Published:Updated:

“அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும்!”

குண்டு கல்யாணம்
பிரீமியம் ஸ்டோரி
குண்டு கல்யாணம்

லட்சுமி நாராயணன் என்கிற என் நிஜப் பெயருக்கு பதில் கல்யாணம் என்கிற பெயரைச் சொல்லியே கேபி சார் என்னைக் கூப்பிட ஆரம்பிச்சார்

“அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும்!”

லட்சுமி நாராயணன் என்கிற என் நிஜப் பெயருக்கு பதில் கல்யாணம் என்கிற பெயரைச் சொல்லியே கேபி சார் என்னைக் கூப்பிட ஆரம்பிச்சார்

Published:Updated:
குண்டு கல்யாணம்
பிரீமியம் ஸ்டோரி
குண்டு கல்யாணம்

80களின் தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளில் தவறாமல் இடம்பெறும் முகம் குண்டு கல்யாணத்துடையது. அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசியாக பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்களில் உரையாற்றிய குண்டு கல்யாணம், இப்போது கவனிப்பாரற்று வீட்டில் இருக்கிறார். இத்தனைக்கும் அவர் குடியிருக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் அருகில்தான் இருக்கிறது. ‘ஆனந்த விகடன்’ என்றதும் உடல்ரீதியான அத்தனை சங்கடங்களையும் ஓரம் வைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்...

“அந்தக்காலத்துல தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் சிறுசேமிப்பு, குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தி நாடகம் போடுவாங்க. அந்த நாடகங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் என் அக்கா நடிச்சிட்டிருந்தாங்க. அவங்க வளர்ந்திட்டதால என் அப்பா என்னை நடிக்கச் சொல்லி டிரெயினிங் கொடுத்தார். அந்தச் சமயம் எம்.ஜி.ஆர் சிறுசேமிப்பு வாரியம் துணைத்தலைவரா இருந்தார். அந்த நாடகத்தில் கடைசியில் என் அப்பாவாக நடிப்பவர் ‘இதையெல்லாம் உனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்க’ன்னு என்கிட்ட கேட்பார். அதுக்கு நான், ‘எம்.ஜி.ஆர் எங்க ஸ்கூலுக்கு வந்து இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாருப்பா’னு சொல்லுவேன். அப்படி மேடையில் தலைவர் பெயர் சொன்னவுடன் அங்கே இருந்தவங்க எல்லாரும் என்னைத் தூக்கி மாலையெல்லாம் போட்டுக் கொண்டாடிட்டாங்க. அப்ப எனக்கு மூணு வயசு! அப்பவே தலைவருக்கும் எனக்குமான பந்தம் ஆரம்பமாகிடுச்சு.

“அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும்!”

விசு சார் அவருடைய ‘மழலைப்பட்டாளம்’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு ‘கல்யாணம்’னு பெயர் வச்சார். லட்சுமி நாராயணன் என்கிற என் நிஜப் பெயருக்கு பதில் கல்யாணம் என்கிற பெயரைச் சொல்லியே கேபி சார் என்னைக் கூப்பிட ஆரம்பிச்சார். அப்படியே என் பெயர் ‘கல்யாணம்’ ஆகிடுச்சு. என் அப்பா இலங்கையில் ஒரு நாடகத்தில் நடித்தார். அப்போதிலிருந்து அவரை ‘குண்டு’ கருப்பையான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அப்பாவிற்குப் பிறகு அந்தப் பெயரை என் பெயரோடு சேர்த்து ‘குண்டு கல்யாணம்’னு வச்சிக்கிட்டேன்.

பிறகு, சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன். குழந்தைகள் பலருக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. 1996-ல் அ.தி.மு.க தோல்வி அடைஞ்ச பிறகு அடுத்த நாடாளுமன்ற எலெக்‌ஷன் அறிவிச்சிருந்தாங்க. அந்தச் சமயம் கட்சியில் நான் ஒருத்தன் மட்டும்தான் நடிப்புத் துறையைச் சார்ந்தவன். ஒருமுறை தலைமைக் கழகத்தில், அம்மா என்னைச் சந்திச்சாங்க. ‘கொஞ்ச நாள் சினிமாவை ஒதுக்கி வச்சிட்டு கட்சியில் முழுமையா கவனம் செலுத்துங்க’ன்னு என்கிட்ட சொன்னாங்க. அதுதான் சினிமாவில் அடிக்கடி முகம் காட்டாமல் போனதுக்கான காரணம். அப்போதெல்லாம், இன்னைக்கு நடிகர்கள் வாங்கும் அளவுக்கு பெரிய சம்பளம் கிடையாது. நிறைய படங்களில் நடிச்சேன்.. ஆனா, நிறைய சம்பாதிக்கலை.

“அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும்!”

அம்மா இறந்த பிறகு வருமானம் முழுமையாகப் போயிடுச்சு. அவங்க இருந்த வரையில் கட்சிக் கூட்டங்கள் நடக்கும். அவங்க போன பிறகு எந்தக் கூட்டங்களும் நடப்பதில்லை. இன்னைக்கும் நாங்க சாப்பிடுற சாப்பாட்டில் எம்.ஜி.ஆர் பெயர்தான் எழுதியிருக்கு. தலைவருக்கும், அம்மாவுக்கும், இந்தக் கட்சிக்கும் அத்தனை விசுவாசமா இருந்தேன். அரசியல்தான் என் உடல் பிரச்னைக்குக் காரணம். பல ஊர்களுக்கு கட்சிக்காகப் பேசப் போவோம். ஆறு மணிக்கு மேடையில் ஏற்றுவாங்க. பன்னிரண்டு மணிக்கு மைக்கைக் கையில் கொடுப்பாங்க. அதுவரையில் இயற்கை உபாதைக்குக்கூட ஒதுங்க முடியாது. மீட்டிங் முடிந்த பிறகுதான் போக முடியும். அப்படி அடக்கி, அடக்கி கிட்னி பிரச்னை வந்துடுச்சு.

அம்மா போன பிறகு, எங்க வாழ்க்கை காற்று போன பலூன் மாதிரி ஆகிடுச்சு. சேமித்து வைத்திருந்த மொத்தப் பணமும் மருத்துவச் செலவுக்கே சரியாப்போச்சு. வாரத்துக்கு ரெண்டு நாள் டயாலிசிஸ் பண்ணிட்டிருக்கேன். அதனால் உடம்பில் நிறைய பக்க விளைவுகள் வருது. அதுக்காகவும் ட்ரீட்மென்ட் பண்ணிட்டு இருக்கேன். வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, அன்றாடத் தேவைன்னு எல்லாத்துக்கும் கஷ்டப்பட்டுட்டி ருக்கேன். அம்மா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் எனக்கு உதவி பண்ணியிருப்பாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உடல்நிலை சரியில்லாமல் நான் மருத்துவமனையில் இருக்கிறேன்னு கேள்விப்பட்டு ஓ.பி.எஸ், என் பொண்ணை அழைத்து கையில் பணம் கொடுத்து அனுப்பினார்” என்றவரிடம் இப்போதைய இரட்டைத் தலைமை குறித்துக் கேட்டோம்.

“அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும்!”

“கட்சியைப் பொறுத்தவரை ஒற்றைத் தலைமைதான் அவசியம்! இப்போ எனக்கு உதவி தேவைன்னு யார்கிட்ட கேட்கறதுன்னு தெரியல. ஈ.பி.எஸ் வீட்டுக்கு உதவி கேட்டுப் போனா, அலுவலகத்துக்குப் போகச் சொல்றாங்க. அலுவலகம் போனா, வீட்டுக்குப் போய் மனு கொடுங்கன்னு சொல்றாங்க. ஒருத்தர்கிட்ட உதவி கேட்டா இன்னொருத்தர்கிட்ட கேட்கச் சொல்றாங்க. கமாண்டிங் பவர் இருக்கிற யாராவது ஒருத்தர் தலைவரானால் கட்சிக்கு நல்லது. அது யாராக இருந்தாலும் சரி.

சசிகலா மட்டும்தான் என்னை ஞாபகம் வச்சு போன் பண்ணி உடல்நலம் குறித்து விசாரிச்சாங்க. அவங்ககிட்ட பேசுனது ரொம்பவே ஆறுதலா இருந்தது. கட்சியில் எத்தனையோ பேர் மந்திரியா இருந்திருக்காங்க. அத்தனை பேருக்காகவும் நான் உழைச்சிருக்கேன். எவ்வளவு பேருக்காக மணிக்கணக்கா தொண்டை கிழியக் கத்திப் பிரசாரம் பண்ணியிருப்பேன். வேலுமணி சார்கிட்டலாம் அத்தனை லெட்டர் கொடுத்திருக்கேன். திரும்பிக்கூடப் பார்க்கலை” என்றவரிடம் இன்றைய ஆட்சி குறித்துக் கேட்டேன்.

“கொரோனா, மழை வெள்ளம் எல்லாம் தாண்டி அவங்களுடைய செயல்பாடுகள் எல்லாம் நல்லா இருக்கு. குறை சொல்லும் அளவுக்கெல்லாம் இல்லை. அவங்க எதிர்க்கட்சியில் இருந்தப்போ எங்களைக் கடுமையாக விமர்சனம் பண்ணி எதிர்த்தாங்க. அந்த அளவுக்கு, நாங்க இன்னைக்கு அவங்களை விமர்சிக்கத் தவறிட்டோம்னு நினைக்கிறேன்.

“அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும்!”

சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம் ‘சார்பட்டா பரம்பரை.’ குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி ஒரு ஷோ பண்ண சென்னைக்கு வந்திருந்தார். அப்போ, நாங்க பாக்ஸிங் கிளப்பில் இருந்தோம். எனக்கு சுதாகர், பழனின்னு ரெண்டு பேர்தான் கோச். முகம்மது அலி சார் கூட சண்டை போட என்னைத்தான் செலக்ட் பண்ணியிருந்தாங்க. நீலநிற ஜெர்சி எல்லாம் போட்டு முதல் வரிசையில் அவர்கூட சண்டை போட ரெடியா உட்கார்ந்திருந்தேன். தலைவர்தான் அந்தச் சண்டையைத் தொடக்கி வைக்க வந்திருந்தார். அவர்கிட்ட ஒரு பையனைக் கூட்டிட்டு வந்து, ‘இந்தப் பையன் சூப்பரா சண்டை போடுவான்’னு அறிமுகப்படுத்தி வச்சாங்க. உடனே தலைவர், ‘அப்போ முகம்மது அலி கூட இவன் சண்டை போடட்டும்’னு அவனை மேடையில் ஏற்றச் சொல்லிட்டார். அதனால, நான் அவரோட சண்டை போட முடியாமப்போச்சு. ‘சார்பட்டா பரம்பரை’ படம் பார்த்தப்போ இந்த எல்லா நினைவுகளும் ரீவைண்ட் ஆச்சு. இந்த இடத்தில் ரஞ்சித் சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன்” என்றவர் சில நொடி மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்.

“சினிமாவிலிருந்து கார்த்தி சார் மட்டும் 25,000 ரூபாய் கொடுத்து உதவி பண்ணினார். வேற யாரும் எந்த உதவியும் பண்ணலை. ரஜினி சாரிடம் உதவி கேட்டு போன் பண்ணினேன். அவர் பி.ஏ எடுத்தார். விஷயத்தைச் சொல்லவும் ‘சார் பண்ணை வீட்டில் இருக்கார்... வந்தவுடன் உங்ககிட்ட பேசச் சொல்றேன்’னு சொன்னார். தொடர்ந்து போன் பண்ணும்போதெல்லாம் இதே பதில்தான் வந்தது. அவர்கிட்ட தகவல் போனதான்னு எனக்குத் தெரியலை. அவர் காதுக்குப் போயிருந்தா நிச்சயம் எனக்கு உதவி பண்ணியிருப்பார்” என்று சொல்லும்போதே குண்டு கல்யாணத்தின் குரல் கம்மத்தொடங்குகிறது.