Published:Updated:

``விஜய்க்குப் பதில் கரண்; `படித்துறை பாண்டி'க்கு தனிப் படம்!" - கோவிந்த மூர்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'பிச்சைக்காரன்' படத்தில் கோவிந்த மூர்த்தி
'பிச்சைக்காரன்' படத்தில் கோவிந்த மூர்த்தி

டீமானிடைசேஷன் வருவதற்கு முன்பே, `பிச்சைக்காரன்’  படத்தில் அதுகுறித்த காட்சி ஒன்றில் நடித்து பிரபலமானவர், நடிகர் கோவிந்த மூர்த்தி. அவரைச் சந்தித்தபோது, அவர் பகிர்ந்த பல விஷயங்கள் ஆச்சர்யமாக இருந்தன.

டீமானிடைசேஷன் வருவதற்கு முன்பே, `பிச்சைக்காரன்’  படத்தில் அதுகுறித்த காட்சி ஒன்றில் நடித்துப் பிரபலமானவர்,  நடிகர் கோவிந்த மூர்த்தி. நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான  இவர்தான், `கருப்பசாமி குத்தகைதாரர்’, `வெடிகுண்டு முருகேசன்’ மற்றும் `பப்பாளி’ படங்களின் இயக்குநர். அவரைச் சந்தித்தபோது, பல ஆச்சர்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  

``எப்போ சினிமாவுக்குள்ள வந்தீங்க; யாரிடம் உதவி இயக்குநரா இருந்தீங்க..?"

இயக்குநர்கள் சசி மற்றும் எஸ்.எஸ்.ஸ்டேன்லி
இயக்குநர்கள் சசி மற்றும் எஸ்.எஸ்.ஸ்டேன்லி

``என் சொந்த ஊர் ராஜபாளையம். 1992, நவம்பர் 25-ம் தேதி நான் சென்னைக்கு வந்தேன். `சென்னையில வேலை கிடைச்சிருக்கு’னு பொய் சொல்லித்தான் நான் இங்க வந்தேன். என்னுடைய துணிகளை எல்லாம் எடுத்துட்டு வீட்டை விட்டு வெளியே போகும்போது, கரண்ட் கட் ஆகிடுச்சு. `பையன் சென்னையில வேலை பார்க்கக் கிளம்புறான். இந்த நேரம்பார்த்து பவர் கட் ஆகிடுச்சே... கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போப்பா’னு வீட்டுல சொன்னாங்க. `இதுல என்ன இருக்கு’னு நான் கேட்காம கிளம்பிட்டேன். நான் சென்னைக்கு வந்துகிட்டிருந்த பஸ், திருச்சியில ப்ரேக்-டவுன் ஆச்சு. வேற பஸ் மாறி வந்துட்டிருந்தேன். அது, விழுப்புரத்துல ப்ரேக்-டவுன். அடுத்த பஸ்ஸுக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ணி ஏறி, ஒரு வழியா மதியம் 2 மணிக்கு சென்னை வந்தேன். பொதுவா  ராஜபாளையம்ல இருந்து சென்னைக்கு பஸ்ல வந்தா காலையில 8 மணிக்குள்ள வந்துடலாம். ஆனா, நான் மதியம் 2 மணிக்கு வந்து சென்னையில் இறங்குனப்போ, `நமக்கு எதுவுமே ஈசியா கிடைச்சிடாது. அதுக்காக நாம ரொம்பவே கஷ்டப்படணும். அதுக்கான அறிகுறிதான் இது’னு தோணுச்சு.

அப்பறம், `லவ் பேர்ட்ஸ்’ சீரியல்ல வேலைபார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் பல சீரியல்கள்ல வேலைபார்த்தேன். இந்த சமயத்துலதான், இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி சார் பழக்கமானார். அவர்தான் என்னை இயக்குநர் சசி சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்த்துவிட்டார். `சொல்லாமலே’ படத்துல ஆரம்பிச்சு சசி சாரோடு நிறைய படங்கள்ல வேலைபார்த்தேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கருப்பசாமி குத்தகைதாரர்’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது..?

கோவிந்த மூர்த்தி
கோவிந்த மூர்த்தி

``உதவி இயக்குநரா இருந்துட்டு, இயக்குநராகணும்னு விஜய் சாருக்கு ஒரு கதை ரெடி பண்ணினேன். `பரட்ட’னு அதுக்கு டைட்டிலும் வெச்சிருந்தேன். விஜய் சாருக்கு இந்த கதையைச் சொல்லி ஓகே பண்ணிடணும்னு முயற்சி பண்ணிட்டிருந்தேன். அந்தச் சமயத்துல, `கரண் சாரோட கம்பெனியில கதை கேட்குறாங்க’ன்னு எனக்கு ஒரு தகவல் வந்தது. சின்னப் பசங்களை வெச்சு பண்ற மாதிரி என்கிட்ட `கடலை’னு ஒரு கதை இருந்துச்சு. அதைப் போய் சொன்னேன். `கதை நல்லா இருக்கு. கரண் சாரை ஹீரோவா வெச்சு பண்ற மாதிரி கதை இருக்கா’னு கேட்டாங்க. `என்கிட்ட இல்லைங்க. நண்பர்கள்கிட்ட இருக்கும். அவங்களை வரச் சொல்றேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். நானும், என் நண்பர்கள்கிட்ட கேட்டுப் பார்த்தேன். அப்போ டைரக்டர் பாண்டிராஜ், `பாஸ் உங்கிட்டதான் ஒரு கமர்ஷியல் கதை இருக்கே, அதைச் சொல்லலாம்ல’னு சொன்னார். அதை நான் விஜய் சாருக்காக வெச்சிருக்கேன்னு சொன்னேன். ஒரு கட்டத்துல வேற எந்தக் கதையும் செட்டாகலை. எனக்கும் உடனடியா ஒரு படம் இயக்கணும்கிற கட்டாயம் வந்தப்போ, விஜய் சாருக்கு வெச்சிருந்த கதையை கரண் சாருக்காக சில விஷயங்களை மட்டும் மாத்திச் சொன்னேன். அவங்களுக்கு கதை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. உடனே ஷூட்டிங் கிளம்பிட்டோம்.’’

`கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் வடிவேலுவின் காமெடி பயங்கர ஹிட்; அந்த அனுபவத்தைச் சொல்லுங்க..?

``சிம்புதேவன் இயக்கின `இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்துல நான் வொர்க் பண்ணேன். அப்போ, வடிவேலு சார் நல்ல பழக்கமானார். ஒரு நாள் பேசிட்டிருக்கும்போது, `இந்தப் படத்துக்கு அப்பறம், `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’னு ஒரு படம் பண்றேன். அதுவும் மெயின் ரோல்தான். அதேமாதிரி உங்ககிட்ட ஏதாவது கதை இருந்தாலும் சொல்லுங்க மூர்த்தி’னு சொன்னார். நானும் `படித்துறை பாண்டி’னு ஒரு கதையை ரெடி பண்ணி, அவர்கிட்ட சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பெரிய பட்ஜெட்டா இருந்ததால, உடனே பண்ண முடியாலை. அதுக்கிடையில நான், `கருப்பசாமி குத்தகைதாரர்’ல கமிட்டானதால, இந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு அவரை கமிட் பண்ணிட்டேன். கரண், சைக்கிள் ஸ்டாண்டை குத்தகைக்கு எடுத்திருப்பார். அதே மாதிரி பாத்ரூமை குத்தகைக்கு எடுத்திருக்கிற ஒரு கேரக்டர்தான் வடிவேலு சாருக்கு சொல்லி, ஓகே பண்ணியிருந்தேன்.

``அந்த ஜீவனை என்னோட காமெடி காப்பாத்தினதுதான் வாழ்நாள் சாதனை!" - வடிவேலு #VikatanVintage

அவருக்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்போற ரெண்டு நாளைக்கு முன்னாடி, ` 'இம்சை அரசன்’ படத்துக்கு அப்பறம்தான் ஏ சென்டர் ஆடியன்ஸ் என் காமெடியைப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. இந்த நேரத்துல பாத்ரூம், டாய்லட்னு காமெடி பண்ண வேணாம் மூர்த்தி. வேற சீன்ஸ் எழுதுறீங்களா’னு கேட்டார். இன்னும் ரெண்டு நாள்ல ஷூட், நான் வேற அப்போ எமோஷனலான சீன்ஸ் எடுத்துட்டிருந்தேன். இந்த சமயத்துல புதுசா எழுத முடியாதுனு, ஏற்கெனவே அவர்கிட்ட சொன்ன `படித்துறை பாண்டி’ கதையில இருந்து, 10 சீனையும், அந்தக் கேரக்டரையும் தூக்கி இந்தப் படத்துல வெச்சுட்டேன். அதுவும் செமையா வொர்க் அவுட் ஆகிடுச்சு. இதே மாதிரிதான், `வெடிகுண்டு முருகேசன்’ படத்துலேயும் நடந்துச்சு. துக்க வீட்டுல பாட்டு பாடுற கேரக்டரைத்தான் முதல்ல சொல்லி ஓகே பண்ணியிருந்தேன். அப்பறம் அதுவும் வேணாம்னு சொன்னதால, `படித்துறை பாண்டி’ ஸ்கிரிப்ட்ல இருந்து இன்னும் 10 சீன்ஸ் எடுத்து இந்தப் படத்துல வெச்சுட்டேன். அந்த ஸ்கிரிப்ட்ல இன்னும் 40 சீன்ஸ் பாக்கி இருக்கு. அதை வெச்சு `படித்துறை பாண்டி’ படத்தைக் கண்டிப்பா எடுக்கணும். வடிவேலு சார் இப்போ படங்களில் நடிக்காம இருக்கார். அவர் சீக்கிரம் நடிக்க வரணும். அவரை வெச்சு நான் டைரக்ட் பண்ணணும்.’’ 

கரண், வடிவேலு
கரண், வடிவேலு

``இயக்குநரா இருந்த நீங்க எப்போ நடிகரானீங்க..?"

`` 'சொல்லாமலே’ படத்துல உதவி இயக்குநரா இருந்தப்பவே, நான் அந்தப் படத்துல நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல நடிக்க வேண்டிய ஒரு நடிகர் கடைசி நேரத்துல வர முடியாமப் போனதால, நான் நடிச்சேன். அதே மாதிரி, ஸ்டேன்லி சாரோட `ஏப்ரல் மாதத்தில்’, பாண்டிராஜ் இயக்கிய `மெரினா’னு சில படங்கள்ல சின்னச்சின்ன ரோல் நடிச்சேன். நடிக்கிறதுல எனக்கு ஆர்வம் கிடையாது. அதுனால, நண்பர்கள் படத்துல நடிக்கிறதோட சரி. ஒரு நாள் ஸ்டேன்லி சார் போன் பண்ணி, `சசியோட `பிச்சைக்காரன்’ படத்துல ஒரு கேரக்டர் இருக்கு. அதுல நீ நடிக்கணும். முடி, தாடிய வெட்ட வேணாம், டை அடிக்க வேணாம். நல்லா வளர விடு’னு சொன்னார். `சார்... நல்லா க்ளீன் ஷேவ் பண்ணிட்டுப் போய் கதை சொன்னாலே எந்த கம்பெனியிலும் ஓகே பண்ணமாட்றாங்க. இதுல நான் முடி, தாடியோட டை அடிக்காம போனா நல்லாவா இருக்கும்’னு சொன்னேன். அடுத்து, சசி சாரும் என்னைப் பார்த்து அதையே சொன்னார். சரி இவங்களுக்காக நடிக்கலாம்னு முடிவு பண்ணி, `பிச்சைக்காரன்’ படத்துல நடிச்சேன்.

பிச்சைக்காரன் படத்தில் கோவிந்த மூர்த்தி
பிச்சைக்காரன் படத்தில் கோவிந்த மூர்த்தி

`பிச்சைக்காரன்’ படம் ரிலீஸானப்போ கிடைச்ச வரவேற்பைவிட, டீமானிடைசேஷன் அப்போ கிடைச்ச வரவேற்புதான், என்னை அடுத்தடுத்து நடிக்கலாம்னு முடிவு எடுக்க வெச்சது. டீமானிடைசேஷன் அறிவிச்சதுல இருந்து பல போன் கால்ஸ் வர ஆரம்பிச்சது. பகல் முழுக்க இந்தியாக்குள்ள இருந்து போன் கால்ஸ் வரும். 10 மணிக்கு மேல வெளிநாட்டுல இருந்து போன் கால்ஸ் வரும். யார் யாரோ என் நம்பரை வாங்கிப் பேச ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து 3 நாள் இப்படி நடந்துச்சு. நாம நடிச்ச ஒரு சீனுக்கு இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கே... நடிகராகணும்னு பல பேர் காத்திட்டிருக்காங்க. நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சும் அதை சரியா யூஸ் பண்ணிக்காம இருக்கோமேனு எனக்கே யோசனை வந்ததுக்கு அப்பறம்தான், அடுத்தடுத்து நடிக்க ஆரம்பிச்சேன்.’’

Vikatan

`பிச்சைக்காரன்’ படத்துக்கு அப்பறம் நடிகரா பிஸியா இருக்கீங்க. மறுபடியும் எப்போ படம் இயக்குவீங்க..?"

``அடுத்த வருஷம் ஒரு படம் இயக்குவேன்னு நம்புறேன். கதை ரெடியா இருக்கு. இப்போலாம் ஹீரோ வேல்யூ உள்ள படங்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கு. அப்படி ஒரு ஹீரோவை கமிட் பண்ணி, என் அடுத்த படத்தை சீக்கிரம் ஆரம்பிப்பேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு