Published:Updated:

“பெரிய ஸ்டார் ஆகணும்னு முயற்சி பண்ணலை!”

ஆதி
பிரீமியம் ஸ்டோரி
ஆதி

020, 2021 எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இடைவெளிதான். மீதமிருக்கும் நாள்கள் வேலை செஞ்சுக்கிட்டுதான் இருந்தேன்.

“பெரிய ஸ்டார் ஆகணும்னு முயற்சி பண்ணலை!”

020, 2021 எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இடைவெளிதான். மீதமிருக்கும் நாள்கள் வேலை செஞ்சுக்கிட்டுதான் இருந்தேன்.

Published:Updated:
ஆதி
பிரீமியம் ஸ்டோரி
ஆதி

கோலிவுட், டோலிவுட் என இரு மாநில சினிமாத்துறையிலும் ஆதி மிகவும் பரிச்சயமானவர். ஹீரோ, வில்லன், குணச்சத்திர கதாபாத்திரங்கள் என எதுவாக இருந்தாலும் அதனை செவ்வெனச் செய்யும் நடிகர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஆதி செம பிஸி! ‘Positive Vibes Only’, ‘No Dreams Only Goals’ போன்ற பாசிட்டிவிட்டி நிறைந்த வாசகங்களுடன் வரவேற்றது அவரது அலுவலகம். சமீபமாக வெளியான ‘க்ளாப்’ படத்திற்கு வாழ்த்துகள் சொல்லிப் பேச ஆரம்பித்தேன்.

``உங்க கரியருடைய ஆரம்பத்தில் இருந்தே தமிழ் - தெலுங்குன்னு இரண்டு மொழிகளில் பயணிக்கிறீங்க. எப்படி பேலன்ஸ் பண்றீங்க?’’

“பேலன்ஸ் பண்ணணும்னு நினைச்சால்தான் அது கஷ்டம். நான் அப்படி நினைக்கலை. யதார்த்தமா போற போக்குல பயணிக்கிறதுதான். ஒரு கதை என்கிட்ட வரும்போது, கூடவே இயக்குநரும் தயாரிப்பாளரும் வருவாங்க. தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிகளுக்கும் இந்தக் கதை ஏற்றதா இருக்கும். ரெண்டு மொழியிலயும் ரிலீஸ் பண்ணலாம்னு சொல்வாங்க. படத்துக்கு முதலீடு போடுறது அவங்கதான். அவங்க ரெடினா நானும் ரெடிதான். சினிமாங்கிறது ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டுமில்லை. சமீபமா வெளியான ‘க்ளாப்’ படத்துல கூட எல்லா ஷாட்டும் தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழியிலயும் ஷூட் பண்ணினதுதான். காலம் என்னை சரியான வழியில் கூட்டிட்டுப் போகுதுன்னு நினைக்கிறேன். அதனால், தமிழ்ப் படம், தெலுங்குப் படம்னு குழப்பிக்கத் தேவையில்லை.’’

“பெரிய ஸ்டார் ஆகணும்னு முயற்சி பண்ணலை!”

``2018க்குப் பிறகு இப்போதான் நீங்க நடிச்ச படம் வெளியாகுது. நான்கு வருடங்கள் இடைவெளி ஏன்?’’

“ஆமாங்க. 2020, 2021 எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இடைவெளிதான். மீதமிருக்கும் நாள்கள் வேலை செஞ்சுக்கிட்டுதான் இருந்தேன். நான் ரொம்ப மெதுவாப் படங்கள் பண்றேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. பிடிச்ச வேலையைத்தான் செய்றோம். அதை அவங்க சொல்ற மாதிரி கொஞ்சம் வேகமாப் பண்ணலாம்னு முடிவெடுத்துப் படங்கள் கமிட் பண்ணினதுக்குப் பிறகுதான் லாக்டெளன் வந்திடுச்சு. அந்தச் சமயத்துல என்கிட்ட நாலு படங்கள் இருந்தன. ஒரு படம் 60% முடிஞ்சிருந்தது, இன்னொரு படம் 80% முடிஞ்சிருந்தது, ஒரு படம் ஆரம்பிச்சு ஒரு ஷெட்யூல் மட்டும் முடிஞ்சிருந்தது. இன்னொரு படத்துக்கு அப்போதான் பூஜை போட்டபடி ஆரம்பிக்காமலே இருந்தது. லாக்டெளன் முடிஞ்சு, ஷூட்டிங்குக்கு அனுமதி கிடைச்சபோதெல்லாம், கிடைக்கிற நேரத்துல ஒவ்வொரு படமா முடிச்சேன். அந்தப் படங்கள்தான் இப்போ ஒவ்வொண்ணா வெளியாகுது. ரோலர் கோஸ்டர் மாதிரிதான் இருந்தது. என்னுடைய தயாரிப்பாளர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.’’

``தமிழைவிட தெலுங்குப் படத்துல வெரைட்டி காட்ட முடியுதுன்னு நினைக்கிறீங்களா?’’

‘`எனக்கு தமிழ், தெலுங்குன்னு பிரிக்கத் தெரியலை. ஒரு நடிகரா நான் எல்லாத்தையும் ஒண்ணாதான் பார்க்கிறேன். ‘மிருகம்’ படத்துக்குப் பிறகு, அந்த மாதிரி முரட்டுத்தனமான கேரக்டர்களா வந்தது. வேற மாதிரி ஒரு படம் பண்ணணும்னு காத்திருந்தபோது, ‘ஈரம்’ அமைஞ்சது. ‘ஈரம்’ பண்ணினதுக்குப் பிறகு, கிட்டத்தட்ட முப்பது போலீஸ் கதைகள் வந்திருக்கும். நான் தவிர்த்துட்டேன். அந்தப் படத்துக்குப் பிறகு, ‘யூ டர்ன்’லதான் போலீஸா நடிச்சேன். காரணம், அந்த இயக்குநர் பவன் குமாருடைய படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு கட்டத்துக்குள் மாட்டிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். சமீபமா, வெளியான ‘குட்லக் சகி’ படத்துல தெருவுல நாடகம் போடுற சுமாரான நடிகனா நடிச்சிருந்தேன். ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. வித்தியாசமான கேரக்டர்கள், எமோஷன்கள்னு நடிக்கும்போதுதானே நமக்கும் பார்க்கிறவங்களுக்கும் சுவாரஸ்யமா இருக்கும். அதனால, தெலுங்கு மொழின்னு இல்லை, எந்த மொழியா இருந்தாலும் வித்தியாசமான, இதுவரை நான் பண்ணாத கேரக்டர்கள் வந்தால், நிச்சயம் பண்ணுவேன்.’’

“பெரிய ஸ்டார் ஆகணும்னு முயற்சி பண்ணலை!”

``அப்பா இயக்குநர்ங்கிறதால உங்களுக்கு ஏதாவது டிப்ஸ் கொடுப்பாரா? நீங்க அவர்கிட்ட ஏதாவது ஐடியா கேட்கிறதுண்டா?’’

“அப்பாகிட்ட சினிமா பத்தி, நான் கேட்ட கதைகள் பத்தி ஆலோசிக்கிறதுண்டு. அவர் சொல்ற கருத்தை எடுத்துக்குவேன். ஆனா, முடிவெடுக்கிறது நான்தான். இந்தக் கதைக்கு நான் பொருந்துவேனான்னு சந்தேகம் இருந்து, அப்பாவுக்கு ரொம்பப் பிடிச்சிருந்த காரணத்துக்காக நான் அந்தப் படத்துக்கு ஓகே சொல்லமாட்டேன். கேமரா முன்னாடி நின்னு, அந்தக் கேரக்டரா நடிக்கப்போறது நான்தான். அதனால, எனக்கு அந்தக் கதையும், அந்தக் கதைக்கு நானும் சரியா இருப்போம்னு நம்பிக்கை வந்தால் மட்டுமேதான், ஓகே சொல்லுவேன். அப்படி இந்தக் கதைக்கு என்னைவிட, இந்த நடிகர் சரியா இருப்பார்னு தோணுச்சுனா, அவங்களுக்கு இந்தக் கதையைச் சொல்லச்சொல்லி அனுப்பி வெச்சிடுவேன்.’’

``சின்ன வயசுல அப்பா இயக்கின படங்களுடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காரா?’’

“அப்பா 53 படங்கள் இயக்கியிருக்கார். ஆனா, ரெண்டு மூணு படங்களுடைய ஷூட்டிங்குக்குத்தான் போயிருக்கேன். சின்ன வயசுலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அதிகமாப் போனா, படிக்கமாட்டேன்னு வேணும்னே தவிர்த்திருக்கார். படிச்சு முடிச்ச பிறகு, சினிமாவில் முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்னு சொன்னப்போ, ‘வந்தா உன்னால பிழைக்கமுடியுமா?’ன்னு கேட்டார். ‘முயற்சி பண்றேன்பா’ன்னு சொன்னேன். எப்போவும் அவர் என்னைத் திட்டினதில்லை, அடிச்சதில்லை. படிக்கிறதுனாகூட, உன்னால முடிஞ்சதைப் பண்ணு, அதை மனசுக்கு உண்மையாப் பண்ணுன்னு சொல்வார்.’’

``இதுவரை எந்தப் படம் உங்களுக்கு மனரீதியா தாக்கத்தை ஏற்படுத்துச்சு?’’

“ ‘க்ளாப்’ படம்தான். கதிர்ங்கிற கேரக்டருக்கு டிப்ரஷன், ஸ்ட்ரஸ்னு நிறைய இருக்கும். அவனுடைய வாழ்க்கையே ரொம்ப டார்க்கா இருக்கும். அந்தக் கேரக்டரா நடிக்கும்போது, மனரீதியா தயாராக வேண்டியிருந்தது. வீட்லயும் அந்தக் கேரக்டருடைய தாக்கம் எனக்குள்ள இருந்தது. ‘அரவான்’ படத்துக்கு சிக்ஸ் பேக் வெச்சது, அந்த வட்டார வழக்கு பேசினது பெரிய சவாலா இருந்தது.’’

“பெரிய ஸ்டார் ஆகணும்னு முயற்சி பண்ணலை!”

`` ‘ரங்கஸ்தலம்’ மாதிரி சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க அழைப்பு வரும்போது, அதை எடுத்துக்கலாமா வேணாமாங்கிற முடிவு எடுக்க எவ்ளோ யோசனைகள் இருக்கும்?’’

“ஆரம்பத்துல இருந்து என் படங்கள் பார்த்தீங்கன்னா, நான் பெரிய ஸ்டாராகிடணும்ங்கிற முயற்சி எங்கேயும் இருக்காது. எல்லாக் கதையிலயும் அந்தந்த கேரக்டராதான் தெரியணும்னு நினைப்பேன். ‘ரங்கஸ்தலம்’ படத்துல ராம் சரணுக்கு அண்ணனா குமார் பாபுங்கிற கேரக்டர்ல என்னை எப்படி உணர்ந்தேனோ, அப்படிதான், ‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’ பண்ணும்போதும் உணர்ந்தேன். ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல்ஸ்னு பிரிக்கத் தோணலை. என்னால அந்தக் கேரக்டருக்கு ஏதாவது கிடைக்குமா, அந்தக் கேரக்டர்னால எனக்கு ஏதாவது கிடைக்குமா, அவ்ளோதான் யோசிப்பேன். மத்தபடி நோ கன்ஃப்யூஷன்.’’

``அடுத்தடுத்த படங்கள்?’’

“ ‘பார்ட்னர்’னு ஒரு காமெடி படம் நடிச்சிருக்கேன். ஹன்சிகா ஹீரோயின். லிங்குசாமி சார் இயக்கத்துல ‘தி வாரியர்’ படத்துல ராம் பொத்தனேனிக்கு வில்லனா நடிச்சிருக்கேன். சுசீந்திரன் சார் இயக்கத்துல தெலுங்குல ‘ஷிவடு’ன்னு ஒரு படம் இதெல்லாம் கைவசம் இருக்கு. என் தொழிலே கதை கேட்கிறதுதான். தினமும் கதை கேட்பேன். ஷூட்டிங் போறது என் ஹாபின்னு சொல்லலாம். அப்படிக் கேட்ட சில கதைகளை ஓகே பண்ணியிருக்கேன். அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism