இயக்குநரும் நடிகருமான ஜி.எம்.குமார், உடல்நிலை பாதிப்பு காரணமாகச் சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பிரபு நடித்த 'அறுவடை நாள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். தொடர்ந்து 'பிக்பாக்கெட்', 'இரும்பு பூக்கள்', 'உருவம்' ஆகிய படங்களை இயக்கினார். பாரதிராஜாவின் 'கேப்டன் மகள்' படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கியவர், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். பாலாவின் 'அவன் இவன்', 'தாரை தப்பட்டை'யிலும் நடிகராகவும் பேசப்பட்டவர், சமீபத்தில் 'கர்ணன்' படத்திலும் நடித்திருந்தார். சினிமா தாண்டி எழுத்தாளராகவும் பெயரெடுத்தவர். சிறந்த படிப்பாளியான ஜி.எம்.குமாருக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் 65வது பிறந்தநாள் வந்தது. அவரது ஃபேஸ்புக்கில் அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.

'அறுவடை நாள்' சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு என்பதால் அன்று முதல் இன்றுவரை சிவாஜி குடும்பத்தினருக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார் ஜி.எம்.குமார்.
நேற்று அவருக்குத் திடீரென பிரெஷர் அதிகமாகிவிட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவரை பரிசோதித்த பின், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்றும் அவரது நட்பு வட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜி.எம்.குமார் மருத்துவமனையில் இருந்த தகவலைக் கேள்விப்பட்ட நடிகர் பிரபு, உடனே அந்த மருத்துவமனையின் உயர் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்திருக்கிறார்.
சமீபத்திய தகவலின்படி, அவர் விரைவில் ஐசியூவிலிருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் சொல்கிறார்கள்.