Published:Updated:

‘எதற்கும் அஞ்சாதவர்; சர்ச்சையே வாழ்க்கையாகக் கொண்டவர்’ - பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்

சத்யா கோபாலன்

தன் மனதிற்குப் படும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் கிரிஷ் கர்னாட். இதனால் தன் வாழ்நாளின் பாதியை சர்ச்சைகளை சந்தித்தவாரே கடந்தார்

கிரிஷ் கர்னாட்
கிரிஷ் கர்னாட்

பிரபல நடிகரும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் இன்று காலை பெங்களூருவில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன் 81 வயதில் மரணமடைந்துள்ளார்.

கிரிஷ் கர்னாட்
கிரிஷ் கர்னாட்

1938-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த இவர் கர்நாடகா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியியலும், பிறகு ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவவியலும், அரசியல் மற்றும் பொருளாதார துறைகளிலும் பட்டம் பெற்றார். இலக்கியம் மீது கொண்ட ஆர்வத்தினால் பின்னர் முழுநேர எழுத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

இவரின் முதல் படைப்பான 'யவாதி', மகாபாரத கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு 1961-ம் ஆண்டு எழுதப்பட்டு மிகவும் பிரபலமானது.

கிரிஷ் கர்னாட்
கிரிஷ் கர்னாட்

நாடகங்களில் பெரும்பாலும் அரசியல் பேசும்பொழுது ஆட்சியாளர்களின் சிக்கலைத் தவிர்க்க அதிகம் வரலாற்றுக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் சம கால அரசியலைப் பொருத்தி விமர்சிப்பார்கள். அப்படி முகமது பின் துக்ளக்கை வைத்து அப்போதைய அரசியலை இவர் கடுமையாக விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையானது. இருந்தாலும் இவரின் துக்ளக் கதாபாத்திரம் உலக அளவில் பாராட்டப்பட்டது.

இதையடுத்து 1970-ம் ஆண்டு உ.என்.அனந்தமூர்த்தியன் நாவலைத் தழுவி உருவாகிய 'சம்ஸ்காரா' என்ற படத்தில் நடிகராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பங்குபெற்றவர் பின் கன்னடம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்து,இயக்கம்,நடிப்பு என திரைத்துறையின் ஆல்ரவுண்டராக இருந்துள்ளார். தமிழில் ரட்சகன், காதலன், காதல் மன்னன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கிரிஷ் கர்னாட்
கிரிஷ் கர்னாட்

திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள், சாகித்திய அகாடமி விருது, பத்ம விபூஷண், பத்மபூஷன் வரை பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். 2011-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸின் 'சவுதர்ன் கலிபோர்னியா' பல்கலைக்கழகம் இவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் அளித்துள்ளது.

மதசார்பின்மைவாதியான இவர் 1992 பாபர் மசூதி இடிப்பிற்குக் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தது முதல் 2014-ல் மோடி பிரதமராவதை எதிர்த்தது வரை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற வலதுசாரிகளைத் தொடர்ந்து சாடி வருகிறார். தன் மனதிற்குப் படும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் கர்னாட். இதனால் தன் வாழ்நாளின் பாதியை சர்ச்சைகளை சந்தித்தவாரே கடந்தார் என்றே கூற வேண்டும்.