சினிமா
Published:Updated:

விடைபெற்ற வெளிச்சம்!

பி.கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
பி.கண்ணன்

படம், உதவி: ஞானம்

மிழ்த் திரைப்பட உலகில் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் பி.கண்ணன். இயக்குநர் பாரதிராஜாவின் கண்கள் இவர்தான் என்று பேசும் அளவிற்கு பல பாரதிராஜாவின் படங்களுக்கு ஒளிப்பதிவின் மூலம் உயிரூட்டியவர். பழம்பெரும் இயக்குநர் பீம்சிங்கின் மகன். தற்போதைய தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் இவர்தான். இவரிடம் 23 படங்களுக்கு மேல் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகருமான இளவரசு, அவருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

“ `நதியைத் தேடி வந்த கடல்’ படம்தான் ஜெயலலிதா நடிச்ச கடைசிப் படம். அதுதான் கண்ணன் சாருக்கு முதல் படம். சினிமாப் பின்னணியிலிருந்து வந்த குடும்பம். ஆனா, அதை அவர் காட்டிக்கவே மாட்டார். நான் ‘மண்வாசனை’ படத்துல கடைசி அசிஸ்டென்டா சேர்ந்தேன். எல்லோரையும் ரொம்ப மரியாதையா நடத்துவார்.

பி.கண்ணன்
பி.கண்ணன்

பாரதிராஜா சார் படம் எடுக்கும்போது காலையில 7 மணியில இருந்து 9 மணி வரை ஒரு வேகம் இருக்கும். அதுக்குள்ள லைட் செட் பண்ணி, ஃப்ரேம் வெச்சு, போகஸ் பண்ணணும். அது சாதாரணம் கிடையாது. பாரதிராஜா சார் வேகத்துக்கு இவரும் வேலை செய்வார். எனக்கு கேமராமேனா வாய்ப்பு கிடைக்கலை. என்ன பண்ணுறதுன்னு தெரியாம இருக்கும்போது நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போ என்கிட்ட ‘கேமராமேனா எப்போ வேணாலும் வேலை செய்யலாம். ஆனா, நடிக்கக் கூப்பிடும்போதே போயிடணும். போய் நடி’ன்னு என்னை ஊக்கப்படுத்தி நடிக்க அனுப்பி வெச்சது அவர்தான்.

அவரை ‘அழகு’ன்னு ஒரு சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்போ என்கிட்ட ‘நடிக்கக் கூப்பிடுறாங்க. நல்லா நடிக்கணும்னா என்னய்யா பண்ணணும்?’னு டிப்ஸ் கேட்டார். ஒரு படத்துல நீதிபதி கேரக்டர் அவருக்கு. ‘இந்த விஷயத்துல நீ எனக்கு குருவா இரு. எப்படி நடிக்கலாம்’னு கேட்டார். அந்த ஈகோ அவர்கிட்ட இருக்காது. என் அப்பா, அம்மா, மனைவிகூட இருந்த நாள்களைவிட கண்ணன் சார்கூட இருந்த நாள்கள் அதிகம். கண்ணன் சார், பாரதிராஜா சார் இவங்க ரெண்டு பேருடன்தான் என் வாழ்க்கையில அதிக நேரம் பயணப்பட்டிருக்கேன்.

முக்கியமான ஒளிப்பதிவாளர்கள் நிறைய பேர் சங்க வேலைகள் வேண்டாம்னு கொஞ்சம் ஒதுங்கி இருந்தபோது, சங்கம் வேற மாதிரி போயிடுச்சு. அப்புறம் சார்தான்... பி.சி.ராம் சார், ராஜீவ் மேனன் எல்லோர்கிட்டேயும் பேசி மறுபடியும் சங்கத்தை முறையா வழிநடத்தினார். எதையுமே பொறுமை இழக்காமல் கையாளுறவர். ரொம்ப நல்ல மனிதர். என் அப்பாவைவிட என் வாழ்க்கையில எனக்கு உறுதுணையா இருந்தது எங்க சார்தான். அவரை இழந்தது மிகப்பெரிய வேதனையா இருக்கு. என்னால அந்தத் துக்கத்துல இருந்து இன்னும் மீண்டு வரமுடியலை.”