Published:Updated:

அலைகளின் ஓசைக்கு, பறவைகளின் பாட்டுக்கு, வசந்தத்தின் வருகைக்கு வண்ணம் பூசிய கலைஞன்! #HBDBharathiraja

தமிழ் தெலுங்கு இந்தி என பாரதிராஜா இயக்கிய படங்கள், 41. நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராகப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவராக இவரின் பணி ஏராளம்.

பாரதிராஜா
பாரதிராஜா

பாரதிராஜா, அழகியல் சினிமாவின் ஆதர்ஷ காதலன். இவரின் `16 வயதினிலே' சப்பாணி சினிமா திரைகளில் நொண்டிக்கொண்டு வந்தபோதுதான் தமிழ்த் திரையுலகம் எழுந்து நடக்கத் தொடங்கியது. இவரின் கேமரா ரயில் கிழக்கே போய்தான் யதார்த்த சூரியனை எழுப்பிவிட்டது.

பாரதிராஜா
பாரதிராஜா

'16 வயதினிலே' நாவலாக வந்திருக்கவேண்டிய கதை. தமிழ் சினிமாவில் விஷூவல் ட்ரீட்டாக வந்து ஜனரஞ்சக வெற்றியைப் பெற்றதோடு நில்லாமல், பல திரைக்கலைஞர்களுக்கு விலாசமளிக்கும் அஸ்திவாரமாய் அமைந்தது. இந்தப் படம் இரண்டாவது சுற்றுக்கு வந்தபோது சப்பாணி, மயில், பரட்டை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதிலிருந்து, இதன் வெற்றியை உணர்ந்து கொள்ளலாம்.

நாவிதனின் மகன் கவிஞன் எனும் ஒற்றை வரிக் கதைதான், 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம். இவருக்கு இரண்டாவது படம். முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு உருவாக்கிய இந்தப் படம் 300 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. கமல்ஹாசன், ரஜினி, ஶ்ரீதேவி ஆகியோர் இருந்ததால்தான் முந்தைய படம் வெற்றி என்பதைப் பொய்யாக்கினார், பாரதிராஜா.

சப்பாணி பரட்டையாக கமல், ரஜினி
சப்பாணி பரட்டையாக கமல், ரஜினி

முதலிரண்டு படங்களை கிராமியப் படங்களாகத் தந்தவர், வித்தியாசமாக நகரத்தின் பின்னணியில் உருவாக்கிய படம், 'சிகப்பு ரோஜாக்கள்'. சப்பாணியாக கமல் ஹாசனைக் காட்டியவர், இதில் நவநாகரிக இளைஞனாகப் பல்வேறு விதமான வண்ண உடைகளிலும் வித்தியாசமான மேனரிஸங்களிலும் கமலின் பாத்திரத்தைச் செதுக்கியிருப்பார்.

'புதிய வார்ப்புக'ளில் கிராமத்துப் பெண் ஜோதியை புதிதாக ஊருக்கு வரும் வாத்தியார் சண்முகமணி காதலிக்கிறார். ஊர் பண்ணையாருக்கோ ஜோதி மேல் ஒரு கண். விளைவு, வாத்தியார் மீது கொலைப் பழி விழ, ஊரைவிட்டு வாத்தியார் வெளியேறுகிறார். தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டு பண்ணையாரின் மனைவியாகியிருந்த ஜோதியை மீட்கிறார்.

படப்பிடிப்பில் பாரதிராஜா
படப்பிடிப்பில் பாரதிராஜா

'நிறம் மாறாத பூக்க'ளில் அந்தஸ்து பேதத்தால் பிரியும் சுதாகரும், ராதிகாவும் ஜென்டில்மேன் விஜயனால் இணைகிறார்கள். சுகமான காதல் கதை. 'கல்லுக்குள் ஈரம்' பாரதிராஜா இயக்கவில்லை என்றாலும், ஹீரோவாக நடித்ததுடன் தயாரிப்பு உட்பட மேலும் சில பொறுப்புகளை ஏற்றுச் செய்திருந்தார். அவரின் நிழலாக கேமராமேன் நிவாஸ் படத்தை இயக்கியிருந்தார்.

ஒரு நல்ல நடிகன் சிறந்த இயக்குநராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நல்ல இயக்குநர் சிறந்த நடிகனாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்த படம்.

'நிழல்கள்' கல்லூரி மாணவன், வேலையில்லாப் பட்டதாரி, இசைக் கலைஞன் என மூவரின் வாழ்க்கையையும், நகர்ப்புற வாழ்வையும் அழகாகச் சித்திரித்த யதார்த்தமான படம். அவர்கள் கனவு கண்ட வாழ்க்கை அவர்களுக்கு நிழலாகப் போய்விடுகிறது. படத்தின் வெற்றியும் நிழலாகப் போய்விட்டது. ஆனால், விருதுகள் தேடி வந்தன. சர்வதேசத் திரைப்பட விழாவில் படம் கொண்டாடப்பட்டது.

பாரதிராஜா
பாரதிராஜா

சரி, இதோடு பாரதிராஜா அவ்வளவுதான் என்று சில சினிமா அவசரக் குடுக்கைகள் விமர்சித்துக் கொண்டிருந்தவேளையில், சாம்பலாகிப்போன பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர்த்தெழும் என்பதுபோல் உயிர் பெற்று, தன் முந்தைய படங்களின் சாதனை உயரத்தைவிட அதிக உயரத்தில் வெற்றியை நிலை நிறுத்திய இசைக் காவியம், 'அலைகள் ஓய்வதில்லை'. இளையராஜாவும் பாரதிராஜாவும் உயிரும் உடலுமாக இணைந்து சாகாவரம் பெற்ற பாடல்களைத் தந்த படம்.

அழகிப் போட்டிகளைப் பற்றிய ஆர்ப்பாட்டங்களெல்லாம் இப்போது நடந்து வருகின்றன. ஆனால், 80-களின் தொடக்கத்திலேயே அதை மையமாக வைத்து ஆங்கிலப் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்ட படம், 'டிக் டிக் டிக்'.

கண் பார்வையற்ற கலைஞனுக்கும், பரத நாட்டியத் தாரகைக்கும் ஏற்படும் காதல். படத்தின் பாடல்கள் இசைப் பிரியர்களைக் கவர்ந்த படம். கிராமத்துத் துள்ளலுடன் மண்வாசனையாக வந்த படம், 'மண்வாசனை'.

பாரதிராஜா
பாரதிராஜா

நாட்டாமை பெருசுக்கும், பரிசல் குயிலுக்குமான காதல் கதை, 'முதல் மரியாதை'. ஏற்காத பாத்திரங்களே இல்லையென்ற சிவாஜிக்கு புதிய பரிமாணத்தைத் தந்த ராஜ மரியாதை அது.

இவையெல்லாம் சில உதாரணங்கள்... தமிழ் தெலுங்கு இந்தி என பாரதிராஜா இயக்கிய படங்கள் 41. நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராகப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவராக இவரின் பணி ஏராளம். இன்னும் சொல்லப்போனால் இவரால் உருவான இயக்குநர்களின் எண்ணிக்கையே ஆல விழுதுகளாகக் கிளை பரப்பி தமிழ்சினிமாவில் நிழல் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

திரைப்படத்துறையில் இவரின் கலைப்பயணம் இந்தித் திரையுலக ஜாம்பவான் ராஜ் கபூருக்கு சற்றும் குறைந்ததல்ல. இவருக்கு உரிய நேரத்தில் தாதா சாஹேப் விருது வழங்குவது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே பெருமை.

பாரதிராஜா
பாரதிராஜா

ஏனென்றால், பாரதிராஜாதான் கனவுத் தொழிற்சாலையைப் பாமரனுக்கும் கிடைக்கிற நனவுத் தொழிற்சாலை ஆக்கியவர். அலைகளின் ஓசைக்கும், பறவைகளின் பாட்டுக்கும், வசந்தத்தின் வருகைக்கும் வண்ணங்கள் பூசினார். வார்த்தைகளுக்கு இல்லாத வலிமையை வண்ணங்களில் கொண்டு வந்தவர்.