Published:Updated:

``கலாய்த்த கார்த்தி; டிக்டாக் பார்த்து காண்டான நரேன்..!’’ - KPY தீனா

`கைதி’ படத்தில் கார்த்தியுடன் நடித்திருக்கும் அனுபவத்தைப் பகிர்கிறார், தீனா...

KPY தீனா
KPY தீனா

குட்டி குட்டி காமெடி பன்ச், ப்ராங் கால் மூலம் பிரபலமானவர், தீனா. `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர், இன்று சினிமாவிலும் கலக்கத் தொடங்கியிருக்கிறார்.

kaithi movie still
kaithi movie still
"மேக்-அப் மேன், லைட்மேன் தெரியும்... `க்ரெளடு மேன்' தெரியுமா?!" - அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் சரவணன்

தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் கார்த்தியின் ’கைதி’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் தீனாவைச் சந்தித்தோம்.

"'கைதி’ படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது..?"

"'கைதி’ எனக்கு புது அனுபவமா இருந்துச்சு. இதுவரைக்கும் காமெடியனா நடிச்சிட்டு இருந்த என்னை, இந்தப் படத்தில் டோட்டலா மாத்தியிருக்காங்க. எமோஷன், ஆக்‌ஷன்னு புதுசா முயற்சி பண்ணியிருக்கேன். இந்தப் படத்துக்காக இயக்குநர் லோகேஷ் என்னைக் கூப்பிடும் போதே, `எனக்கு உன்னோட வாய்ஸ் இந்தப் படத்துக்கு தேவைனு தோணுச்சு’னு சொன்னார். என்னோட போன் கால் செக்மெண்ட் நிறைய பார்த்திருக்கேன்னும் சொன்னார். ஆனால், இந்தப் படத்தில் என் வாய்ஸ் அந்த டோனில் இருக்காது. நான் டப்பிங்கிற்கு போனப்போ, என் மாடுலேஷனையே மாத்தி வேற வெர்ஷனில் எடுத்தார். எனக்கே என் வாய்ஸ் புதுசா இருந்துச்சு. ஷூட்டிங்கிலேயும் அதே மாடுலேஷனில்தான் என்னைப் பேச வெச்சார். அதுனால டப்பிங்ல பண்ணும் போது கொஞ்சம் ஈசியாகவும் இருந்துச்சு.’’

"சீரியஸ் ரோலில் நடிச்சது கஷ்டமா இருந்துச்சா..?"

KPY தீனா
KPY தீனா

’’எனக்கு ரொம்ப நாளாகவே எமோஷனல் கேரக்டர்கள் பண்ணணும்னு ஆசை. `கைதி’ படம் மூலமா அது முதல் முறை கிடைச்சது. முதலில் சீரியஸான கேரக்டரில் நடிக்கிறது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்துச்சு. இருந்தாலும் ஆடியன்ஸூக்கு ஒரு வித்தியாசமான உணர்வை கொடுக்கணும்னு ஆசைப்பட்டுதான் இந்த ரோலில் நடிச்சேன். படத்தில் எனக்கு சின்னதா எந்த வசனமும் இருக்காது. எல்லாமே ரொம்ப பேசுறதா இருந்துச்சு. அதுக்காக ஷூட்டிங்கிற்கு முன்னாடியே எனக்கு பயிற்சி கொடுத்தாங்க. கார்த்தி அண்ணனோடு நடிக்கும்போது ரீடேக் வாங்கிடக்கூடாதுனு பக்காவா ப்ராக்டீஸ் பண்ணி நடிச்சேன். படத்தோட முதல் ஷெடியூலில் எனக்கும் கார்த்தி அண்ணனுக்கும் சீன்ஸ் கொஞ்சம் குறைவா இருந்தனால, நாங்க சரியா பேசிக்கலை. அடுத்தடுத்த ஷெடியூலில் நான் அவர்கூடவே இருந்தனால, அண்ணன் - தம்பி மாதிரி பழகிட்டோம். அதே மாதிரிதான் லோகேஷ் அண்ணனோடும் பழகினேன். ஈகோவே இல்லாமல் பழகக்கூடிய ஆள். இந்தப் படத்துக்காக மொத்தம் 60 நாள் ஷூட்டிங்கிற்குப் போனேன். அந்த 60 நாள்ல என்கிட்ட 70 முறை கதை சொன்னார். ஒரு சீன் எடுக்குறார்னா அந்த சீனை மட்டும் சொல்லாமல், அந்தக் கதையையே சொல்லுவார். நம்மை அந்தக் கதைக்குள்ளேயே வச்சிருப்பார்.’’

"கார்த்தியோடு நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு..?"

"எப்போதும் ரொம்ப தன்மையாகவே பேசுவார். சமூகத்தைப் பத்தி அதிக அக்கறையோடு இருப்பார். நியூஸ் பேப்பர்ல எதாவது வருத்தமான செய்தி பார்த்தால்கூட, அதை அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டுட்டே இருப்பார். விவசாயத்தைப் பற்றி அதிகமா பேசுவார். `கைதி’ ஷூட்டிங் அப்போதான் கஜா புயல் வந்துச்சு. நிறைய பேருக்கு அந்த சமயத்தில் உதவி பண்ணினார். ’உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காச்சும் உதவி தேவைப்பட்டால் சொல்லுங்க’னு என்கிட்டேயும் சொன்னார். கார்த்தி அண்ணாவும் நரேன் சாரும் சேர்ந்தா கலாய்களுக்கு குறையே இருக்காது. ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கலாய்ச்சிட்டே இருப்பாங்க. நரேன் சார் எடுத்துக்கொடுக்க கார்த்தி அண்ணா கலாய்ப்பார்.’’

வெறிபிடித்தாடிய வினோத்; அசுர வேட்டை நிகழ்த்திய சிவசாமி... தமிழ் சினிமாவின் தங்க மகன் தனுஷ்!

"'கைதி’ படத்துல லாரிக்கும் முக்கியப்பங்கு இருக்காமே..?

Kaithi
Kaithi

’’ஆமா. லாரியை வெச்சுத்தான் பல சேஸிங் நடக்கும். கார்த்தி அண்ணாவுக்கு, லாரி ஓட்டணும்கிற ரொம்ப நாள் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறிடுச்சுனு சொன்னார். ஆனால், ஓட்டுனதுக்கு அப்புறம் இனிமேல் லாரியே ஓட்ட மாட்டேன்னு சொன்னார். பவர் ஸ்டேரிங் இல்லாமல் பழைய லாரியை ஓட்டுறது ரொம்ப கஷ்டம். படம் முழுக்க அந்த லாரியை கார்த்தி அண்ணா ஓட்டிட்டு இருந்தார். அந்த லாரிக்கு மேல ’காமாச்சி காட்டரிங்’னு எழுதியிருக்கும். அந்த காமாச்சியே நான்தான்.’’

"படம் முழுக்க இரவு ஷூட்தான், சிரமங்கள் எதாவது இருந்துச்சா..?"

’’பகலில் வேலை பார்க்கிறவங்களை இரவில் வேலை பார்க்கச் சொன்னால் முதலில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், நான் விஜய் டிவியில் வேலை பார்த்ததால், எனக்கு ரொம்ப பழகிடுச்சு. ஏன்னா, விஜய் டிவியில் காலை 4 மணிக்கு ஒரு ஷூட் ஆரம்பிச்சா, அது அடுத்த நாள் காலை வரைக்கும் போகும். அடிக்கடி அப்படி ஷூட் பண்ணி பழகுனதுனால நைட் ஷூட் பண்றதுல எனக்கு சிரமமே இல்லை. காட்டுல ஷூட் பண்ணுனது கொஞ்சம் சிரமமா இருந்துச்சுனு சொல்லலாம்.’’

"உங்களுடைய ப்ராங் கால் வீடியோஸை கார்த்தி பார்த்தாரா..?"

"லோகேஷ் அண்ணன் என்னை இந்தப் படத்துல நடிக்க வைக்கலாம்னு சொன்ன போதே என் ப்ராங் கால் வீடியோஸைதான் கார்த்தி அண்ணாகிட்ட காட்டியிருக்கார். அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் நடக்கும் போது ப்ரேக்ல, நானும் என் வீடியோஸை கார்த்தி அண்ணாகிட்ட காட்டியிருக்கேன். அதே மாதிரி நரேன் சார் நடிச்ச ’நெஞ்சிருக்கும் வரை’ படத்தை கலாய்ச்சு ஒரு டிக்டாக் பண்ணியிருந்தேன். அதை நரேன் சார்கிட்ட காட்டினப்போ, ‘டேய்... இது எப்படிப்பட்ட படம் தெரியுமாடா. அதை கலாய்ச்சிருக்கியே’னு லைட்டா காண்டானார். இப்போ 'கைதி’ படத்தோட ரிலீஸுக்காகத்தான் காத்துட்டு இருக்கேன். நான் ஹீரோவாகக்கூட படம் பண்ணிட்டேன். ஆனால், இந்தப் படத்தில் ஒரு பெரிய ஹீரோகூட முக்கியமான ரோலில் நடிச்சிருக்கனால, இந்தப் படம் மூலம் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்னு நம்புறேன்.’’