Election bannerElection banner
Published:Updated:

''சினிமா மட்டுமே வாழ்க்கையில்லை... நடிகனாகவே நான் நீடிக்கவேண்டுமா?" - நண்பர்களிடம் மனம்திறந்த அஜித்

அஜித்
அஜித்

அடுத்ததாக சைக்கிளிலேயே இந்திய எல்லைகளைக்கடந்து, சர்வதேச ட்ரிப்பாக மியான்மர் வரை சென்றுதிரும்ப திட்டமிட்டிருக்கிறது அஜித் - சுரேஷ் குமார் கூட்டணி.

'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர் ரிலீஸுக்காக வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்திருக்கும் 'வலிமை' படத்தின் ஷூட்டிங் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹூமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேய கும்மனக்கொண்டா நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசை. படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிவடைந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த மாத இறுதியில் வெளியாகயிருக்கிறது என்பதோடு, படத்தின் டீஸர் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாளுக்கு முன்பாக வரும் வியாழக்கிமை ரிலீஸ் செய்யதிட்டமிடப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து 'வலிமை' ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. 'வலிமை' படத்தின் போட்டோஷூட் படங்களைப்பார்த்த அஜித், இயக்குநர் வினோத்குமாரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ''ஃபர்ஸ்ட் லுக், டீசரைப் பார்த்தால் ரசிகர்கள் இன்னும் கொண்டாட்டமாகிவிடுவார்கள். எதிர்பார்ப்பு அதிகமாகிவிடும். என்னுடைய லுக் பிரமாதமாகயிருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார் அஜித்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தொடர்ந்து தனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கையே தொழிலாகவும் மாற்றும் முனைப்பில் இருக்கிறார். துப்பாக்கிசூட்டில் அதிக ஆர்வம்கொண்ட நடிகர் அஜித் குமார் இந்தியாவில் துப்பாக்கி சுடும்போட்டிகள் எங்கு நடந்தாலும் அதில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

நண்பர்களுடன் அஜித்குமார்
நண்பர்களுடன் அஜித்குமார்

சைக்ளிங் ஆர்வமும் அஜித்துக்கு அதிகம். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரைசாலையில் சைக்கிளில் மகாபலிபுரம், பாண்டிச்சேரி வரை சென்றுவருவதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சைக்கிளிலேயே சென்னை டு திருப்பதி, கூர்க், கோவை, விசாகப்பட்டிணம், ஐதராபாத் என பக்கத்து ஊர்கள், மாநிலங்களுக்கு சென்றுவந்த அஜித், கடந்த மாதம் தென்னிந்திய எல்லைகளைக் கடந்து கொல்கத்தா வரை சைக்கிளிலேயே பயணம் செய்து திரும்பினார்.

சென்னையில் மிகப் பிரபலமான சைக்கிள் டீலர்ஷிப் உரிமையாளர் சுரேஷ்குமார். இவர்தான் அஜித்தின் சைக்கிளிங் குரு. கடந்த பல ஆண்டுகளாகவே அஜித்தோடு பயணிக்கும் இவர்தான், கொல்கத்தா ட்ரிப்பிலும் கூடவே இருந்தவர். பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு கிளம்பி கிட்டத்தட்ட 3,000 கிமீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்து மீண்டும் சென்னை திரும்பினார்கள். அஜித்தோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் இந்தப்பயணத்தில் கலந்துகொண்டர்கள். இவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய ஒரு கார் பின்தொடர்ந்தது.

அடுத்ததாக சைக்கிளிலேயே இந்திய எல்லைகளைக்கடந்து, சர்வதேச ட்ரிப்பாக மியான்மர் வரை சென்றுதிரும்ப திட்டமிட்டிருக்கிறது அஜித் - சுரேஷ் குமார் கூட்டணி.

அஜித்குமார்
அஜித்குமார்

''சினிமா எனக்கு தொழில்தான். வித்தியாசமானப் படங்கள் பலவும் நடித்துவிட்டேன். அடுத்தப்படம் என்ன, அதற்கடுத்தப்படம் என்ன எனத்தொடர்ந்து சினிமா பற்றியே சிந்தித்து என்மேல் நானே ப்ரஷர் போட்டுக்கொள்ளவிரும்பவில்லை. இந்த வாழ்க்கையை எனக்குப்பிடித்ததுபோல வாழ விரும்புகிறேன். ரைஃபிள் ஷூட்டிங், சைக்கிளிங், ரிமோட் கன்ட்ரோல்டு ஹெலிகாப்டர்ஸ், போட்டோகிராபி என எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் நான் நடிகனாக மட்டுமே நீடிக்கவிரும்பவில்லை. எனக்குப்பிடித்த, ரசிகர்களுக்கும் பிடிக்கும்படியான கதைகளைத் தேர்ந்தெடுத்து அவ்வப்போது நடிப்பேன். அதற்காக ஒவ்வொரு தீபாவளிக்கும், ஒவ்வொரு பொங்கலுக்கும் ஒருபடம் என்றெல்லாம் என் மேல் நான் சுமையை ஏற்றிக்கொள்ளவிரும்பவில்லை'' என்று நண்பர்களிடம் மனம்திறந்து பேசியிருக்கிறார் அஜித்.

2010-ல் இருந்து 2020 வரை பத்து படங்களில் நடித்திருக்கிறார் அஜித். ஒரே வருடத்தில் இரண்டு படம், அடுத்து ஓர் ஆண்டு இடைவெளி என இடையிடையே பிரேக் எடுத்தே நடித்துவருகிறார். அதனால் 'வலிமை' படத்துக்கு அடுத்து சினிமாவில் ஒரு சின்ன பிரேக் அஜித் எடுப்பார் என்கிறார்கள்.

சினிமாவில் பிரபலமாகும் முன் பைக் ரேஸ்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த அஜித், சினிமாவுக்குள் நுழைந்தப்பிறகும் தொழில்முறையிலான கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொண்டார். 2010-ம் ஆண்டு சர்வதேச கார் ரேஸ் வீரர்களுடன் போட்டிப்போட்டு ஃபார்முலா-2 கார் ரேஸில் அஜித் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு