Published:Updated:

``எனக்குதான் முதல்ல `இளைய தளபதி' பட்டம் கொடுத்தாங்க... எப்போ, யார் தெரியுமா?'' - `பிக்பாஸ்' சரவணன்

`பிக்பாஸ்’ சரவணன்
`பிக்பாஸ்’ சரவணன்

``இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபீஸ்க்கே நானும் என்னுடைய அண்ணனும் நேர்ல போய்ச் சந்திச்சு, `எங்க டைட்டிலை ஏன் சார் பயன்படுத்தறீங்க?’னு கேட்டோம். அதுக்கு அவர் சொன்ன பதில்...

எப்போதோ நடந்த விஷயங்களை, `அது பழைய பஞ்சாயத்தென்றாலும் பரவாயில்லை’ எனக் கிளறியெடுத்து அடித்து விளையாடுவதுதான் சோஷியல் மீடியா பொழுதுபோக்கு.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன், முகநூலை வலம் வந்தபோது கண்ணில் பட்டது, `இளைய தளபதி’ சரவணன் என்னும் டைட்டில் கார்டின் ஸ்க்ரீன்ஷாட்டுடன் ஒரு போஸ்ட்.

``இளையதளபதி... சரவணனா..? என்னப்பா சொல்றீங்க'’ என இறங்கி படித்தால், முதன்முதலில் `இளையதளபதி’ பட்டம் நடிகர் `சித்தப்பூ’ சரவணனிடமே இருந்ததாகச் சொன்னது அந்த நிலைத் தகவல்.

தொடர்ந்து போஸ்ட்டுக்குள் புகுந்தால், அச்சிலேற்ற முடியாத வார்த்தைகள், வசவுகளில் ரசிகர்களின் வழக்கமான சண்டை.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

என்ன விவகாரம் என சரவணனிடமே கேட்டோம்.

``வருஷம் சரியா நினைவுல இல்லை. 90-களின் நடுவுல இருக்கும். சேலம் நாலு ரோடு ஜங்ஷன்ல ஒரு கூட்டம். நம்மூர்க்காரன் ஒருத்தன் சினிமாவுக்குப் போயிருக்கான்னு எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினாங்க. சேலம் தி.மு.க-வுல பெரிய ஆள் வீரபாண்டி ஆறுமுகம். அவர்தான் சிறப்பு விருந்தினர். ஆனா, நான் தி.மு.க கட்சியில இல்லை. எங்கப்பாவுக்கு அவர் நல்ல நெருக்கம்கிற முறையில கூட்டத்துக்குத் தலைமைதாங்க வந்திருந்தார்.

அந்த விழாவுலதான் `சேலத்துல தளபதி மாதிரி சுத்திக்கிட்டிருந்த தம்பி சரவணன் சினிமாவுக்குப் போயிருக்கார். சினிமாவுக்குன்னு போயாச்சுன்னா ஏதாவது பட்டம் வேண்டாமா? `தளபதி’ன்னே பட்டம் தந்துடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, சென்னையில ஏற்கெனவே ஒரு தளபதி (மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டாராம்) இருக்குறதால, இவருக்கு `இளைய தளபதி'ன்னு கொடுத்துடலாம்’னு முதன்முதலா அந்த வார்த்தையை உச்சரிச்சு எனக்கு அவர்தான் அந்தப் பட்டத்தைச் சூட்டிவிட்டார்.

இளையதளபதி சரவணன்
இளையதளபதி சரவணன்
நல்லதே நடக்கும் திரைப்படம்

அந்த நிகழ்வுக்குப் பிறகு, நான் நடிச்சு வெளியான படம் `நல்லதே நடக்கும்.’ எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய டைரக்டர் கே.சங்கர் சாருக்கு அது 100-வது படம். முதன்முதல்ல டைட்டில் கார்டுல `இளைய தளபதி’ சரவணன்னு போட்டாங்க. தொடர்ந்து `சுந்தரம் பிளஸ் 2’, அடுத்து நான் தயாரிச்ச சொந்தப் படம்னு வரிசையா அந்த டைட்டிலைப் பயன்படுத்திட்டு வந்தேன்.

நல்லாப் போயிட்டிருந்த நிலையிலதான், திடீர்னு எனக்குப் பட வாய்ப்புகள் குறையத் தொடங்குச்சு. இத்தனைக்கும் `ஹீரோவாதான் நடிப்பேன்’னு நான் அடமெல்லாம் பிடிக்கலை. `விஜயகாந்த் சாயல்ல இருக்கான்’னு மளமளன்னு வந்த வாய்ப்புகள் திடீர்னு எப்படிக் குறைஞ்சதுனு தெரியலை. இல்லை, நான்தான் சரியா வாய்ப்பைப் பயன்படுத்தலையான்னும் புரியலை.

எப்படியோ பட வாய்ப்புகள் குறைஞ்சதால இந்தப் பட்டத்தை நானும் அப்படியே மறந்துட்டேன். இந்தச் சூழல்லதான் திடீர்னு நடிகர் விஜய் ஹீரோவா நடிச்சு வெளியான ஒரு படத்துல அவருடைய பெயருக்கு முன்னாடி `இளைய தளபதி’ பட்டத்தைப் பார்த்தேன். பார்த்ததும் எனக்கு ஷாக். உடனே இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபீஸ்க்கே நானும் என்னுடைய அண்ணனும் நேர்ல போய்ச் சந்திச்சு, `எங்க டைட்டிலை ஏன் சார் பயன்படுத்தறீங்க’னு கேட்டோம்.

அதுக்கு அவர், `உங்களுக்குப் படம் வந்தா நீங்க போட்டுக்கங்க’ன்னு சொன்னார். அதேநேரம் அடுத்தடுத்த விஜய் படங்கள்ல `இளைய தளபதி’ன்னே போட்டுக்கிட்டு வந்தாங்க.

என்ன நினைச்சு அவர் சொன்னாரோ, எனக்கும் அதுக்குப் பிறகு படங்கள் அமையலை. அதனால நானும் அப்படியே ஒதுங்கிட்டேன். இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா, அன்னிக்கு வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில ஏற்கெனவே ஒரு தளபதி இருக்கார்னுதான் எனக்கு `இளைய தளபதி’ன்னு அடைமொழி தந்தார். ஆனா இப்ப விஜய்க்கு `தளபதி’னே டைட்டில் கார்டுல போடத் தொடங்கிட்டாங்க'' என்றார் சரவணன்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இந்த டைட்டில் கார்டு விவகாரம் குறித்துக் கேட்கலாமென தொடர்பு கொண்டபோது, ``அதைப்பத்தி நான் எதுவும் பேச விரும்பலை தம்பி. எதுவும் கேட்காதீங்க’' என மறுத்துவிட்டார்.

ஒவ்வொரு பட்டத்துக்கும் பின்னாடி பல பஞ்சாயத்துகள் இருக்கும்போல!

அடுத்த கட்டுரைக்கு