Published:Updated:

‘’ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இணைய ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும்’’ - இயக்குநர் தங்கர் பச்சான்

தங்கர் பச்சான்
தங்கர் பச்சான் ( கே.ராஜசேகரன் )

''திருடர்கள் மதரீதியான, சாதி ரீதியான கருத்துகளைத் தவறாக பரப்புவது என செய்துகொண்டே இருக்கிறார்கள். போலிக் கணக்கில் தீவிரமாக இயங்குகிறார்கள்.என்ன வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். ''

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை இயக்குநர் தங்கர் பச்சான் ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது பொய் செய்தி என உடனடியாக மறுத்த தங்கர் பச்சான், தன்னுடைய பெயரில் போலியாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் பேசினேன்.

"சமூக வலைதளங்கள் வந்தவுடன் முன்பின் தெரியாதவர்கள் கற்பனை வாழ்க்கையில் விழுந்துவிட்டார்கள். இங்கே திருடர்களுக்கு நிறைய இடம் கிடைக்கிறது. அந்தத் திருடர்கள் மதரீதியான, சாதி ரீதியான கருத்துகளைத் தவறாக பரப்புவது என செய்துகொண்டே இருக்கிறார்கள். போலிக் கணக்கில் தீவிரமாக இயங்குகிறார்கள்.என்ன வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். நல்ல செய்தி பரவாமல் அவதூறு என்றால் கோடிக்கணக்கில் பரவுகிறது. தொழில்நுட்பத்தையும் விட முடியவில்லை. ஹெச்.ராஜா பற்றி நான் சொன்னதாக என் பெயரிலேயே பதிவுகள் இடப்பட்டன. அந்த பதிவுகளை நீக்குகிறோம் என்றும் குற்றவாளிகளை தேடிப் பிடிக்கிறோம் என்றும் போலீசார் உறுதியளித்திருக்கிறார்கள்.

தங்கர் பச்சான்
தங்கர் பச்சான்

இதற்கு எளிய வழி ஒன்று இருக்கிறது. எது எதற்கோ ஆதார் எண் கட்டாயம் எனக் கேட்கிறார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதள கணக்குகளுக்கும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்க வேண்டும். இதனால் போலிகள் களை எடுக்கப்படுவார்கள். அதைச் செய்ய என்ன தயக்கம்!

இந்திய அரசு இதற்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும். தவறான மதப் பதிவுகளை போடும்போது நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது. அதனால் சமூக வலைதளங்களுக்கு ஆதார் கட்டாயம் என்பதை அறிவிக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்" என்றார் தங்கர்பச்சான்.

அடுத்த கட்டுரைக்கு