Published:Updated:

ஆரண்ய காண்டம்: ஸ்கோர்செஸி, டாரன்டினோ வரிசையில் கொண்டாடப்பட வேண்டியவரா தியாகராஜன் குமாரராஜா?

ஆரண்ய காண்டம்
ஆரண்ய காண்டம்

நிஜவாழ்க்கையில் சோக உணர்வை வரவழைக்கும் தருணங்களில் சிரிப்பை வரவழைக்கும் பிளாக் காமெடி என்ற வகைக்கு ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு அடுத்து ஆரண்ய காண்டமே சிறப்பான உதாரணம். குமாரராஜா வசனம் எழுதிய ‘ஓரம் போ’ படத்தில்கூட இந்த பிளாக் காமெடி ஆங்காங்கே வரும்.

‘ஆரண்ய காண்டம்’ திரையரங்குகளில் வெளியாகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. தியாகராஜன் குமாரராஜா என்ற ஒரு நபர் ‘ஆரண்ய காண்டம்' படத்துக்கு முன்னரே தமிழ் சினிமாவில் வசனம் எழுதியிருந்தாலும் (‘ஓரம் போ’), ‘ஆரண்ய காண்டம்’ என்ற படத்தின் மூலம் தன்னை ஒரு குறிப்பிடத்தக்க இயக்குநராக நிரூபித்து பத்து ஆண்டுகள் ஆகின்றன.

அவரது முதல் முழுநீளப் படமான ‘ஆரண்ய காண்டம்’, 2011-ம் வருடத்துக்கான சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றது. இந்த விருதை தமிழ்ப்படங்கள் இதுவரை நான்கே முறைதான் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்கூடவே சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதையும் பெற்ற படம் இது. அதேபோல் தெற்காசிய சர்வதேசத் திரைவிழாவில் கிராண்ட் ஜூரி விருதையும் வென்றிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி, வெளியான பத்து வருடங்களில் இன்றுவரை விவாதிக்கப்படும் ஒரு ‘கல்ட்’ படமாக தமிழில் ‘ஆரண்ய காண்டம்’ விளங்குகிறது.

‘ஆரண்ய காண்டம்’ படத்தின் முதல் சிறப்பம்சம், அதுவரை இருந்துகொண்டிருந்த தமிழ் சினிமா கற்பிதங்களை உடைத்ததே. பெரும்பாலான தமிழ்ப்படங்களில் பிளாக் காமெடி என்ற அம்சம் குறைவாகவே இருக்கும். 2005ல் வெளியான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, இந்த வகையான படங்களுக்கு ஒரு சிறப்பான முன்னோடி. ஆரண்ய காண்டத்தில் வரும் ஒரு வசனத்தையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

தியாகராஜன் குமாரராஜா
தியாகராஜன் குமாரராஜா

அப்போதுதான் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை நோக்கி இன்னொரு கதாபாத்திரம், ’’நீ மட்டும் உயிரோட இருந்திருந்த… மக்கா ஒன்னிய கொன்னுருப்பேண்டா’’ என்கிறது. இந்த வசனம் கொடுக்கும் அபத்த உணர்வை யோசித்துப் பார்த்தால் புரியும். இறந்து கிடக்கும் ஒரு பிணத்தைப் பார்த்து நமக்கு இந்த வசனத்தால் சிரிப்பு வருகிறது அல்லவா? இப்படி ஆபத்தான, நிஜவாழ்க்கையில் சோக உணர்வை வரவழைக்கும் தருணங்களில் சிரிப்பை வரவழைக்கும் பிளாக் காமெடி என்ற வகைக்கு ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு அடுத்து ஆரண்ய காண்டமே சிறப்பான உதாரணம். குமாரராஜா வசனம் எழுதிய ‘ஓரம் போ’ படத்தில்கூட இந்த பிளாக் காமெடி அங்கங்கே வரும்.

அடுத்ததாக, தமிழ் சினிமாவில் பொதுவாகவே ஏழை என்ற ஒரு கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்தே எப்படிக் காட்டப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்ப்போம். மிகவும் நல்ல, உண்மையையே பேசிக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரமாகவே ஏழைகள் காட்டப்பட்டிருப்பார்கள். அதாவது, சராசரி மனிதன் என்ற பார்வை இல்லாமல், கொஞ்சம் ரொமான்டிசைஸ் செய்தே காட்டப்பட்டிருக்கும். அதுவே வாழ்வே நொடிந்துப் போய், கடை ஒன்றை நடத்தி, அதிலும் பிரச்னை ஆகி நடுத்தெருவுக்கு வரும் காளையன் என்ற கதாபாத்திரம், ஆரண்ய காண்டத்தில் எப்படிக் காட்டப்பட்டிருக்கிறது என்பதை கவனிப்போம்.

வறுமை, சோகம், விரக்தி ஆகியற்றால் எப்போதும் பாதிக்கப்பட்டு முடங்கியா இருக்கிறார் காளையன்... இல்லையே? ஒரு மனிதனின் வாழ்வில் எப்போதுமே வெளிப்படும் மகிழ்ச்சி, சோகம், வெறி, பாசம், ஏமாற்றம், சற்றே பிறரிடம் ஏமாறும் சோப்ளாங்கித்தனம் என்று எல்லாவற்றையுமே அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டுதானே இருக்கிறார் காளையன்... நாமுமே அப்படித்தானே இருக்கிறோம்? இப்படி, எந்த உணர்வையும் வழக்கமான தமிழ்ப்படங்கள் செய்வதுபோல் ரொமான்டிசைஸ் செய்து தூக்கலாகக் காட்டாமல் மிக இயல்பாகக் காட்டிய படம் இது.

காளையன் பற்றிச் சொன்னதுதான் படத்தில் வரும் ஆறு முக்கியமான கதாபாத்திரங்களுக்குமே பொருந்தும். சிங்கப்பெருமாள், எவ்வளவு பெரிய தாதாவாக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் இயல்பாக நடந்துகொள்ளமுடியாமல் தோல்வியடைகிறார். அதனால் அந்தப் பெண்ணை அறைகிறார். ‘’உங்களால முடியாட்டி எதுக்காக என்னை அடிக்கிறீங்க?’’ என்று அந்தப் பெண் அவரைக் கேள்வி கேட்கிறாள். இதெல்லாம் சப்பை என்கிற அல்லக்கை ஆசாமி கவனித்து, சுப்பு என்கிற அந்தப் பெண்ணிடம் பழக ஆரம்பிக்கிறான்.

ஆரண்ய காண்டம்
ஆரண்ய காண்டம்

சிங்கப்பெருமாள் வயதானாலும் தன்னை ஒரு தாதாவாகவே கருதிக்கொள்கிறார். அதற்கான அடியாள் படை அவரிடம் உண்டு. எப்படி தன்னால் இயங்கமுடியாமல் அதைக் கேள்விகேட்ட சுப்புவை அடிக்கிறாரோ, அதேபோல் ‘’என்ன... டொக்காயிட்டீங்களா?’’ என்று தன் முகத்துக்கு நேராகக் கேட்கும் பசுபதியையும் கொல்ல அவனுடனேயே ஆட்களை அனுப்புகிறார். சிங்கப்பெருமாளுக்கு அவரைக் கேள்வி கேட்பது பிடிப்பதில்லை.

சிங்கப்பெருமாள், சப்பை, சுப்பு, பசுபதி என்ற ஒருவரையொருவர் அண்டியே பிழைக்கும் கதாபாத்திரங்கள் ஒருபக்கம்; காளையன், கொடுக்காப்புளி என்ற தந்தை மகன் கதாபாத்திரங்கள் மறுபக்கம். இந்த ஆறு கதாபாத்திரங்களுமே மிக இயல்பாக, ஒரு சராசரி மனித வாழ்வின் எல்லா உணர்வுகளையுமே வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன. யாரையுமே முழுக்க நல்லவன் என்றோ, யாரையுமே கெட்டவன் என்றோ சொல்லிவிடமுடியாது. எல்லாருக்குமே தேவைகள் உண்டு. அந்த வகையில், க்வென்டின் டாரன்டினோ, மார்ட்டின் ஸ்கோர்செஸி போன்ற இயக்குநர்களின் படங்களில் அவ்வப்போது வெளியாகும் துண்டான மனிதர்களின் வாழ்க்கையே ஆரண்ய காண்டத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. அதாவது, ஆதியில் இருந்து இறுதிவரை அம்மனிதர்களின் கதை படத்தில் வராது.

மாறாக, குறிப்பிட்ட சில நாள்கள் மட்டுமே வரும். அந்த நாள்களில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையே ஸ்கோர்செஸியும், மிகக்குறிப்பாக டாரன்டினோவும் காட்டுவது வழக்கம். அதிலும் அவர்களின் படங்களில் வசனங்கள் மிகவும் இயல்பான ஒருவித நகைச்சுவையோடும் இருக்கும். இயல்பு வாழ்க்கையில் நாம் நமது சுற்றுப்புறங்களில் எப்படிப் பேசுகிறோமோ அப்படி. அத்தகைய வசனங்கள் ஆரண்ய காண்டத்திலும் உண்டு.

நிஜவாழ்க்கையின் அபத்தத் தருணங்கள் ஆரண்ய காண்டத்தில் ஏராளமாக உண்டு. நாம் தெருவில் நடக்கையில் ரூபாய் நோட்டுக்கள் கீழே கிடந்தால் என்ன செய்வோம்? இதேதான் காளையனும் செய்கிறார். அவரிடம் மிகமிகத் தற்செயலாக மாட்டிக்கொள்ளும் சரக்கு இப்படிப்பட்டதே. சொத்துக்களை இழந்து, கடையை இழந்து, இறுதியில் சண்டைக்கோழியும் இறந்துவிட, இனி என்ன செய்வது என்றே தெரியாமல் நிற்கும் காளையனிடம்தான் சிங்கப்பெருமாள் தேடும் சரக்கு மாட்டுகிறது. வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று புலம்பும் காளையனுக்கு இதன்மூலம் மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கிறது.

சிங்கப்பெருமாளிடம் மாட்டிக்கொண்டு புலம்பும் சுப்புதான் இறுதியில் சப்பையை உபயோகித்து ஒரு பெரிய திட்டம் தீட்டுகிறாள். தனது தந்தையை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று சிறுவன் கொடுக்காப்புளி எடுக்கும் முடிவுகளும் இப்படிப்பட்டவையே. நண்பர்கள் போன்று பாசத்துடன் பழகும் அடியாட்களுடன் காரில் செல்லும் பசுபதி, சிங்கப்பெருமாள் அவனைக் கொல்லச்சொல்வதை எதேச்சையாக ஃபோனின் லவுட்ஸ்பீக்கரில் கேட்கும் தருணம் எத்தனை அபத்தமானது... ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் கதையே இந்தத் தருணத்தில்தானே துவங்குகிறது?

ஆரண்ய காண்டம்
ஆரண்ய காண்டம்

இத்தகைய நொடிகளை உபயோகப்படுத்திக்கொள்ளும் காளையன், சுப்பு ஆகியோர், நல்லவர்களாக நடந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. மாறாக, ’எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற ஆரண்ய காண்டத்தின் நீதியையே பின்பற்றுகிறார்கள். இந்த வாசகம்தான் படத்தின் துவக்கத்தில் காண்பிக்கப்படுகிறது. இதைப் பின்பற்றியே படத்தின் அனைத்துக் கதாபாத்திரங்களும் செயல்படுகின்றன. இதையேதான் பசுபதியும் பின்பற்றி, படத்தின் இறுதியில் அனைவரையும் வெல்கிறான்.

இப்படி நல்லவர்களாக நடந்துகொள்ளாத ஆசாமிகளை வைத்துதான் ஸ்கோர்செஸியும் டாரன்டினோவும் படங்கள் எழுதுவது வழக்கம். ஏனெனில் அதுதான் இயல்பு வாழ்க்கையுமே. எப்போதுமே நல்லவன், எப்போதுமே கெட்டவன் என்பவர்களா நாம்? இரண்டின் கலவையும்தானே நமது வாழ்க்கை!

தியாகராஜன் குமாரராஜா எப்போதுமே வசனங்களை சிறப்பாகவே எழுதக்கூடியவர். எப்படி ஸ்கோர்செஸி, டாரன்டினோ படங்களில், கொலையே செய்யச்செல்லும் அடியாட்கள் கூட, அவர்களின் குடும்பக் கஷ்டங்களைப் பேசிக்கொண்டே இயல்பாகச் செல்வார்களோ அப்படிப்பட்ட மிக மிக இயல்பான, நம்மைச்சுற்றிலும் அனைவரும் பேசக்கூடிய – ஏன் – நாமே அவ்வப்போது பேசக்கூடிய வசனங்களே இந்தப் படத்திலும் முழுக்க வருகின்றன.

வயதானாலும் கெத்தை மெயின்டெய்ன் செய்யும் சிங்கப்பெருமாள், ஒரு காட்சியில் பசுபதி பற்றி, ‘’ஏன்? அவங்கக்கா என்னிய லவ் பண்ணிட்டாளா?’’ என்று கேட்பார். அந்த வசனம் வெளிப்படும் இடம் அட்டகாசமாக இருக்கும். “உனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?” என்று பசுபதி கேட்க, “இல்ல. ஆனா அவரு என் அப்பா” என கொடுக்காப்புளி தனது தந்தை காளையன் பற்றி பசுபதியிடம் சொல்லும் வசனம் மிகவும் பிரபலம். படத்தின் துவக்கத்தில் சிங்கப்பெருமாளின் அடியாட்கள், பெண்களைப் பற்றிப் பேசும் வசனங்களும் அப்படியே. நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்புதான். ‘’சப்பையும் ஒரு ஆம்பளதான்… எல்லா ஆம்பளையுமே சப்பதான்’’ என்ற வசனத்தை மறக்கமுடியுமா?

ஆரண்ய காண்டம்
ஆரண்ய காண்டம்

படத்தின் திரைக்கதையை விட்டு, பிற அம்சங்களான இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றை கவனித்தாலும் ‘ஆரண்ய காண்டம்’ ஒரு சிறப்பான படம் என்பதை உணரமுடியும். குறிப்பாக இந்தப் படத்தில் சிறுவன் கொடுக்காப்புளி, தன்னிடம் இருக்கும் பையை மறைக்க ஓடும் இடமும், அதேபோல இறுதியில் பசுபதியும் கஜேந்திரனும் சண்டையிடும் காட்சியையும் பார்ப்போம். இந்த இரண்டு காட்சிகளிலும், கதாபாத்திரங்கள் அந்தச் சமயத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ அதன் பிரதிபலிப்பு, பின்னணி இசையில் இருக்கும். இப்படிப் படம் முழுக்க யுவன் பிரமாண்டம் செய்திருப்பார். ஓளிப்பதிவிலுமே பி.எஸ்.வினோத் புகுந்து விளையாடியிருப்பார். படத்தொகுப்போ தேசிய விருதே வாங்கியது. இப்படி எல்லாத் துறைகளும் ஒன்றுக்கொன்று இசைவாக அமைந்து அட்டகாசமான திரைப்படம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும் மேஜிக் இப்படத்தில் நிகழ்ந்தது.

ஜாக்கி ஷ்ராஃப், சம்பத், குரு சோமசுந்தரம் (முதல் படம்), மாஸ்டர் வசந்த், ரவிகிருஷ்ணா, யாஸ்மின் பொன்னப்பா ஆகிய ஆறு பிரதான நடிகர்கள் மட்டும் அல்லாமல், சிட்டுவாக வரும் அஜய்ராஜ், கஜேந்திரன் – கஜபதி ஆகிய ஈவு இரக்கமே இல்லாத தாதாக்களாக வரும் பாக்சர் ஆறுமுகம், தீனா, இன்னும் போலீஸ், விரல் வெட்டப்பட்டு டீயைக் கொண்டுவந்து வைக்கும் கதாபாத்திரம் (இந்த இடத்தில் வெட்டப்பட்ட விரல் பற்றிய ஃப்ளாஷ்பேக் கதை அட்டகாசமானது) என்று படத்தில் யாரை எடுத்துக்கொண்டாலும் நடிப்பில் பின்னியெடுத்திருப்பார்கள்.

குறிப்பாக சிங்கப்பெருமாள் கதாபாத்திரம் தமிழில் பல நடிகர்களுக்கு விவரிக்கப்பட்டு யாரும் நடிக்க முன்வராததால் ஜாக்கி ஷ்ராஃபிடம் தொலைபேசியில் குமாரராஜா கதையைச் சொல்ல, உடனே நடிக்கிறேன் என்று அவர் ஒப்புக்கொண்டது, இது ஜாக்கி ஷ்ராஃபின் கதாபாத்திரத் தேர்வையே காட்டுகிறது. அவர் நடித்திருக்கும் பல படங்களின் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவையே.

எனவே உண்மையிலேயே நிஜத்தில் நடக்கக்கூடிய தருணங்களுடன் வெளிவந்த ‘ஆரண்ய காண்டம்’, ஒரு Goodfellas, ஒரு Casino, ஒரு Mean Streets, ஒரு Jacike Brown போல அவை பிரதிபலித்த கமர்ஷியல் சினிமாக்களின் தொடர்ச்சி என்றே அவசியம் சொல்லமுடியும்.
ஆரண்ய காண்டம்
ஆரண்ய காண்டம்

இத்தகைய படங்கள் தமிழில் மிகமிகக் குறைவு. ஒரு ரொமான்ட்டிக் படம் என்றோ ஒரு ஆக்‌ஷன் படம் என்றோ ஒரு திரில்லர் என்றோ ஆரண்ய காண்டத்தை ஒரே வரியில் விளக்கிவிட முடியாது. மேலே சொன்ன படங்களை நாம் எப்படி கவனிக்கிறோமோ அப்படித்தான் ஆரண்ய காண்டத்தையும் வகைப்படுத்தவேண்டும். இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் ஆரண்ய காண்டம் பேசப்படும். அதுதான் அப்படம் தமிழில் அசைக்கமுடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதற்கு அடையாளம்.

மற்றபடி, எப்படி 'மகாநதி'யில் பல கதாபாத்திரங்களின் பெயர்களில் நதிகள் வருமோ, அப்படி ஆரண்ய காண்டத்தில் எல்லாக் கதாபாத்திரங்களின் பெயர்களிலும் மிருகங்கள் வரும் என்பதுபோன்ற சினிமாத் துணுக்குகள் அனைவருக்குமே தெரிந்திருக்கும்!

அடுத்த கட்டுரைக்கு