கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

பல சிக்கல்களைத் தாண்டித்தான் பாதை அமைஞ்சது!

புதிய பாதை
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய பாதை

புதிய பாதை

பார்த்திபனுக்கு சினிமாவில் பாதை அமைத்துக்கொடுத்த படம் அவரது முதல் படமான ‘புதிய பாதை.’ இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான பார்த்திபனிடம் அவர் முதல் பட அனுபவம் குறித்துப் பேசினேன்.

‘`ஒண்டிக் குடித்தனத்துக்கு மத்தியில பத்துப் பிள்ளை பெத்துக்கிட்ட மாதிரிதான் ‘புதிய பாதை’ உருவாச்சு. டைரக்‌ஷன் பண்ணி நடிக்கவும் செஞ்சிருப்பேன். ஆனந்த விகடன்ல வேலை பார்த்த மிஸ்டர் சுந்தரம்தான் ‘புதிய பாதை’ படத்தோட தயாரிப்பாளர். என்னைப் பற்றி எனக்கே சரியா தெரியாதப்போ, என்னைச் சரியா கண்டுபிடிச்சவர் என் குரு பாக்யராஜ் சார். அவர்கூடவே இருந்தேன். அதனால என்னைப் பற்றித் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. ஆனா, சுந்தரம் சாருக்கு அந்த வாய்ப்பு கூட இல்லை. இருந்தும், 1988-ல முப்பது எட்டு லட்சம் ரூபாய் முதலீடு பண்ணி என்னை ஹீரோ ஆக்கினார்.

‘புதிய பாதை’ கதையை நிறைய நடிகர்கள்கிட்ட சொன்னேன். சிலருக்குக் கதை பிடிக்கல. கதை பிடிச்சிருந்தா தயாரிப்பாளர் கிடைக்கலன்னு நிறைய பிரச்னைகள். அப்போ, ‘நானே நடிச்சிதான் பண்ணணும்’னு கட்டாயம். ‘நீங்க நடிச்சாதான் படம் ஓடும்’னு சுந்தரம் சாரும் சொல்லிட்டார்.

பார்த்திபன்
பார்த்திபன்

முதல்ல குஷ்புகிட்ட கதை சொல்ல அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன். ‘தமிழ் தெரியுமா’ன்னு கேட்டேன். ‘லிட்டில் லிட்டில்’னு சொன்னாங்க. இதைக் கேட்டவுடனே தயாரிப்பாளரைக் கூப்பிட்டுட்டு ஓடி வந்துட்டேன். அப்புறம்தான் சீதா வந்தாங்க. குப்பைத்தொட்டில பிறந்த ஒரு பையன். சமூகத்துனால சீரழிஞ்சு அதுமேல பெரிய கோபத்துடன் இருக்குறவன். கையில காசு கொடுத்துட்டா என்ன வேணும்னாலும் பண்ணுவான். அப்படித்தான் ஐந்நூறு ரூபாய்க்காக ஒரு பொண்ணை சீரழிச்சிட்டு வந்திருப்பான். இதனோட விளைவுகளெல்லாம் எதுவும் அவனுக்குத் தெரியாது. இப்படியிருக்குறப்போ அந்தப் பொண்ணு அவன்கிட்டபோய் பேசும். அப்போ நிறைய பேர் இதைக் கொச்சைப்படுத்தினாங்க. ‘ஒரு பொண்ணு குப்பைத் தொட்டில இவனைத் தூக்கிப் போட்டுட்டு போனதனாலதான் இவன் இப்படி வளர்ந்து இருக்கான்’னு அந்தப் பொண்ணு புரிஞ்சிக்கும். ஹீரோ மேல அன்பு செலுத்துவா, காதல் செய்வா, கல்யாணம் பண்ணிக்குவா. குழந்தை பிறக்கும். இவன் செஞ்ச பாவத்தினால இவன் தலைக்கு வரவேண்டிய பாம் ஹீரோயின்கிட்ட போயிடும். கடைசில அவ செத்துருவா. இதுக்கு காரணமானவங்களைக் கொலை செய்யலாம்னு நினைப்பான். ஆனா, ‘இவனோட குழந்தை அநாதை ஆகிடும். இன்னொரு அநாதை உருவாக்குறதுல சீதாராமனுக்கு மட்டுமில்ல எனக்கும் உடன்பாடில்லை. இப்படிக்கு பார்த்திபன்’னு படத்தை முடிச்சிருப்பேன்.

புதிய பாதை
புதிய பாதை

படம் எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் ரிலீஸாகுறதுல பிரச்னை வர ஆரம்பிச்சிருச்சு. ஏப்ரல் 14 ரிலீஸ் தேதி குறிச்சிருந்தோம். மார்ச் மாசத்துல, திடீர்னு ‘இந்தப் படம் ரிலீஸ் ஆகாது’ன்னு சுந்தரம் சார் சொல்றார். ஏன்னா, வெங்கட்ராமன்கிறவர் பேர்லதான் சுந்தரம் சார் இந்தப் படத்தை எடுத்திருந்தார். படத்தோட தயாரிப்பாளர்னு வெங்கட்ராமன் பெயர்தான் போஸ்டர்கள்ல இருக்கும். இந்த வெங்கட்ராமன் ஆனந்த விகடன் எம்.டி.பாலசுப்ரமணியம் சார்கிட்ட ஒரு கோடி ரூபாய் அளவுக்குப் பெரிய கடன் வாங்கி யிருக்கார். அதைச் சரியா திருப்பிக்கொடுக்கல. அது சம்பந்தமா கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு. அதனால படம் ரிலீஸ் செய்ய முடியாத சூழல்னு தெரிஞ்சிக் கிட்டேன். ‘வேணும்னா, ஒரே ஒரு வாய்ப்பு இருக்கு. பாலசுப்ரமணியம் சாரைப் படம் பார்க்கவைக்கலாம். அவருக்குக் பிடிச்சிருந்தா, அவர் மனசு வெச்சா படம் ரிலீஸாகிடும்’னு சொன்னாங்க.

சவேரா ஹோட்டல்ல அப்போ ப்ரிவியூ தியேட்டர் இருந்தது. பாலசுப்ரமணியம் சார் அவர் மனைவி சரோஜா அம்மாகூட சேர்ந்து படம் பார்த்தாங்க. அப்போதான் பாலசுப்ரமணியம் சாரை என் வாழ்க்கைல முதல் முறையா பார்க்குறேன். படம் முடிஞ்சி வெளியே வந்தவுடனே சார், என் தோளைத் தட்டிக் கொடுத்துட்டுப் போயிட்டார். எதுவும் பேசல. மறுநாள் சுந்தரம் சார், ‘பாலசுப்ரமணியம் சார் இந்த மாதிரியான படத்தை மிஸ் பண்ணக் கூடாது. இது ரிலீஸ் ஆக நான் தடங்கலா இருக்கவிரும்பலை’ன்னு சொல்லிட்டார்னு சொன்னார். ஆனந்த விகடன்ல 54 மார்க் கொடுத்து சிவப்புக் கம்பளம் வரவேற்பு தந்தாங்க.

பார்த்திபன்
பார்த்திபன்

பட ரிலீஸுக்கு முன்னாடி நான் சபரிமலைக்குப் போயிட்டேன். ஏப்ரல் 13 சபரிமலைல வெறுங்கால்ல நடந்துட்டிருக்கேன். ஏப்ரல் 14 படம் ரிலீஸ். ஏப்ரல் 15 காலைல சென்னை வரேன். சாயங்காலம் சுந்தரம் சாரைப் போய்ப் பார்க்குறேன். கைல கார் சாவி கொடுக்கிறார். அடுத்த மாசத்துல பங்களா வாங்கினேன். அடுத்த சில மாதங்கள்ல சென்னைல பிரமாண்டமா எனக்குக் கல்யாணம் நடக்குது. என் லைஃப்ஸ்டைலே மாறிடுச்சு. எல்லாமே அதிரடியா மூச்சுத் திணறுமளவுக்கு நடந்து முடிஞ்சிடுச்சு.

படம் ரிலிஸுக்குப் பிறகு என் வீட்டு வாசல்ல 25 கார்கள்கிட்ட வந்து நின்னுச்சு. எல்லாருமே புரொடியூசர்ஸ். யார்கிட்டயும் அட்வான்ஸ் வாங்காம நான் ஓடிக்கிட்டு இருந்தேன். எனக்குள்ள பயம் வர ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா, ‘இந்தப் படத்துல ஹீரோவா நடிச்சிட்டோம். இனியும் தொடர்ந்து எப்படி நடிக்கிறது. எனக்கு நானே கதை பண்ணுனாதான் படம் ஓடும். அதனால யார் கைலயும் சிக்கிடாதே’ன்னு எனக்குள்ளேயே சொல்லிட்டு ஓடிக்கிட்டே இருந்தேன்.

புதிய பாதை
புதிய பாதை

படம் ரிலீஸாகி 31 வருஷம் ஆகிருச்சு. இப்போ படத்தை எடுத்துப் பார்த்தாலும் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும்.’’

இந்தச் சம்பவங்கள் எல்லாம் நேற்று நடந்து முடிந்த ஃபீலிலேயே சொல்லிமுடித்தார் பார்த்திபன்.

அந்த எனர்ஜிதான் பார்த்திபன்!