
டைரக்ஷனா! அது பயங்கர பிரஷரான வேலை. நடிக்கிறது ஈஸியா இருக்கு. அதே சமயம், உதவி இயக்குநரா வேலை செய்யுறது ரொம்பவே பிடிக்கும்.
அப்பா கதாபாத்திரமா? போலீஸ் அதிகாரியா? உடனே நினைவுக்கு வரும் பெயர் ‘ஆடுகளம்’ நரேன். திரைப்பயணத்தில் அவருக்கு இது 25-வது ஆண்டு. ஹைதராபாத்தில் தனுஷின் ‘வாத்தி’ படப்பிடிப்பிலிருந்து வந்தவரிடம் பேசினேன்.
“சினிமாவுல ஹீரோ ஆகணும்னுதான் வந்தேன். ஆனா, மத்த கேரக்டர்கள் நடிக்கிற மாதிரி ஆகிடுச்சு. திரும்பிப் பார்க்கறப்ப இருபத்தஞ்சு வருஷம் ஆகிடுச்சான்னு ஆச்சரியமாகவும் இருக்கு, சந்தோஷமாகவும் இருக்கு. எந்த ஒரு வேலையுமே மனநிறைவோடு செய்யும் போது, அதுல ஒரு திருப்தி இருக்கும். அப்படி ஒரு திருப்தி இந்தப் பயணத்துல இருக்கு. அடுத்தடுத்த வருஷங்கள்ல இன்னும் நிறைவா பயணிப்பேன்னு நம்பிக்கையும் இருக்கு.
என் வெற்றிக்குப் பின்னால நிறைய இயக்கு நர்கள், சக நடிகர்கள் இருக்காங்க. இத்தனை வருஷ அனுபவத்துல நான் கற்றதும் அதிகம். பெயரும் புகழும் பெற்றதும் அதிகம். இழந்தேன்னு சொல்ல எதுவுமில்ல. நியாயமான ஆசை எப்பவும் கைகூடும்’’ என்றபடி பேச ஆரம்பிக்கிறார்.
`` ‘பொல்லாதவன்’ உட்பட சில படங்களில் உதவி இயக்குநராகவும் இருந்திருக்கீங்க... எப்போ இயக்குநராகப் போறீங்க?’’
‘‘டைரக்ஷனா! அது பயங்கர பிரஷரான வேலை. நடிக்கிறது ஈஸியா இருக்கு. அதே சமயம், உதவி இயக்குநரா வேலை செய்யுறது ரொம்பவே பிடிக்கும். இன்னொரு விஷயம், ஒரு இயக்குநரா இருக்கறப்ப நாம் நினைச்ச மாதிரி ஒரு ஷாட்டைக் கொண்டு வரணும்னா போராட வேண்டியிருக்கும். அப்படி நினைச்ச ரிசல்ட் வரலைனா, அது வலியாத் தங்கிடும். அந்த வலி வேண்டாம்னு பார்க்கிறேன்.”

``இயக்குநர் வெற்றிமாறனுக்கும் உங்களுக்குமான நட்பு பத்திச் சொல்லுங்க...’’
‘‘ரெண்டு பேருமே பாலுமகேந்திரா சார்கிட்ட இருந்து வந்தவங்க. வெற்றி உதவி இயக்குநரா இருக்கும்போதிருந்தே தெரியும். பாலுமகேந்திரா சார் ‘கதை நேரம்’ பண்ணும்போது நாங்க ஒண்ணா உக்கார்ந்து கதை விவாதிப்போம். அப்ப பார்த்த வெற்றிக்கும் இப்ப உள்ள வெற்றிக்கும் எந்த வேறுபாடும் தெரியல. மிகமிகத் திறமைசாலியான மனிதன். இன்னும் பல தேசிய விருதுகள் வாங்குவார். ‘பொல்லாதவன்’ ரிலீஸுக்கு முதல்நாள் நானும் வெற்றியும் ஒரு டீக்கடை முன்னால் விடியவிடிய உட்கார்ந்து பேசிட்டிருந்தது இன்னும் ஞாபகத்துல ஓடுது. இப்பவும் எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் வெற்றிகிட்டதான் கேட்பேன். நாம தேடிப் படிக்கிறதைவிட எளிதா, நமக்குப் புரியற மாதிரி சொல்லிடுவார்.’’
``தொடர்ந்து அப்பா ரோல்ல நடிக்கிறது உங்களுக்கே சலிக்கலையா?’’
‘‘இல்ல. ஏன்னா, ‘இந்த ரோல்தான் பண்ணுவேன்... அதைப் பண்ண மாட்டேன்’னு சொல்ற இடத்துல நான் இல்ல. நாமளும் மூணு வேள சாப்பிடணும். என்னை நம்பியும் குடும்பம் இருக்கு. பொருளாதாரச் சூழலைப் பொறுத்தவரை இன்னும் முன்னேற வேண்டியிருக்கு. சினிமாவுல நடிக்கிறது பிடிக்கும். படத்துல நாமளும் இருக்கணும்னு நினைப்பேன். அது நடந்தாலே மனநிறைவும் ஆகிடுது. அடுத்தும் நிறைய படங்கள் கைவசம் இருக்கு. தமிழ், தெலுங்குல வெப்சீரிஸ் பண்ணிட்டிருக்கேன். தனுஷின் ‘வாத்தி’, பொன்ராம் சார் படம் உட்பட சில படங்களின் ஷூட்டிங் போயிட்டிருக்கு.’’