Published:Updated:

`Once upon A time...ஜார்ஜ் டவுன்ல; ரியல் மெட்ராஸ்பா!’ -`சுவர்' அரசியலில் அதிரவைத்த நம்ம `புள்ளிங்கோ'

5 ஆண்டுகளுக்கு முன் இதே செப்டம்பர் மாதத்தில் (26-ம் தேதி) தான் 'மெட்ராஸ்' ரிலீஸானது. பலருக்கு இதேநாளில்தான் மெட்ராஸ் நகரம் குறித்த பார்வையும் மாறியது. சட்டி மேளம், கானா பாட்டு, பேண்டு மேளத்தோடு பாசமும் நேசமுமாக உழைத்த மனிதர்கள் பற்றி முதல்முறையாகத் திரையில் பேசியது.

பொதுவாக ஒரு இயக்குநருக்கு இரண்டாம் படம்தான் `ஆசிட் டெஸ்ட்'. பலர் 'ஒரு பட' அதிசயங்களாக மீண்டு(ம்)வர முடியாமல் திக்கற்ற காட்டில் வழிதவறிக் காணாமல் போய்விடுகிறார்கள். இந்த சோதனையைக் கடந்து சாதித்தவர்கள் தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்துவிடுகிறார்கள்... பா.இரஞ்சித்தைப்போல!

'அட்டகத்தி' என்ற தன் முதல் படத்தின் மூலம் பல கற்பிதங்களை உடைத்து சுக்குநூறாக்கியவர் பா.இரஞ்சித். மேலெழுந்தவாரியாக அந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு சென்னைப் புறநகரைச் சேர்ந்த ஒரு ரெண்டுங்கெட்டான் இளைஞனின் ஹார்மோன் கோளாறில் விழையும் காமெடி சம்பவங்களின் தொகுப்பாகத் தோன்றலாம். ஆனால், நிஜ சென்னையான வட சென்னையின் கொண்டாட்டமான வாழ்வியலை பாசாங்கில்லாமல் பதிவு செய்தவகையில் 'அட்டகத்தி' தவிர்க்க முடியாத தமிழ் சினிமாவாகிறது!

'அட்டகத்தி' தந்த பா.இரஞ்சித், `நான் அட்டகத்தி அல்ல' என்பதை தனது இரண்டாம் படத்தில் சொல்லியாக வேண்டிய கட்டாயம். சென்ட்ரலின் முதுகுக்குப் பின்னால் இருக்கும் வட சென்னையை பா.இரஞ்சித் அப்படியே லைஃபும் க்ரைமுமாகக் காட்டிய படம்தான் 'மெட்ராஸ்'. ஆமாம்... 5 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 'மெட்ராஸ்' ரிலீஸானது. பலருக்கு இதேநாளில்தான் மெட்ராஸ் நகரம் குறித்த பார்வையும் மாறியது. சட்டி மேளம், கானா பாட்டு, பேண்டு மேளத்தோடு பாசமும் நேசமுமாக ரிப்பன் பில்டிங், ஹைகோர்ட் கட்டடங்களின் உருவாக்கத்தில் உழைத்த மனிதர்கள் பற்றி முதல்முறையாகத் திரையில் பேசியது. இந்த 'மெட்ராஸ்'தான் தனிப்பட்ட முறையில் பா.இரஞ்சித்தின் கைப்பிடித்து மலேசியா, மும்பை எனப் புதுப்புது களங்களைக் காண வைத்தது.

karthi
karthi

அடிப்படையில் ஓவியரான பா.இரஞ்சித் வண்ணங்களின் மூலம்தான் இந்தப் படத்தின் கதையைச் சொல்லியிருந்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்டது ஒரு ஹவுஸிங் போர்டின் சுவரை! நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் ஒரு 'சாதாரண' சுவர்தான் அது. படம் ஆரம்பிக்கும் முதல் ஃபிரேமிலேயே வாய்ஸ் ஓவரில் கதை சொல்லப்படுகிறது. ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் எப்படி அரசியலில் பிரிந்து வடசென்னையைத் தங்கள் சுய லாபத்துக்காகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் என்று இரண்டு வண்ணங்களில் காட்டியிருப்பார். அந்தச் சுவரால் விழும் முதல் பலியான செங்கனின் ரத்தம் அந்தச் சுவரெங்கும் தெறித்துப் பரவுவதாகக் காட்டியிருப்பார். சுவர் என்பது வெறும் சுவரல்ல. அது அதிகாரத்தின் நீட்சியாக நீளும் கொடும் நாக்கு. 'ரத்தக்காவு' கேட்கும் அதிகார ஓநாயின் கோரப் பற்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சுவரில்தான் புன்னகையின் உருவமாகக் கிருஷ்ணப்பனின் உருவம் வரையப்பட்டிருக்கும். தான் செத்தும் 'வடசென்னையின் நிரந்தர செங்கோலே' என அதிகாரப் பகிர்வுக்குக்கூட வாய்ப்பளிக்காத வெறி, இருமாப்பின் மௌனசாட்சியாக நிற்கும் கிருஷ்ணப்பனின் சுவரோவியம். இதன் மீதுதான் நீல வண்ணத்தைக் கொட்டி எதிர்ப்பைக் காட்டுவான் நாயகன் காளி. அதே சுவரில் குழந்தைகள் படம் வரையப்பட்டு 'கல்வி என்பது உலகை அறிவதற்காக அல்ல... உலகை மாற்றுவதற்கு!' என கல்வியின் அவசியத்தைப் பேசும் சுவரோவியமாக நாயகனால் அது மாற்றப்படும். இப்படி சுவரில் ஆரம்பித்த கதை சுவரில் முடியும். படத்தின் இந்த எளிமைதான் எல்லோரையும் தியேட்டரில் கட்டிப்போட்டது.

karthi, Catherine Tresa
karthi, Catherine Tresa

'மெட்ராஸ்' படம் நட்பையும் அரசியலையும் மட்டுமா பேசியிருந்தது?

"அப்போ அது உண்மை இல்லையா?"- தூக்கக் கலக்கத்தில் கொட்டாவி விட்டபடியே அறிமுகமாகும் கலையரசி தண்ணீர் பைப்படியில் மன்னிப்புக் கேட்கும் காளியிடம் இப்படிக் கேட்பதைவிடவா காதல் காட்சி இருந்துவிடப்போகிறது?

"கட்டுன புருஷன் குத்துக்கல்லாட்டம் இருக்கேன். எவனோ ஹீரோ போட்டோவுக்கு முத்தம் கொடுத்துட்டுருக்கே!' எனக் கலாய்க்கும் கணவனைப் பார்த்து, "இப்படிக் குத்துக்கல்லாட்டம் இருந்தா அப்படித்தான் முத்தம் கொடுப்பாங்க!" எனச் சீண்டும் மனைவியை விடவா ஒரு ரொமான்ஸ் காட்சி இருந்துவிடப்போகிறது?

"நேத்து ஏன் என்னைப் பார்க்க வரல? உனக்கு என்னைவிட எல்லாமே பெருசா போச்சு?"

"கலை, உனக்கு என்னதாண்டி வேணும்?"

"ஆங்... நீதான் வேணும், கட்டிக்கிறியா?"

"அப்டினா வா... வந்து பின்னாடி உட்காரு... அப்பத்தான் கட்டிப்பேன்!"

- இப்படி யதார்த்தமான காதலைப் பதிவு செய்திருந்ததும் மெட்ராஸின் பலம். அன்பு - மேரி, காளி - கலையரசி என இரண்டு காதலை எந்த மிகையுமில்லாமல் காட்டியதற்காகவும் மெட்ராஸைக் கொண்டாடலாம்.

'நீங்க தப்பா நினைக்காதீங்க அம்மா. எல்லாம் நல்லதுக்குத்தான்!' எனக் காளியின் அம்மாவிடம் கலையரசி பேசும் காட்சியொன்றே போதும் ஊடலையே ஆயுதமாக்கி காதலனை வன்முறைப் பாதையிலிருந்து திருத்தும் அன்புக்காரி கலையரசியின் மன ஓட்டத்தை விளக்க..!

மெட்ராஸின் பலமே இதுபோன்ற எளிமையான பாத்திர வார்ப்புகள் தான். ப்ளூ பாய்ஸ், அழுகை கானா பாடும் பாலா, 'நான் சொல்றபடி கேளு மாமே... உன் லவ் சக்சஸ்தான்..!' என தப்புத்தப்பாய் ஐடியாக்கள் கொடுக்கும் கார்த்தியின் நண்பர்கள் பட்டாளத்தில் வரும் ஒருவர்... அட நம்ம 'புள்ளிங்கோ'!

மெட்ராஸ்' எனும் பெரிய சுவரைப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொரு செங்கல்லாய் இப்படி சிறிதும் பெரிதுமாய் அடுக்கப்பட்ட கேரக்டர்களின் பலம் புரியும். அதன் மூலம் மெட்ராஸின் 'படை பலம்' புரியும். சந்தோஷ் நாராயணன், ஜி.முரளி, ராமலிங்கம் என தன் பங்காளிகளின் பங்களிப்பை சரிவிகிதத்தில் வாங்கி வேறொரு கேண்டிட் திரை அனுபவத்தை நமக்குக் கொடுத்திருந்தார் இரஞ்சித்!

''என் முன்னாடி கைகட்டி நின்ன பயலுக இப்ப எதிர்த்து குரல் கொடுக்குறீங்களா, எங்கேயிருந்து வந்துச்சுடா இந்தத் தைரியம்?'' என அதிகாரத் திமிரில் பேசும் கிருஷ்ணப்பன், ''இன்னும் எத்தனை காலம்தான் அடிமையாய் கிடப்போம்?'' என எதிர்த்து குரல் கொடுக்கும் செங்கன், ''சுவரா உனக்கு கஞ்சி ஊத்தப்போகுது?'' எனக் கணவனிடம் கோபப்படும் மேரி, ''பிலுபிலுன்னு புள்ளைங்களைப் பெத்துக்கோ... படைபலம்!'' எனக் கொக்கரிக்கும் மாரி, ''பெரிய ஐட்டங்காரனா ஆகணும்!'' என வன்முறையின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் விஜி, ''அந்தச்சுவர்ல என் தாத்தா இருக்காரு'' என சென்ட்டிமென்ட் அரசியல் பண்ணும் கண்ணனின் மகன் பெருமாள், ''எப்படியாச்சும் அந்தச் சுவரைக் கைப்பத்தணும்! எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. எத்தனை உசிர் போனாலும் பரவாயில்லை!'' என ஓநாயாய் காத்திருக்கும் கிருஷ்ணப்பனின் மகன் கண்ணன், ''தவமா தவமிருந்து பெத்த புள்ளைடா நீ... உனக்கு ஏன்டா இந்தப் பொல்லாப்பு?'' எனப் பாசத்தில் உருகும் காளியின் அம்மா, ''யாருக்கு வேணும் உன் துட்டு!'' என மாரியின் முகத்தில் காசை விசிறியெறியும் மூதாட்டி, ''காளி வந்துட்டான்... காளி வந்துட்டான்' எனும் 'நாக்குப்பூச்சி' ஜானி எனப் பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே நிஜமாகவே நம்முன்னே வாழ்ந்திருந்தன.

karthi, catherine
karthi, catherine

படத்தில் சில நிமிடங்களே வரும் நான் சொல்லாத ஒரு பாத்திரம் இருக்கிறது. ஒருவகையில் திரைக்கதையில் விழும் ஒரு முடிச்சை அதுதான் அவிழ்க்கிறது. ரெஸ்ட்டாரன்ட்டில் இருக்கும் காளி - கலையரசியைப் பார்த்து பயந்து ஓடும் அணில் கேரக்டர்தான் அது. விரட்டிப்பிடிக்கும் காளியிடம், ''எனக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாமே மாரி போட்ட ஸ்கெட்ச்தான்'' என உளறிக் கொட்டும் அந்த கேரக்டரை அறிமுகப்படுத்தும்போதே காமெடியாக உளறிக் கொட்டும் ஆளாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இரஞ்சித். இப்படிப் பல கேரக்டர்கள் திரைக்கதையிலும் பெரும் பங்காற்றியிருப்பது படத்தின் பலம்.

காளியின் முன் கோபத்தாலேயே ஏதோ ஒரு சிக்கல் பின்னால் வரப்போகிறது என்பதை உணர முடியும். முதல் சமாதானப் படலத்திலேயே கை நீட்டும் ஆளாகக் காளி பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். கார்த்தியை அவன் விளையாடும் கால்பந்தாட்டம்தான் இறுதியில் மைதானத்தில் எதிரிகளிடமிருந்து காப்பாற்றும். ''உனக்கு எதுக்குடா இதுலாம்... ஏன்டா பேசிட்டிருக்குறப்போ கை நீட்டுறே?'' எனக் காளியின் மீது நிஜ அக்கறை காட்டும் அன்புதான் காளிக்காக தானே பலியாகிறான் என்பதெல்லாம் திரைக்கதையின் ஆகச்சிறந்த நேர்த்தி!

சுவரை வைத்து அரசியல் பண்ணி மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் மாரியின் சுயரூபத்தை அவனைக் கொண்டாடும் மக்களை வைத்தே விரட்டியடிக்கும் காட்சிதான் படத்தின் நிஜ க்ளைமாக்ஸ். நாயகன் கையில் நீல வண்ண பெயின்ட்டோடு படம் முடிந்திருந்தால் அது யதார்த்த சினிமாவாக மட்டுமே நிலைத்திருக்கும். எந்தச் சுவரை வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைத்ததோ ஒரு கூட்டம்... அதன் பிரதிநிதியான மாரியைக் கடைசி களப்பலியான அன்பின் மனைவியை வைத்தே கறுப்பு வண்ணத்தை முகத்தில் பூசி விரட்டியடிப்பதைவிடவா ஒரு ஆக்‌ஷன் காட்சி இருந்துவிடப்போகிறது? இப்படி வண்ணங்களால் படத்தின் கதைக்கான அழுத்தத்தைக் கொடுத்தது இரஞ்சித் டீமின் வெற்றி!

Madras
Madras

கல்வியால் மட்டும்தான் அரசியலாலும் சாதியாலும் பிரிந்து கிடக்கும் இந்த மக்களை விழிப்புணர்வு பெற வைக்க முடியும் என்ற எண்ணத்தைத் தன் நீல வண்ணத்தின் மூலம் முடிவு கொடுத்திருப்பார் இரஞ்சித். ஆம்... படித்த காளியின் சொல்லை அந்த மக்கள் கேட்டு மாரியை விரட்டியடிப்பார்கள். மாணவர்களுக்கு சமூக அரசியல் பாடமெடுக்கும் ஒரு கரும்பலகையோடுதான் படம் நிறைவு பெறும். அங்குதான் அம்பேத்கரோடு சேர்த்து தமிழகத் தலைவர்களான அயோத்திதாச பண்டிதரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் பலர் முதன்முதலாகத் திரையில் பார்த்தனர்.

சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் ஒரு ரசிகனாகக் குறியீடு என்ற விஷயத்தைத் திரையில் தேடித்தேடி பேச வைத்த படம் 'மெட்ராஸ்'. இத்தனைக்கும் இரஞ்சித் எந்த இடத்திலும் 'நான் அதனால்தான் அப்படியொரு காட்சியை வைத்தேன்' என எதுவும் சொல்லாமலேயே, இந்தப்படம் வந்தபிறகு ஆளாளுக்கு வண்ணங்களையும் பொருள்களையும் காட்சிகளில் தேடினார்கள். `நீலம்' தவிர்த்த பல குறியீடுகளைக் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் எழுதித்தீர்த்தார்கள்... சிலர் மிகைப்படுத்தி கலாய்க்கவும் செய்தனர். இரஞ்சித்தின் வெற்றியும் அதுதான்.

Pa.Ranjith
Pa.Ranjith

எந்தெந்தப் படங்களுக்கோ பார்ட்-2 எடுக்கிறார்கள். நிச்சயம் இரஞ்சித் `மெட்ராஸ் பார்ட்-2' எடுக்கலாம். சுவரைக் கைப்பற்றும் கண்ணனின் கனவை விஜி நிறைவேற்றினானா? வெறும் கல்வி மட்டுமல்லாமல் அரசியல் விழிப்புணர்வும் பகுத்தறிவும் தேவை எனக் குடும்பத்தோடு டியூஷன் எடுக்கும் காளியின் கனவு நிறைவேறியதா எனத் தெரிந்துகொள்ள அவ்வளவு ஆசை!

அதுவரை வட சென்னை சினிமாக்களின் நிரந்தர செங்கோல் சந்தேகமே இல்லாமல் இந்த 'மெட்ராஸ்'தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு