சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ஷங்கர் சார் தயங்கித் தயங்கிக் கூப்பிட்டார்!”

குருசோமசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
News
குருசோமசுந்தரம்

ரொம்பவே சந்தோஷமா போயிட்டிருக்கு. என் பூர்வீகம் மதுரை. அங்கே சுத்திச் சுத்தி தியேட்டர்கள் அதிகம். வாரத்துல மூணு படங்களாவது பார்த்திடுவேன்.

பூங்கொத்துகள், பாராட்டுகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருப்பதில் மகிழ்ந்து நெகிழ்கிறார் குருசோமசுந்தரம். இந்த ஆண்டிற்கான ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் அவார்டு அவருக்குக் கிடைத்திருக்கிறது. ‘மின்னல் முரளி'யில் வில்லன் ஷிபுவாக அவர் மிரட்டியதற்காக இந்த விருது. ‘ஜோக்கர்' படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த அவர், இப்போது தமிழைவிட மலையாளத்தில் செம பிஸியாகிவிட்டார். அதில் மோகன்லால் இயக்கும் படமும் ஒன்று. கமலின் ‘இந்தியன் 2', பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் ஒரு படத்தின் கதை நாயகன், இதைத் தவிர தெலுங்கிலும் கால் பதித்திருக்கிறார். குருசோமசுந்தரத்திற்கு வாழ்த்து சொல்லிப் பேசினேன்.

“ஷங்கர் சார் தயங்கித் தயங்கிக் கூப்பிட்டார்!”

`` ‘மின்னல் முரளி'க்கு விருது கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?’’

‘‘ஒரு நடிகனுக்கு காமிக் ஸ்டோரி அமையறது அவனுடைய திரைப்பயணத்துல எப்பவாவதுதான் நடக்கும். குடும்பக் கதைகள், ஹாரர், த்ரில்லர்னு ஜானர்கள் அமையறது அடிக்கடி நடக்கறதுதான். ஆனா, ‘மின்னல் முரளி' மாதிரி ஃபேன்டஸிக்கு விருதும் கிடைச்சிருக்கறது இன்னும் சந்தோஷமா இருக்கு. இயக்குநர் பேசில் ஜோசப் என்கிட்ட கதை சொல்ல வரும்போது நான் மூணாறுல இருந்தேன். அவர் கதை சொன்ன பாணியே அசத்தலா இருந்தது. அவர் மொபைல்ல பின்னணி இசையெல்லாம் செட் செய்திருந்தார். பேக்ரவுண்ட் மியூசிக் இழையோட அழகா கதை சொன்னார்.

சூப்பர் ஹீரோ பற்றி எனக்கிருந்த நிறைய கற்பிதங்களை அந்தப் படம் உடைத்தெறிஞ்சிடுச்சு. ராஜுமுருகன் ஒருமுறை சொன்னது ஞாபகத்துக்கு வருது. ‘சிறந்த உள்ளூர் சினிமாதான், உலக சினிமா' என்பார் அவர். உலக சினிமா எடுக்க பிரயத்தனப்பட வேண்டியதில்லை. ஸோ, உள்ளூர் சூப்பர் ஹீரோதான் ‘மின்னல் முரளி.'

அது ஓ.டி.டி-யில் வெளியானதால நாடுகள், மொழிகள் கடந்தும் நிறைய பேர் பார்த்திருக்காங்க. என்னோட தியேட்டர் ப்ளே நண்பர்கள்ல சிலர் போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ்ல இருக்காங்க. அவங்ககிட்ட இருந்தும் பாராட்டுகள் கிடைச்சதை கொஞ்சமும் எதிர்பார்க்கல. இன்னொரு விஷயம், இந்தப் படம் கமிட் ஆகி நாலஞ்சு மாசத்துக்குப் பிறகுதான் படப்பிடிப்புக்குக் கிளம்பினாங்க. இடையே எனக்கு நேரம் இருந்ததனால, மலையாளம் எழுதப் படிக்கக் கத்துக்கிட்டேன். ஷூட்டிங் போன பிறகு, ஸ்கிரிப்ட்டை வாங்கிப் படிச்சுப் பார்த்து நடிச்சேன். டோவினோ தாமஸ், பேசில் ஜோசப்னு எல்லாருமே இப்ப நல்ல நண்பர்களாகிட்டாங்க. இப்படி விருதைத் தாண்டி இனிமையான தருணங்கள் நிறைய இருக்கு.''

`` `ஆரண்ய காண்டம்' டு ‘இந்தியன் 2.' எப்படிப் போயிட்டிருக்கு உங்க திரைப்பயணம்?’’

‘‘கூத்துப்பட்டறையில பல வருஷம் இருந்திருக்கேன். நிறைய நாடகங்கள், மேக்கப் பண்ணிப் பார்க்கறது, சிலம்பம், களரின்னு நிறைய முன் அனுபவங்களோடுதான் சினிமாவுக்கு வந்தேன். ‘சந்திரகிரி'ங்கற தியேட்டர் ப்ளேயில் வித்தியாசமான வாய்ஸ் மாடுலேஷன்ல முயற்சி பண்ணி நடிச்சிருப்பேன். அதைப் பார்த்துதான் தியாகராஜன் குமாரராஜா எனக்கு ‘ஆரண்ய காண்டம்’ வாய்ப்புக்கொடுத்தார். அவரோடு சேர்ந்து அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்தும் நிறைய கத்துக்கொடுத்தார். ‘ஜோக்கர்'ல மன்னர் மன்னனா நடிச்ச பிறகு, அதைப் போல பாவப்பட்ட ரோல்கள்தான் அதிகம் தேடி வந்துச்சு. ‘வஞ்சகர் உலகம்'ல வில்லனா நடிச்சிருந்தேன். தொடர்ந்து வில்லன் ரோல்கள் தேடி வந்ததுச்சு. ஒரே மாதிரி பண்ணினால் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்குவோம். அதனால வித்தியாசமான கேரக்டர்கள் பண்ண விரும்பினேன். ஒரு படத்தில் கமிட் ஆனதும், அந்தப் படத்தின் இயக்குநரோட நல்ல புரிதலையும் நட்பையும் வளர்க்கறதுதான் கேரக்டர் இயல்பா வருவதற்கான எனர்ஜியைக் கொடுக்குது. மாற்று மொழிகளிலும் கேரக்டர்களை நான் சிறப்பா பண்ண முடியறதுக்கு அதுதான் காரணம்னு நினைக்கறேன். எனக்குன்னு ஒரு டிரீம் ரோல் நினைச்சதில்ல. மத்தவங்க டிரீம் பண்ற ரோலை, வெளிக்கொண்டு வர்றதுதான் முக்கியம். அப்படி கவனம் செலுத்தினாலே சிறப்பா அமையும்னு நம்புறேன்.''

“ஷங்கர் சார் தயங்கித் தயங்கிக் கூப்பிட்டார்!”

`` `இந்தியன் 2'-ல உங்க போர்ஷன் ஷூட் முடிஞ்சதா? அடுத்து கையில் இருக்கும் படங்கள்?’’

‘‘முழுதா இன்னும் முடியல. ரொம்பவே ஸ்பெஷல் ஒர்க் பண்றேன். பிப்ரவரியிலும் இருக்கும்னு சொல்லியிருக்காங்க. ஷங்கர் சார் என்கிட்ட, ‘இந்த ரோலுக்கு உங்களை எப்படிக் கூப்பிடுறது'ன்னு தயங்கித் தயங்கிக் கூப்பிட்டார். ஆனா, அந்த ரோல் எனக்கு ரொம்பவும் பிடிச்சிடுச்சு. ‘கண்டிப்பா வந்து நடிக்கறேன்’னு சந்தோஷமா சொல்லியிருக்கேன். இப்ப மலையாளத்துல நிறைய படங்கள் பண்ணிட்டிருக்கேன். அதுல மோகன்லால் சார் படமும் ஒண்ணு. அங்கே நான் நடிச்சு முடிச்ச படங்களே நாலஞ்சு இருக்கும். அதெல்லாம் அடுத்தடுத்து ரிலீஸுக்கும் ரெடியாகிடுச்சு.

பா.இரஞ்சித் இயக்கத்துல நடிக்கணும்னு விரும்பினேன். அந்த ஆசை ‘விக்டிம்' ஆந்தாலஜியில் அவர் இயக்கின ‘தம்மம்'ல நிறைவேறிடுச்சு. இப்ப அவர் தயாரிப்புல நடிக்கறது சந்தோஷமா இருக்கு. டைட்டில் ரோல் பண்றேன். அறிமுக இயக்குநர் தினகரன் டைரக்ட் பண்றார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தெலுங்கிலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கேன். புது டீம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கல.''

``மோகன்லால் இயக்கி நடிக்கும் படம் எப்படிப் போகுது?’’

‘‘ரொம்பவே சந்தோஷமா போயிட்டிருக்கு. என் பூர்வீகம் மதுரை. அங்கே சுத்திச் சுத்தி தியேட்டர்கள் அதிகம். வாரத்துல மூணு படங்களாவது பார்த்திடுவேன். மோகன்லால் சார் படங்கள் ஒண்ணுவிடாமல் பார்த்திருக்கேன். ‘மின்னல் முரளி' ரிலீஸுக்கு முன்னாடி அவரே எனக்கு போன் பண்ணிக் கூப்பிட்டார். ‘நான் உங்க ரசிகன். நீங்களே என்னைக் கூப்பிட்டிருக்கீங்க’ன்னு ஆனந்தமாகி போய் நடிக்கிறேன். இந்தப் படத்துல மோகன்லால் சார் டைரக்‌ஷனோட நடிக்கவும் செய்யறார். இது 3டி படம். லைவ் லொகேஷன்கள்ல 3டி கேமராவுலேயே ஷூட் பண்றாங்க. எனக்கும் புது அனுபவமா இருக்கு.''