சினிமா
Published:Updated:

“விஜயகாந்துக்கு துரோகம் செய்தேனா?”

அருண்பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண்பாண்டியன்

விஜயகாந்த் சார் மாதிரி சினிமாவுல இனி யாரும் வரமுடியாது. படத்தோட தயாரிப்பாளர், சக நடிகர், சக மனுஷன்னு எல்லாரையும் அன்பும் அக்கறையுமா இருந்து பாத்துக்குவார்.

சினிமாவில் நாற்பதாண்டுகள் கொண்டாடுகிறார் அருண்பாண்டியன். நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விவசாயி எனப் பன்முகமாகப் புன்னகைப்பவர். ‘‘ஒரு பேட்டி பண்ணிக்கலாமா?’’ என அருண்பாண்டியனிடம் கேட்டால், ‘‘எனக்கெதுக்கப்பா... ஊர்ல ஹேப்பியா மாடு மேய்ச்சிட்டிருக்கேன்’’ என்கிறார் முகமெல்லாம் மலர்ந்து!

``பக்கா விவசாயி ஆகிட்டீங்கபோல..?’’

‘‘ரொம்ப வருஷமா விவசாயம் பண்ணிட்டிருக்கேன். நாளைக்கு யார் யார்கிட்ட அரை ஏக்கராவது நிலமிருக்குதோ அவங்கதான் சரியான உணவு சாப்பிடுவாங்கன்னு திடமா நம்புறேன். படங்கள் வாங்கி வெளியிடுறது போக, ஃபைனான்ஸ் பண்ணின படங்கள்... அது தொடர்பான வேலைகள் போக மீதி நேரம் ஏதாவது படங்கள் நடிச்சிட்டு ஊருக்குப் போயிடுறேன். நாட்டுமாடுகள் இருபதுக்கும் மேல வளர்க்கறேன். மாடு மேய்க்கறது ரொம்பப் பிடிச்ச வேலை. கோழிகள், ஆடுகள்னு எல்லாம் எங்க அப்பாவோடு சேர்ந்து நாங்களும் விவசாயம் பண்ணிட்டிருக்கோம்.”

“விஜயகாந்துக்கு துரோகம் செய்தேனா?”

``இப்ப நடிக்கற படங்கள்..?’’

‘‘கருணாஸின் ‘ஆதார்’, அதர்வாவின் ‘ட்ரிக்கர்.’ அதுல ‘ஆதார்’ கதையை ராம்நாத் பழனிகுமார் சொன்னதும் நெகிழ்ந்துட்டேன். ‘கரெக்ட்டா பண்ணிடுவியா?’ன்னு கேட்டேன். ஆனா, நினைச்சதைவிடத் திருப்தியா கொண்டு வந்திருக்கார். அதுல கூடுமானவரை நடிக்காமல் இயல்பும் யதார்த்தமுமா பண்ணியிருக்கேன். கான்ஸ்டபிள் கதாபாத்திரத்திற்கு நியாயம் பண்ணியிருக்கேன்னு நினைக்கறேன். ரிலீஸுக்கு முன்னாடி ‘பரியேறும் பெருமாள்’ படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஓவர்சீஸ் ரிலீஸ் நான் வாங்கினேன். என்னோட மத்த ஓவர்சீஸ் விநியோகஸ்தர்கள் அதை வெளியிட தயக்கம் காட்டினாங்க. ‘எல்லாச் செலவும் என்னுது. பண்ணுவோம்’னு சொல்லி ரிலீஸ் பண்ணினேன். லாபம் வரலைன்னாலும், முதலீடு பண்ணின காசு வந்திடுச்சு. ஒரு நல்ல படத்தை வாங்கி வெளியிட எப்போதும் நான் தயங்கினதில்ல. ஏன்னா தரமான படங்கள் தமிழ் சினிமாவில் ரொம்பவும் குறைவு. அப்படி ஒரு நல்ல படமா இப்ப ‘ஆதார்’ படத்தை நினைக்கறேன்.’’

``விஜயகாந்தை வச்சு நிறைய படங்கள் தயாரிச்சிருக்கீங்க. உங்களுக்கும் அவருக்குமான நட்பு உலகறியும். விஜயகாந்தின் இப்போதைய புகைப்படம் பார்த்ததும் என்ன தோணுச்சு..?’’

‘‘விஜயகாந்த் சார் மாதிரி சினிமாவுல இனி யாரும் வரமுடியாது. படத்தோட தயாரிப்பாளர், சக நடிகர், சக மனுஷன்னு எல்லாரையும் அன்பும் அக்கறையுமா இருந்து பாத்துக்குவார். நானும் அவர் கட்சியில இருந்து வெளியே வந்திருக்கேன். ஆனா, ஒருவாட்டிகூட அவரைப் பத்தித் தப்பா பேசினதில்ல. பேசவும் மாட்டேன். எனக்கு என் தொகுதி மக்களுக்கு என்ன செய்யணுமோ அதை நான் சாதிச்சிட்டேன். அதோட அரசியலுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டேன். விஜயகாந்த் சாரோட சமீபத்திய புகைப்படம் பார்த்ததும் வருத்தமாகத்தான் இருந்துச்சு. வயசுக்கேத்த மாற்றம் நடக்கறது இயல்பு. அதை நம்மால தடுக்க முடியாது.’’

“விஜயகாந்துக்கு துரோகம் செய்தேனா?”

``யூடியூப்ல உங்க பழைய பேட்டிகள்லகூட கமெண்ட்ஸ்ல ‘கேப்டனுக்கு அருண்பாண்டியன் துரோகம் பண்ணிட்டாரோ’ன்னுகூடப் பதிவிட்டிருக்காங்களே..?’’

‘‘பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க. நான் எப்படின்னு எனக்குத் தெரியும். என்கிட்ட பழகினவங்களுக்கு என்னைப் பத்தித் தெரியும். நிறையபேர் தே.மு.தி.க-வில் எம்.எல்.ஏ-வாக இருந்தவங்க விஜயகாந்த் சாரை விமர்சித்திருக்காங்க, ஆனா, அவங்கள எல்லாம் சொல்ல மாட்டாங்க. ஏன்னா, முகமறியாத அவங்களப் பத்திச் சொன்னால் அது வெளியே தெரியாது. ஆனா, என்னைப் பத்திச் சொன்னால் தான், மீடியாக்கள் கேட்பாங்கன்னு நினைச்சு சொல்வாங்க. அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல. அவருடைய மகன் சண்முகபாண்டியன் நடிச்ச ‘மதுர வீரன்’ படத்தின் ஓவர்சீஸை நான் வாங்கி ரிலீஸ் பண்ணினேன். அது அவங்களுக்கே தெரியாது. அவங்ககிட்ட அதைச் சொல்லவேண்டிய அவசியமும் இல்ல. இது விஜயகாந்த் சாருக்காகப் பண்ணணும்னு பண்ணினேன். இதை இப்ப சொல்றதுல தப்பில்ல.’’

``சினிமாவுல நாற்பதாவது வருஷம் கொண்டாடுறீங்க... எப்படி இருக்கு இந்தப் பயணம்?

‘‘நிறைவா இருக்கு. இத்தனை வருஷ அனுபவத்துல ஒரு படம் பார்த்தால், அறுபது சதவிகிதம் கணிச்சிடுவேன். மீதி பர்சன்ட் கணிக்கவே முடியாது. ‘சூதுகவ்வும்’ படம் பிசினஸ் ஷோ பார்க்கும் போது, ஒருத்தருக்கும் படம் பிடிக்கல. எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது. ஓவர்சீஸ் வாங்கினேன். அதோட உலகம் முழுவதும் அதோட ரைட்ஸையும் சேர்த்து வாங்கினேன். படம் ஹிட் ஆச்சு. இந்தியிலும் தெலுங்கிலும் அதோட ரைட்ஸை வித்துட்டேன். ‘சதுரங்க வேட்டை’, ‘பரியேறும்பெருமாள்’னு அப்படித்தான் பிடிச்சு வாங்கி வெளியிட்டேன். நான் இதுவரை 120 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல மூணுல ஒரு பங்கு படங்கள்தான் பார்த்திருக்கேன். அந்தப் பார்க்காத படங்கள் எல்லாம் பணத்துக்காக நடிச்சதா இருக்கும். இவ்வளவு ஏன், செல்லாமல்போன செக்கே 68 லட்ச ரூபாய்க்கு வச்சிருந்தேன்.’’