Published:Updated:

" 'காதல்'ல பரத்தைத் தவிர, எல்லோரையும் தேடிக் கண்டுபிடிச்சேன்!" - 'பசங்க' சிவக்குமார்

தாட்சாயணி
'பசங்க' சிவக்குமார்
'பசங்க' சிவக்குமார்

உதவி இயக்குநராகவும், நடிகராகவும் இருப்பவர், 'பசங்க' சிவக்குமார். தனது அனுபவங்கள், விரைவில் இயக்குநராக அறிமுகமாகவிருப்பது. எனப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

"உதவி இயக்குநர் டூ நடிகர் ஆனது எப்படி?"

"முதன்முதலா நான் பாக்யராஜ் சார்கிட்டதான் உதவி இயக்குநரா சேர முயற்சி செய்தேன். ஆனா, நான் போனப்போ அங்கே எனக்கு வேலை இல்லை. அதனால, கொஞ்சநாள் ‘பாக்யா’ பத்திரிகையில வேலைபார்க்கச் சொன்னாங்க. அந்தசமயம் சாரோட ‘ஞானப்பழம்’ படம் ஆரம்பமாக இருந்துச்சு. அந்தப் படத்துல ரேகாவோட கணவரா வேற ஒருத்தர் நடிக்கிறதா இருந்தது. கடைசி நேரத்துல அவரால நடிக்க முடியாமபோகவே, என்னை அந்த ரோல்ல நடிக்கச்சொல்லி டைரக்டர் கேட்டாரு. ‘சார் நான் உதவி இயக்குநரா வேலை பார்க்கலாம்னுதான் வந்தேன். என்னை அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டா, நடிக்கிறேன்'னு சொன்னேன். அவரும் ஓகே சொல்லி சேர்த்துக்கிட்டாரு. இப்படி முதல்முறையா நடிக்கும்போதே, ரேகாங்கிற பெரிய ஹீரோயினுக்கு ஜோடியா வாய்ப்பு அமைஞ்சது. அதுக்குப் பிறகு, 'வேட்டிய மடிச்சுக்கட்டு' படத்திலும் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். பிறகு, நான் இணை இயக்குநரா வொர்க் பண்ண ‘காதல்’ படத்துல க்ளைமாக்ஸ்ல வர்ற சந்தியா கணவரா நடிச்சேன். இப்படிச் சின்னச் சின்ன வேடங்கள்ல நடிச்சிருந்தாலும், ‘பசங்க’ படம்தான் எனக்குப் பெரிய அடையாளத்தைத் தந்தது. அதுக்குப் பிறகு நடிகனா எனக்குப் பல வாய்ப்புகள் வரத்தொடங்கினாலும், இன்னமும் நான் இணை இயக்குநரா வேலை பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். பாலா சாரோட 'தாரை தப்பட்டை', செழியன் சாரோட ‘டூலெட்’ படம்... சமீபத்துல நான் இணை இயக்குநரா வேலை பார்த்த படங்கள் இவை."

'பசங்க' சிவக்குமார்
'பசங்க' சிவக்குமார்

" 'காதல்’ படத்துல ஹீரோயின் சந்தியா, 'ஒத்தக்கை' சித்தப்பான்னு பரபரப்பா பேசப்பட்ட ஆர்ட்டிஸ்ட் எல்லோருமே உங்க கண்டுபிடிப்புகள்னு கேள்விப்பட்டோமே?"

"நான் ‘பாக்யா’ல வேலை பார்த்தப்போ, இயக்குநர் லிங்குசாமி பாக்யராஜ் சார்கிட்ட சேர வாய்ப்புத் தேடி வந்துக்கிட்டுருப்பார். அப்போ அவரு எனக்குப் பழக்கம். இடையில என் குடும்பச் சூழ்நிலை காரணமா சில வருடங்கள் பத்திரிகையில வேலை பார்க்கப்போயிட்டேன். சினிமா ஆசை விடாமல் துரத்தவே, மீண்டும் சினிமாவுக்கு வந்தேன். அப்போ, லிங்குசாமி பெரிய டைரக்டரா இருந்தாரு. அவரு மூலமாத்தான் பாலாஜி சக்திவேல் சாரோட ‘காதல்’ படத்துல வேலை செய்ற வாய்ப்பு கிடைச்சது. நான் சேர்ந்ததும் அவரு எனக்குக் கொடுத்த முதல் வேலை, ‘என்ன செய்வியோ, ஏது செய்வியோ தெரியாது. பத்தாவது படிக்கிற வயசுல எனக்கு ஒரு ஹீரோயின் வேணும். ஒவ்வொரு ஸ்கூல் வாசலிலும் போய் நில்லு, ஹீரோயினைக் கண்டுபிடிச்சுக் கூட்டிக்கிட்டு வா’னு சொல்லிட்டாரு. ஈவ்டீசிங் பிரச்னை ரொம்ப அதிகமா இருந்த சமயம் அது. அதனால, ஸ்கூல் ஸ்கூலா போகவேண்டாம்னு முடிவு பண்ணி, நான் வேற ஒரு ஐடியா பண்ணேன். சினிமா வாய்ப்புத் தேடி ஆள்கள் நடமாடுற வடபழனி ஏரியாவுல உள்ள பியூட்டி பார்லர்கள் ஒண்ணுவிடாம படையெடுத்தேன். அங்கே வர்ற நடிப்பு ஆசை உள்ள பெண்களைத் தேர்ந்தெடுக்கலாம்னு ஐடியா. ஆனா, எதிர்பாராதவிதமா, ஒரு பியூட்டி பார்லரோட ஓனர் மகளுக்கே நடிப்பு ஆசை இருக்குனு எனக்குத் தெரியவந்தது. அந்தப் பொண்ணுதான், சந்தியா. அதேமாதிரி ‘ஒத்தக்கை சித்தப்பா’ கேரக்டருக்காக எங்கெங்கேயோ தேடியும் சரியான ஆப்ஷன் கிடைக்கல. கடைசியா மாற்றுத் திறனாளிகள் சங்கத்துல விசாரிச்சப்போ, கிடைச்சவருதான், அவர். அந்தப் படத்துல ஹீரோ பரத்தைத் தவிர, மீதி எல்லோருமே இப்படித் தேடித் தேடி கண்டுபிடிக்கப்பட்டவங்கதான்."

'பசங்க' சிவக்குமார்
'பசங்க' சிவக்குமார்

"சிவக்குமார், ‘பசங்க’ சிவக்குமார் ஆனது எப்படி?"

"நான், 'வழக்கு எண் 18/9’ படத்துல வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். திடீர்னு பாண்டிராஜ்கிட்டயிருந்து அழைப்பு. என்னை நடிக்கக் கூப்பிட்டிருக்காருன்னு போய் பார்த்தப்போ தெரிஞ்சது. நான் எவ்வளவோ தயங்கியும் அவர் என்னை விடல. சரி வழக்கம்போல ஏதோ சின்னக் கேரக்டரா இருக்கும்னு நினைச்சா, பெரிய கேரக்டரா இருந்தது. படம் வந்துச்சு. பெரிய ஹிட். அதுக்கப்புறம் நான் ‘வழக்கு எண்’ ஸ்பாட்ல வேலை பார்த்துக்கிட்டிருக்கிறப்போ என்கூட வந்து எல்லோரும் போட்டோஸ்லாம் எடுத்துக்க ஆரம்பிச்சாங்க. ‘பசங்க’ படம் என் அடையாளமாகிப்போச்சு. அதுல இருந்து ‘பசங்க’ சிவக்குமார்னு என் பேரை வெச்சுக்கிட்டேன்."

"உதவி இயக்குநராகவும், நடிகராகவும் பல இயக்குநர்களைக் கடந்து வந்திருப்பீங்க. அவங்களைப் பற்றி சொல்லுங்க?"

"பாலா சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆரம்ப காலத்துல அவரோட ஏதாவது ஒரு படத்துல வேலை பார்த்துடமாட்டோமான்னு எவ்வளவோ முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா, அதுக்கான வாய்ப்பே அமையல. அவரோட 'தாரை தப்பட்டை'யில நான் இணை இயக்குநரா வேலை பார்க்கிற வாய்ப்பு அமைஞ்சது. அவர்கிட்ட பேசுறதுக்கே மற்ற உதவி இயக்குநர்கள் பயப்படுவாங்க. ஆனா, நான் அவர்கூட சண்டையே போட்டிருக்கேன். எதையுமே கச்சிதமா பண்ணனும்னு நினைக்கிறவர் அவர். அவர்கிட்ட நான் பார்த்து வியக்கிற விஷயம் அது தான் . செழியன் சாரோட நட்பு 'கல்லூரி' படத்துல இருந்து தொடருது. செழியன் சொல்லித்தான் எனக்குப் பாலா சார் படத்துல வேலை செய்ற வாய்ப்பும் அமைஞ்சது. செழியன்கூட ‘டூலெட்’ படத்துல வேலை பார்த்தேன். 25 லட்சத்துல அந்தப் படத்தை எடுத்தோம். இதுவரைக்கும் அந்தப் படம் 100-க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்கள்ல திரையிடப்பட்டிருக்கு, 35-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கு. அந்தப் படத்துல வேலை பார்த்தது மறக்க முடியாதது. தவிர, நான் நடிக்கப்போறதையுமே ஒரு சர்டிஃபிகேட் கோர்ஸுக்குப் போறமாதிரி நினைச்சுப்பேன். அட்லீ, விஜய் மில்டன் தொடங்கி புதுமுகங்கள் வரைக்கும் எத்தனையோ இயக்குநர்களோட படங்கள்ல நடிச்சிருக்கேன். எல்லோருக்குமே ஒரு ஸ்பெஷல் இருக்கும். தள்ளி நின்னு அதைப் பார்த்து, நானும் அவங்ககிட்டயிருந்து அதைக் கத்துப்பேன்."

"உங்ககிட்ட ஒரு யதார்த்தமான நடிப்பு இருக்கு. அது எப்படி கைவந்தது?"

"சின்ன வயசுல இருந்தே பல பேச்சுப்போட்டி, நாடகங்கள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கியிருக்கேன். அதனால, மேடை பயம் எனக்குக் கிடையாது. 'காதல்' படத்துல நான் நடிப்பு சொல்லிக் கொடுப்பேன். அந்த வொர்க்கிங் வீடியோவைப் பார்த்த ஷங்கர் சார், 'யார் இந்தப் பையன் நல்லா நடிக்கிறானே'ன்னு சொல்லியிருக்காராம். நடிப்பு எனக்கு இயல்பா வருது. அதுக்குக் காரணம் நான் பார்க்கிற ஒவ்வொரு ஆளையும் ஒரு கேரக்டராவே பார்க்கிறதுதான்."

"எப்போ உங்களை இயக்குநரா பார்க்கலாம்?"

" 'வழக்கு எண் 18/9' படத்துல நான் வேலை பார்த்தப்போ, சிவகார்த்திகேயன் ஆடிஷன்ல தேர்வாகி, ஹீரோக்கள் ஆப்ஷன்ல அவரும் ஒருத்தரா இருந்தார். ஆனா, கடைசி நேரத்துல அவரை அந்தப் படத்துல நடிக்கவைக்க முடியாம போச்சு. அப்புறம்தான் அவரு, ‘மெரினா’ படத்துல கமிட் ஆனார். 'ஒரு கதை சொல்லுங்க சார், படம் பண்ணுவோம்'னு சொல்லியிருந்தாரு. நானும் அவரை மனசுல வெச்சு ஒரு யதார்த்தமான கதையை ரெடி பண்ணியிருந்தேன். எல்லாம் கூடிவந்து, அவர்கிட்ட கதை சொல்லப்போற நேரத்துல கேன்சரால பாதிக்கப்பட்டிருந்த எங்க அப்பா இறந்துட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடம் நான் ஆக்டிவ்வா இல்லை. அந்த இடைவெளியில சிவகார்த்திகேயன் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'ல கமிட் ஆகி, அந்தப்படம் மூலமா பெரிய உயரத்துக்குப் போயிட்டாரு. அதுக்கப்புறமும் நான் அவரைப் ஃபாலோ பண்ணேன்.வேற வேற கமிட்மென்ட்ஸ் அவருக்கு இருந்ததுனால, பண்ண முடியாம போச்சு. சீக்கிரமே அவர்கிட்ட கதையைச் சொல்லி, அவரை இயக்குற முயற்சிகள்ல இருக்கேன். தவிர, 'டூலெட்' மாதிரியான ஒரு படம் பண்ணவும் தயாரா இருக்கேன்."

அடுத்த கட்டுரைக்கு