Published:Updated:

" இப்போ நான் ரெண்டு படத்துல ஹீரோ" - `மெட்ராஸ்' ஹரி கிருஷ்ணன்

சனா

நடிகர் ஹரி கிருஷ்ணன் `சிறகு' படத்தில் ஹீரோவாக நடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார்.

மெட்ராஸ் ஜானி
மெட்ராஸ் ஜானி

பா.இரஞ்சித் இயக்கிய `மெட்ராஸ்' படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் நடித்தவர், நடிகர் ஹரி கிருஷ்ணன். தொடர்ந்து, `கபாலி' `வடசென்னை' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தற்போது குட்டி ரேவதி இயக்கியிருக்கும் `சிறகு' படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஹரி கிருஷ்ணன்
ஹரி கிருஷ்ணன்

``நான் நிறைய `மைம்' ஸ்கிரிப்ட்ஸ் பண்ணுவேன். நானே கதை, திரைக்கதை எழுதி, மியூசிக் பண்ணி மைம் பண்ணியிருக்கேன். இந்தத் துறையில் இருந்ததுனால, சினிமாமேல எனக்கு இயல்பாவே காதல் இருந்தது. சினிமாவுல நடிக்கணும்னு நினைச்சேன். ஆனா, சினிமா என்னை இந்தளவுக்குச் சீக்கிரம் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கும்னு நினைக்கவே இல்லை. என் நண்பர் ஒருத்தர் `அட்டக்கத்தி' படத்துல நடிச்சார்.

அப்போ ரோட்டோரம் நின்னு ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன். என்னைப் பார்த்த ரஞ்சித் சார், என்னைப் பற்றி விசாரிச்சிட்டு, `ஒருநாள் ஷூட்டிங்கிற்கு வா, நல்லா நடிச்சா எடுத்துக்கிறேன்'னு சொன்னார். பிறகு நான் நடிச்சதைப் பார்த்துட்டு, தொடந்து வாய்ப்பு கொடுத்தார்.

Hari Krishnan
Hari Krishnan

`மெட்ராஸ்' படத்துல `ஜானி' கேரக்டர் பெரியளவில் பேசப்படும்னு நம்பிக்கை கொடுத்ததே அவர்தான். பிறகு பல படங்களில் நடிச்சிருக்கேன். எல்லாமே சின்னச் சின்ன கேரக்டர்ஸ்தான். `வடசென்னை' படத்துல வெற்றி மாறன் சார் நல்ல ரோல் கொடுத்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வந்தா, எனக்கு முக்கியமான ரோல் கிடைக்கும். ஏன்னா, படத்தில் செந்திலை தனுஷ்தான் தாக்கினார்ங்கிற உண்மை தெரிஞ்ச ஒரே ஆள் நான்தான்." என்றவரிடம், சில கேள்விகள்.

`` `சிறகு' திரைப்படம் பற்றி?"

`` `மரியான்' படத்துல ஒரு ரோல் பண்ணியிருந்தேன். அப்போ இருந்தே எனக்கு குட்டி ரேவதி மேடம் பழக்கம். அவங்க `மரியான்'ல உதவி இயக்குநரா வொர்க் பண்ணாங்க. பிறகு, அவ்வளவா பேசிக்கிட்டதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அவங்க எனக்கு போன் பண்ணி, `ஒரு படம் பண்றேன், நடிக்கிறியா?'னு கேட்டாங்க. பிறகு, நேரில் சந்திச்சேன். கதையைச் சொல்லிட்டு, 'நீதான் ஹீரோ'ன்னு சொன்னாங்க. கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தாலும், சந்தோஷமா இந்தப் படத்துல நடிச்சேன். 'சிறகு' ஒரு டிராவல் படம். இந்தப் படத்துக்காக தமிழ்நாடு முழுக்க டிராவல் பண்ணியிருக்கோம். காளி வெங்கட்டும் இந்தப் படத்துல முக்கியமான கேரக்டர்ல வர்றார்." 

"சினிமா, எழுத்தைப்போல அல்ல... அது பலரின் கூட்டுத்திறமை!" - கவிஞர் குட்டி ரேவதி

``ஹீரோவா நடிக்கிறதைக் கேட்டு, இயக்குநர் பா.இரஞ்சித் என்ன சொன்னார்?"

``ரொம்ப சந்தோஷப்பட்டார். `நம்மகிட்ட இருந்த பையன் வெளியே ஒரு படத்துல ஹீரோவா நடிச்சிருக்கான்'னு சந்தோஷப்பட்டார். இந்தப் படத்துக்குப் பிறகு ரஞ்சித் சார் தயாரிக்கிற ஒரு படத்திலும் நான் ஹீரோவா நடிக்கிறேன். வெற்றி மாறனின் உதவியாளர் பாஸ்கர் சாமி டைரக்ட் பண்றார். நல்ல கதையை வெச்சுக்கிட்டு, தயாரிப்பாளர் கிடைக்காம சுத்திக்கிட்டு இருந்தார். நான்தான், ரஞ்சித் சார்கிட்ட பேசிப் பார்க்கலாம்னு சொன்னேன். ரஞ்சித் அண்ணன் கதையைக் கேட்டார், அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நானே ஹீரோவா நடிச்சா நல்லாயிருக்கும்னு ரஞ்சித் அண்ணா நினைச்சார். அப்படித்தான் இந்தப் படத்துல ஹீரோ ஆனேன். ஜூலையில இந்தப் படத்தோட ஷூட்டிங் தொடங்குது.''

``இனி ஹீரோவாதான் நடிப்பீங்களா?"

``அதை இன்னும் முடிவு பண்ணல. நல்ல கதையில், கேரக்டரில் நடிக்கணும்னுதான் ஆசை. ரஞ்சித் சார் தயாரிப்புல `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்திலும் சின்ன ரோல் பண்ணியிருக்கேன்.''