Published:Updated:

``விஜய்யோட `மிஷன் இம்பாசிபிள்'... ஜீவாவோட `அன்கண்டிஷனல் லவ்'...!?'' - ஸ்ரீநாத்

ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஜீவா
ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஜீவா

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவின் திடீர் மரணம் தமிழ் சினிமாவை மட்டுமில்லாது, அவர் பணியாற்றிய மலையாளம் மற்றும் இந்தி சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மறைந்து இன்றோடு 13 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ் சினிமாவில் பல ஆளுமைகளின் மரணம் நமக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவரின் மரணம்தான் ஜீவாவின் மரணம். ரஷ்யாவில் 'தாம் தூம்' படப்பிடிப்பில் இருந்தபோது திடீர் மாரடைப்பால் இறந்துபோனார். ஜீவா இயக்கிய நான்கு தமிழ்ப்படங்களிலும் அவரோடு உதவி இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றிய ஸ்ரீநாத்திடம் பேசினோம்.

ஜீவாவுடன் நீங்கள் அறிமுகமானது எப்படி?

ஸ்ரீநாத்
ஸ்ரீநாத்

’’ ‘நாளைய தீர்ப்பு’, ’நம்மவர்’ படங்களில் நான் நடிச்சதுக்கு அப்புறம் ’காதலர் தினம்’, ’பூப்பறிக்க வருகிறோம்’ படங்களில் உதவி இயக்குநரா வேலைபார்த்தேன். இந்தப் படங்களை முடிச்சதுக்கு அப்புறம் தொலைக்காட்சிகள்ல ஃப்ரீலான்சரா இருந்தேன். அந்த சமயத்துல, சில சேனல்களுக்கு நடிகர், நடிகைகளின் பேட்டிகள் எடுக்குறது, சினிமா சம்பந்தமான ஸ்பெஷல் ஷோஸ் பண்றதுனு இருப்பேன். ’ஆசை’ படத்தில் அஜித் நடிச்சிட்டு இருந்தப்போ, நான்தான் அவரை முதன்முதலில் பேட்டி எடுத்தேன். பேட்டி எடுக்க ’ஆசை’ படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிருந்தேன். அந்தப் படத்துக்கு ஜீவா சார்தான் கேமராமேன். அப்போ, அவரைப் பார்த்து விஷ் பண்ணியிருக்கேன்.

அடுத்து, ’வாலி’ படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்ரனை பேட்டி எடுக்கிறதுக்காக போனபோதும், ஜீவா சாரை பார்த்து பேசினேன். விஜய் என் காலேஜ் நண்பன். ’குஷி’ படத்தோட ஷூட்டிங்கில் விஜய்யைப் பார்க்கிறதுக்காக அடிக்கடி போவேன். அப்போதும் ஜீவா சாரை பார்த்து பேசினேன். இப்படி ஜீவா சார் எனக்கு பரிட்சயமாகிட்டார். ’குஷி’ படத்தோட வெற்றிக்காக விஜய் ஒரு பார்ட்டி கொடுத்தார். அப்போதான் ஜீவா சார்கிட்ட, ’உங்களை மாதிரி ஒரு கேமராமேன்கிட்ட வேலைபார்க்கணும்னு ஆசையா இருக்கு சார். கேமரா பற்றி நிறைய தெரிஞ்சுக்கணும்’னு சொன்னேன். அவரும், ’வாய்ப்பிருந்தால் வொர்க் பண்ணலாம்’னு சொன்னார். திடீர்னு ஒரு நாள், ஜீவா சார் படம் இயக்கப்போறதா நியூஸ் வந்தது. நானும் அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்ததுனால, அவர்கிட்ட வொர்க் பண்ணலாம்; அப்படியே கேமராவும் கத்துக்கலாம்னு அவர்கிட்ட உதவி இயக்குநருக்காக வாய்ப்பு கேட்டேன். அவரும் என்னை சேர்த்துக்கிட்டார். இப்படித்தான் நான் ஜீவா சாரோட ஸ்கூலில் சேர்ந்தேன்.’’

உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்த உங்களை அவர் எப்படி நடிக்கவும் வெச்சார்?

ஒளிப்பதிவாளர்,  இயக்குநர் ஜீவா
ஒளிப்பதிவாளர்,  இயக்குநர் ஜீவா

‘’ ‘12B’ படத்தை முதலில் ஃபேமஸான ஹீரோக்களை வெச்சுத்தான் எடுக்கணும்னு ஜீவா சார் ஆசைப்பட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்னைகள் வந்ததுனால, எந்த ஹீரோவும் கமிட்டாகலை. ஷூட்டிங் ஆரம்பிக்கவும் லேட்டானதால, அந்தப் படத்தோட தயாரிப்பாளர் விக்ரம் சிங், ‘சார் உங்களை நம்பித்தான் நான் இந்தப் படத்தை தயாரிக்கிறேன். நீங்க பெரிய ஹீரோவை வெச்சுத்தான் எடுக்கணும்னு அவசியம் இல்லை. கதை நல்லா இருக்கு. புதுமுகத்தை வெச்சிக்கூட எடுங்க’ன்னு ஜீவா சார்கிட்ட சொன்னார். அதுக்கப்புறம்தான் ஷாமை கமிட் பண்ணோம்.

ஷாம் மதுரைக்கார பையனா இருந்தாலும், பெங்களூருல வளர்ந்ததுனால நம்ம ஊரு ஸ்லாங், மாடுலேஷன் கொஞ்சம் மிஸ்ஸாச்சு. அப்போ ஜீவா சார்தான் என்கிட்ட, ‘ஷாமை கொஞ்சம் ட்ரெயின் பண்ணு. சென்னையில ஏரியா பசங்க எப்படி பேசுவாங்க, அவங்க பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கும்னு எல்லாத்தையும் சொல்லிக்கொடு'னு சொன்னார். அப்படி ஒரு நாள் நான் ஷாமுக்கு சொல்லிக்கொடுத்ததை ஜீவா சார் பார்த்துட்டு, ‘நீ நல்லா நடிக்கிறியே. இந்தப் படத்துல நீயும் நடி’னு சொல்லி, மெக்கானிக் ரோல் கொடுத்தார்.

அதுக்கப்புறம் தொடர்ந்து அவரோட படங்களில் எனக்கு ஒரு ரோல் அமைஞ்சிடும். அவர் எழுதும்போதே அதுக்காக ப்ளான் பண்ணி எழுத மாட்டார். திடீர்னு ஒரு நாள், ’இந்த கேரக்டர் நீ பண்ணு’னு டிஸ்கஷனில் இருக்கும்போது சொல்லுவார். அப்படித்தான் ’உள்ளம் கேட்குமே’, ’உன்னாலே உன்னாலே’, ’தாம் தூம்’ படங்களில் நடிச்சேன்.’’

தொடர்ந்து அவருடைய படங்களின் ஹீரோக்கள் புதுமுகங்களாவே இருந்ததற்கான காரணம் என்ன?

ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஜீவா
ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஜீவா

’’முதல் படத்தில் ப்ளானே இல்லாமல்தான் புதுமுகத்தை அறிமுகப்படுத்தினார், ஜீவா சார். ஆனால், அந்தப் படம் ரிலீஸானதும் ஷாமுக்கு அடுத்தடுத்த படங்களுக்கு வாய்ப்புகள் வந்துச்சு. நிறைய இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஷாமை அவங்க படங்களில் நடிக்கவைக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது, ஜீவா சாருக்கு ரொம்பவே சந்தோஷம். ’நாம அறிமுகப்படுத்துன ஒரு பையனுக்கு நல்ல மார்க்கெட் கிடைச்சிருச்சு’னு சந்தோஷப்பட்டார். அதுதான், தொடர்ந்து அவரோட படங்களில் அறிமுகங்களை நடிக்க வெச்சு, அவங்களுக்கு ஒரு முகவரியை அமைச்சுக்கொடுக்கிறதுக்கு காரணமா இருந்துச்சு. ’உள்ளம் கேட்குமே’ படத்திலும் ஆர்யா, அசினை அறிமுகப்படுத்தினார். ’உன்னாலே உன்னாலே’ படத்துல வினய்யை அறிமுகப்படுத்தினார். ’தாம்தூம்’ பண்ணும்போது, ‘இந்தப் படத்தோட ஹீரோ கேரக்டரை ஒரு வளர்ந்த ஆக்‌ஷன் ஹீரோதான் பண்ணணும். அதுதான் சரியா இருக்கும்’னு சொல்லி, ‘ஜெயம்’ ரவியை நடிக்க வெச்சார். அதிலும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை தமிழில் நடிக்க வெச்சிருப்பார். புதுமுகங்களை நடிக்கவைக்கிறதால, கால்ஷீட் பிரச்னையும் அவருக்கு வந்ததில்லை. அதுவும் ஒரு காரணம்தான்.’’

இயக்குநரான பிறகும் அவர் இயக்கிய படங்களுக்கு அவரே ஒளிப்பதிவும் செய்தபோது எப்படி இருந்தார்?

ஒளிப்பதிவாளர்  இயக்குநர் ஜீவா
ஒளிப்பதிவாளர்  இயக்குநர் ஜீவா

’’ஜீவா சாரைப் பொறுத்தவரைக்கும் அவர் கேமராமேனா வொர்க் பண்ற படங்களிலும் இயக்குநரோடு அதிகமா பயணிப்பார். ’ஜென்டில் மேன்’, ’காதலன்’, ’இந்தியன்’ படங்களுக்கு ஷங்கர் சாரோடும் ’ரன்’, ’சண்டக்கோழி’ படங்களுக்கு லிங்குசாமி சாரோடும் வொர்க் பண்ணும்போது, அவர்களோடு சேர்ந்து அதிகமா வொர்க் பண்ணார். காஸ்ட்யூம், லொகேஷன், ஆர்ட் டைரக்‌ஷன்னு எல்லா டீமோடும் மீட்டிங் போவார். எல்லாரோடும் பேசித்தான், அவரோட வொர்க்கை டிசைன் பண்ணுவார். அவருக்கு இந்தப் பழக்கம் இருந்ததுனால, அவர் இயக்குநரானபோது அந்தப் படங்களுக்கு அவரே ஒளிப்பதிவும் பண்ணும்போதும், உதவி ஒளிப்பதிவாளர்களை டைரக்‌ஷன் சம்பந்தமான மீட்டிங்கிற்கு வரச் சொல்லுவார். ரெண்டு டீமையும் தனித்தனியா வெச்சு வேலை வாங்காமல், எல்லோரும் ஒரே டீமா ரெண்டு வேலைகளைப் பற்றியும் தெரிஞ்சிக்கிட்டு வேலைபார்க்க வைப்பார். அதனால ஜீவா சார் சிரமம் இல்லாமல் வொர்க் பண்ணுவார்.’’

‘தாம் தூம்’ படத்தோட படப்பிடிப்பில் ஜீவா மாரடைப்பால் இறந்தபோது நீங்களும் அங்கதான் இருந்தீங்களா?

ஒளிப்பதிவாளர்  இயக்குநர் ஜீவா
ஒளிப்பதிவாளர்  இயக்குநர் ஜீவா

’’ ‘தாம் தூம்’ படத்தைப் பொறுத்தவரை, அதில் நான் ஒரு ஃப்ரீலான்சராகத்தான் இருந்தேன். என்னை நடிகரா விஜய்யோட அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சார்தான் ’நாளைய தீர்ப்பு’ படத்துல அறிமுகப்படுத்தினார். ஆனால், ஜீவா சாரோட படங்களில் நல்ல நல்ல ரோல்ஸ் கிடைச்சதுனால, என்னை நடிகரா பல பேர் ஏத்துக்கிட்டாங்க. அதுனால, ’தாம் தூம்’ பட சமயத்தில் நான் டிஸ்கஷனில் இருந்தேன். கிராமத்து போர்ஷனில் நடிச்சேன். அவங்க, ஃபாரின் போர்ஷன் எடுக்கிறதுக்காக ரஷ்யா கிளம்பும்போது, நான் நடிக்கிறதுக்கு சில படங்கள் கமிட் பண்ணி வெச்சிருந்ததுனால, நான் ரஷ்யா போகலை. அங்க ஷூட்டிங் நடந்திட்டு இருந்த சமயத்தில், திடீர்னு அவர் இறந்துட்டார்னு செய்தி வந்தது. என்னால நம்பவே முடியலை. நானும் உதவி இயக்குநர்களுக்கு போன் பண்ணேன். யார் நம்பரும் ரீச்சாகலை. இதில் இருந்து எங்களால வெளிய வரவே முடியலை. ஆனால், ’தாம் தூம்’ படத்தை முடிக்கணும்னு அவரோட மனைவி அனீஸ் முடிவு பண்ணதால், உதவி இயக்குநர்கள் எல்லோரும் சேர்ந்து படத்தை முடிச்சோம்.’’

’அவரை மிஸ் பண்ணிட்டோமே’னு இப்போ வரைக்கும் நீங்க ஃபீல் பண்ற ஒரு விஷயம் சொல்லுங்க?

குடும்பத்தினருடன் ஜீவா
குடும்பத்தினருடன் ஜீவா

’’ ‘12B’ படத்துல இருந்து ’தாம் தூம்’ படம் வரைக்கும் நான், மணிகண்டன், லட்சுமிகாந்த்னு மூணு உதவி இயக்குநர்கள்தான் அவரோடு தொடர்ந்து பயணிச்சோம். ஜீவா சார் எங்ககிட்ட, ‘சீக்கிரமே ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கணும். அதுல நான் படம் பண்ண மாட்டேன். உங்களை எல்லாம் இயக்குநராக்குவேன்’னு அடிக்கடி சொல்லுவார். அவரோட இந்த ஆசையை ஜீவா சாரோட மனைவி அனீஸ் நிறைவேற்றணும்னு முடிவு பண்ணுனாங்க. ’விஷன் ஜீவா ஸ்டுடியோஸ்’னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, என்னை இயக்குநராக்குனாங்க.. அதில்தான் டேனியல் பாலாஜியையும் நிதின் சத்யாவையும் வெச்சு ’முத்திரை’ படத்தை இயக்குனேன். அவரோட இந்த ஆசை நிறைவேறும் போதும், நான் இயக்கிய முதல் படத்தை அவரால பார்க்க முடியலைனு நினைக்கும்போதும் ரொம்பவே கஷ்டமா இருக்கும். ஆனால், அவரோட ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதுமே இருக்கும்.’’

விஜய் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சச்சின்’ படங்களுக்கு ஜீவாதான் ஒளிப்பதிவாளர். நீங்க விஜய்யின் நெருக்கிய நண்பர். ஜீவாவின் இறப்பைப் பற்றி விஜய் உங்களிடம் சொன்ன விஷயம் என்ன?

விஜய், ஸ்ரீநாத்
விஜய், ஸ்ரீநாத்

’’விஜய் ரொம்பவே ஃபீல் பண்ணார். ஜீவா சாரோட உடல் ரஷ்யால இருந்து சென்னைக்கு வரதுக்கு முன்னாடியே, விஜய் ஜீவா சாரோட வீட்டுக்கு வந்திட்டார். எல்லா சடங்கும் முடியுற வரைக்கும் அங்கேயே இருந்தார். விஜய் எந்த இடத்துலேயும் அவ்வளவு நேரம் இருந்து நான் பார்த்ததேயில்லை. ஜீவா சாரோட மரணம் விஜய்யை ரொம்பவே பாதிச்சது. கடைசி வரைக்கும் இருந்து, ஜீவா சாரோட மனைவிக்கு ஆறுதல் சொல்லிட்டுத்தான் கிளம்பினார். ஜீவா சாருக்கும் விஜய்யை ரொம்பப் பிடிக்கும். ’தாம் தூம்’ படத்துக்கு அப்புறம் விஜய்யை வெச்சு ஒரு படம் இயக்கணும்கிற ப்ளானிலும் இருந்தார். அந்தக் கதை, ’மிஷன் இம்பாசிபிள்' படத்தோட பேட்டன்ல இருக்கும். இதை விஜய்கிட்டேயும் ஜீவா சார் சொல்லியிருந்தார். விஜய்யும், ‘நீங்க எப்போ சொன்னாலும் பண்ணிடலாம் சார்’னு சொன்னார். ஆனால், அது நடக்காமலேயே போயிடுச்சு. இப்ப நானும் விஜய்யும் மீட் பண்ணும்போதுகூட எப்படியாச்சும் ஜீவா சாரைப் பற்றிய பேச்சு வந்திடும். அப்போதெல்லாம், ‘அவரோட இடம் இன்னும் காலியாதான் இருக்கு’னு விஜய் சொல்லுவார்.’’

அடுத்த கட்டுரைக்கு