
லொள்ளு சபாவில் ஃபார்மான சந்தானத்தின் இரண்டு மணிநேர லொள்ளுசபா வெர்ஷனே இந்த ‘ஏ1.’
தமிழ்த்திரை வரலாற்றில் 15,472ஆவது முறையாக... எல்லோரையும் கலாய்க்கும் ஜாலி ஹீரோ, அவனைக் கண்டவுடன் காதல் செய்யும் ‘லூஸுப்பெண்.’ இவர்களின் காதலுக்கு வில்லனாக பெண்ணின் அப்பா. அப்புறம் இதர பல சம்பவங்கள். இதில் ஒரே வித்தியாசம், இதையெல்லாம் அவர்களே கலாய்த்துக்கொள்கிறார்கள். அதற்கு நடுவே ஆங்காங்கே காமெடி, ஏகப்பட்ட க்ளிஷேக்கள் எனக் கலந்துகட்டிக் கொடுக்கிறது இந்தப் படம்.
டைமிங்கில் அடுத்தடுத்து சிக்ஸ் அடிக்கிறார் சான்ட்டா. முந்தைய சில படங்களில் டல்லாக இருந்தவர் இதில் புத்தம்புது கூலர்ஸ் போல செம ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். மற்றபடி, கதை அதே டெம்ப்ளேட் என்பதால் வழக்கமான நடிப்பே! ஹீரோயின் தாரா அலிஸா பெர்ரி இந்தப் படத்தில் நடித்ததை அவரே கொஞ்ச காலத்தில் மறந்துவிடுவார் என்கிற அளவுக்குத்தான் அவர் பங்கு இருக்கிறது.
லொள்ளுசபா மனோகர், மாறன், சேஷு என சந்தானத்தின் சகல தோஸ்துகளும் இருக்கிறார்கள். இவர்களோடு எம்.எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை என காமெடி ஸ்டார்களின் ரீ யூனியன் போல இருக்கிறது ஒவ்வொரு காட்சியும்! அத்தனை பேரும் ஆளுக்கு ஒன்றிரண்டு சீன்கள் சிரிப்பு மூட்ட, அவர்கள் புண்ணியத்தில் கதை அடுத்தடுத்து நகர்கிறது.

சந்தோஷ் நாராயணின் இசையில் ‘மாலைநேர மல்லிப்பூ’ கேட்டவுடனே உதடுகளில் தொற்றிக்கொள்கிறது. மற்ற பாடல்களில் வித்தியாசமாக மெனக்கெட்டிருக்கிறார் ச.நா! ‘லொள்ளு சபா’ டைப் கதை என்பதால் அந்த ரேஞ்சிலேயே ஒளிப்பதிவு இருந்தால் போதுமென முடிவு செய்திருப்பார் போல, கேமராமேன் கோபி ஜெகதீஸ்வரன்.
முதல்பாதி முழுக்க ‘சரி சிரிச்சு வைப்போம்’ என யோசிக்க வைக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் நிஜமாகவே குலுங்க வைக்கிறது.
உருவகேலி செய்கிறார் என சந்தானத்தின் மீது ஏற்கெனவே புகார் உண்டு. இதில் மேலும் ஒருபடி மேலேபோய் ஏகப்பட்ட பிற்போக்குத்தனங்களை அள்ளித் தெளிக்கிறார்.

மிஸ்டர்.லோக்கல் கேரக்டரை நியாயப்படுத்த, வேண்டுமென்றே நடுத்தர, அடித்தட்டு மக்களை மேலிருந்து கலாய்ப்பது போன்ற காட்சி யமைப்புகள் நிறைய இருக்கின்றன. விருப்பமில்லாமல் முத்தம் கொடுப்பது, அந்தரங்க வீடியோவைக் காட்டி மிரட்டுவது போன்றவை எல்லாம் காமெடிகளாக வரும்போது உறுத்துகின்றன.
உறுத்தல் இல்லாத காமெடிகள் இருந்திருந்தால் உறுதியாக ‘ஏ ஒன்’தான்!