Published:Updated:

``என்னால நல்லவனா மட்டுமே இருக்க முடியாது!’’ - டேனியல் பாலாஜி லாஜிக்

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

`ஹீரோவா நடிக்கிறதைவிட, வில்லன் கேரக்டர்ல நடிக்கிறதுலதான் எனக்கு ஆர்வம் அதிகம். சைக்கோ, பொறுக்கின்னு நிறைய வித்தியாசமான கெட்டவனா நடிக்கலாம்.’

விஜய் நடித்த 'பிகில்' படத்தில் பல வில்லன்கள் இருந்தாலும், முதல் வில்லனாக அறிமுகமாகி க்ளைமாக்ஸ் வரைக்கும் வந்தவர், டேனியல் பாலாஜி. வெப் சீரிஸ் ஒன்றின் ஷூட்டிங்கில் இருந்தவரிடம், பிரேக் டைமில் பேசினோம்.

வெப் சீரிஸில் நடிக்கிறீங்க. என்ன ஸ்பெஷல்?

‘’பொறுக்கி, பொறம்போக்கு மாதிரி சுத்திக்கிட்டு இருக்கிற ஒருத்தனைப் பல அரசியல்வாதிகள், மடாதிபதிகள் சேர்ந்து சாமியாராக மாத்திடுறாங்க. அவனோட அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் எப்படி இருக்கும் என்பதுதான், இப்போ நான் நடிச்சிக்கிட்டிருக்கிற 'God Man' வெப் சீரிஸோட ஒன்லைன். ’நீங்கதான் பொறுக்கியா நடிக்கணும்’னு சொன்னாங்க. ஒன்லைன் ரொம்பப் பிடிச்சிருந்ததனால, ஓகே சொல்லிட்டேன். இப்போ வெப் சீரிஸோட ஷூட்டிங் போயிட்டிருக்கு. சீரியலிலிருந்து சினிமாவுக்கு வந்தேன். இப்போ சினிமாவில் இருந்துட்டு சீரிஸ் பண்றேன். அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கி பயணப்படுறது நல்ல அனுபவமா இருக்கு.’’

’பிகில்’ வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?

பிகில்
பிகில்

’’ஒருநாள், அட்லி அலுவலகத்துல இருந்து போன் வந்தது. அவரை நேரில் சந்திக்கப் போனேன். என்ன ரோல், எத்தனை நாள் கால்ஷீட்னு கேட்டேன். ’வில்லன் ரோல், ஷூட்டிங் 6 மாசம் இருக்கும்’னு சொன்னாங்க. இதை மட்டும் கேட்டுட்டு ஓகே சொல்லிட்டு வந்துட்டேன். ஏன்னா, நான் ஒரு படம் பண்ணும்போது இன்னொரு படம் பண்ண மாட்டேன். அதனால, எத்தனை நாள் வேணும்னு மட்டும் கேட்டுக்கிட்டேன். பிறகு, ஷூட்டிங் கிளம்புறதுக்கு ரெண்டுநாள் முன்னாடிதான் என்ன கதைனு கேட்டேன். என்னைப் பொறுத்தவரை, ’பிகில்’ சிங்கப் பெண்களைப் பற்றிய படம். அதில் நாங்க எல்லோரும் சப்போர்ட்டிங் ரோல் பண்ணியிருக்கோம். விஜய் சார்தான் சப்போர்ட்டிங் ரோல்ல முதல் ஆள். அவர் பண்ணின மூணு கெட்டப்ல எனக்கு ராயப்பன், பிகில் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுவும் ‘பிகிலே’ன்னு கத்துறது செமயா இருக்கும்.’’

’பிகில்’ படத்துல உங்களுக்கு வசனம் ரொம்பக் குறைவா இருந்துச்சு. இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் வரும்போது, உங்க மனநிலை எப்படி இருக்கும்?

’’பொதுவாகவே, எனக்கு அதிகமா வசனம் பேசுற மாதிரியான கேரக்டர் கிடைச்சாலே பிடிக்காது. எனக்கு ஏற்றமாதிரி ’பிகில்’ படத்துல வசனங்கள் குறைவு. அதிகமான ஆக்‌ஷன் காட்சிகள் இருந்ததால, ரொம்ப ஆர்வமா நடிச்சேன். பல ரோப் ஸ்டண்ட்ஸுக்கு ’டூப் வேணாம், நீங்களே பண்ணிடுங்க’ன்னு சொன்னாங்க. சின்னச்சின்ன அடிகள் விழுந்தாலும், இது புது அனுபவமா இருந்துச்சு. ஹீரோவா நடிக்கிறதைவிட, வில்லன் கேரக்டர்ல நடிக்கிறதுலதான் எனக்கு ஆர்வம் அதிகம். சைக்கோ, பொறுக்கின்னு நிறைய வித்தியாசமான கெட்டவனா நடிக்கலாம். ஆனா, ஹீரோவா நடிச்சா ஒரேவிதமா நல்லவனா மட்டும்தான் நடிக்க முடியும். அதனால, எனக்கு வில்லன் கேரக்டர்தான் பிடிச்சிருக்கு.’’

‘பிகில்’ படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்குன்னு தியேட்டருக்குப் போய் பார்த்தீங்களா?

’’ஆடியன்ஸ் எப்படி என்ஜாய் பண்றாங்கன்னு சில தியேட்டர்களுக்குப் போய் பார்த்தேன். ஆனா, இன்னும் தியேட்டரில் உட்கார்ந்து முழு படத்தையும் பார்க்கல. ஏன்னா, முதல் வாரம் முழுக்க ரசிகர்கள்தான் தியேட்டருக்கு வருவாங்க. அதுக்கப்பறம் பொறுமையா போய் படத்தைப் பார்க்கணும்.’’

’சித்தி’ சீரியல் மூலமாதான் நீங்க நடிகரா அறிமுகமானீங்க. இப்போ, ’சித்தி 2’ வரப்போகுது. அதில் நீங்க இருப்பீங்களா?

சித்தி - 2
சித்தி - 2

’’ ‘சித்தி’ சீரியலில் நடிச்ச எல்லோருமே ’சித்தி 2’ சீரியல்ல இருக்கணும்னு ஆடியன்ஸ் எதிர்பார்க்கிறாங்க. முதல் பாகத்திலேயே ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்கும் ’சித்தி’ கேரக்டர்தான் மெயினா இருக்கும். மத்த கேரக்டர்ஸ் எல்லாம் வந்து வந்து போகும். என் கேரக்டரும் அப்படித்தான். சைக்கோவா அறிமுகமாகி, அப்பறம் நல்லவனா திருந்திடுச்சு என் கேரக்டர். இதுக்கப்பறம் அந்த சீரியலில் என் கேரக்டருக்கு வேலை இல்லை. அதனால, நான் இருக்க மாட்டேன்.’’

அடுத்து?

’’இப்போ பண்ணிட்டு இருக்கிற வெப் சீரிஸ் முடிஞ்சதும், ஒரு சைக்கோ த்ரில்லர் படம் பண்றேன். அப்பறம் ஒரு ஃபேமிலி டிராமா கதை கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது. அதை மலையாளம் - தமிழ்ல பண்றதுக்கான பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு. அதுவும் சீக்கிரம் கமிட்டாகிடும்.’’

``டியர் `பிகில்’ அட்லி... ஃபுட்பால் விளையாட விஜய் மட்டும் போதுமா... இதெல்லாம் வேண்டாமா?''- ஒரு கால்பந்து ரசிகனின் கடிதம்
அடுத்த கட்டுரைக்கு