சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: ஆக்‌ஷன்

விஷால், தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
விஷால், தமன்னா

ஒவ்வொரு நாட்டுக்கும் விசா வாங்குவதில் செலுத்திய கவனத்தைக் கொஞ்சம் கதை திரைக்கதைகளிலும் காட்டியிருந்தால் ‘ஆக்‌ஷன்’ மாஸ் ஆக்‌ஷனாகியிருக்கும்!

ல நாடுகளின் பார்டர்களில் எகிறிக்குதித்து, பாகிஸ்தானுக்குள் சில பல பட்டாசுகளை வெடித்து, அப்படியே அலேக்காக இந்தியாவுக்குள் சர்வதேசத் தீவிரவாதியைத் தூக்கிவரும் கர்னல் சுபாஷின் வீரதீர அத்தியாயமே இந்த ‘ஆக்‌ஷன்.’

கமிஷன்கள் வாங்காத, கரப்ஷன் இல்லாத, வாரிசு அரசியல் மட்டுமே செய்யும்(!) நேர்மையான முதலமைச்சராக பழ.கருப்பையா. அவரின் மூத்தமகன் ராம்கி தமிழ்நாட்டின் துணை முதல்வராகவும், இளையமகன் விஷால் ராணுவ கர்னலாகவும் நாட்டுக்காக நலப்பணி ஆற்றிவருகிறார்கள். ஒரு மகிழ்ச்சித் தருணத்தில், தேர்தலைச் சந்திக்க இருக்கும் நேரத்தில், எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்கிறது. விளைவு, விஷாலின் குடும்பத்தில் சில உயிர்ப்பலிகள். காரணம் தேடி நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் எனப் பறந்து பறந்து வேட்டையாடி, இறுதியில் இந்தியர்கள் பெருமைகொள்ளும் சம்பவத்தைச் செய்கிறார் விஷால்... அந்தச் சம்பவம் என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்!

ஷூட்டிங் இடைவெளியில் காஷ்மீர்ப்பக்கம் போனால் அப்படியே ராணுவத்தில் சேர்த்துவிடலாம் போன்ற ஃபிட் அண்ட் ஃபினிஷிங்கில் கச்சிதமாக இருக்கிறார் விஷால். ஹீரோவுக்கு உதவிசெய்யும் ஒருதலைக்காதலியாக தமன்னா; ஆக்‌ஷன் காட்சிகளில் தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறார். குட்டிக் குட்டி எக்ஸ்பிரஷன்களால் கவனிக்க வைக்கிறார் ஐஸ்வர்யா லஷ்மி. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வில்லியாக மிரளவைக்கிறார் அகான்ஷா புரி.

‘காமெடி கிங்’ சுந்தர்.சி ஆக்‌ஷன் படம் செய்திருக்கிறார் என்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், யோகி பாபுவின் ஒரு சில ஒன்லைனர்களைத் தவிர காமெடி என்று சொல்ல எதுவும் இல்லை. ஷாராவும் கிச்சுகிச்சு மூட்ட எவ்வளவோ முயன்றிருக்கிறார். இடைவெளிக்கு முன் ஒரு 15 நிமிடங்கள் திரைக்கதையில் மிரட்டிய சுந்தர்.சி - வெங்கட்ராகவன் - சுபா கூட்டணி, அதற்குப்பின் சோர்ந்துபோய் பாகிஸ்தான் டெம்ப்ளேட்டைத் தூக்கிவந்ததுதான் சோகம்.

பின்னணி இசையில் தடதடக்கிறது ஹிப்ஹாப் தமிழாவின் இசை. அன்பறிவின் சண்டைக்காட்சிகளில் தரம் தெறிக்கிறது. டட்லியின் ஒளிப்பதிவு சில்! பரபர சண்டைக்காட்சிகள் ஃபாஸ்ட் ஃபார்வேர்டு எடிட்டிங்கில் சிக்கி ஆம்னி பஸ்ஸின் ஜன்னலோரக் காட்சிகளைப் போலக் கடந்துபோகின்றன.

ஆக்‌ஷன்
ஆக்‌ஷன்

விஷால், தமன்னா, வில்லன், குட்டிப்பையன் என அனைவரும் கற்கால வசனங்களைப் பேசுவதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒப்பாரியில்கூட ரைமிங் வசனங்கள் எழுதி இம்சித்திருக்கிறது சுபா - பத்ரி இணை.

உலகம் சுற்றும் ஸ்பை த்ரில்லர் ஜானர் கதையில் ‘ஆக்‌ஷன்’ உலகம் மட்டும் சுற்றுகிறது. ஸ்பை படத்துக்கான புத்திசாலித்தனமோ, த்ரில்லருக்கான ட்விஸ்டுகளோ திரைக்கதையில் இல்லை. புல்லட் ஏறி, ஈ.சி.ஆரில் லாங் டிரைவ் போவதுபோல அசால்ட்டாக நாடுகளைக் கடக்கிறார்கள் விஷாலும் தமன்னாவும். அதிலும், பிரசவ வலியில் துடிப்பதாக நடிக்கும் தமன்னாவைக் காட்டி எல்லைகடந்து இன்னொரு தேசத்துக்குள் காரில் போகிறார் விஷால். நாடு விட்டு நாடு போறதுன்னாலும் ஒரு நியாயம் வேணாமா சார்?

விஷால், தமன்னா
விஷால், தமன்னா

ஒவ்வொரு நாட்டுக்கும் விசா வாங்குவதில் செலுத்திய கவனத்தைக் கொஞ்சம் கதை திரைக்கதைகளிலும் காட்டியிருந்தால் ‘ஆக்‌ஷன்’ மாஸ் ஆக்‌ஷனாகியிருக்கும்!