Published:Updated:

`` `இந்தியன் 2’ படத்துல நடிக்கப் போறேன்'' - `பிகில், `கைதி’யில் கலக்கிய ஜார்ஜ் மரியான்!

ஜார்ஜ் மரியான்
ஜார்ஜ் மரியான்

''நாடகத் துறையில் எல்லா பெரிய கேரக்டர்களும் பண்ணிட்டேன். காமெடி ஜானரில் 'சந்திரஹரி' நாடகம் இயக்கினேன். நடிகர்கள் விதார்த், குருசோமசுந்தரம், விமல் இவங்களுடைய முதல் நாடகம் இதுதான்.''

''எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நடிப்புதான். கிட்டதட்ட 25 வருஷத்துக்கு மேல நடிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன். மேடை நாடகங்களில் நடிச்சிதான் நடிப்பு கத்துக்கிட்டேன். என்னோட வருமானம் முழுக்க நாடகங்களை வெச்சுதான் இருந்தது. கூத்துப்பட்டறையில் இருக்குறப்போ, நடிப்பு, சண்டைப் பயிற்சி, சிலம்பம், நடனம் இதெல்லாம் கத்துக்கிட்டேன்'' என்கிறார் 'கைதி' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜார்ஜ் மரியான். 'பிகில்' படத்திலும் ரசிக்கவைத்திருப்பார். இவரிடம் பேசினோம்.

''சினிமால 'அழகி'தான் முதல் படம். ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணசாமி மூலமாதான் அந்த வாய்ப்பு கிடைச்சது. தங்கர்பச்சான்கிட்ட அவர்தான் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போ ஆரம்பிச்ச சினிமா பயணம் இப்போ வரைக்கும் தொடருது. சினிமாவைவிட நாடகத்துல நடிக்குறதுதான் கஷ்டம். ஏன்னா, சினிமாவுல எத்தனை டேக் வேணும்னாலும் எடுத்துக்கலாம். ஆனா, நாடகம் அப்படியில்ல. சரியான நேரத்துல நடிச்சிரணும். சினிமாக்குள்ள நடிக்க வந்தப்போ நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனா, அது எல்லாமே நாட்கள் ஓட ஓட அப்படியே குறைய ஆரம்பிச்சிருச்சு. நாடகங்கள்ல நடிச்சிட்டிருந்தப்போ தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. நிரந்தர வருமானம் இருக்கும். ஆனா, சினிமா அப்படியில்லை. நமக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா நமக்கு வாய்ப்புகள் கொடுப்பாங்க. இல்லைன்னா வாய்ப்புகள் கிடைக்குறது கஷ்டம்.

கைதி
கைதி

நாடகத்துறையில் இருந்து என்னைத் தெரியும்ங்கிறதுனால, நாசர் அண்ணா வாய்ப்புகள் கொடுப்பார். பெரும்பாலும் சினிமாவுல உடல் தோற்றம் பார்த்துட்டுத்தான் வாய்ப்புகள் வரும். எனக்கு அந்த அளவுக்கு உடல் தோற்றம் கிடையாது. அதனாலேயே நிறைய வாய்ப்புகள் என்னை விட்டு போயிருக்கு. சினிமா வாய்ப்புகள் தேடி அலைஞ்சிட்டிருந்த காலத்துல, ஒவ்வொரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் போவேன். சரத்குமார் சார் நடிச்ச 'கம்பீரம்' படத்தோட ஸ்பாட்டுக்கு வாய்ப்பு தேடி போயிருந்தேன். போலீஸ் கேரக்டர் பண்ணவேண்டிருந்தது. ஆனா, என்னோட உருவத்தைப் பார்த்தவங்க, நான் போலீஸ் கேரக்டருக்கு செட்டாக மாட்டேன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அப்போ கொஞ்சம் வருத்தமிருந்தது. ஆனா, சினிமாவுல அதிகமாவே போலீஸ் கேரக்டரில் நடிச்சிட்டேன்.

முக்கியமா 'கைதி' போலீஸ் கேரக்டர் என்னை வேற இடத்துக்கு கொண்டுபோயிருக்கு. லோகேஷ் கனகராஜ் சார் இந்தப் படத்தோட கதையை சொன்னப்போ, நமக்கு நடிக்க ஸ்கோப் இருக்குற கதையா இருக்குனு திருப்தியா இருந்தது. இருந்தாலும் மனசுல கொஞ்சம் பயமா இருந்தது. சிரிப்பு போலீஸாதான் இதுவரைக்கும் நடிச்சிருக்கோம். இந்தப் படத்துல சீரியஸான ரோல். மக்கள் ஏத்துப்பாங்களானு பயந்துட்டுக்கிட்டே இருந்தேன். ஆனா, மக்கள் கதையோட சேர்ந்து பார்த்து கைதட்டிட்டாங்க.

100 kmph... துவம்சம் செய்யும் லாரி... டாப் கியருக்கு முன்..?! - கைதி +/- ரிப்போர்ட்

என்னை அடையாளப்படுத்தவே எனக்கு காலங்கள் தேவைப்பட்டன. இயக்குநர் ஏ.எல்.விஜய் சார், அவரோட எல்லா படங்களிலும் எனக்கு வாய்ப்பு கொடுப்பார். இயக்குநர் ப்ரியதர்ஷனின், 'காஞ்சிவரம்' படத்துல நடிக்குறப்போதான் ஏ.எல்.விஜய் சார் பழக்கம். அவர் அப்போ உதவி இயக்குநரா இருந்தார். பிறகு, அவர் இயக்குநர் ஆனதும் எனக்கு ஏதாவது ஒரு ரோலை அவரோட ஸ்க்ரிப்ட்டில் வெச்சிருப்பார்.

அதே மாதிரி நடிகர் பசுபதியும் நானும் கூத்துபட்டறையில் அறிமுகமானவங்க. கமல் சாரோட 'விருமாண்டி' படத்துல எனக்கு ரோல் வாங்கிக் கொடுத்தார். சில காரணங்களால் இந்தப் படத்துல அப்போ நடிக்க முடியல. கமல் சார் படத்துல நடிக்க முடியலைங்கிற வருத்தம் எனக்குள்ளே இருந்துட்டு இருந்தது. ஆனா, இப்போ 'இந்தியன் 2' படத்துல நடிக்கப்போறேன். இந்த வாய்ப்பு எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. நிறையப் படங்களில் நடிச்சிருந்தாலும் 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு முக்கியமான ரோலில் 'கைதி' படத்துல நடிச்சதுதான் சந்தோஷம்.

ஜார்ஜ் மரியான்
ஜார்ஜ் மரியான்

'பிகில்' படத்துல நடிச்ச பாதிரியார் கேரக்டரும் எனக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்திருக்கு. சின்ன ரோலா இருந்தாலும் மெட்ராஸ் பாஷை பேசி நடிச்சது நல்லாயிருக்குனு நிறைய பேர் சொன்னாங்க. படத்தோட டைரக்டர் அட்லிதான் ரொம்ப அர்ப்பணிப்போட இருந்தார். செட்டில் எந்த பிரச்னை இருந்தாலும் அவர்தான் அதைத் தீர்க்க முயற்சிப்பார். நிறைய மனிதநேயம் கொண்ட மனிதர் அட்லி'' என்கிறார் ஜார்ஜ் மரியான்.

‘கோச்.... கோச்சுக்காதீங்க  கோச்ச்ச்ச்ச்ச்...!’ - பிகில் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்
அடுத்த கட்டுரைக்கு