Published:Updated:

"காமெடியன் வடிவேலுதான்; ஆனா, எனக்கும் முக்கியத்துவம் கிடைச்சது!" - சார்லியின் `ப்ரண்ட்ஸ்' அனுபவம்

சார்லி
சார்லி

`ப்ரண்ட்ஸ்' படத்தில் இடம்பெற்ற நேசமணி கேரக்டர் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. வடிவேலு ஏற்று நடித்த இந்த கேரக்டரில், அவருக்குத் துணையாக நடிகர் சார்லி நடித்திருப்பார். அந்த அனுபவங்கள் குறித்துப் பேசுகிறார், சார்லி.

"'இதற்கு முன்பும் இதுமாதிரி யாரும் நடிக்கல; இனியும் நடிக்கப்போறதில்லை' என சித்திக் சார் படம் நடித்து முடித்த உடனே பாராட்டினார். நான் பெரும்பாலும் ஒரே டேக்கில்தான் நடிப்பேன். `ப்ரண்ட்ஸ்' படத்தில் நடிக்கும்போது கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்து முடித்திருந்தேன். 37 வருடங்களாக சினிமா துறையில் நடிச்சுக்கிட்டிருக்கேன். அந்தப் படத்தில் நடித்தது சந்தோஷமான விஷயம். எதெல்லாம் கஷ்டமென்று நினைப்பார்களோ, அதையெல்லாம் ஈஸியா பண்ணுவேன். `ராமகிருஷ்ணா' படத்தில் இல்லாத ஒரு கேரக்டரை இருப்பதுபோலச் செய்யணும். சூழ்நிலை ஒரு காமெடியனைத் தூக்கிப் பிடிக்கணும், சூழ்நிலை இல்லை என்றாலும் காமெடியனைத் தூக்கிப் பிடிக்கணும். இந்த இரண்டும் சேர்ந்த சரியான கலவைதான், `ப்ரண்ட்ஸ்' படம்.

சார்லி
சார்லி

இந்தப் படத்தில் நடித்தபோது விஜய், சூர்யா என இரண்டு பேரும் என் நடிப்பைப் பாராட்டினாங்க. நேசமணி கேரக்டர் மீம்மைத் தாண்டி பிரமாதமான மீம் எல்லாம் இருக்கு. `ப்ரண்ட்ஸ்' படத்தில் நான் பேசுற காமெடியை வைத்து இன்னும் மீம்ஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க. இதையெல்லாம் பார்க்கும்போது, சந்தோஷமா இருக்கு. லேட்டஸ்ட் விஷயங்களை காமெடிக் காட்சியோடு பொருத்திப் பார்ப்பதை நினைத்து, ஒரு காமெடியனாக நான் பெருமைப்படுறேன். `இது யாரு உங்க வொய்ஃபா'னு கேட்கிறதாகட்டும், `அவரு பிடிக்கல, அதை நான் பார்த்தேன்'னு சொல்ற இடமாகட்டும்... `ப்ரண்ட்ஸ்' படத்துல எல்லாமே ஆன் தி ஸ்பாட்ல வந்ததுதான்.

அதில், காமெடியன் வடிவேலு. ஆனால், படத்தின் முக்கியத்துவம் எனக்குத்தான் கிடைக்கும். அது ஏன்னு இப்போவரைக்கும் தெரியல. ஒரு காமெடியன்கூட நடித்த காமெடியனுக்கு முக்கியத்துவம் கிடைச்சிருக்கும். காமெடி என்பது ஒரு டீம் வொர்க். அதில் எல்லோருமே ஸ்கோர் பண்ணியிருப்போம். இந்தப் படத்தில், நினைவு மறந்துபோவது என் கேரக்டர். லாரல் ஹார்டி நடித்த படமொன்றில், ஸ்டான் லாரல் (Stan Laurel) நினைவு மறதியில் இருப்பார். அதை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான், கோபால் கேரக்டரில் நடிச்சேன்.

சார்லி
சார்லி

`கோவில்' படத்தில் வடிவேலு சிலம்பம் மாஸ்டரா இருப்பார், நான் டீ மாஸ்டரா நடித்திருப்பேன். `நான் கம்பு எடுத்துச் சுத்தினேன்னா, காத்து ஒரு பொட்டு உள்ளே வராது, மழைத்தண்ணி உள்ளே வராது. கல்லைத் தூக்கிப் போட்டீன்னா சின்னக் கல்லுகூட என்மேல படாதுன்னு வடிவேலு சொல்வார். `ஏன் மாஸ்டர் வீட்டுக்குள்ளே போய் சுத்துவீங்களா'னு கேட்டேன். ஸ்பாட்ல இதை யாருமே எதிர்பார்க்கல. எல்லோருமே சிரிச்சுட்டாங்க. அவருக்கு எப்படி ரெஸ்பான்ஸ் பண்றதுன்னு தெரியல. `வேண்டாம் சார்'னு வடிவேலு டைரக்டர்கிட்ட சொன்னதால, அந்த வசனம் படத்தில் வரல.

''எனக்கு வாரத்துல மூன்று நாள்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவாங்க.''
சார்லி
சார்லி
சார்லி

காமெடியன் என்பவன் எந்தக் கதவையும் நகைச்சுவையாகத் திறக்க முடியும். இப்படி காமெடிக்குள் போய் ரிசர்ச் பண்ணியதால்தான், கடந்த ஏழு ஆண்டுகால உழைப்பின் பயனாக நகைச்சுவையில், `தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை' என்கிற பெயரில் `பி.ஹெச்.டி பட்டத்தை கடந்த மாதம் வாங்கினேன்.'' என்றவர், தொடர்ந்தார்.

``வி.சேகர் சாரின் பல படத்தில் வடிவேலு சாருடன் வேலை பார்த்திருக்கிறேன். நான் ஆல்ரவுண்டர் என்பதால், `வெற்றிக்கொடி கட்டு', `மாநகரம்', `கிருமி', `வெள்ளைப் பூக்கள்' எனப் பல படங்களில் நடிச்சேன். மீம்ஸ் போடுற விஷயத்தை எப்போதுமே நான் வரவேற்பேன்.

சார்லி
சார்லி

எனக்கு வாரத்துக்கு மூன்று நாள்களுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவாங்க. `என் தலைவா நீ பிறந்த தினம்தான், நகைச்சுவை பிறந்தது. வாழ்க பல்லாண்டு'னு மீம் போடுவாங்க. மார்ச் 6-ம் தேதிதான் என் பிறந்தநாள்னு சொல்ல முடியாதே! நான் எதையுமே ஜாலியாக எடுத்துக்கக்கூடிய ஆள்." என்றார், சார்லி.

அடுத்த கட்டுரைக்கு