Published:Updated:

"பேட்டி கிடையாது; பார்ட்டி கிடையாது. கவுண்டமணி அந்தக் காலத்து அஜித்!" #HBDGoundamani

கவுண்டமணி
கவுண்டமணி

நடிகர் கவுண்டமணி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள தமிழ் சினிமாவைக் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம், தன்னுடைய நக்கல் பேச்சுகளாலும், நய்யாண்டித்தன நகைச்சுவையாலும் ஆட்சி செய்தவர், நடிகர் கவுண்டமணி. வயது பேதமில்லாமல், எல்லோராலும் கொண்டாடப்பட்ட வெகுசில கலைஞர்களில் ஓர் அதிசயக் கலைஞர் அவர். இன்று 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கவுண்டமணி பற்றிய சில தகவல்கள் இவை.

இளம் வயதிலேயே நாடகங்கள், திரைப்படங்களில் தலைகாட்டியிருந்தாலும், கிட்டத்தட்ட நடுத்தர வயதை எட்டும்போதுதான் கவுண்டமணிக்கு சரியான வாய்ப்புகள் வரத்தொடங்கின. நாகேஷ் நடித்த `சர்வர் சுந்தரம்' படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், எம்.ஜி.ஆர் நடித்த `கண்ணன் என் காதலன்’ படத்தின் மூலம்தான் திரையில் `நட ஸ்டேஷனுக்கு!' என்ற தனது முதல் வசனத்தைப் பதிவு செய்தார், கவுண்டமணி. கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தமிழ் சினிமாவின் இருபெரும் துருவங்களைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த '16 வயதினிலே' படம்தான் கவுண்டமணியையும் தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டியது. அதில், அவர் பேசிய 'பத்த வெச்சிட்டியே பரட்ட' வசனம் கொண்டாடப்பட்டது. பிறகுதான், கவுண்டமணிக்காகவே தனியாக காமெடி டிராக்ஸ் உருவாக்கப்பட்டது.

கவுண்டமணியோடு இணைந்து நடிக்கும் கதாநாயகர்களெல்லாம் தவறாது சொல்லும் ஒரு விஷயம், கவுண்டமணியின் டைமிங் சென்ஸ். காட்சியைப் படமாக்கிக்கொண்டிருக்கும்போது கவுண்டமணியின் டைமிங் சென்ஸ் அந்தளவிற்குக் கச்சிதமாக இருக்குமாம். அதேசமயத்தில், எப்பேர்ப்பட்ட கதாநாயகர்களுக்கும் கவுண்டமணியுடன் நடிப்பதென்றால் சற்று பயம்தான். காரணம், காட்சி படமாகிக் கொண்டிருக்கும்போதே கவுண்டமணி ஏதாவது கவுன்டர் அடித்துவிட, கதாநாயகர்களும் அடக்க முடியாமல் சிரித்து விழ, அந்த ஷாட் மீண்டும் மீண்டும் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுமாம். கூடவே, கவுண்டமணி என்னதான் வயதில் மூத்தவராக இருந்தாலும், எல்லா இளம் கதாநாயகர்களுக்கும் ஈடுகொடுத்து நடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருவகையில் பார்த்தால், அதுதான் கவுண்டமணியின் வெற்றி.

கவுண்டமணி
கவுண்டமணி

பலருடன் நடித்திருந்தாலும், சத்யராஜூடன் கூட்டணி சேரும்போது மட்டும் கவுண்டமணியின் `லொள்ளு' கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இந்தக் கூட்டணி முதன்முறையாக இணைந்து நடித்த `வேலை கிடச்சிடுச்சு' முதல் `பொள்ளாச்சி மாப்பிள்ளை' வரை சினிமாவில் இவர்கள் இருவரும் அடித்த லூட்டிகளுக்கு அளவில்லை. 

ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டால், படப்பிடிப்பிலிருந்து டப்பிங் வரை... சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் வந்துவிடுவாராம், கவுண்டமணி. சில நேரங்களில், துணை இயக்குநர்களை அழைத்துக்கொண்டு டப்பிங் பேசிவிட்டு வந்துவிட, அதன் பிறகுதான் படத்தின் இயக்குநருக்கே கவுண்டமணி டப்பிங் பேசிய விஷயம் தெரியவருமாம். அந்தளவிற்கு, தனது வேலைகளைச் சிரமெடுத்து முடிப்பார்.

ஆரம்ப காலங்களில் தனியாகவே நகைச்சுவை செய்து கொண்டிருந்த இவர், பின்னாள்களில் செந்திலுடன் இணைந்து பட்டையைக் கிளப்பினார். 80, 90-களிலிருந்து, இன்றுவரை... கவுண்டமணி - செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவின் பொக்கிஷக் கூட்டணியாக இருக்கிறது. கதாநாயகர்களைத் தாண்டி, இவர்களது கூட்டணி மிகப்பெரிய வியாபார வாய்ப்பாகப் பார்க்கப்பட்ட காலமும் இருக்கிறது. 80-களிலிருந்து, 90-களின் இறுதிவரை பல படங்களின் பெயர்கள், தற்போதைய இளவட்டத்தின் நினைவுகளில் தேங்கியிருக்கிறதென்றால், அதற்குக் காரணம் இந்தக் கூட்டணிதான். நல்லவேளையாக, கமல் - ரஜினி எடுத்த முடிவுபோல `பிரிந்து நடிப்போம்' என்ற முடிவை இந்தக் கூட்டணி எடுக்கவில்லை.

செந்திலை அடித்து, உதைத்து, திட்டித்தான் கவுண்டமணி பிரபலமானார் என்ற விமர்சனம் இன்றுவரை இருக்கிறது. உண்மையில், அவர் செந்தில் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருந்ததால்தான், மக்களுக்கு அவரை அதிகம் பிடித்துப்போனது. இவர்களது காலத்தில் புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தவர்களையெல்லாம், அடுத்த தலைமுறை மறந்துவிட்டது அல்லது கேலிக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால், கவுண்டமணியை மட்டுமே `நக்கல் மன்னன்’ என்ற அடைமொழியுடன் போற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், செந்தில் இல்லாமல் `மேட்டுக்குடி', `மன்னன்' போன்ற பல திரைப்படங்களில் தனியாக நடித்து தன்னை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், கவுண்டமணி.

"பேட்டி கிடையாது; பார்ட்டி கிடையாது. கவுண்டமணி அந்தக் காலத்து அஜித்!" #HBDGoundamani
 ஒரு நாள் பாருங்க.. நீங்க வாரத்திற்கு ஏழு விதமான காரில் படப்பிடிப்பிற்கு வருவீங்க
ரஜினி

செந்திலை அடித்து, உதைத்து, திட்டித்தான் கவுண்டமணி பிரபலமானார் என்ற விமர்சனம் இன்றுவரை இருக்கிறது. உண்மையில், அவர் செந்தில் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருந்ததால்தான், மக்களுக்கு அவரை அதிகம் பிடித்துப்போனது. இவர்களது காலத்தில் புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தவர்களையெல்லாம், அடுத்த தலைமுறை மறந்துவிட்டது அல்லது கேலிக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால், கவுண்டமணியை மட்டுமே `நக்கல் மன்னன்’ என்ற அடைமொழியுடன் போற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், செந்தில் இல்லாமல் `மேட்டுக்குடி', `மன்னன்' போன்ற பல திரைப்படங்களில் தனியாக நடித்து தன்னை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், கவுண்டமணி.

செந்திலை அடித்து உதைத்து நடித்துக்கொண்டிருந்த அதே காலத்தில்தான், தான் ஏமாறும்படியான வேடத்திலும் மனமுவந்து நடித்தார். அதற்கு சிறந்த உதாரணம், `சேதுபதி ஐ.பி.எஸ்' திரைப்படம். நம்பியாரிடம் எடுத்தெறிந்து பேசிவிட்டு, செந்திலிடம் சென்று வேலை பற்றிக் கேட்க, அவர் வேலை பற்றிச் சொல்ல, கவுண்டமணி அடையும் ஏமாற்றம் அதகள சிரிப்பு. நகைச்சுவை மட்டுமல்ல, சில படங்களில் 'பகீர்' கிளப்பும் வில்லனாகவும் வருவார். திடீரென குணச்சித்திர கதாபாத்திரமாக மனதில் நிற்பார். தமிழ் சினிமாவின் ஹிட் படங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்து வடிகட்டிப் பார்த்தால், அதில் பல படங்களின் வெற்றிக்கும், அள்ளிய வசூலுக்கும் காரணமாக தன் பெயரைப் பதிந்து வைத்திருப்பார், அவர். 

கவுண்டமணி ஒரு வித்தியாசமான மனிதரும்கூட!. பெரும்பாலும் எந்தப் படத்திற்காகவும், எந்த நிகழ்ச்சிக்காகவும் தொலைக்காட்சிகளின் பக்கம் தலைகாட்டியதில்லை. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற எல்லாத் தொலைக்காட்சிகளிலும் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறாத நாள்களே இல்லை. அந்தளவிற்குப் பலதரப்பட்ட மக்களையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார், இந்த நகைச்சுவை வள்ளல். முதல் மகளின் திருமணத்தின்போதுதான், இவருக்கு கல்யாண வயதில் பெண் இருக்கும் விவரமே வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. அந்தளவுக்கு மீடியாவை விட்டு விலகியே இருக்கிறார். அதேபோல, விழாக்கள், பார்ட்டிகள் என எதிலும் கலந்துகொள்ளும் வழக்கமும் இவருக்குக் கிடையாது. இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, `இவர் அந்தக் காலத்து அஜித்குமார்' என ஒரு நிகழ்ச்சியில் கவுண்டமணியை வைத்தே கலாய்த்தார், சந்தானம். 

`தமிழ்ப் படங்கள் தவிர்த்து வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்கமாட்டேன்' என்று சொன்னதோடு, அதை நிகழ்த்தியும் காட்டியவர், கவுண்டமணி. `கிழக்கே போகும் ரயில்' படத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட வசனத்தோடு, எக்ஸ்ட்ரா இரண்டு வசனங்கள் சேர்த்துப் பேசிவிட, இயக்குநர் பாரதிராஜாவிடம் கன்னத்தில் அடிவாங்கினார், கவுண்டமணி. அப்படியே காலங்கள் சுழல பின்னாளில், ஒரு நாளைக்குப் பல லட்சங்கள் கொடுக்கத் தயாராக இருந்தும், கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்காமல் பல முண்ணனி இயக்குநர்கள் தவம் கிடக்கும் நிலையைத் தனது உழைப்பின் மூலம் உருவாக்கினார் இவர். 

இவர் அந்தக் காலத்து அஜித்குமார்
சந்தானம்

இவர் நடிக்க வந்த புதிதில் ஷூட்டிங் முடிந்தவுடன் பெரிய நடிகர்களை நல்ல காரில் அனுப்பி வைப்பார்களாம். கவுண்டமணி போன்ற துணை நடிகர்களைக் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு வண்டியில் ஏற்றிவிடுவார்களாம். ஒருநாள் நேரம் கூடிக்கொண்டேபோக, துணை நடிகர்கள் செல்லும் வண்டி கிளம்பவில்லை. உடனே, நடக்க ஆரம்பித்துவிட்டார் கவுண்டமணி. இதைப் பார்த்த ரஜினி, காரிலிருந்து இறங்கி இவருடன் நடந்து, 'ஒரு நாள் பாருங்க.. நீங்க வாரத்திற்கு ஏழு விதமான காரில் படப்பிடிப்பிற்கு வருவீங்க' என்றாராம், ரஜினி. அவர் சொன்னது அப்படியே நடந்தது. 

கவுண்டமணியின் சிறப்பம்சம், அவரது தனித்துவம்தான். அவரிடம், எந்த நடிகரின் சாயலும் இல்லை. எவரையும் முன்மாதிரியாகக் கொண்டு நடிக்கவில்லை. சினிமாவுக்காக தனது நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் மனிதர்களின் யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் நடிக்கத் தவறவில்லை. அவர் பேசும் வசனங்கள் மற்றவர்களை ஏளனமாகப் பேசுவதாக இருந்தாலும், உண்மையை உணர்த்துவதாக இருந்தது. அதனால்தான் ரசிகர்கள் இவரது நகைச்சுவைகளைப் பெரிதும் ரசித்தனர்; வரவேற்றனர்.  

கவுண்டமணி
கவுண்டமணி

இவர் நகைச்சுவை நடிகர் மட்டும்தானா... கிடையவே கிடையாது. `சின்னக்கவுண்டர்' படத்தில் விஜயகாந்த் மீது பழிசொல்லும் ஊரார்கள் துணியை இனி துவைக்க மாட்டேன் என்று சொல்லும் அந்தக் காட்சியில், கதைக்குள் பயணிக்கும் பாத்திரமாக மாறி நெஞ்சங்களை நெகிழச் செய்தார். 

வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளிலும், ஊடங்களிலும் கவுண்டமணி இறந்துவிட்டதாகச் செய்திகள் வரும்போது, `ஏன்டா, ஒரு மனுஷன எத்தனவாட்டிடா சாகடிப்பீங்க?’ என அதையும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டார். ஒருமுறை படப்பிடிப்புக்காக வெளியூரில் இருந்த சிவாஜி, `மனசு சரியில்ல, யாராவது கவுண்டமணியின் நகைச்சுவை கேஸட்டை வாங்கி வாங்கப்பா' எனச் சொன்னதைக் கேட்டு, கலங்கிவிட்டாராம்.  

ட்விட்டரில் முன்னனி நடிகர்களின் பிறந்தநாளின்போது மட்டும்தான் ரசிகர்கள் வாழ்த்துகளை அள்ளிக்குவித்து டிரெண்ட் ஆக்குவார்கள். முதல்முறையாக நகைச்சுவை நடிகர் ஒருவரின் பெயர் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது, கவுண்டமணிக்குத்தான்!. தற்போது சினிமாவில் நடிக்காவிட்டாலும், இன்று மீம்ஸ்களின் நாயகனாக வலம் வருகிறார், கவுண்டமணி. இணையதளத்தில் நுழைந்தால் இவரது படத்தையும், வசனத்தையும் வைத்து வராத மீம்ஸ்களே இல்லை. இப்பொழுது புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும், ரசிகர்கள் இவரை தினம்தினம் கொண்டாடித் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில், ரசிகர்கள் மனதில் கவுண்டமணி என்றைக்குமே கதாநாயகன்தான்!

தமிழ் சினிமாவில் பொன்விழா ஆண்டை நோக்கிப் பயணித்து வரும் கவுண்டமணிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இவரது நடிப்பில் பிடித்த காட்சி, ரசித்த விதம் குறித்து கமென்ட் பாக்ஸில் பகிந்துகொண்டு, நீங்களும் அவரை வாழ்த்தலாமே!

அடுத்த கட்டுரைக்கு