Election bannerElection banner
Published:Updated:

`உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது...’ – ஆனந்தி அக்கா – குமார் அண்ணன் காதலின் மெளன சாட்சி! #HBDYuvan

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

குமார் அண்ணனுக்கு யுவன் என்றால் ரொம்பப் பிரியம். யுவனைவிட ஆனந்தி அக்கா மீது கொள்ளைப் பிரியம். `கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலியின் பெயர் ஆனந்தியாகிப்போனதால், இப்பாடல் குமார் அண்ணனின் ரிங்டோனாகிப்போனது.

இன்று யுவனின் பிறந்தநாள். என்னவோ யுவனைப் பற்றி முழுமையாய் எழுதுவதென்பது ஒரு யுகத்தைப் பற்றி முழுமையாய் எழுதுவதுபோல் மலைப்பாய் இருக்கிறது. எந்த எழுத்தும் எத்தகைய வார்த்தையும் அந்தக் கலைஞனின் அற்புதத்தை எடுத்துக்கூற போதுமானதாகவே இல்லை. எழுத எழுதத் தீராத திருப்தியின்மை மட்டுமே ஒவ்வொரு முயற்சியிலும் மிஞ்சுகிறது. போதும், இனி யுவனைப் பற்றி எழுதவதாக இல்லை, எழுதுவதற்கு வார்த்தைகளும் என்னிடம் இல்லை. வேண்டுமானால் ஒரு கதை சொல்கிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்
பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்
"உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது. உன் துயரம் சாய என் தோள் உள்ளது..."

இப்பாடல், எப்போதும் என்னை அழவைக்கிறது. கண்ணீர் வெளியேறிய பின்னர், கண்களுள் குமார் அண்ணன் வந்துவிடுகிறார், கூடவே ஆனந்தி அக்காவும். கருமை நிறம், கலையான முகம், கழுத்தில் 'A' டாலர் அணிந்திருக்கும் குமார் அண்ணனுக்கு யுவன் என்றால் ரொம்பப் பிரியம். யுவனைவிட ஆனந்தி அக்கா மீது கொள்ளைப் பிரியம். `கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலியின் பெயர் ஆனந்தியாகிப்போனதால், இப்பாடல் குமார் அண்ணனின் ரிங்டோனாகிப்போனது.

அக்காவுக்கு மேலமாசி வீதியிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலை. நெற்றியில் சுண்டுவிரல் அகலத்திற்கு சின்னதாய் திருநீறும், அதற்கு மேல் அதே அளவில் குங்குமும் இட்டிருக்கும் ஆனந்தி அக்கா, அஞ்சலியை விட அழகு.

பிரபாவின் ஆனந்தி
பிரபாவின் ஆனந்தி

அக்காவுக்கும் குமார் அண்ணன்மீது அவ்வளவு காதல். அதன் கைக்குட்டையில் குமார் என்ற பெயரைச் சுற்றி இதயம் வரைந்து அம்பு விட்டிருக்கும். ஒருமுறை, குமார் அண்ணனிடம் எதையோ சொல்லி அழுதுகொண்டே... கைக்குட்டையை எடுத்து நனைத்தது. அப்போது பார்த்திருக்கிறேன்.

ஊர் குளத்தங்கரைதான் அவர்களின் காதலுக்கு முழுமையான சாட்சி. அவர்கள் பற்றிய அத்தனையும் அதற்கு மட்டுமே தெரியும். குளத்தங்கரையில் அமர்ந்து இருவரும் கடிகாரம் மறந்து கதைபேசிக்கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு புள்ளியில் கதைகள் முடிந்தவுடன் உண்டாகும் பேரமைதியின்போது, இமைகள் இரண்டும் மூடி, குமார் அண்ணனின் இடது தோளில் ஆனந்தி அக்கா சாய்ந்துகொள்ளும்.

"உன் நினைவில் நான் உறங்கும் நேரம், அன்பே மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா."

போனில் பாடலை மெலிதாய் ஒலிக்கவிட்டு, மௌனத்தை நிரப்பிக்கொண்டிருப்பார் குமார் அண்ணன். அவர்களிலிருந்து விலகி அமர்ந்திருக்கும் எங்களுக்கும் அப்பாடல், அவர்களின் மௌனத்தோடும் பறவைகளின் கீச்சுகளோடும் கலந்து வந்து சேரும். இப்படியே, ஓராயிரம் முறை கேட்டிருப்போம். எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. ஆனாலும், என்னவோ இந்தப் பாடல் மட்டுமே அவர்களின் காதல் கசியும் கண்ணீரை கைக்குட்டையாய் நின்று துடைத்திருக்கிறது.

சில நாள்களில், குமார் அண்ணன் மீனாட்சி பஜாரிலிருந்து வீடியோ போன் ஒன்று வாங்கிவந்தார். முதல் வேலையாக, அவர்களின் காதல் கீதத்தின் வீடியோவைத்தான் போனில் ஏற்றினார். அன்றிலிருந்து அந்தக் குளத்தங்கரையில், அவர்கள் இருவரின் உரையாடலோடு பிரபாவும் இன்னொரு ஆனந்தியும் சேர்ந்துகொண்டார்கள். அப்போதும் அக்கா, கண்களை மூடிக்கொண்டு தோள் சாய்வதை நிறுத்தியதில்லை.

`உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது...’ – ஆனந்தி அக்கா – குமார் அண்ணன் காதலின் மெளன சாட்சி! #HBDYuvan
"மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம், உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா..."

என்கிற வரிகள் வரும் இடத்தில், ஆனந்தி ( அஞ்சலி ) பூசும் கோகுல் சாண்டல் பவுடரை தன் பைக்குள் கொட்டி நுகர்ந்து அவளின் வாசத்தை நாசி வழியாக நெஞ்சுக்குள் நிரப்பிக்கொள்வான் பிரபா ( ஜீவா ). அதைப் பார்த்துவிட்டு கோகுல் சாண்டல் பவுடர் மீது பித்துப்பிடித்துப்போன குமார் அண்ணன், ஆனந்தி அக்காவுக்கு கோகுல் சாண்டல் பவுடர் டப்பா ஒன்று வாங்கித் தந்தார். கொஞ்சம் கொஞ்சமாய், இவர்களின் காதல் பவுடர் வாசமாக ஊர் முழுக்க கமகமக்க, காலகாலத்தில் கல்யாணம் முடித்துவிடுவதுதான் சரியெனப் பேசி முடித்து, திருமணமும் நிச்சயமானது.

திருமணத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாமென நெடுநேரம் சிந்தித்து, கடைசியாக ஒரு கோகுல் சாண்டல் டப்பாவையே வாங்கிக் கொடுத்தோம். "என்னடா இது" என மணமேடையிலேயே அதிர்ந்துபோன குமார் அண்ணனிடம், "உங்க காதல் சின்னம்ணே. இந்த டப்பால இருக்கிறமாதிரியே ஒரு குழந்தையைப் பெத்துக்கொடுங்க" என கோரஸாகச் சொல்ல, ஆனந்தி அக்கா சத்தமாகச் சிரித்துவிட்டது.

`உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது...’ – ஆனந்தி அக்கா – குமார் அண்ணன் காதலின் மெளன சாட்சி! #HBDYuvan

தன் அப்பாவுடன் சேர்ந்து கொட்டகை போடும் வேலைபார்த்து வந்த குமார் அண்ணன், புதிதாய் சாமியானா பந்தல் எல்லாம் வாங்கிப்போட்டு கெத்து காட்டினார். ஸ்ப்ளெண்டர் பைக்கில் ஆனந்தி அக்காவை ஏற்றிக்கொண்டு அழகர்கோவில், திருப்பரங்குன்றம், குட்லாடம்பட்டி அருவியென புதுமண ஜோடிகள் பறந்துதிரிந்தார்கள். உள்ளூர் குளத்தங்கரைதான் அவர்களுக்காக ஏங்கிக்கிடந்தது. ஒருநாள், குலசாமி வழிபாட்டுக்கு குளத்தங்கரைக்கு வந்திருந்தார்கள். அவர்களின் காதல் கீதத்தை நாங்கள் கொரியன் செட்டில் போட்டு அலறவிட, "அட சும்மா இருங்கடா..." என வெட்கத்தில் சைகை காட்டினார் குமார் அண்ணன்.

அதன்பிறகு, அவர்களை அந்தக் குளத்தங்கரையில் நான் பார்க்கவே இல்லை. வழியில் எப்போதாவது பைக்கில் இருவரையும் பார்ப்பேன், அவ்வளவுதான். பிறகு, குமார் அண்ணன் தனியாக கடைபோடும் முடிவுக்கு வந்துவிட, அப்பாவின் தொழில் பாதிக்கப்படக் கூடாதென வேறு ஊருக்கு குடிபெயர்ந்து, அங்கு கடையும் போட்டது. ஆண்டுகள் சில இப்படியே ஓடிப்போயின.

ஒருநாள், ஆனந்தி அக்காவுக்கு ஏதோ ஆபரேஷன் செய்யப்போவதாக என் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவிதமான குழப்பம், பார்வையை இருட்டடித்தன. உடனே குமார் அண்ணனுக்கு போன் செய்தேன். மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார். அங்கே ஆனந்தி அக்கா, ஆபரேஷன் நடந்த வலியில் மயங்கி,கண் மூடிக்கிடந்தது. என்னைக் கண்டதும் குமார் அண்ணன் அருகே வந்து, என் கைகளைப் பற்றிக்கொண்டார். அவர் கைகளின் நடுக்கம் என்னையும் தொற்றிக்கொண்டது.

`உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது...’ – ஆனந்தி அக்கா – குமார் அண்ணன் காதலின் மெளன சாட்சி! #HBDYuvan

அறை முழுக்க டெட்டாலின் நாற்றம். எல்லோர் முகத்திலும் ஓர் வெறுமை. "என்ன ஆச்சுணே" என கேட்டேன். "ஏதோ கர்ப்பப்பையில கோளாறாம். அது இருக்குறது ஆபத்தாம். அதனால, எடுத்துறணும்னு சொல்லிட்டாங்க" என்றவரின் குரல் கம்மியது. குமார் அண்ணன் அழுது நான் பார்த்ததே இல்லை. நெற்றியில் திருநீறு, குங்குமம் இல்லாத ஆனந்தி அக்கா, யாரோ போன்று இருந்தது. மூன்று மணி நேரம் அவரவர் அங்கேயே, அப்படியே அமர்ந்திருந்தோம். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பேசுவதற்கும் ஒன்றுமில்லை. மூன்று மணி நேரம் கழித்து, ஆனந்தி அக்கா கண் விழித்துப் பார்த்து, "குமார் மாமா" என்றது. அக்காவின் குரலை அப்போதுதான் முழுமையாய்க் கேட்கிறேன். குமார் அண்ணன் அருகில் ஓடினார். மனமும் உடலும் கண்டுள்ள வேதனையில், அக்காவுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. கண்ணீரைத் துடைக்க கைக்குட்டையைத் தேடினேன். அதை குமார் அண்ணன்தான் வைத்திருந்தார்.

"உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது, உன் துயரம் சாய என் தோள் உள்ளது. முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை... யார் என்ன சொன்னால் என்ன, அன்பே உன்னோடு நானும் வருவேன்."
`உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது...’ – ஆனந்தி அக்கா – குமார் அண்ணன் காதலின் மெளன சாட்சி! #HBDYuvan

தழுதழுத்த குரலில் குமார் அண்ணன் பாடத்தொடங்கினார். எனக்கு ஒரு நொடி நெஞ்சம் கனத்துப்போனது. டெட்டாலின் நாற்றம் கரைந்து, கோகுல் சாண்டலின் நறுமணம் அறை எங்கும் பரவத்தொடங்கியது. இதற்கு மேல் அங்கு உடையாமல் நிற்பதற்கு என் நெஞ்சில் தெம்பு இல்லை. உள்ளங்கைகள் வியர்க்கத் தொடங்கின, உள்நாக்கு ஒட்டிக்கொண்டது, கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கிறது. வெளியே ஓடிவந்துவிட்டேன். அதன்பிறகு, அவர்களை என்னால் பார்க்கவே முடியவில்லை. என் சிறு பார்வைக்கு அவர்கள் பேரொளியாய்த் தெரிந்தார்கள். என்னவோ, இந்தப் பாடல் மட்டும் அவர்களின் அருகில் என்னை கூட்டிச்செல்கிறது. அப்போதெல்லாம், அவர்கள் குளத்தங்கரையில் அமர்ந்துக்கொண்டு, குளத்தில் கல் வீசி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். கல், குளத்தில் உண்டாக்கிய சலனத்தில், இதய வடிவில் சுழல்கள் உண்டாகின்றன.

சில மாதங்களுக்கு முன், குமார் அண்ணனிடம் மெசெஞ்சரில் பேசினேன். பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்திருக்கிறார்களாம். "வாவ்ணே" என்றேன். "தாங்ஸ்டா தம்பி. பொண்ணுக்கு யுவஶ்ரீனு பெயர் யோசிச்சிருக்கோம். ஃபங்கஷனுக்கு வந்துருடா. இதுதான் என் புது நம்பர்" என நம்பரையும் கொடுத்தார். கால் செய்தேன்...

``ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்...’’
`உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது...’ – ஆனந்தி அக்கா – குமார் அண்ணன் காதலின் மெளன சாட்சி! #HBDYuvan

பாடலை காலர் டியூனாக வைத்திருக்கிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு