Published:Updated:

இதற்கு விதைபோட்டது யார்?- `டாக்டர்' பட்டம் வாங்கிய நடிகர் சார்லி சொல்லும் சுவாரஸ்ய அனுபவம்

``நான் பல தளங்கள்ல இயங்கக்கூடியவன்னு, என்னைப் பத்தி அவர்தான், வி.கே. ராமசாமிகிட்ட பெருமையா சொல்லியிருக்கார்.''

சார்லி
சார்லி

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் 12-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும் உலகத் திருக்குறள் மையத்தின் நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன், தமிழகத்தின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் கல்யாணசுந்தரம், நகைச்சுவை நடிகர் சார்லி ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இது குறித்து சார்லியிடம் பேசினேன். ``டாக்டர் பட்டம் வாங்கணும்ங்கறது என்னோட கனவோ, நோக்கமோ எல்லாம் கிடையாது. நடிகர் வி.கே. ராமசாமி என் மேல ரொம்ப பாசமா இருப்பார். நான் அவரை அப்பானுதான் கூப்பிடுவேன். எங்க ரெண்டு பேரோட சொந்த ஊருமே விருதுநகர்தான். இதையெல்லாம் தாண்டி அவர் என் மேல மதிப்பா இருக்க, நடிகர் நாகேஷ்தான் முக்கியக் காரணம். நான் பல தளங்கள்ல இயங்ககூடியவன்னு, என்னைப் பத்தி அவர்தான், வி.கே. ராமசாமிகிட்ட பெருமையா சொல்லியிருக்கார். ஒரு தொலைக்காட்சி இன்டர்வியூவுல வி.கே. ராமசாமியோட நானும் கலந்துக்கிட்டேன்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

அப்பதான் அவர் சொன்னார் ``நல்ல திறமை இருந்தும்கூட, நகைச்சுவை நடிகர்கள்ல நிறைய பேர், வெளியில தெரியாமலே போயிட்டாங்க. அவங்க எல்லாம் மிகப்பெரிய கலைஞர்கள். அவங்களைப் பத்தி நீ பதிவு செய்யணும்”னு எனக்குள்ள ஒரு உந்துதலை ஏற்படுத்தினார். தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற தலைப்புல ஆய்வுல இறங்கினேன். நகைச்சுவையில மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருந்த காளி N.ரத்னம், பசி நாராயணன், தூத்துக்குடி அசோகன், கோவில்பட்டி துரைபாண்டி, பெரிய கருப்ப தேவர்.. இதுமாதிரி இன்னும் பல நகைச்சுவை கலைஞர்களைப் பத்தியும், அவங்களோட பங்களிப்பை பத்தியும் பதிவு செஞ்சேன்.

நகைச்சுவை கலைஞர்கள் வெறும் நடிகர்களாக மட்டுமல்ல, படைப்பாளியாகவும் இருந்திருக்காங்க. நாகேஷ், வி.கே ராமசாமி, ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி.சேகர், எஸ்.எஸ். சந்திரன் போன்ற நகைச்சுவை நடிகர்கள் திரைப்படங்களையும் இயக்கியிருக்காங்க. திரைப்படங்களுக்கு நகைச்சுவை எழுதக்கூடிய A. வீரப்பா ஏழு தலைமுறைகளுக்கு பங்களிப்பு செலுத்தியிருக்கார். நகைச்சுவையில பல வகைகள் இருக்கு. உரையாடல் நகைச்சுவை, உடல்மொழி நகைச்சுவை, தொழில்நுட்ப நகைச்சுவை, அரசியல் நையாண்டி நகைச்சுவைனு இன்னும் சொல்லலாம். இதுமாதிரி என்னோட ஆய்வுகள் விரிவடைஞ்சிக்கிட்டே போச்சு.

சார்லி
சார்லி
சினிமாவுல பிஸியா இருந்தாலும்கூட, இதுக்காக நான் நிறைய உழைச்சிருக்கேன்
சார்லி

தொழில்முறை கலைஞராக உள்ள ஒருவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துல முழு நேர ஆய்வு மாணவராக சேர்க்கப்பட்டது நான் ஒருத்தராகதான் இருக்கும். அப்ப துணைவேந்தரா இருந்த திருமலை சார்தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். மற்ற பேராசிரியர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அவங்க எல்லாருக்கும் இந்த நேரத்துல நான் நன்றி தெரிவிச்சிக்கிறேன். இந்த முனைவர் பட்டத்தை நான் பெருமையா நினைக்குறேன். சினிமாவுல பிஸியா இருந்தாலும்கூட, இதுக்காக நான் நிறைய உழைச்சிருக்கேன்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் டாக்டர் சார்லி.

நகைச்சுவை கலைஞர்கள் வெறும் நடிகர்களாக மட்டுமல்ல, படைப்பாளியாகவும் இருந்திருக்காங்க

Vikatan