சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜுன்
பிரீமியம் ஸ்டோரி
News
அல்லு அர்ஜுன்

தெலுங்கு மட்டுமல்ல, எல்லா ஊர் சினிமாவுலயும் கமர்ஷியல் படங்களும் ரியாலிட்டி படங்களும் சரி சமமா வந்துகிட்டே இருக்கும். தெலுங்குலயும் ரியாலிட்டி படங்கள் வரும்.

அல்லு அர்ஜுன்... இந்தப் பெயருக்கு தென்னிந்திய சினிமாவில் அத்தனை கிரேஸ். அசாத்திய நடனம், அசத்தல் ஸ்டண்ட், அசால்ட் ஹியூமர் இவை மூன்றும்தான் அல்லு அர்ஜுனை ஸ்டைலிஷ் ஸ்டாராக அரியணை ஏற்றியிருக்கிறது. பிளாக்பஸ்டர்களைக் குறிவைத்து அடிக்கும் இவர், டோலிவுட் பாக்ஸ் ஆபீஸின் கில்லியாக இருந்தாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். பிறந்த ஊரில் அடிக்கும் முதல் ஷாட் சிக்ஸராகத்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர், ‘புஷ்பா’ படத்தின் மூலம் தமிழில் களம் காணவிருக்கிறார். அதற்காக ஹைதராபாத் சென்று அன்னபூர்ணா ஸ்டூடியோவில் டப்பிங்கில் இருந்தவரைச் சந்தித்தேன்.

‘`வணக்கம் எப்படி இருக்கீங்க? என்னைப் பேட்டி எடுக்க இவ்வளவு தூரம் வந்ததற்கு முதல்ல நன்றி’’ என்று தமிழில் நம்மை வரவேற்றார்.

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

``முதல் முறை உங்க படம் இந்தியா முழுக்க ரிலீஸாகுறது எவ்வளவு சந்தோஷம்?’’

‘`இதுக்கு முன்னாடி தெலுங்குப் படம், கர்நாடகாவுல ரொம்ப நல்லா ஓடும். மலையாளத்துல டப் பண்ணி வெளியாகும், இந்தி டப்பிங் தியேட்டர்ல வராது, டி.வி-யில் வரும். முதல்முறையா எல்லா மொழியிலயும் ஒரே சமயத்துல தியேட்டர்ல வெளியாகுறது ரொம்ப சந்தோஷம். எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்புறேன். இந்தப் படம் இந்தியில எப்படி ஓடும்னு தெரியாது. எனக்கு பர்சனலா இந்தப் படத்தைத் தமிழ்நாட்டு மக்கள் ரசிக்கணும்ங்கிறதுதான் ஆசை. பிறந்து வளர்ந்த ஊர்ல படம் ஹிட்டாகிடுச்சுனா அது வேற மாதிரியான உணர்வுதான். ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன்.’’

``12 வருடங்களுக்குப் பிறகு, நீங்க - இயக்குநர் சுகுமார் - இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இணைஞ்சிருக்கீங்க. எவ்வளவு நாளா பிளான் பண்ணுனீங்க?’’

‘`ஆமா. எங்க காம்பினேஷன்ல ‘ஆர்யா 2’ வெளியாகி 12 வருடங்களாகிடுச்சு. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு. இந்த 10 வருஷத்துல நானும் சுகுமார் சாரும் எப்போ பேசினாலும் ‘நீயும் நானும் சேர்ந்தா ஒரு கல்ட் பிலிம்தான் பண்ணணும். ரெகுலர் ஹிட் நமக்கு வேண்டாம். அது ஒரு மேஜிக்கா இருக்கணும்’னு சொல்லுவார். அப்படியான நோக்கத்துல இந்தக் கதை அமைஞ்சது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே ஆரம்பிச்சிட்டோம். நிச்சயமா இந்தப் படத்துல புதுமையான விஷயம் இருக்கு. தேவி ஸ்ரீபிரசாத்துடன் எனக்கு இது எட்டாவது படம். ‘புஷ்பா’ படத்துல பாடல்கள் எல்லாம் சூப்பரா வந்திருக்கு.’’

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

`` ‘புஷ்பா’ என்ன களம்? உங்களை நாங்க எப்படிப் பார்க்கலாம்?’’

‘`செம்மரக் கடத்தல்தான் களம். அது பெரிய மாஃபியா. தமிழ்நாடு - ஆந்திரா பார்டர்ல நடக்கிற கதை. இந்தப் பின்னணியில கூலியா வேலைக்குச் சேர்ந்த ஒருத்தனுடைய பயணம்தான் படம். ஒரு படம்னுதான் ஆரம்பிச்சோம். ஆனா, எடுக்க எடுக்க நிறைய விஷயங்கள் சேர்ந்திடுச்சு. அதனால, ரெண்டு பார்ட்டா பண்ணலாம்னு முடிவெடுத்துட்டோம். இதுல என்னை ரொம்ப மாஸா பார்ப்பீங்க. இப்போ வரை நான் பண்ணின எல்லா கேரக்டர்களும் ரொம்ப கீழே இறங்காமல் பண்ணியிருக்கேன். மிடில் கிளாஸ் பையனா இருந்தாலும் கொஞ்சம் ஸ்டைலாதான் இருக்கும். இதுல முழுக்க மாஸ்தான். டெரிஃபிக் ஆக்டர் பகத் பாசில் இருக்கார். அந்த கேரக்டர்ல நடிக்க பெரிய இமேஜ் இருக்கிற நடிகர் வேணும். கேரளாவுல பகத் எப்படின்னு தெரியும். என் மேலயும் சுகுமார் சார் மேலயும் இருந்த அன்புல வந்து நடிச்சுக்கொடுத்தார்.’’

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

``சென்னை டைரீஸ்?’’

“பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையிலதான். ஒரு மனுஷன் 18 வருஷமா ஒரு ஊர்ல இருந்தா, அந்த ஊரை அந்த மனுஷன்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. சினிமா மட்டுமல்ல, என் பர்சனல் விஷயங்களிலும் தமிழின் தாக்கம் இருக்கு. நிறைய பேர் அதைச் சொல்லிருக்காங்க. நானும் உணர்ந்திருக்கேன். சென்னையில ரெண்டு வீட்டுல இருந்தோம். ரெண்டுமே தி.நகர் ஏரியாதான். எட்டாவது வரைக்கும் பத்ம சேஷாத்ரி, ஒன்பதாவது, பத்தாவது ஏ.எம்.எம், +1, +2 செயின்ட் பேட்ரிக்ஸ்ல படிச்சேன். கபடி டீம்ல இருந்தேன். எப்போவும் நான் படிக்கிற ஸ்கூல் சார்பா எல்லா கல்சுரல்ஸ்லயும் கலந்துக்குவேன். எல்லா ஞாயிற்றுக் கிழமைக்கும் தவறாம மெரினா போயிடுவோம். ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் பக்கத்துல இருக்கிற உட்லேண்ட்ஸ் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவோம். பொன்னான நாள்கள் அவை.’’

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

``நான்காவது தலைமுறையா உங்க பொண்ணை ‘சகுந்தலம்’ படத்துல நடிக்க வெச்சிருக்கீங்க. எப்படி நடிச்சாங்க?’’

‘`குணசேகர் சார் எனக்கு நல்ல பழக்கம். அவர் இயக்கத்துல நான் ரெண்டு படம் பண்ணியிருக்கேன். சார் என்கிட்ட ‘பாப்பாவுக்கு ஒரு சின்ன ரோல் இருக்கு. 5 நாள் இருக்கும் சார். கேட்டுட்டுச் சொல்லுங்க’ன்னு சொன்னார். கேட்டேன். க்யூட்டா இருந்தது. ‘சின்ன வயசுல ஒருமுறை அவளை நடிக்க வைக்கலாம். ஞாபகார்த்தமா இருக்கும்’னு ஏற்கெனவே நினைச்சிருந்தேன். அந்தச் சமயத்துல குணசேகர் சார் சொன்னதும் பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன். நானும் ஸ்பாட்டுக்குப் போயிருந்தேன். நல்லா பண்ணியிருக்கா.”

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

``ஒரு படம் நீங்க கமிட்டாகிட்டா, ஹேர் ஸ்டைலிஸ்ட் கூட மட்டும் நிறைய மீட்டிங் நடக்குமாமே!’’

‘`ஹேர் ஸ்டைல்ல நிறைய வொர்க் பண்ணுவேன். அது எனக்குப் பிடிக்கும். என்னுடைய எந்தப் படமா இருந்தாலும் அதை ஃப்ரீஸ் பண்ணாம க்ளோஸ் அப் ஷாட்டை வெச்சு எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அது எந்தப் படம்னு சொல்லத் தெரியணும். என் டார்கெட் அது. அதனாலதான் அதிக கவனமா இருப்பேன். ஹீரோங்கிறது ஒருத்தர் கிடையாது. அவனுக்குப் பின்னாடி நிறைய பேர் இருக்காங்க.’’

``உங்களுடைய ‘ஆஹா’ ஓ.டி.டி தளம் அறிமுகமாகி ஒரு வருடம் நிறைவடைஞ்சிருக்கு. எப்படிப் போய்க்கிட்டிருக்கு?’’

‘`நாங்க ஆரம்பிக்கிற சமயத்துல இந்த பிசினஸை எப்படிப் பண்ணணும்னு ஐடியா இல்லை. ஒரு மொழிக்கான ஓ.டி.டி தளமா இதுவரை எதுவும் வரலை. எப்படி பண்ணணும், என்ன ஃபார்மெட்னு எதுவும் தெரியாது. மத்த பிசினஸ் எல்லாம் ஆரம்பிக்கும்போது, முன்னாடி நிறைய ரெஃபரென்ஸ் இருக்கும். எங்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. சரி, முதல்ல இறங்கிடலாம்னு தைரியமா ஒரு முடிவை எடுத்தோம். 300 கோடி வெச்சுக்கிட்டு பெரிய ரிஸ்க் எடுத்தோம். ஆனா, நாங்க நினைச்சதைவிட பிசினஸ் ரொம்ப நல்லா போய்க்கிட்டிருக்கு. இன்னும் நிறைய பண்ணணும்.’’

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

``ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மைக்கேல் ஜாக்சன்... இவங்க நாலு பேருடைய தீவிரமான ரசிகன்னு கேள்விப்பட்டோம். இவங்ககிட்ட நீங்க கேட்கணும்னு நினைக்கிற கேள்வி என்ன?’’

‘` ‘உங்ககிட்ட ஒரு மேஜிக் இருக்கு சார். நீங்க ஸ்கிரீன்ல இல்லைன்னாலும் இருப்பீங்க. என்ன சார் அந்த மேஜிக்’னு ரஜினி சார்கிட்ட கேட்பேன். ‘எப்படி சார் இதெல்லாம் பண்ணுனீங்க?’னு கமல் சார்கிட்ட கேட்பேன். இப்போ நிறைய டெக்னாலஜி வந்திடுச்சு. ஆனா, 30 வருஷத்துக்கு முன்னாடியே இந்தியாவுல இல்லாத விஷயங்களைத் தேடிக் கண்டுபிடிச்சு, அவங்களை இங்க கூட்டிட்டு வந்து நடத்திக் காட்டியிருக்கார். அசாத்திய மனிதர். ஒன் மேன் ஷோ அவர். அந்த விஷயத்துல எந்தவொரு நடிகராலும் கமல் சாரை நெருங்கமுடியாது. ‘எந்த மாதிரியான சூழலா இருந்தாலும் எப்படி சார் எப்போவும் சந்தோஷமா சிரிச்ச முகத்துடனே இருக்கீங்க?’ன்னு லால் சார்கிட்ட கேட்பேன். ‘இந்த லிரிக்ஸ், பீட் இதெல்லாத்துக்கும் எங்கிருந்து உங்களுக்கு ஐடியா கிடைக்குது?’ன்னு மைக்கேல் ஜாக்சன்கிட்ட கேட்பேன்.’’

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

``இந்தப் படத்துல இருந்து ஸ்டைலிஷ் ஸ்டார், ஐகான் ஸ்டாரா மாறியிருக்கீங்க. இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?’’

‘‘சுகுமார் சார்தான் மாத்திட்டார். ‘நீ ஸ்டைலிஷ் ஸ்டார் இமேஜ்ல இருந்து வேறொரு இமேஜுக்குப் போகணும். ஸ்டைலிஷ் ஸ்டார்னு வெச்சுக்கிட்டா, அதுக்குள்ளேயே இருக்கிற மாதிரி இருக்கும். அந்த இமேஜ்ல இருந்து வெளியே வந்தால்தான் எல்லாமே பண்ண முடியும். அதனால, உன் அடைமொழியை மாத்தப்போறேன்’னு படம் ஆரம்பிக்கும்போதே சொல்லிட்டார். என்ன வைக்கலாம்னு யோசிச்சு, ‘நீ எது பண்ணினாலும் ஐகானிகா இருக்கும். அதனால, ‘ஐகான் ஸ்டார்’னு வெச்சிட்டார். எனக்குப் பிடிச்சிருந்தது.’’

``படம் ரிலீஸாகுற நாள் உங்க மனநிலை எப்படியிருக்கும்?’’

‘‘அந்த ஒரு நாள் மட்டுமல்ல, ரெண்டு, மூணு நாளாகவே நிறைய யோசனையும் பதற்றமும் இருக்கும். அந்த நாள்கள்ல என்கூட வீட்ல யாரும் பேசமாட்டாங்க. டிரைவிங் பண்ண மாட்டேன். ஒரே யோசனைதான். நடக்கிறதுதான் நடக்கும்னு தெரியும். இருந்தாலும் அந்தச் சமயத்துல நிச்சயம் டென்ஷன் வந்திடும். நாம எவ்வளவு நம்பிக்கையா, பாசிட்டிவா இருந்தாலும் ஒரு 10% நாம நினைக்கிறது தவறாகவும் வாய்ப்பிருக்கு.’’

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

``உங்க மொபைல் நம்பர், கார் நம்பர் எல்லாம் ‘666’ன்னுதான் முடியுமாமே! அப்படியென்ன ஈர்ப்பு?’’

‘‘அதுல ஈர்ப்பெல்லாம் ஒண்ணுமில்லை. கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி காருக்கு நம்பர் வாங்க ஆர்.டி.ஓ ஆபீஸுக்குப் போனேன். ஃபேன்சி நம்பர் கேட்டபோது, 666 தவிர, எந்த நம்பரும் இல்லை. ஏன் இதை யாரும் எடுக்கலைன்னு கேட்டா, ‘அது பேட் லக் சார், சைத்தான் நம்பர்னு யாரும் எடுக்கமாட்டாங்க சார்’னு சொன்னாங்க. ‘அப்போ எனக்கு அந்த நம்பரைக் கொடுங்க’ன்னு வாங்கிட்டு வந்தேன். காரணம், நம்பர்ல எதுவும் இல்லை. கடவுள் நம்பிக்கை இருந்தா, வேண்டிக்கோங்க, அவ்ளோதான். 666 வெச்சிருந்தாலும் ஒண்ணும் நடக்காது. நம்ம சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும். மத்ததெல்லாம் சும்மான்னு காட்டத்தான் அந்த நம்பரை வெச்சிருக்கேன்.’’

ரஜினி, கமல், மோகன்லாலிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்... மனம் திறக்கும் அல்லு அர்ஜுன்!

``டோலிவுட்னாலே மசாலா படங்கள்தான்னு இருந்த சூழல் மாறி, இப்போ நிறைய ரியாலிட்டி படங்கள் வருது. இந்த மாற்றத்தை ஒரு முன்னணி ஹீரோவா எப்படிப் பார்க்குறீங்க?’’

‘‘ரொம்ப பெருமையா பார்க்கிறேன். தெலுங்கு மட்டுமல்ல, எல்லா ஊர் சினிமாவுலயும் கமர்ஷியல் படங்களும் ரியாலிட்டி படங்களும் சரி சமமா வந்துகிட்டே இருக்கும். தெலுங்குலயும் ரியாலிட்டி படங்கள் வரும். ஆனா, குறைவுதான். இப்போ கடந்த ஆறேழு வருடங்களா நீங்க சொன்ன அந்த மாற்றம் நடந்திருக்கு. ரொம்ப முக்கியமான மாற்றம் அது. ஓ.டி.டி படங்கள், வெப் சீரிஸ்னு களம் பெருசானவுடன் இளமையான திறமையானவங்க நிறைய பேர் உள்ள வர்றாங்க. முன்பை விட இப்போ நிறைய பெண்கள் சினிமாவுக்குள்ள வந்திருக்காங்க. ரொம்ப அழகான காலமா சினிமா மாறிக்கிட்டிருக்கு. தியேட்டரால ஓ.டி.டி தளத்தையோ ஓ.டி.டியால தியேட்டரையோ அழிக்க முடியாது. இனி வரும் காலங்கள்ல ரெண்டும் சரி சமமா போட்டி போட்டுக்கிட்டு நல்ல நல்ல படைப்புகளை மக்களுக்குக் கொடுக்கும்.’’