Published:Updated:

கமல் சொன்ன அந்தக் குட்டிக் கதையில் அழுகை மட்டுமல்ல, அரசியலும் புரிந்தது! #10YearsOfUnnaipolOruvan

Kamal Haasan ( Unnaipol Oruvan )

கோடு போடுவதற்கு ஒரு திறமை வேண்டியிருந்தாலும், அதன் மீது அதேபோல் ஒரு கோடு போடுவது ரொம்பவே கடினம். நம் ஊர் கலாசாரமும், மக்களும் அதை ஏற்கவேண்டும். இதெல்லாம்விட தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். ஆனால், இப்படம் மாபெறும் வெற்றியையும், வசூலையும் செய்து சாதனை புரிந்தது.

கமல் சொன்ன அந்தக் குட்டிக் கதையில் அழுகை மட்டுமல்ல, அரசியலும் புரிந்தது! #10YearsOfUnnaipolOruvan

கோடு போடுவதற்கு ஒரு திறமை வேண்டியிருந்தாலும், அதன் மீது அதேபோல் ஒரு கோடு போடுவது ரொம்பவே கடினம். நம் ஊர் கலாசாரமும், மக்களும் அதை ஏற்கவேண்டும். இதெல்லாம்விட தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். ஆனால், இப்படம் மாபெறும் வெற்றியையும், வசூலையும் செய்து சாதனை புரிந்தது.

Published:Updated:
Kamal Haasan ( Unnaipol Oruvan )

`சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதுதான் `உன்னைப்போல் ஒருவன்' படத்தின் கரு. `நீங்கெல்லாம் வெத்துவேட்டுன்னு நினைக்கிறீங்களே... அந்த ஸ்டுப்பிட் காமன்மேன்' அந்த காமன்மேன்தான் படத்தின் கதாநாயகன். மதக் கலவரம், தீவிரவாதம், குண்டு வெடிப்பு போன்ற சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளைப் பற்றிப் பேசும் படங்களை நாம் தனித்தனியே பார்த்திருப்போம். அப்படி நடக்கும் தீங்குகளில் பாதிக்கப்பட்ட ஒரு சராசரி மனிதன் கொந்தளித்தால் என்ன ஆகும் என்பதை எளிமையாகக் காட்டிய படம்தான், `உன்னைப்போல் ஒருவன்'. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

Mohan Lal
Mohan Lal
Unnaipol Oruvan

காமன்மேனாக கமல்ஹாசன் (படத்தில் பெயரில்லாத கதாபாத்திரம்). பல்வேறு கதாபாத்திரங்களை இவர் ஏற்று வாழ்ந்திருந்தாலும், இந்தக் கதாபாத்திரம் தனித்துவம் கொண்டது. 2008-ல் வெளியான `எ வெட்னஸ்டே' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் இது. பொதுவாக ரீமேக் படங்களில் இருக்கும் சவால் கடினமானது. `ஓ.. ரீமேக்கா' என்ற அசட்டு வார்த்தைகளில் அந்தப் படைப்பைக் கடந்துவிட வாய்ப்பு இருக்கிறது. கோடு போடுவதற்கு ஒரு திறமை வேண்டியிருந்தாலும், அதன் மீது அதேபோல் ஒரு கோடு போடுவதற்கும் ஒரு திறமை வேண்டும். நம் ஊர் கலாசாரமும், மக்களும் அதை ஏற்கவேண்டும். இதெல்லாம்விட தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். இதையெல்லாம் கடந்து மாபெறும் வெற்றியையும், வசூலையும் செய்து சாதனை புரிந்தது, 'உன்னைப்போல் ஒருவன்'. 

ஒரிஜனல் வெர்ஷனைப் பார்க்காமல் 'உன்னைப்போல் ஒருவனை'ப் பார்த்தவர்களுக்குக் காட்சிக்குக் காட்சி பிரமிப்புதான். வெளிநாடுகளில் ஷூட்டிங், கார் சேஸிங், சண்டைக் காட்சி, மசாலா பாடல்கள், காமெடிக்குத் தனி டிராக் என எந்த கமர்ஷியல் அம்சங்களும் இப்படத்தில் இல்லை. காட்சியமைப்புகளைக் கட்டமைத்த விதம்தான் இப்படத்தின் முதல் சிறப்பு. முக்கியமான ஒரு டிராக்கில் கமலும், மோகன்லாலும் பயணிக்க, இன்னொரு டிராக்கில் ஆரிஃப் கான் என்ற மிடுக்கான காவல் அதிகாரியும், சேதுராமன் எனும் ஆய்வாளரும் தனியே பயணித்துக்கொண்டிருப்பார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
உன்னைப்போல் ஒருவன்

பாகிஸ்தான் முஷ்ஷையும், அமெரிக்க புஷ்ஷையும் வைத்துக் கலாய்க்கப்படும் `பிரதி பிம்பங்கள்' என்ற டிவி நிகழ்ச்சியிலிருந்து படத்தின் கதை தொடங்கும். 2008-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீதான தாக்குதல் போன்ற உலகிற்குக் கேடு விளைவித்த தீவிரவாதத் தாக்குதல்களை யாராலும் மறக்க முடியாது. இதுபோன்று நாட்டுக்குப் பல நாசக்கேடுகள் நடந்திருந்தாலும், படத்தில் ஹைலைட் செய்யப்பட்டது மக்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய இந்த இரு சம்பவங்கள்தான்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக நகர்ந்தது. ஒரே டேக்கில் குட்டிக் கதை சொல்லும் கமல், பார்க்கிறவர்களை அழவைத்தார். அந்த அழுகையில் அரசியலைப் புரியவைத்தார். இப்படியாகப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் தமிழ் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும் விதத்தில் இடம்பெறச் செய்ததே, இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

"மறதி ஒரு தேசிய வியாதி!"
உன்னைப்போல் ஒருவன்

இப்படம் வெளியான சமயத்தில் முதலமைச்சராக இருந்தவர், மு.கருணாநிதி. ரீமேக்காக இருந்தாலும், உண்மைத் தன்மைக்காக படத்தில் முதல்வர் பேசும் காட்சியில் கருணாநிதியின் குரலைப்போலவே ஒரு குரலைப் பதிவு செய்திருப்பார்கள். படத்தின் கதையில் சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியும் எளிமையாக இருக்கும். கூடை நிறைய காய்கறிகளை வாங்கிக்கொண்டு `தீவிரவாதம்' செய்யும் கமல், நடிகர் மற்றும் அரசியல்வாதியான ஶ்ரீமனுடன் உரையாடும் டி.ஜி.பியாக மோகன்லால். நடிப்பென்று வரும்போது, கமலுடன் போட்டி போட்டு நடித்திருந்தார்.

கமல் ஹாசன் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுத்த பிறகு, அதைக் கண்காணிக்கும் அதிகாரம் தலைமைச் செயலாளர் லட்சுமியிடம் செல்லும். 'பாம் பிளாஸ்ட், தீவிரவாதம், குண்டு வெடிப்பு மிரட்டல் பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நீங்களே இதை ஹேண்டில் பண்ணுங்க' என மோகன் லாலிடம் சொல்வார், லட்சுமி. 'கேரளா மட்டுமல்ல, இதுவும் என் நாடுதான்!' என இரண்டே வரியில் காவல்துறையின் முக்கியத்துவத்தைச் சொல்லிவிட்டு வேலையைத் தொடங்குவார், லால்.

சொல்லவேண்டிய சமயத்தில் மனைவியிடம் 'லவ் யூ' சொல்லாமல் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' எனச் சுற்றிக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் சேதுராமன், ஒரு காட்சியில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்தபிறகு பதற்றமான குரலில் மனைவியிடம் சொல்லும் 'லவ் யூ'... ஸ்வீட்! 

உன்னைப்போல் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்

படத்தில் கமல் ஹாசன் டிமாண்டு செய்யும் நான்கு தீவிரவாதிகளின் பெயர், அப்துல்லா, அஹ்மதுல்லா, இனாயத்துல்லா, கரம்சந்த். இவை அனைத்தும் நிஜத் தீவிரவாதிகளின் பெயர்கள். அப்துல்லாவும், அஹ்மதுல்லாவும் சயத்-அல்-மஸ்ரி என்ற அல்கொய்தா தலைவரின் வலது கையும், இடது கையும்! 2010-ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ட்ரோன் அட்டாக்கில் கொல்லப்பட்டார், சயத். இவருடன் சேர்த்து இவரது மனைவியும், குழந்தைகளும், பேரக் குழந்தையும் கொல்லப்பட்டனர். இதையெல்லாம் மேற்கோள்களாக வைத்துதான் படத்தின் கதை கட்டமைக்கப்பட்டிருக்கும். 

கருணாநிதியின் குரலில் ஒலிக்கும் வசனம், 'பிரச்னையெல்லாம் சுமுகமா முடிஞ்சிடும்ல' எனக் கேட்க, 'எல்லாம் ஓகே சார். இனிமே கடவுளோட கையிலதான் இருக்கு' எனச் சொன்னதும், 'அய்யய்யோ... அது ரொம்பத் தப்பான கையாச்சே!' என நக்கலடிப்பார், சி.எம். பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கும் திரைக்கதையில் 'கிரெடிட் கார்டு வேணுமா சார்' என்ற அழைப்பு வரும். இப்படிப் படத்திற்கு நடுவே ஆங்காங்கே இருக்கும் குட்டிக் குட்டி டீட்டெயிலிங்களில் கொஞ்சம் சட்டையர், கொஞ்சம் சிரிப்பு காமெடி!  

மோகன்லால்
மோகன்லால்
உன்னைப்போல் ஒருவன்

`எதுக்காக இப்படியெல்லாம் செய்ற' என மோகன் லால் கேட்க, உணர்ச்சிபொங்க தான் பாதிக்கப்பட்ட கதையைச் சொல்வார், கமல். இவருடைய பெயரைப் படத்தில் எங்கும் சொல்லாததுபோல், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுடைய பெயரையும் சொல்லமாட்டார், ஓர் இடத்தைத் தவிர! சிம்கார்டு யார் யார் பெயரில் இருக்கிறதெனச் சொல்லும்போது, "தாயுமானவர் - கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர். யஷ்வந்த், மும்பை குண்டுவெடிப்பில் இறந்தவர். ஆஷா பர்வா - கௌகாத்தியைச் சேர்ந்தவர், கர்ப்பிணி. அவங்களும் அவங்க குழந்தையும் இறந்துட்டாங்க'' என்பார், கமல். கமல் சொன்ன அந்தத் துயரக் கதை, ஆஷா பர்வாவுடையதாகத்தான் இருக்கும்.

படமாக்குவதில் எந்தப் பரபரப்பையும் புகுத்தாமல், திரைக்கதையில் மட்டும் பரபரப்பைக் கூட்டி 'உன்னைப்போல் ஒருவன்'னை நமக்கு அறிமுகப்படுத்தியிருப்பார், இயக்குநர்.

'அவர் தன் பெயரைச் சொன்னார். ஆனா, பெயர்ல என்ன இருக்கு. அவர் காமன்மேனாவே இருக்கட்டும். பாவப்பட்ட ஒரு மனுஷன். அவனுக்கு இருக்கிற தைரியம், வீரம், கோபம், மாரல் ஆங்கர், ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்!' என்ற மோகன் லால் குரலோடு படம் முடியும்.

பத்து வருடங்களுக்குப் பிறகும் இந்தப் படத்திற்கு 'ஹாட்ஸ் ஆஃப்' சொல்ல பலர் இருக்கிறார்கள், நம்மைப்போல!