதருக்கு திரைத்துறையில் இடம் கிடைத்தது. அன்று, அவரைவிட திறன்குறைந்தவர்கள் எல்லாம் அதிக சம்பளத்தில் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குநன், கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, எழுதி எழுதி பேப்பரை மட்டுமே கிழித்துக்கொண்டிருந்தான். கல்யாணப் பரிசு வந்து ஸ்ரீதரின் பெயர் பெரிதாகப் பேசப்பட ஆரம்பித்த பிறகும், அதே நிலைமைதான். பின்னாளில், சித்ராலயாவை தொடங்கிய பிறகுதான், ஸ்ரீதருக்கு பெரியளவில் பிரச்னையில்லாமல் இருந்தது. அவர் அதிகளவில் படங்களை எடுக்க ஆரம்பித்ததும் சித்ராலயாவை தொடங்கிய பிறகுதான்.

Kalyana parisu movie
Kalyana parisu movie
From Vikatan Archives

உண்மையில் ஸ்ரீதரின் முதல் ஸ்கிரிப்ட் நிராகரிக்கப்பட்ட ஒன்று. லட்சியவாதி என்பது அதன்பெயர். நிராகரித்தவர், அப்போது குறிப்பிடத்தக்க இயக்குநராக வலம்வந்த நீலகண்டன். ஆனால், அதே ஸ்க்ரிப்ட் 'ஜூபிடர் பிக்சர்ஸ்' அவ்வை சண்முகத்துக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. ரத்தபாசம் என்ற பெயரில் லட்சியவாதியை மேடையேற்றினார், அவ்வை. பயங்கர வரவேற்பு! 'யார் இதை எழுதியவன்' என்று அரங்கமே தேடுகிறது. கூச்சப்பட்டு மேடைக்குப் பின்னாலேயே நிற்கிறார் ஸ்ரீதர். அவ்வை சண்முகம் ஸ்ரீதரை தேடிக்கண்டுபிடித்து வந்து மேடையேற்றுகிறார். 'இவன்தான் அவன்...' என்று எல்லோருக்கும் உரக்கச் சொல்கிறார். அன்று உயர்ந்த ஸ்ரீதரின் கை, கடைசிவரை உயர்ந்தேதான் இருந்தது! ரத்தபாசம் கதையை படமாக எடுக்க முன்வருகிறார் சண்முகனார். 'மாடர்ன் தியேட்டர்ஸ்' சுந்தரனாரும் உடன் இணைகிறார். இருவரும் இணைந்து தயாரித்து வெளியிடத் திட்டமிடுகிறார்கள். இப்போதும், அவ்வைதான் ஸ்ரீதரை அரணென காக்கிறார். அதாவது, சுந்தரனார் 'சின்னப்பையனா இருக்கான்...' என்று, ஸ்ரீதரை மாற்றச் சொல்ல, 'அவன் சுகுரா அடிப்பான்... பாரு...' என்று அவ்வை சொல்கிறார். பின், ரத்தபாசம் இந்தி வரை சென்றது. 'பெருவெற்றி' என்கிறார் விக்கியார்! பொதுவாக, திறமைசாலிகள் பெருநதிகள்! சரியான ஒரு திருப்புமுனை மட்டும் கிடைத்தால் போதும். இடையே எதுவந்தாலும் ஏறிமிதித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஸ்ரீதருக்கு அந்தத் திருப்புமுனை அவ்வையால் கிடைத்தது! இன்றும் ஸ்ரீதர் நிற்கிறார்!

தமிழ் சினிமாவில் சந்தேகமே இல்லாமல் வெற்றிகளைக் குவிக்கக்கூடிய ஃபார்முலா 'ஸ்ரீதர் ஃபார்முலா'தான்! ஆனால், அதைக் கைவசப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு ஸ்ரீதரைப்போல, காலத்துக்கு முன்சென்று பார்க்கக்கூடிய கண்கள் வேண்டும். நினைத்ததை எட்டும் வரை, அமைதியடையாத மனம் வேண்டும். கூடவே, கொஞ்சம் திமிரும் வேண்டும்! எம்ஜிஆர்தான் அப்போது தமிழ்த்திரையுலகின் ரேஞ்சில் இருந்தவர்.

M. G. Ramachandran with Director Sridhar
M. G. Ramachandran with Director Sridhar
From Vikatan Archives

ஆனால், அவரையே 'என் படத்தில் நான் சொல்லிய மாதிரிதான் நடிக்க வேண்டும்' என்றவர் ஸ்ரீதர். பின்னாளில், எம்ஜிஆர் `உரிமைக்குரல்' மூலம் உதவிக்கரம் நீட்டியபோதும், ஸ்ரீதரிடம் அந்தத் திமிர் அப்படியேதான் இருந்தது. அதைத் தவறென்றும் சொல்ல முடியாது. அந்தத் திமிரால்தான் இன்றும் தரத்திலும் தகுதியிலும் எவரும் நெருங்க முடியாத வகைப் படங்களை ஸ்ரீதரால் கொடுக்க முடிந்திருக்கிறது.

பால்கே விருதைப்போல, ஸ்ரீதர் பெயரில் ஒரு பெரிய விருதை உருவாக்க வேண்டும் என்பது, என் ஆசை.

காதலிக்க நேரமில்லை இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பார்த்து விடுங்கள். Don't Miss The Sridhar's Magic!

அடுத்த கட்டுரைக்கு