Published:Updated:

``சபா புக் பண்ணுங்க! கிரேஸி மோகன் இடத்துல இனி நான் இருப்பேன்!'', மாது பாலாஜிக்கு நம்பிக்கை தந்த கமல்ஹாசன்

Madhu Balaji addressing at Crazy Mohan's pugazhanjali
Madhu Balaji addressing at Crazy Mohan's pugazhanjali

சினிமா, நாடகம், இலக்கியம் எனப் பல முகங்கள் கொண்ட கிரேஸி மோகனுடன் இணைந்து பணியாற்றிய, உறவாடிய பல கலைஞர்கள், நண்பர்கள் தங்களுக்கும் மோகனுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி உணர்வுபூர்வமாக விவரித்தனர்.

"சாதாரணமாக அழுது புலம்பி நடத்த இது ஒன்றும் எப்போதும் நிகழும் ஒரு நினைவேந்தல் நிகழ்வல்ல. ஆனால், சாகும்வரை, ஊரைச் சிரிக்கவைத்த ஒரு கலைஞனின் நினைவுக் கூட்டம். இங்கே யாரும் அழவேண்டாம். அவனைப் பற்றிப் பேசி மகிழ்ந்து, கொண்டாடுவோம்," என்ற ஒய்.ஜி. மகேந்திரனின் கட்டளையோடு தொடங்கியது கிரேஸி மோகனின் நினைவேந்தல்.

A portrait of Crazy Mohan at his pugazhanjali
A portrait of Crazy Mohan at his pugazhanjali

நாடகக் கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் எனப் பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த கிரேஸி மோகனுக்காக சென்னை நகர சபாக்களின் கூட்டமைப்பும் தமிழ்நாடு நாடகத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து திங்களன்று இந்த நினைவேந்தலை நடத்தின. ``நாடகத்தை, நடிப்பை, மைலாப்பூரை பெரிதும் காதலித்தவன் அவன். எந்த அளவுக்கு மைலாப்பூரைக் காதலிச்சான்னா, 'நான் வெஸ்ட் மாம்பலம் போனாலே எனக்கு ஹோம் சிக் வந்திடும்'னு சொல்லுவான். அந்த அளவுக்கு!" எனக் கூறிய ஒய்.ஜி. மகேந்திரன், அந்த விழாவை மைலாப்பூரின் நாரத கான சபாவில் நடத்துவதற்கான காரணத்தைச் சொல்லாமல் சொல்லி, தொடங்கிவைத்தார்.

சினிமா, நாடகம், இலக்கியம் எனப் பல முகங்கள் கொண்ட கிரேஸி மோகனுடன் இணைந்து பணியாற்றிய, உறவாடிய பல கலைஞர்கள், நண்பர்கள் தங்களுக்கும் மோகனுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி உணர்வுபூர்வமாக விவரித்தனர்.

Madhu Balaji
Madhu Balaji

அந்த வரிசையில், தன் நினைவுகளைப் பகிர்ந்த இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், "நான் அவர்கூட சேர்ந்து வேலை பார்த்தது என்னவோ நான்கு, அஞ்சு படமாத்தான் இருக்கும். ஆனா எங்க ரெண்டு பேருக்குமான நட்பு கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கும் மேல நீண்டது," என்றார். அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்களில் மோகனுடன் சேர்ந்து பணியாற்றிய ரவிக்குமார், ``அவர் இறந்தப்போ ஐதராபாத்துல் இருந்தேன். விஷயம் கேள்விப்பட்டதும் கமல் சாரும் நானும் போன்ல பேசிக்கிட்டோம். மணிக்கணக்கா பேசினோம். பொதுவா நானும் கமல் சாரும், கிரேஸி மோகன் சாரும் சேர்ந்து பேசும்போது கண்டிப்பா அங்க நாகேஷ் சார் பத்தியும், பாலசந்தர் சார் பத்தியும் ரொம்ப நேரம் பேச்சு நடக்கும். இப்போ மோகன் சார் அந்த இடத்துக்குப் போயிட்டார்னு கமல் சார் சொன்னார். உண்மைதான்," எனக் கூறி நெகிழ்ந்தார்.

மேலும் கிரேஸி மோகனின் நாடகம், மற்றும் சினிமாக்களின் ஹீரோயின் குறித்து பேசும்போது, "ஒரு முறை என் நண்பர் ஒருத்தர் வெளிநாட்டுல இருந்து வரும்போது, என்கிட்ட கிரேஸி மோகனைக் கண்டிப்பா சந்திக்கணும்னு கேட்டார். நானும் மோகன் சாருக்கு லைன்போட்டுக் கொடுத்தேன். அப்போ, அவர்கிட்ட தன்னோட அம்மா மோகன் சாரோட பெரிய ரசிகைன்னும், அதனால அவரைச் சந்திக்கணும்னும் சொன்னார். அவர் அம்மா யாருன்னும் விசாரிச்ச கிரேஸி மோகனுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. மோகன் சாருக்கு நீண்ட நாள்களா ஸ்கூல் டீச்சரா இருந்த ஜானகிதான் என் நண்பரோட அம்மா. அந்த டீச்சரோட பேரைத்தான் தன்னோட எல்லா நாடகம், சினிமாவுல ரொம்ப சென்டிமென்ட்டா கதாநாயகிகளுக்கு வச்சார் மோகன் சார். இவர்தான்னு தெரிஞ்சதும் மோகன் சாரே கிளம்பி என் அலுவலகத்துக்கு வந்துட்டார்," என்றார் ரவிக்குமார்.

KS Ravikumar addressing at Crazy Mohan's pugazhanjali
KS Ravikumar addressing at Crazy Mohan's pugazhanjali

இதேபோல பல சென்டிமென்ட்டுகளைத் தன் வாழ்வில் வைத்திருந்தவர் கிரேஸி மோகன். அது குறித்து பேசிய அவர் தம்பியும், நாடக நடிகருமான மாது பாலாஜி, ``அவனுக்கு ஏகப்பட்ட சென்டிமென்ட் இருந்தது. அதுல ரொம்ப முக்கியமானது அவன் வச்சிருந்த ஒரு டவல். அந்தத் துண்ட எந்த ஊருக்கு நாடகம் போடப்போனாலும் எடுத்துட்டுபோய், அவன் தங்குற ஹோட்டல் ரூம்ல, அவன் படுக்குற பெட்டுக்குப் பக்கத்துல தலகாணிமேல விரிச்சுவைப்பான். அது இல்லைன்னா நாடகம் நடக்காது.

ஒருமுறை இப்படித்தான் அமெரிக்காவுல சான் டியாகோல நாடகம் போட்டு முடிச்சுட்டு அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்குப் போகும்போது துண்ட விட்டுட்டு வந்துட்டான். சாயங்காலம் நாடகம் தொடங்கணும். ரெண்டு ஊருக்கும் டிராவல் டைம் 5 மணிநேரம். அங்கிருந்து ஒருத்தர டவல் எடுத்துட்டு கிளம்பி 3 மணிநேரம் வரச்சொல்லி, இங்கிருந்து எங்க ஆள் ஒருத்தர் 2 மணிநேரம் போய், நடுவுல ஒரு ஊர்ல சந்திச்சு, அந்தத் துண்ட வாங்கிட்டு வந்த பிறகுதான் நாடகத்துக்கு மணியே அடிச்சுத் தொடங்கினோம்," எனக் கூறி அரங்கையே சிரிக்கவைத்தார்.

தொடர்ந்து பேசியவர், "அவன் இறந்து ஒரு ரெண்டு மூணு நாள் இருக்கும். கமல் சார் கால் பண்ணினார். 'இனி அடுத்து என்ன பண்ணப்போறீங்க?'ன்னு கேட்டார். அதான் தெரியல சார், என்ன பண்ணுறதுன்னேன்னு சொன்னேன். உடனே அவர், அப்படியெல்லாம் விடக்கூடாது. கிரேஸி கிரியேஷன்ஸ் தொடர்ந்து மோகனோட நாடகத்தையெல்லாம் போடணும். இதுமட்டுமல்லாம அவர் எழுதி இன்னும் நாடகமாக்கப்படாமல் இருக்குறதையும் உலகத்துக்கு எடுத்துட்டுப் போகணும். உடனே சபா புக் பண்ணுங்க. அவரோட கிரேஸி ப்ரிமியர் லீக்கோட 100வது நாள் ஷோவை நானும் மெளலி சாரும் நடத்திக்கொடுக்குறோம். இனிமேல் கிரேஸி மோகன் இருந்த இடத்துல உங்களுக்கு நான் இருப்பேன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்தார்," எனக் கண்களில் நீர் வழிய கூறி நெகிழ்ந்தார் பாலாஜி.

Crazy Creations troupe members at Crazy Mohan's pugazhanjali
Crazy Creations troupe members at Crazy Mohan's pugazhanjali

சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த விழாவில் நாடக நடிகர்கள், இசைக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் பலர் பங்கேற்று கிரேஸி மோகன் புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு