Published:Updated:

``தண்ணீர் வாங்கிக் கொடுக்ககூட ஆள் இல்லை!’’ - மறைந்த நடிகர் ராஜசேகர் குறித்து`சத்யா’ இந்திரன்

இந்திரன், ராஜசேகர்
இந்திரன், ராஜசேகர் ( சத்யா சீரியல் காட்சி )

ராஜசேகர் அப்பா இறப்புக்கு அவர் வீட்டுக்குப் போறோம். அம்மா தனியா நின்னுட்டு இருக்காங்க.

`இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடல் மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தவர் ராஜசேகர். இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் தன் திறமையை வெளிப்படுத்தியவர். வெள்ளித்திரை மட்டுமன்றி சின்னத்திரையிலும் தடம் பதித்தவர். சரவணன் மீனாட்சி’, ‘மாப்பிள்ளை’ சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `சத்யா’ சீரியலிலும் நாயகனின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (8.9.2019) உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் இறப்பு குறித்து சத்யா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்திரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் ராஜசேகர்
நடிகர் ராஜசேகர்

``ராஜசேகர் அப்பா கூட நான், விஷ்ணு, சதீஷ் மூணு பேருமே ரொம்ப க்ளோஸ். அவரோட கடைசி நிமிடம் வரைக்கும் அவர்கூடதான் இருந்தேன். அப்பாவோட இறப்பு எங்களை ரொம்பவே பாதிச்சிடுச்சு. அவருக்கு உடம்புக்கு முடியாம போறதுக்கு 5 நாள் முன்னாடி, ஹாஸ்பிட்டல் சீன் ஒண்ணு ஷூட் பண்ணோம். அந்தக் காட்சிபடி, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும். நான் அவருக்கு எதுவும் ஆகாதுன்னு விஷ்ணுவுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி ஒரு காட்சி. அந்தக் காட்சி எடுக்கும்போதே அவருக்கு உடல்நிலை சரியில்லாம போனதா சொன்னாங்க. அதனாலதான் அந்தக் காட்சியில அவரால நடிக்க வர முடியலைன்னு சொன்னாங்க. பெருசா எதுவும் இருக்காது, அவருக்கு சரியாகிடும்னு நாங்க நம்பினோம். அவர் இல்லாமலேயே பல காட்சிகளையும், அவர் இருக்குற மாதிரியே ஷூட் பண்ணோம்.

கடைசியில இப்படி நடக்கும்னு யாருமே ஏதிர்பார்க்கலை. நாங்க ரொம்பவே அவரை மிஸ் பண்றோம்.

ராஜசேகர் அப்பா ரொம்ப பெரிய லெஜண்ட். நடிகர் மட்டுமல்ல, படம் இயக்கியிருக்கார், கேமரா மேனும்தான். கமல் வரைக்கும் நிறைய பேரை போட்டோ எடுத்திருக்கார். அவர் கூட இருந்தா அதிகமா கத்துக்க முடியும். நெருக்கமா பழகிட்டா நிறைய அட்வைஸ் பண்ணுவார். அவரோட அனுபவத்தை நமக்கும் கொடுப்பார். அதைவிட பெரிய விஷயம் எதுவும் கிடையாது.

இந்திரன், ராஜசேகர்
இந்திரன், ராஜசேகர்

புரொடக்ஷன்ல அவர் சாப்பிட்டு பார்த்ததே இல்லை. அவரோட மனைவி கையாலதான் சாப்பிடுவார். மேக்கப் போட்டு விடுறதுல இருந்து சாப்பாடு வரைக்கும் தங்கமா வச்சி பார்த்துக்குறாங்க. அந்த ஜோடியைப் பார்க்கும்போது அத்தனை சந்தோஷமா இருக்கும். இரவு ஷூட் முடியுற வரைக்கும் அப்பாவோட கூட இருந்து அவரைப் பார்த்துப்பாங்க. அவங்களுக்கு குழந்தை இல்லை.

அப்பா இறப்புக்கு அவர் வீட்டுக்குப் போறோம். அம்மா தனியா நின்னுட்டு இருக்காங்க. அதைப் பார்த்ததுமே உடைஞ்சி அழுதுட்டேன். எவ்வளவு பெரிய மனுஷன், வீடு நிறைய கூட்டம் வந்திருக்கு, ஒரு தண்ணீர் வாங்கிக் கொடுக்ககூட ஆள் இல்லை. அப்புறம், நானும் விஷ்ணுவும் எல்லாம் கவனிச்சிக்கிட்டோம். தண்ணீர் பாட்டில் வாங்குறதுல தொடங்கி இடுகாட்டுல அவரை எடுத்து வைச்சது வரைக்கும் கூட இருந்தோம். அப்பானு சும்மா வாய்ல இருந்து கூப்பிடல, மனசுல இருந்து வர்ற வார்த்தை அது. ஒரு அப்பாவுக்கு மகனா அந்த இடத்துல நடந்துகிட்டதுதான், அவருக்கு நாங்க பண்ணுற கடமையா இருக்கும்னு அப்போதான் உணர்ந்தேன்.

சத்யா சீரியல் நடிகர்கள்
சத்யா சீரியல் நடிகர்கள்

எங்க தோள் மேல கைபோட்டு நண்பனா பழகி, உரிமையா அதட்டி, குழம்பமான தருணத்துல கைதூக்கிவிட்டு நம்மகூடவே இருந்த ஆத்மாவை வழியணுப்புற வேளையை என்னால் ஏத்துக்கவே முடியலை. திரையில ஒண்ணா நடிக்கும்போது நிறைய கவுண்டர்களை சத்தமே காட்டாம சொல்லுவார். நாம விழுந்து சிரிச்சு மாட்டிப்போம். ஏதுமே நடக்காதது மாதிரி நிப்பார். நமக்குதான் திட்டுவிழும். ஹியூமரான மனுஷன் அவர்.

அப்பாவுக்கு 62 வயசாகுது, ஒரே டேக்குல நடிச்சுக் கொடுத்துட்டு, கையோட டப்பிங்கும் பண்ணிட்டுதான் போவார். அந்த வயசுல நாம இந்த அளவுக்கு அர்ப்பணிப்பா இருப்போமானு யோசிச்சா சந்தேகம்தான்.

இந்திரன், ராஜசேகர்
இந்திரன், ராஜசேகர்

யாரா இருந்தாலும் தப்புனா நேர்லதான் சொல்லுவார். பின்னாடி பேசுற பழக்கம் அவர்ட்ட கிடையாது. நேர்மையான மனுஷன். இதுனாலயே பொருளாதார ரீதியிலும் கஷ்டப்பட்டார். சமீபமா வீடு ஒண்ணு லோன்ல எடுத்தார். அவரோட எல்லா சேமிப்பையும் போட்டுதான் அந்த வீட்டை வாங்கினார். சத்யா டீம் சார்பா காசு கலெக்ட் செய்து, கொண்டு போய் கொடுக்கணும்னு யோசிச்சிட்டு இருக்கோம். எங்களால முடிந்த அளவுக்கு கண்டிப்பா அம்மாவுக்கு உதவுவோம்’’ என்று கண்களில் நீர் ததும்ப முடித்தார் இந்திரன்.

அடுத்த கட்டுரைக்கு