Published:Updated:

`` `வேட்டையாடு விளையாடு - 2'ல அதே தப்பைப் பண்ணாதீங்க கெளதம்..!" - டேனியல் பாலாஜி

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

’சித்தி - 2’, ‘வேட்டையாடு விளையாடு - 2’ பற்றியும் இந்தக் குவாரன்டீன் நாள்களை எப்படிச் செலவிடுகிறார் என்பதைப் பற்றியும் நடிகர் டேனியல் பாலாஜியிடம் பேசினோம்.

’சித்தி’ சீரியலில் டேனியலாகவும் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் அமுதனாகவும் கலக்கியவர், நடிகர் டேனியல் பாலாஜி. தற்போது, ’சித்தி’ சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிப்பரப்பாகி வருகிறது; ‘வேட்டையாடு விளையாடு’ படமும் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதைப் பற்றியும் இந்தக் குவாரன்டீன் நாள்களை எப்படிச் செலவிடுகிறார் என்பதைப் பற்றியும் அவரிடம் பேசினோம்.

குவாரன்டீன் நாள்கள் எப்படிப் போகுது?

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

’’இப்படி ஒரு ஃப்ரீ டைம் கிடைக்கும்னு நான் நினைக்கவேயில்லை. சினிமால பிஸியா இருக்கும்போது இந்த மாதிரியான ஃப்ரீ டைமெல்லாம் நம்மளே எடுத்துக்கிட்டாதான் கிடைக்கும். ஆனா, இப்ப அதுவா கிடைச்சிருக்கு. இந்த நாள்களை வேஸ்ட் பண்ணிடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன். நெட்ஃபிளிக்ஸ், அமேசான்ல நிறைய வெப் சீரிஸ் பார்த்துட்டு இருக்கேன். நான் இயக்கப்போற படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க்கும் பண்ணிட்டிருக்கேன். அதுமட்டுமில்லாம நடிக்கிறதுக்கும் சில கதைகள் கேட்டுட்டு இருக்கேன். வீட்டுல நான் மட்டும் தனியா இருக்கிறதுனால, நானே சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு ஜாலியா இருக்கேன்.’’

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மக்கள்கிட்ட எந்த அளவுக்கு இருக்குனு நினைக்கிறீங்க?

’’மக்களுக்கு இந்த வைரஸ் பற்றிய புரிதல் முழுசா இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை. நிறைய பேர் பைக்ல சுத்திட்டு இருக்காங்க. வயசானவங்க ரோட்டுல எப்போதும் போல நடமாடிட்டு இருக்காங்க. இந்த வைரஸ், வயசானவங்களைத்தான் ஈசியா தாக்கும். ஆனா, மாஸ்க்கூட போடாம வெளியில வர்றாங்க. அரசாங்கத்தைப் பொருத்தவரைக்கும் பல நடவடிக்கைகளை எடுக்குறாங்க. அதே மாதிரி மக்களும் அவங்களுக்கு ஒத்துழைப்பு தரணும். நாம வீட்டுல இருந்தாதான் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும். மக்கள் அதைப் புரிஞ்சுக்கிட்டு வீட்டுலேயே இருக்கணும்.’’

இப்ப என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க..?

’’ ‘பிகில்’ படத்துக்கு அப்பறம் ’காட் மேன்’னு ஒரு வெப் சீரிஸில் நடிச்சு முடிச்சிருக்கேன். அது ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இது போக, தெலுங்குல நானி நடிக்கிற ’டக் ஜெகதீஸ்’ படத்துல வில்லனா நடிக்கிறேன். இந்தப் படத்தோட ஷூட்டிங்கும், அந்த வெப் சீரிஸோட ரிலீஸும் கொரோனா பிரச்னை முடிஞ்சதுக்கு அப்பறம்தான் நடக்கும்.’’

நீங்க நடிகரா அறிமுகமான ’சித்தி’ சீரியலின் இரண்டாம் பாகத்தை இப்போ எடுத்திட்டு இருக்காங்க. அதிலும் நீங்க நடிப்பீங்களா?

சித்தி 2 சீரியலில் ராதிகா
சித்தி 2 சீரியலில் ராதிகா

’’ ‘சித்தி - 2’ல நடிக்கிறதுக்காக இதுவரைக்கும் யாரும் என்கிட்ட பேசலை; பேசவும் மாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா, நான் நடிச்ச கேரக்டர், முதல் பாகத்துலேயே திருந்தி நல்லவனாகிட்டான். ஸோ, அவனுக்கு இரண்டாம் பாகத்துல வேலையில்லை. அதுனாலதான் ராதிகா மேடம் என்னைக் கூப்பிடலைனு நினைக்கிறேன்.’’

‘வேட்டையாடு விளையாடு’ படத்தோட இரண்டாம் பாகம் எடுக்கிறதுக்கும் பேசிட்டு இருக்காங்களாமே?

வேட்டையாடு விளையாடு
வேட்டையாடு விளையாடு

’’ ‘சித்தி - 2’க்கு என்ன பதில் சொன்னேனோ அதேதான் ’வேட்டையாடு விளையாடு -2’க்கும் சொல்லணும். முதல் பாகத்திலேயே என் கேரக்டர் முடிஞ்சிடுச்சு. அதனால், என் கேரக்டர் இரண்டாம் பாகத்தில் இருக்காது. வேற ஏதாவது கேரக்டருக்காக என்னைக் கூப்பிட்டால் கட்டாயம் நடிப்பேன். ஆனா, கெளதம் மேனன் என்னைக் கூப்பிடுவாரான்னு தெரியலை. ஏன்னா, இப்போ அவருக்கு பெரிய பெரிய நடிகர்கள் எல்லாரும் பழக்கமா இருக்கிறதுனால, அவங்களை நடிக்க வைக்கலாம். அதுமட்டுமில்லாம, அவரே நடிக்க ஆரம்பிச்சிட்டார். ‘வேட்டையாடு விளையாடு -2’ல அவரேகூட நடிக்கலாம். ஆனா, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவர்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன். ’என்னை அறிந்தால்’ படத்துல, ரெண்டு காட்சிகளில் மட்டும் நான் நடிச்சேன். அப்ப, அந்தப் படத்தோட வில்லன் அருண் விஜய்கிட்ட, ’வேட்டையாடு விளையாடு’ படத்தோட அமுதன் கேரக்டருக்காக நான் கிரியேட் பண்ணின பாடி லாங்குவேஜ், மாடுலேஷன்களை சொல்லிக்கொடுத்திட்டு இருந்தார், கெளதம் மேனன். அப்போதே கெளதம்கிட்ட, `இது தப்பு கெளதம். ஒரு படத்துக்காக ஒரு கேரக்டரை கிரியேட் பண்ணுனதுக்கு அப்பறம், அடுத்த படத்துக்கு வேற மாதிரியான கேரக்டரைத்தான் கிரியேட் பண்ணணும். ஒரே கேரக்டரை திரும்பத் திரும்ப கொண்டுவரக்கூடாது’னு சொன்னேன். அதுனால, இப்போ ’வேட்டையாடு விளையாடு - 2’ எடுத்தால், அதே தப்பை மறுபடியும் பண்ணாதீங்கன்னு கெளதம் மேனன்கிட்ட சொல்லிக்கிறேன்.’’

நீங்களும் நடிகர் முரளியும் அண்ணன் - தம்பினு சொல்றாங்களே; அதைப் பற்றி நீங்க இதுவரைக்கும் பேசாதது ஏன்?

’’என் அப்பா தெலுங்குக்காரர். முரளியோட அப்பா கன்னடம். எங்க ரெண்டு பேரோட அம்மாக்களும் தமிழ்தான்; அவங்க ரெண்டு பேரும் அக்கா - தங்கச்சி. அந்த முறையில்தான் அவர் எனக்கு அண்ணன். நான் பல நேரங்கள்ல, பல இடங்கள்ல அவரோட தம்பினு சொல்லிக்கிறது இல்லை. நான் அவரோட தம்பினு எல்லா இடங்களிலும் சொல்லிட்டு இருந்தா, நான் எடுக்குற நல்ல பெயர் அவரோட அப்பாவுக்குத்தானே சேரும். இதை அவரோட அப்பாவே ஏத்துக்க மாட்டார். அதனாலதான், பல இடங்கள்ல எனக்கு அவர் அண்ணன் முறைங்கிறதை சொல்லாமல் இருந்திருக்கேன்.’’

முரளியோட இரண்டாவது மகனுக்கும் விஜய்-யின் தங்கச்சி சினேகா பிரிட்டோவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துச்சே; அப்போ விஜய்-க்கு நீங்க சம்பந்தியா?

’’சம்பந்திங்கிறது பெரிய வார்த்தை. ஆனா, முறைப்படி பார்த்தா அப்படித்தான் வருது. ஆனாலும் நாங்க ரெண்டு பேரும் எப்போதும் போல ஃப்ரெண்ட்ஸாத்தான் பேசிட்டு இருக்கோம். ‘பிகில்’ படத்தோட ஷூட்டிங் நடக்கும்போது, விஜய் அண்ணா என்கிட்ட, ’நீயும் நானும் சொந்தக்காரங்களா ஆகப்போறாம்’னு சொன்னார். ’என்னண்ணா சொல்றீங்க’னு கேட்டப்போதான், இந்த லவ் விஷயத்தை என்கிட்ட சொன்னார். நாங்க சொந்தக்காரங்களா ஆகிட்டாலும், அதை இதுவரைக்கும் தொழிலுக்குள்ள கொண்டு வந்ததில்லை.’’

அடுத்த கட்டுரைக்கு