Published:Updated:

"பணமில்லாத பாலு மகேந்திரா, 'பகல் நிலவு' குளியல், 'அப்செட்' ரஜினி, 3டி படம்!" - ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு

தாட்சாயணி

தமிழில் மணிரத்னத்தின் முதல் படமான ‘பகல்நிலவு’, ‘அலாவுதீனும் அற்புதவிளக்கும்’, ‘அக்ரஹாரத்தில் கழுதை’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராமச்சந்திர பாபு

ராமச்சந்திர பாபு
ராமச்சந்திர பாபு

`புரொஃபஷர் டிங்கன்’ எப்படி வந்துகிட்டிருக்கு?

இதுவரை மலையாளம், தமிழ், ஆங்கிலம், அரபி என ஆறு மொழிகளில் 135-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். ஆனா, ஒரு படத்தை இயக்குவது இதுதான் முதல்முறை. நான் முதன்முதலா இயக்குற இந்தப் படம் புதுமையா இருக்கணும்னு முடிவு பண்ணேன். அதனால, இந்தப் படத்தை 3டி-யில் பிரமாண்டமா எடுத்துக்கிட்டிருக்கோம். திலீப் இதுல ஒரு மேஜிக் கலைஞரா நடிக்கிறார். இதுவரைக்கும் 70% படப்பிடிப்பு முடிஞ்சிருக்கு. அதிக சிஜி வேலைகள் படத்துல இருக்கு. அது முடிஞ்சதும் படம் ரிலீஸுக்குத் தயாராகிடும்.

திலீபுடன் ராமச்சந்திர பாபு!
திலீபுடன் ராமச்சந்திர பாபு!

ஒரு புதுமையை அறிமுகப்படுத்தும்போது, என்ன மாதிரியான நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்கிறீங்க?

சினிமாஸ்கோப்பைப் பொறுத்தவரை தென்னிந்தியாவுல முதன்முறையா பயன்படுத்துனது, 1973-ல் சிவாஜி நடிப்பில் பிரமாண்டமாக வெளியான `ராஜராஜ சோழன்’ படத்துலதான். முதன்முதலா அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால, அதைப் படமாக்கும்போது அவங்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். வியூ ஃபைண்டர்கூட இல்லாமதான் அந்தப் படத்தை எடுத்திருக்காங்க. அதனால, நினைச்ச மாதிரி எடுக்க முடியாம குரூப் போட்டோ டைப்ல காட்சிகள் அமைஞ்சிடுச்சு. அதனாலேயே அந்தப் படம் தோல்விப் படமாகவும் ஆகிடுச்சு. இந்த நடைமுறைச் சிக்கல்கள், சென்டிமென்ட் காரணமா அந்தப் படத்துக்குப் பிறகு யாரும் சினிமாஸ்கோப்ல படம் பண்ண முன்வரல.

அதுக்கப்புறம் 1979-ல் மலையாளத்துல ஐ.வி.சசி இயக்கத்துல நான் ஒளிப்பதிவு பண்ண `அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்துக்கு நான் சினிமாஸ்கோப்பைப் பயன்படுத்தினேன். அப்போ, சென்னையில அதுக்கான கேமரா கிடையாது. மும்பையில இருந்துதான் வரவைக்கணும். நான் சினிமாஸ்கோப்ல பண்ணும்போது, `ராஜராஜ சோழன்’படத்துக்கு வந்த பிரச்னைகள் வராம இருக்க முன்கூட்டியே டெஸ்ட் ஷூட் பண்ணிப் பார்த்துக்கிட்டேன்.

அதனால, ஸ்பாட்ல எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ரஜினிக்கு அதுதான் முதல் மலையாளப் படம். மிகப்பெரிய பட்ஜெட்ல உருவானதுனால, அந்தப் படத்தை தமிழிலும் எடுக்கலாம்னு முடிவெடுத்தோம். கமல், ரஜினி, ஜெயபாரதி தவிர்த்து மத்த எல்லோரையும் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ற நடிகர்களைப் போட்டு ரெண்டு, ரெண்டு டேக்குகளா ஷூட்டிங் நடத்தினோம்

ரஜினி - கமல்... ரெண்டு ஜாம்பவான்களுடன் ஒரே படத்தில் பணிபுரிந்த அனுபவம்?

சென்னை இன்ஸ்டிட்யூட்டுக்கு நான் ஒரு ஒளிப்பதிவாளரா சிறப்பு வகுப்புகள் எடுக்க அப்பப்போ வர்றதுண்டு. அப்போவே நான் ரஜினியை கவனிச்சிருக்கேன். அதுக்கப்புறம் நான் ஒளிப்பதிவு பண்ண ஒரு தெலுங்குப் படத்துல ரஜினி ஒரு சின்ன வேடத்துல நடிச்சாரு. செட்ல வேலை இல்லாத நேரத்துல மத்தவங்க மாதிரி சும்மா இருக்கமாட்டாரு. ஒரே இடத்துல அவர் உட்கார்ந்து பார்க்க முடியாது. ஸ்டைலா நடந்துக்கிட்டே இருப்பாரு. சிகரெட்டைத் தூக்கிப் போட்டும், கூலிங் கிளாஸை விதவிதமா போட்டுப் பார்த்தும் பயிற்சி எடுத்துக்கிட்டிருப்பார்.

ராமச்சந்திர பாபு ஜெய்சங்கருடன்!
ராமச்சந்திர பாபு ஜெய்சங்கருடன்!

எங்கிட்டேயும் செய்துகாட்டியிருக்காரு. அப்போவே, இவரோட ஸ்டைலை இந்த நாடே உத்துப் பார்க்கப்போகுதுன்னு தோணுச்சு. அதுக்கப்புறம் `அலாவுதீன்' படத்துல வேலை பார்த்தோம். கமல்கூட ஏற்கெனவே `அக்னி புஷ்பங்கள்’ங்கிற பிளாக் & வொயிட் மலையாளப் படத்துல வேலை பார்த்திருக்கேன். `அலாவுதீன்' ஷூட்டிங் ஸ்பாட்ல ரஜினி - கமலுக்கும் இடையே இப்போ இருக்கிற அதே நல்ல நட்பு இருந்தது. ஆனா, ரஜினி அப்போ தன் சொந்தப் பிரச்னைகளால ரொம்ப அப்செட்ல இருந்தாரு. அதனால, அவரை அப்போ இயல்பா பார்க்க முடியல. அந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி, கமல் ரெண்டுபேரையும் சந்திக்கிற வாய்ப்பு அமையல.

`அலாவுதீன்' கதை இப்போ ஹாலிவுட்ல உருவாகியிருக்கு. படம் பார்த்தீங்களா, எப்படி இருந்தது?

நாங்க பண்ண படத்துக்கும் ஹாலிவுட் `அலாதீன்’ கதைக்கும் நிறைய வித்தியாசம் இருந்துச்சு. நாங்க அம்மா சென்டிமென்ல கதையை உருவாக்கியிருந்தோம். ஆனா, இதுல அப்படியொரு டிராக்கே இல்லை. எங்க படத்துல எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இதுல வில் ஸ்மித் நடிச்ச பூதம் கேரக்டருக்கு மட்டும்தான் முக்கியத்துவம் இருக்கு. மொத்தத்துல, அந்தப் படம் என்னைப் பெருசா கவரவில்லை.

ஐ.எஸ்.சி அமைப்பை உருவாக்கணுங்கிற எண்ணம் எப்படி வந்தது?

அமெரிக்காவுல `ஏ.எஸ்.சி’ என்ற ஒரு அமைப்பு இருக்கு. அந்த அமைப்பைச் சேர்ந்த எக்ஸ்பெர்ட்ஸ், ஒளிப்பதிவில் சிறந்து விளங்குகிற மத்தவங்களைக் கௌரவிச்சு, தங்களோட அமைப்புல சேர்த்துப்பாங்க. இப்படி பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள்ல அமைப்பு இருக்கு. அதுமாதிரி ஒரு அமைப்பை இந்தியாவுல ஏன் நாம உருவாக்கக் கூடாதுன்னு நான், பாலு மகேந்திரா, அசோக்குமார் எல்லோரும் பேசிக்கிட்டிருப்போம். அதன் விளைவாகத்தான் 1985-ல் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட 100-வது வருடத்தில் `ஐ.எஸ்.சி' அமைப்பைத் தொடங்கினோம். ஒளிப்பதிவுல தனித்துத் தெரியிறவங்களைத் தொடர்ந்து கௌரவிச்சுக்கிட்டு வர்றோம்.

மணிரத்னம் குறித்து?

மணிரத்னத்தின் ரெண்டாவது படமான `உணரு’ படத்துக்கும், தமிழில் அவரோட முதல் படமான `பகல் நிலவு’ படத்துக்கும் நான் ஒளிப்பதிவு செய்தேன். `உணரு’ சமயத்துல அவர் ஒரு பைக் வெச்சிருப்பாரு. அந்த பைக்ல பீச்சுக்குப் போய் நாங்க ரெண்டுபேரும் கதை விவாதம் பண்ணுவோம். எங்க ரெண்டுபேருக்குள்ளேயும் ஒரு நல்ல நட்பு இருந்தது. அந்தப் படம் ஒரு மலையாளப் படம்கிறதால, அந்தப் படத்தோட ரைட்டர் ஒரு மலையாளிங்கிறதால, அவரால நினைச்சதை எடுக்க முடியல. அந்தப் படம் தோல்வி அடைஞ்சது. அதுக்கப்புறம் தமிழ்ல பண்ண படம்தான், `பகல் நிலவு’.

இதை அவர் நினைச்ச மாதிரி எடுக்க முடிஞ்சது. ரொம்ப பர்ஃபெக்‌ஷனை எதிர்பார்க்கிற இயக்குநர் மணிரத்னம். எதிர்பார்க்கிறதெல்லாம் ஸ்பாட்ல இருக்கணும். இல்லைன்னா, ஷூட் பண்ணமாட்டாரு. அதேமாதிரி, நடிகர்களிடமிருந்து நடிப்பை வாங்குற விஷயத்திலும் ரொம்பக் கறாரா இருப்பாரு. நினைச்ச மாதிரி நடிப்பு வர்றவரை அவங்களை விடமாட்டாரு. வேலை விஷயத்துலதான் இப்படி. மத்தபடி, தன்னோட உதவி இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் எல்லோர்கிட்டேயும் ரொம்ப கேஷுவலா இருப்பாரு. எளிமையான மனிதர். `பகல் நிலவு'க்கு ஒரு ஷெட்யூல் குற்றாலம்ல நடந்தது. தினமும் ஷூட்டிங் முடிஞ்சு நான், மணிரத்னம், முரளி, ரேவதி, ராதிகா, சத்யராஜ் எல்லோரும் ஐந்தருவிக்குப் போய் குளிப்போம். அந்தப் படத்துக்குப் பிறகு அவர்கூட வொர்க் பண்ண முடியலைன்னாலும், இன்னும் எங்க நட்பு தொடருது, அடிக்கடி சந்திக்கிறோம்.

பாலு மகேந்திரா, பரதன், ஜான் ஆப்ரகாம் போன்ற ஜாம்பவான்களுடனான அனுபவங்களைச் சொல்லுங்க?

நான் புனே இன்ஸ்டிட்யூட்ல படிச்சப்போ, பாலு மகேந்திரா எனக்கு சீனியர். பிறகு, ரொம்ப நாள்களுக்குப் பிறகு சென்னையில அவரைச் சந்திச்சேன். அப்போ, அவரு தன்னோட சொந்தக்காரங்க வீட்டுல தங்கியிருக்கிறதாகவும், கையில பணம் இல்லைன்னும் சொன்னாரு. நான் உடனே எங்கூட வாங்கன்னு சென்னையில நான் தங்கியிருந்த இடத்துக்குக் கூட்டிக்கிட்டுபோய் தங்கவெச்சேன். அவரோட முதல் படமான `பனி முடக்கு’ கமிட் ஆகி, ஷூட்டிங்கிற்கு ரெடியாகிட்டு இருந்தாரு. அப்போ, அவர்கிட்ட ஒளி அளவைத் தெரிஞ்சுக்கிற `எக்போஷர் லைட்’ இல்லை. சென்னையிலேயும் அது அப்போ கிடைக்காது.

மும்பையில ஆர்டர் பண்ணி வரவைக்கணும். உடனே ஷூட்டிங் கிளம்பவேண்டி இருந்ததுனால, நான் என்கிட்ட இருந்ததைக் கொடுத்தனுப்பினேன். பிறகு, ரெண்டுபேருமே ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகும் எங்க நட்பு தொடர்ந்தது. பரதனும், நானும் ஆரம்பகாலத்துல கே.கே.நகர்ல ஒண்ணா தங்கியிருந்தோம். இயக்குநர் - ஒளிப்பதிவாளர்ங்கிற உறவைத் தாண்டி, ரெண்டுபேரும் குடும்ப உறுப்பினர்களாகவே பழகினோம். ஜான் ஆப்ரஹாம் என்னோட முதல் படத்தின் இயக்குநர். தொடர்ந்து அவரோட பயணம் செய்திருக்கேன். தமிழ்லகூட எம்.பி.ஸ்ரீவாசன்ங்கிற ஒரு இசைக் கலைஞரோட வாழ்க்கையைத் தழுவி ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படம் பண்ணோம்.

ஏன் தமிழ்ல தொடர்ந்து படங்கள் பண்ணல?

நான் பிறந்ததே சென்னைக்குப் பக்கத்துல இருக்கிற மதுராந்தகத்துலதான். எங்க அம்மா, அப்பா மலையாளிகள். ஆனா, இங்கேயே செட்டில் ஆகிட்டாங்க. லயோலா கல்லூரியிலதான் படிச்சேன். பிறகு திருவனந்தபுரத்துல செட்டில் ஆகிட்டதால, தமிழ்ப் படங்கள்ல அவ்வளவா வேலை செய்யமுடியாம போயிடுச்சு.

ராமச்சந்திர பாபு
ராமச்சந்திர பாபு

ரவி.கே.சந்திரன் உங்க தம்பியாமே!

என்கூட பிறந்த தம்பி அவன். இன்ஸ்டிட்யூட்ல போய் படிக்கிறேன்னு சொன்னான். நான்தான் வேணாம்னு சொல்லி, நான் வேலை பார்த்த படங்கள்ல உதவியாளரா வெச்சுக்கிட்டேன். அப்புறம் ராஜீவ் மேனனோட சில விளம்பரப் படங்கள்ல வேலை பார்த்தான். இன்னைக்கு இந்தியாவுல முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருத்தரா அவன் இருக்கிறதுல ரொம்ப சந்தோஷம். அவன் மட்டுமல்ல, அவனோட மகன் சந்தானகிருஷ்ணணும் இப்போ ஒரு நல்லா கேமராமேனா வந்துகிட்டிருக்கான். அவனுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கு.

இப்போ உள்ள ஒளிப்பதிவுக்கும், அப்போ இருந்த ஒளிப்பதிவுக்குமான வேறுபாடுகள் என்னென்ன ?

அப்போல்லாம் கேமரா ஆப்ஷன்ஸ் கம்மி. ரெண்டு வகைதான் இருக்கும். இப்போ நிறைய இருக்கு. ஆனா, அதுக்கேற்ற அவுட்புட்டை இப்போதைய இளம் ஒளிப்பதிவாளர்கள் கொடுக்கிறதில்லை. முக்கியமா, தனித்துவம் இல்லாம எல்லாமே ஒரேமாதிரி இருக்கு. கையில பேனா இருக்கிற எல்லோரும் கவிஞர் ஆகிடமுடியாதில்லையா... அப்படித்தான் ஒளிப்பதிவும். இந்தக் குறைபாடு இங்கே மட்டுமல்ல, ஹாலிவுட்லேயும் இருக்கு. பொதுவா, கிரீன்மேட்டைப் பயன்படுத்தி பண்ற படங்களில் நாம பண்ற லைட்டிங் அடிவாங்கி, மொத்தப் படமும் ஃப்ளாட்டா இருக்கும். `அலாதீன்’ படத்துலகூட அந்தப் பிரச்னை இருக்கு. அதேசமயம் `பாகுபலி’யில அந்தக் குறை இல்லை. காரணம், அவங்க செஞ்ச ப்ரீவிஷூவலைசேஷன். இப்போ இருக்கிற இளம் ஒளிப்பதிவாளர்களில் ரவிவர்மன், `பாகுபலி’ ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார் மாதிரி ஒருசிலர்கிட்டதான் தனித்துவத்தைப் பார்க்க முடியுது.

நடிகை கடத்தல் விவகாரத்துக்குப் பிறகு, திலீப் இப்போ எப்படி இருக்கார்?

முன்னைவிட உற்சாகமா இருக்காரு. ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அவருக்கு இருந்த ஆதரவுல எந்தக் குறையும் இல்லை. மத்தபடி, அந்தப் பிரச்னையைப் பத்தி எந்தக் கருத்தும் சொல்லவிரும்பல.

தமிழின் முன்னோடி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் பற்றி?

மிகச்சிறந்த கேமராமேன் அவர். அவர் படங்கள்ல எனக்கு `அக்னி நட்சத்திரம்’ ரொம்பப் பிடிக்கும். அதுல அவர் ரொம்பவே வித்தியாசமான லைட்டிங் ஸ்டைலைப் பண்ணியிருப்பாரு. ஃபிலிம்ல படம் பண்ணும்போது கொடுத்த அதே குவாலிட்டியை, இப்போ டிஜிட்டலிலும் கொடுக்கிறார். இது சாதாரண விஷயமில்லை. புதுசா எதையாவது செய்து பார்க்கிற ஆர்வம் எப்போவும் அவர்கிட்ட இருக்கும். உதவியாளர்களுக்கும் நிறைய கத்துக்கொடுத்து, பலரைப் பெரிய கேமராமேனா உருவாக்கியிருக்காரு. ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தலைவராகவும் அவரோட செயல்பாடுகள் ரொம்ப நல்லாயிருக்கு. இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துறாரு. ஒளிப்பதிவுல சிறந்து விளங்குற படங்களைப் போட்டுக் காட்டி, கலந்துரையாடல்கள் நடத்துறாரு. தன்னோட பரபரப்பான வேலைகளுக்கு நடுவே, இதுக்காகவும் அவர் மெனக்கெடுறது சாதாரண விஷயமில்லை.

இளம் ஒளிப்பதிவாளர்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?

எப்போதுமே ஒரு விஷயத்தைத் தெளிவா புரிஞ்சுக்கணும். டெக்னாலஜி என்னைக்குமே நிரந்தரமில்லாதது. இன்னைக்குப் புதுசா இருக்கிற விஷயம், நாளைக்குப் பழசாகிடும். அதனால, வெறுமனே டெக்னாலஜி அறிவை மட்டுமே வளர்த்துக்கக் கூடாது. ஒளிப்பதிவின் ஆன்மா கலை. அதுதான் நிரந்தரமானது. ஒரு நல்ல சிற்பம் ஆயிரம் வருடமானாலும் சிறப்பு மாறாது. டெக்னாலாஜி அப்படிக் கிடையாது. அதனால, ஒளிப்பதிவு பண்றவங்க கலை அறிவைத் தொடர்ந்து வளர்த்துக்கிட்டே இருக்கணும். வாசிங்க, ஓவியங்களையும் சிற்பங்களையும் ரசிச்சுப் பழகுங்க, இசையில மூழ்குங்க, அழகான இடங்களைத் தேடிப்போங்க. இதெல்லாம் தொடர்ந்து செய்றப்போ, ரசனை மாறும். ரசனை மாறும்போது தனித்துவமும் தானாக வரும்.