சினிமா
Published:Updated:

அந்தக் குழந்தைகளுக்காகத்தான் எல்லாம்!

ஜார்ஜ் விஜய் நெல்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜார்ஜ் விஜய் நெல்சன்

அவங்களை மீடியா வெளிச்சத்துக்குக் கொண்டு வரணுங்கிறதை என்னோட இலக்கா மாத்திக்கிட்டேன்.

பார்த்த உடனே பளீரென உள்ளத்தைப் பிரதிபலிக்கும் சிரிப்புதான் ஜார்ஜ் விஜய் நெல்சனின் அடையாளம். சின்னத்திரையில் ‘ஒத்த ரோசாவாக’வும், ‘ஹல்க்’காகவும் வலம்வந்து, குட்டீஸ்களின் மனதில் இடம் பிடித்தவர்.

வெள்ளித்திரையில் விக்ரம் வேதா, மாரி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு நடிகராக நம் மனதில் இருக்கும் ஜார்ஜ் விஜய், மனநலம் குன்றிய 48 குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிந்திராத மறுபக்கம். அவருடனான மனசுக்கு நெருக்கமான உரையாடலிலிருந்து...

“திருவெற்றியூர்ல ஒரு மனநலக் காப்பகத்தில் உள்ள 48 குழந்தைகளுக்கு நான் அரவணைப்பா இருக்கேன். தன்னைச் சுத்தி என்ன நடக்குதுங்கிறதைக்கூட உணரமுடியாமல், பாசத்துக்காக ஏங்கும் மனநலம் குன்றிய குழந்தைகளோடு இயங்குகிறதுதான் மனசுக்கு நெருக்கமா இருக்கு. அவங்க அன்பைத் தவிர எதையும் கொடுக்கவும் கேட்கவும் தெரியாதவங்க. அவங்களைப் பொறுத்தவரை அன்பு காட்டுற எல்லோரும் அம்மாதான்” - புன்னகையோடு சொல்கிறார் ஜார்ஜ்.

ஜார்ஜ் விஜய் நெல்சன்
ஜார்ஜ் விஜய் நெல்சன்

“எனக்கு சொந்த ஊரு ராமநாதபுரம். சின்ன வயசுலேயே குடும்பத்தோடு சென்னைக்கு வந்துட்டோம். ஸ்கூல் படிக்கும்போதே மேடைகளைத் தேடி ஓடியவன் நான். சிரிப்புச் சத்தத்திற்கும், கைத்தட்டல் ஓசைக்கும், உலகத்தில எல்லாத்தையும் சாதிக்கிற சக்தி இருக்கு. அதுதான் என்னை இயங்க வெச்சுது. காலேஜ் படிக்கும்போது மேடைதான் எதிர்காலம்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். ஆனா வீட்டில் எல்லாரும் உடனே வேலை கிடைக்கிறமாதிரி படிப்பைத் தேர்வு செய்னு சொன்னாங்க. அதனால் எம்.எஸ்.டபிள்யூவைத் தேர்வு செஞ்சேன். அங்க நான் படிச்ச படிப்பு எனக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கல. ஆனா, அடுத்தவங்களுக்குப் பயன்படாமல் வாழ்ந்து சாகுறது வாழ்க்கையே இல்லைன்னு புரியவெச்சுது.

படிக்கும்போதே என்னோட பயணம் குழந்தைகளுக்கானதாக இருக்கணும்னு முடிவுக்கு வந்துட்டேன். ஆரம்பத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காகத்தான் செயல்பட ஆரம்பிச்சேன். ஆனால் அவங்களுக்கு உதவ நிறைய பேர் இருக்காங்க. அந்தக் குழந்தைகளுக்குப் படிப்பு மட்டும் கிடைச்சுட்டா போதும், அவங்களோட எதிர்காலத்தை அவங்களே உருவாக்க முடியும். ஆனா எதைப்பத்தியும் சிந்திக்கக்கூடத் தெரியாத குழந்தைகளுக்கு நிறைய ஆறுதலும் அரவணைப்பும் தேவை. அவங்களுக்குள்ள இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவந்தாதான் அவங்களால் தனித்து இயங்க முடியும். அவங்களை மீடியா வெளிச்சத்துக்குக் கொண்டு வரணுங்கிறதை என்னோட இலக்கா மாத்திக்கிட்டேன்.

தனி ஒரு ஆளா அதைச் செய்ய முடியாது. யாரெல்லாம் உதவி செய்யத் தயாராக இருந்தாங்களோ அவங்களையெல்லாம் கூட சேர்த்துக்கிட்டேன். ‘சென்னை சூப்பர் டான்ஸர்’னு ஒரு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தினேன். அதில் நிறைய ஐ.டி ஊழியர்கள் கலந்துக்கிட்டு டான்ஸ் பண்ணுவாங்க. அந்த நிகழ்ச்சி மூலமாகக் கிடைக்கும் முழுத்தொகையையும் ஹோமுக்குக் கொடுத்திடுவேன். அந்தக் குழந்தைகளுக்கும் டான்ஸ், பாட்டு கத்துக்கொடுத்தேன். ‘ஸ்டார்ஸ் ஆஃப் சென்னை’, ‘ஸ்பெஷல் ஒலிம்பிக்’ன்னு நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினேன். பெரிய பிரபலங்கள் முன்னாடி அந்தக் குழந்தைகளுடைய திறமை வெளிப்பட்டால் எதிர்காலம் நல்லா இருக்கும்னு நிறைய செலிபிரிட்டிகளிடம் டேட் கேட்பேன். ஒரு சிலரைத் தவிர யாருமே ரெஸ்பான்ஸ் பண்ணல. அப்போதான் நானே செலிபிரிட்டி ஆகணுங்கிற எண்ணம் வந்துச்சு” - சிரிக்கிறார் ஜார்ஜ் விஜய்.

“ஒரு பாட்டுல ஓஹோன்னு வந்திடலை. நிறைய புறக்கணிப்புகள், கேலி, கிண்டல்களைப் பார்த்துட்டேன். ‘அது இது எது’ பண்ணும்போது என் மனைவிக்கே அதில் உடன்பாடு இல்ல. என் பையன், ‘அப்பா நீ இப்படியெல்லாம் வேஷம் போடாதே’ன்னு சொன்னான். என் பையனை நான் எப்போதும் ஹோமுக்குக் கூட்டிட்டுப் போவேன். அப்போ ஒரு குழந்தை ‘ஒத்த ரோசா’ன்னு கூப்பிட்டு முத்தம் கொடுத்துச்சு. அந்த நிமிஷம் என் பையன் அழுதுகிட்டே ‘சாரிப்பா’ன்னு சொன்னான். இதுதான் வாழ்க்கை. என்கிட்ட போதுமான அளவு பணம் காசு இருக்குதோ இல்லையோ, ஆனா அளவுக்கு மீறி பாசம் கொட்டிக் கெடக்கு” கண்கள் கலங்க உதட்டில் புன்னகை தளும்ப, கரம்பற்றி விடை கொடுக்கிறார் ஜார்ஜ் விஜய் நெல்சன்.