Published:Updated:

சோழர்கள், பாண்டியர்கள், காட்டுவாசிகள்... எல்லோருக்கும் பொதுவான விஷயம் இதுதான்! #10yearsofAayirathilOruvan

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன் ( screenshot from sun NXT )

கி.பி.1279-ல் சோழதேசத்தில் நடந்த அச்சம்பவத்தை இன்றும் தஞ்சாவூரில் தெருக்கூத்தின் வழியாக மறவாமல் நினைவுக்கூர்ந்து வருவார்கள் என காட்டியிருப்பர். இக்காட்சியின் நோக்கம், `படத்தின் மையக்கதையை எடுத்துரைப்பதற்காகவே' என்பது இன்றளவும் பலரின் கருத்து.

மூன்று ஆண்டுகால உழைப்பு, 263 நாள்கள் படப்பிடிப்பு, ஆயிரக்கணக்கான கலைஞர்களின் பங்களிப்பு என அத்தனை எதிர்பார்ப்புகளுடன் வெளியான அத்திரைப்படம், இந்த வாரத்தோடு அதன் தசாப்தத்தை நிறைவு செய்கிறது. ஆர்வலர்கள் அத்தனை பேர் அகழ்வாராய்ந்திருந்தும், எட்டாத பல செய்திகள் அதனுள் இன்னும் பொதிந்துதான் கிடக்கின்றன. அதுதான் `ஆயிரத்தில் ஒருவன்'.
தெருக்கூத்து காட்சி
தெருக்கூத்து காட்சி
screenshot from sun NXT

செல்வராகவன், காட்சிமொழி அறிந்த பெருங்கவி. அதற்கான பெரும் சான்று `ஆயிரத்தில் ஒருவன்'. படம் துவங்கும் அந்த தெருக்கூத்து காட்சி. கடைசி சோழமன்னன், தன் மகனை ராஜகுருவிடம் ஒப்படைத்துவிட்டு வேதனையில் ஓலமிடுவதும். ராஜகுரு, மன்னனின் மகனை அழைத்துக்கொண்டு கிளம்புவதும். பாண்டிய மன்னன் ஆவேசமாய் உள்ளே நுழைந்து, சோழ மன்னனுடன் சண்டையிடுவதுமாக கூத்து அரங்கேறும். அதாவது, கி.பி.1279-ல் சோழதேசத்தில் நடந்த அச்சம்பவத்தை இன்றும் தஞ்சாவூரில் தெருக்கூத்தின் வழியாக மறவாமல் நினைவுக்கூர்ந்து வருவார்கள் என காட்டியிருப்பர். இக்காட்சியின் நோக்கம், `படத்தின் மையக்கதையை எடுத்துரைப்பதற்காவே' என்பது இன்றளவும் பலரின் கருத்து. ஆனால், நோக்கம் அதுவல்ல.

படத்தில் பலரையும் கவர்ந்ததொரு காட்சி, `செலிப்ரேஷன் ஆப் லவ்'. அது வெறும் கொண்டாட்ட நடனம் அல்ல, அந்த நடனத்துனுள் ஒரு சேதி இருக்கிறது. பார்த்திபன் தன் அரன்மனை கதவு திறந்து, ஆனந்த தாண்டவமாடி, கண்களைக் குவித்து யாரையோ ஆர்வமாகத் தேடுவார். அங்கு நின்றுகொண்டிருக்கும் கார்த்தி திடீரென நடனமாடத் துவங்கி, பார்த்திபனை உடன் நடனமாட அழைப்பார். இருவரும் இணைந்து நடனமாட, பின்னர் பார்த்திபனுக்கு முடிசூடும் வைபவத்தை நடனம் வழி நடித்துக்காட்டுவார்கள். அதாவது, தூதுவன் வந்த செய்திகேட்டு, கதவைத் திறந்து ஆனந்தத்தோடு வருகிறான் சோழ மன்னன். வாசலில் காத்து நிற்கும் தூதுவன், சோழனை வணங்கிவிட்டு, என்னுடன் வாருங்கள் என அழைத்துச்செல்கிறான். இதுதான் அது உணர்த்தும் சேதி.

செலிப்ரேஷன் ஆப் லைஃப்
செலிப்ரேஷன் ஆப் லைஃப்
screenshot from sun NXT

அந்தத் தெருக்கூத்து சோழ இளவரசன், சோழ தேசத்திலிருந்து கிளம்பிய சேதி சொல்கிறது. தஞ்சையின் மக்கள் அதைக் கேட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம், கொண்டாட்ட நடனத்தில் `தூதுவன் வந்து சோழ தேசம் அழைத்து செல்வான்' எனும் சேதி, தீவிலுள்ள மக்களுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. நூற்றாண்டுகளுக்கு முன், தாய் மண்ணிலிருந்து பிரிந்துசென்ற சோழன், வேர் தேடி மீண்டும் வருவான் என மனதின் ஏதோவொரு ஓரத்தில் ஏக்கம் கொண்டிருக்கும் தஞ்சை மக்கள் ஒருபுறம். `சோழ தேசம் விரைவில் அடைவோம். நம் சமூகத்தினரை அன்போடு தழுவுவோம்' என்கிற ஏக்கம் கொண்டிருக்கும் தீவிலுள்ள சோழர்கள் இன்னொருபுறம். இவர்கள் இருவரின் இடையே உள்ள தொப்புற்கொடி பந்தமும், பிரிவினால் உண்டான ஏக்கமும்தான் `ஆயிரத்தில் ஒருவன்'-ன் ஜீவன்! இதை உணர்த்தும் நோக்கத்திலேயே தெருக்கூத்து காட்சியுடன் துவங்குகிறது படம்.

கார்த்திதான் அந்த தூதுவன் என்பது, முன்கூட்டிய நமக்கு குறியீடுகளால் உணர்த்தப்பட்டிருக்கும். கார்த்தியின் முதுகிலுள்ள, மேல்நோக்கி பாயும் புலி டாட்டூ அதற்கு சிறந்த உதாரணம். அதேநேரம், ரீமாசென் மாயவித்தை புரிந்து தன் முதுகில் ஏற்றிய டாட்டூவில், புலி கீழ்நோக்கி வீழ்வது போலிருக்கும். சோழர்களின் கொடியில், புலி மேல் நோக்கி பாய்வதுபோல்தான் இருக்கும். அதேபோல், சோழர்களின் கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணத்தைக் கொண்டது. படத்தில் கார்த்தி அணிந்துவரும் பெரும்பாலான உடைகள், இதே வண்ணங்கள்தான். ஒரு காட்சியில், பார்த்திபனும் இதே வண்ணத்தில் ஆடையணிந்து வருவார். இதைத் தாண்டி பொதுச்சமூகத்தில் சர்ச்சைகளை, விவாதங்களைக் கிளப்பக்கூடிய குறியீடுகளும் படத்தில் அநேகம்.

சோழர் கொடி வண்ணத்தில் உடை
சோழர் கொடி வண்ணத்தில் உடை
screenshot from sun NXT

சரி, சொறிதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அரித்தால் சொறிதல் என்பது இயல்புதானே. இதில் நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நாம் எல்லோருமே அதை செய்திருப்போம். முதுகின் எட்டாத இடங்களில் வேறொருவரின் கரம் கூட தேடியிருப்போம். இதே பொதுவில், மற்றவர் கண் முன் அதைச் செய்யத் துணிவோமா? நம் மீதான மான்பு கெட்டுவிடும் என நிச்சயம் மாட்டோம் அல்லவா. சிலருக்கு `சொறிதல்' என்கிற பதம்கூட படிக்கும்போது ஒவ்வாமை ஏற்படுத்தியிருக்கலாம்.

`ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் கார்த்தியின் அறிமுகக் காட்சி. சிவப்பு நிறக் காரிலிருந்து உடலைச் சொறிந்துகொண்டே இறங்குவார். `நான் வேணா சொறிஞ்சுவிடவா' என்பார் உடனிருக்கும் க்ரேன் மனோகர். இன்னொரு காட்சி, சோழ மன்னனான பார்த்திபன் தன் உடலைச் சொறிய, அவர் மனைவியான மகாராணி, பார்த்திபனின் முதுகைச் சொறிந்துகொண்டிருப்பார். இந்த இரண்டு காட்சிகளில், இரண்டாம் காட்சி கேட்கும்போதே ஒருவித சலனத்தை ஏற்படுத்துகிறது இல்லையா? இரண்டுமே `சொறிதல்' எனும் இயல்பான நிகழ்வுதான் என்றாலும், மாண்புமிக்க மன்னன் ஒருவன் அதைச் செய்யும்போது நம் மனம் அதிர்கிறது. மன்னன், பேரரசன் இதைச் செய்யலாமா எனக் குழம்புகிறோம். ஏன், மன்னன் என்றால் அரித்தால் சொறிந்திருக்கமாட்டானா என்ன? பின்னர் ஏன் இந்த அதிர்வு?

கார்த்தியின் அறிமுகக் காட்சி
கார்த்தியின் அறிமுகக் காட்சி
screenshot from sun NXT

காலங்காலமாகவே, நம் மனதுக்குள் மன்னன் என்பவன் பெரும் மேன்மைமிக்கவன், பரிசுத்தமானவன், அப்பழுக்கற்றவன், தெய்வத்துக்கு நிகரானவன் போன்ற எண்ணங்கள்தாம் ஊடகங்களின் வழி விதைக்கப்பட்டு வருகின்றன. `ஆயிரத்தில் ஒருவன்'க்கு முன்பும் சரி, பின்பும் சரி. பார்த்திபனின் பாத்திரத்தைப் போலொரு மன்னன் பாத்திரம் தமிழ் சினிமாவில் வடிவமைக்கபட்டது கிடையாது. தூங்கும்போதும் கிரீடங்களை கழட்டாமல், எழும்போதும் மீசையின் முறுக்கு குறையாமல் எழும் பளீச் முகத்து மன்னர்களைத்தான் சினிமா இதுவரை நமக்கு காட்டியிருக்கிறது. நம்மில் ஒருவன்தானே மன்னன். ஆக, நம் இயல்பை ஒத்த ஒருவனைத்தானே மன்னனாக காட்ட வேண்டும். அது `ஆயிரத்தில் ஒருவனி'ல்தான் நடந்தது.

தமிழ் சினிமாக்களில் வரும் தமிழ் அரசர்கள் எல்லாம், கர்நாடக இசைக்கருவிகளைக் கேட்டு லயித்துக்கொண்டிருப்பார்கள். அதை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, யாழ், தப்பு, பறை என தமிழ் மன்னனை தமிழ் இசைக்கு ஆட வைத்திருப்பார்கள். அந்த ஆட்டம், பரதநாட்டியமாகவும் இருக்காது. தொன்ம நடனமாக இருக்கும். எல்லாம் தாண்டி, மன்னரின் குடும்பம் மட்டும் செந்தமிழிலும், குடிமக்கள் இயற்றமிழிலும் உரையாடும் கூத்துகள் இருக்காது. அனைவருமே, இயற்றமிழில்தான் உரையாற்றுவார்கள். இங்குதான் தனித்து தெரிகிறார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவனின் மன்னன்
செல்வராகவனின் மன்னன்
screenshot from sun NXT

படத்தில் எந்தக் கதாபாத்திரமும் பரிசுத்த, அப்பழுக்கற்ற, தெய்வகடாட்சம் பொருந்திய பாத்திரமாக வடிவமைக்கபட்டிருக்காது. சோழர்கள், பாண்டியர்கள், காட்டுவாசிகள், ராணுவம் இவர்களில் யாரை நாகரிகமானவர்கள், யாரை வன்முறையாளர்கள் என்பீர்கள்? அதற்கான வரையறையே இங்கு மாறிப்போய், குழப்பம் மிஞ்சுகிறதுதானே. ஆனால், இவர்கள் எல்லோரும் ஓர் இடத்தில் ஒத்துப்போகிறார்கள். அது `அவர்கள் எல்லோரும் மனிதர்கள்'! அதனால்தான், எந்தப் பூச்சும் இல்லாமல், குளோரிஃபிகேஷன் எனப்படும் மேன்மைப்படுத்துதல் இல்லாமல் எல்லோரையும் மனிதர்களாகவே காட்சிப்படுத்தியிருப்பார். அந்த அடர் பாலை நிலத்தில், மனித மனங்களுக்குள் உயிர்ப்போடு இருக்கும் மிருகம் குருதி தாகமெடுத்து பேயாட்டம் ஆடியிருக்கும்.

படத்தின், முதற்பாதியில் வரும் சாகசக் காட்சிகளில் புது கற்பனைகளைக் கொட்டியும், இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளில் பழைய கற்பனைகளை நீக்கியும் கற்பனைகளில் கலகம் செய்திருப்பார் இயக்குநர் செல்வராகவன். சோழன் தொடர்ந்த பயணத்தைக் காண ஆவலாக இருக்கிறோம் செல்வா. மீண்டும் வாருங்கள், திரையில் மாரி பொழியுங்கள்...

சோழனின் பயணம் தோடரும்
சோழனின் பயணம் தோடரும்
screenshot from sun NXT
இது கொண்டாட்டத்தின் திருவிழா..!
அடுத்த கட்டுரைக்கு