Published:Updated:

"பல வருடம் கழிச்சுப் பார்த்தேன்; அந்த செல்வராகவனா இவர்னு தோணுச்சு!" - பாலா சிங்

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருப்பவர், பாலா சிங். தற்போது, செல்வராகவன் இயக்கியிருக்கும் `என்.ஜி.கே' படத்தில் நடித்திருக்கிறார். தனது சினிமா அனுபவங்கள் குறித்தும், மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த கதையையும் சொல்கிறார்.

``செல்வராகவனுடன் என்னோட முதல் படம் `புதுப்பேட்டை'. இந்தப் படத்துக்கு முன்னாடி அவரோட ஒரு படத்துல நடிக்கிறதுக்காகக் கூப்பிட்டாங்க. ஆனா, ஏதோ காரணத்துனால அது நடக்கல. அப்புறம் சில மாதங்களுக்குப் பிறகு செல்வராகவன் சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு.

செல்வராகவன்
செல்வராகவன்

``உங்களைப் பற்றிய அறிமுகம்?"

``கன்னியகுமரி பக்கத்துல ஒரு சின்ன ஊர்ல பிறந்தவன் நான். எங்க ஊர் ஒரு பொட்டல் காடு. ஸ்கூலுக்கு தினமும் 10 கிலோ மீட்டர் நடந்துபோவேன். பிறகு, காலேஜுக்கும் நடந்தேன். படிக்கிறப்போவே நடிப்பு மீது ஆர்வம். காலேஜ் கல்சுரல் புரோகிராம்ல கலந்துக்குவேன். நிறைய வீதி நாடகங்களும் பண்ணியிருக்கேன். பிறகு, சென்னைக்கு வந்து ஞானி சாரோட நாடக் குழுவுல இருந்தேன். யூகிசேதுகிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அப்போதான் நாசர் சார் பழக்கமானர். `அவதாரம்' படத்துல எனக்கு வில்லன் கேரக்டர் கொடுத்தார். என் நடிப்பு எல்லோராலும் பேசப்பட்டது. பிறகு, என்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `என்.ஜி.கே' அனுபவம்?"

``இந்தப் படத்துல நடிக்கிறப்போ, `` `புதுப்பேட்டை'யில் தெரிஞ்ச பாலா இந்தப் படத்துல எந்த இடத்திலும் தெரியக் கூடாது, புதுசா தெரியணும்"னு சொன்னார், செல்வராகவன். அவர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ, அதை மட்டும் செஞ்சேன். அதைச் சரியா பண்ணாலே போதும். `` `புதுப்பேட்டை 2' மாதிரிதான் இந்தப் படம்"னு சொன்னார், அப்படித்தான் `என்.ஜி.கே' வந்திருக்கு. படத்துல என் கெட்டப் எம்.ஜி.ஆர் சாயல் இருக்கணும்னு செல்வராகவன் சொல்லியிருந்தார். அதனாலதான், அதேமாதிரி கண்ணாடி, தொப்பி எல்லாம் போட்டுக்கிட்டேன்."

`` `புதுப்பேட்டை' செல்வராகவனுக்கும் `என்.ஜி.கே' செல்வராகவனுக்கும் இடையே என்ன வித்தியாசம் உணர்ந்தீங்க?"

`` `புதுப்பேட்டை' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த செல்வராகவன் இப்போ இருக்கிறதைக் காட்டிலும் ரொம்பக் கடுமையா இருப்பார். இப்போ ரொம்ப ஷாஃப்ட்டா இருந்தார். அப்போ பார்த்த செல்வராகவனா இவர்னு தோணுச்சு. ஏன்னா, `புதுப்பேட்டை' ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப டெரரா இருப்பார். ஸ்பாட்ல சும்மா சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தா, கடுமையா கோபப்படுவார். எதுக்கும் காம்பரமைஸ் ஆகமாட்டார். இப்போ ஆளே மாறிட்டார்."

பாலா சிங்
பாலா சிங்

``சூர்யாவுடன் நடிச்ச அனுபவம்?" 

``சூர்யா அவர் அப்பா மாதிரி! சிவகுமார் சாரும் நானும் சேர்ந்து ஒரு நாடகத்துல நடிச்சிருக்கோம். அவர் எப்படி செட்ல இருப்பாரோ, அப்படியே இருக்கார் சூர்யா. அன்னியோன்யமா பழகுறார். சூர்யாகூட இது எனக்கு மூணாவது படம். செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்ல அதிகம் பேச நேரம் இருக்காது. வேலைதான் அதிகமா இருக்கும். அதனால ஷூட்டிங் ஸ்பாட்ல அதிகம் பேசிக்க முடியல." 

``மேடை நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கீங்க. சினிமா திருப்தியா இருக்கா?" 

``கண்டிப்பா. இந்தத் துறைக்கு விரும்பிதான் வந்தேன். விரும்பிப் பண்ற தொழில்ல 5 ரூபாய் கிடைச்சாலும் சந்தோஷம்தான். மேடை நாடகங்களை மக்கள் இப்போ ரசிக்கிறதில்லை. அந்த வருத்தம் இருக்கு." 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு