Published:Updated:

``என்னைத் தப்பா நினைச்சுட்டாங்க. ஆனா, அஜித்துக்கு கதை சொல்வேன்!" - ஆதிக் ரவிச்சந்திரன்

ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்

'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

"இந்தப் படத்துல நடிக்கும்போது நிறைய உணர்வுகள் தோன்றியது. 'என்னடா ஆண்கள் இப்படி இருக்காங்களேனு ஃபீல் பண்ற அளவுக்கு இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த எனக்கே இந்த உணர்வு இருந்ததுன்னா, படம் பார்க்கிறவங்களுக்கும் கண்டிப்பா இந்த உணர்வு வரும். படத்துல ஒரு முக்கியமான ஷாட் எடுத்து முடிச்சதும் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த எல்லோருமே எழுந்து நின்னு கைதட்டினாங்க. படத்துல எல்லா ஷாட்லேயும் அஜித் சார் கண்ணைப் பார்த்தா, ரொம்பக் கூர்மையா இருக்கும். 'நேர்கொண்ட பார்வை'ங்கிற பெயருக்கு ஏற்றமாதிரி!" என்கிறார், ஆதிக்.

ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்

" 'நேர்கொண்ட பார்வை' பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?"

'நேர்கொண்ட பார்வை'
'நேர்கொண்ட பார்வை'

"என் புகைப்படங்களைப் பார்த்த வினோத் சார், என்னை நடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கார். படத்துல என் கேரக்டரை வேற யாராவது பெரிய நடிகர்கள்கூட பண்ணியிருக்கலாம்தான். ஆனா, அவர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னு நினைச்சார். அவருடைய திரைக்கதையும் அத்தனை வலிமையா இருந்தது. இந்தப் படத்துல எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நம்பவே முடியல. கிட்டத்தட்ட ஆறு மாசம் காத்திருந்து, ஷூட்டிங்கிற்கு ரெண்டுநாள் முன்னாடி கன்ஃபார்ம் பண்ணாங்க. ஷூட்டிங் கிளம்புறப்போகூட 'படத்துல இருந்து நம்மளைத் தூக்கிடுவாங்களோ'னு மனசுல கொஞ்சம் பயம் இருந்தது. அப்படி நடக்கல!"

"ஷூட்டிங் ஸ்பாட்ல முதல் முறையா அஜித்தைப் பார்க்கிறப்போ எப்படி ஃபீல் பண்ணீங்க?"

இயக்குநர் வினோத்
இயக்குநர் வினோத்

"என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள் அதுவாகத்தான் இருக்கும். வாழ்க்கையில இதுமட்டுமே போதும்னு தோணும்ல, அப்படி ஒரு மொமென்ட் அது. அஜித் சார் ஷுட்டிங்ல இருந்தார். நான் ஸ்பாட்டுக்குள்ளே போக ரொம்பப் பயந்தேன். எனக்குப் படபடப்பா இருந்தது. என்னாடா இவ்வளவு பில்டப் கொடுக்குறானேனு நினைச்சுடாதீங்க. ஏன்னா, எனக்கு அஜித் சாரை அவ்ளோ பிடிக்கும். ஹீரோவோட என்ட்ரி சீன் படத்துல எப்படி இருக்கும்... அப்படித்தான் நான் அவரை ரசிச்சேன். என்னால அந்த உணர்வை இப்போகூட மறக்க முடியல. அவரைப் பார்த்துட்டு, டக்குனு வெளியே ஓடி வந்துட்டேன். திரும்பி நின்னுக்கிட்டு இருந்தப்போ, அஜித் சார் வெளியே வந்து கட்டிப் பிடிச்சுகிட்டு 'ரிலாக்ஸ்'னு சொன்னார். என்னைவிட எங்க அம்மா அஜித் சாரோட தீவிர ரசிகை. அவங்களுக்கு போன் பண்ணி அஜித் சாரை நேர்ல பார்த்த விஷயத்தைச் சொன்னேன். 'எப்படி இருக்கார், நல்லாயிருந்தாரா, தாடி வெச்சிருந்தரா'னு கேள்விமேல் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க."

"இயக்குநரான நீங்க, இந்தப் படத்துல நடிக்க காரணம் என்ன?"

'நேர்கொண்ட பார்வை'
'நேர்கொண்ட பார்வை'

"அஜித் சார் படம்!. வேறென்ன வேணும். நான் இயக்குநர் ஆகும்போதே அஜித் சாரை வெச்சு ஒரு படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். சினிமாவில் நாம எதை முதலில் பண்றோமோ, அதுக்குப் பிறகு நாம அப்படியே பார்க்கப்படுவோம்னு, இயக்குநர் ஆனபிறகு புரிஞ்சுக்கிட்டேன். என் முதல் படம் 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின் மூலமா 'இவன் இளைஞர்களுக்கான இயக்குநர்'னு நினைச்சுக்கிட்டாங்க. அதை உடைக்கிறது ரொம்பக் கஷ்டம். இப்போ என் மிகப்பெரிய ஆசையே, அஜித் சாரை வெச்சுப் படம் பண்றதுதான். ஆனா, அதற்கான தகுதியை வளர்த்துக்கிட்டு அப்புறம்தான் அவர்கிட்ட கதை சொல்லணும்னு இருக்கேன்."

" 'நேர்கொண்ட பார்வை'யில் நடிச்ச அனுபவம்?"

"எந்த மாதிரியான கேரக்டர்ல நடிக்கப்போறோம்னு இயக்குநர் வினோத் தெளிவா புரிய வெச்சுட்டார். அவர் சொன்னதை நடிச்சுக் கொடுத்தேன். நடிக்கிறதைவிட, அஜித் - வினோத் சாருக்கு முன்னாடியே நான் ஸ்பாட்ல இருக்கணும்ங்கிறதுதான் என் பெரிய டென்ஷனா இருந்தது. ஏன்னா, ரெண்டுபேருமே சீக்கிரமா வந்திடுவாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல 25 நாள் வரை அஜித் சார்கூட இருந்தோம். அதுவே எனக்குப் போதும்."

அடுத்த கட்டுரைக்கு