Published:Updated:

``வில்லன் லுக் பார்த்து சிரிச்சாங்க... வடிவேலு ஸ்டைல்ல நானும் ஒண்ணு பண்ணேன்!" - இர்ஃபான்

இர்ஃபான்
இர்ஃபான் ( Photo: Rakesh.P / Vikatan )

`ராஜாவுக்கு செக்' படத்தில் வில்லனாக நடித்த இர்ஃபானிடம் ஒரு சின்ன சாட்!

`` `கனா காணும் காலங்கள்' முதல் சீசன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி, `சரவணன் மீனாட்சி' 2-வது சீசனில் ஹீரோவானவர், இர்ஃபான். இவருக்காகவே `சரவணன் மீனாட்சி'யைப் பார்த்த ரசிகைகள் ஏராளம் இருக்கிறார்கள். ஆனாலும், சினிமாமீது இருந்த ஆர்வத்தினால், அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். பிறகு, `பட்டாளம்', `சுண்டாட்டம்', `பொங்கி எழு மனோகரா' போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால், அதற்கெனப் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பழையபடி சீரியல் வாய்ப்புகள் அழைக்க, `முன்னெடுத்த காலைப் பின் வைக்கப்போவதில்லை' என அவற்றையெல்லாம் மறுத்து, சினிமாவில் அங்கீகாரம் பெறப் போராடிக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில்தான், இவர் வில்லனாக நடித்த `ராஜாவுக்கு செக்' ரிலீஸானது. பலரையும் புருவம் உயர்த்த வைத்தது இவருடைய கதாபாத்திரம். படத்தின் அனுபவம் பற்றி இர்ஃபானிடம் கேட்டோம்.

இர்ஃபான்
இர்ஃபான்

``சினிமா பேக்கிரவுண்டு இல்லாத குடும்பத்துல இருந்துதான் சினிமாவுக்குள்ள வந்தேன் ப்ரோ. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா, `மெர்க்குரி பூக்கள்' படம் மூலமா, திரையில என்னோட முகம் வந்தது. டைரக்டர் ஆகணும்ங்கிறதுதான் என்னோட கனவு. பெங்களூர்ல டைரக்‌ஷன் கோர்ஸ் முடிச்சிட்டு, ஷார்ட் ஃபிலிம் எடுத்திருந்தேன். இப்படி நான் ஒரு பக்கம் நகர்ந்திட்டிருந்தபோது, காலம் என்னை வேறு பக்கம் திருப்பிவிட்டது. `கனா காணும் காலங்கள்', `சரவணன் மீனாட்சி'னு டி.வி-தான் என்னை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்ந்துச்சு. `சரவணன் மீனாட்சி' சீரியலுக்கு அப்புறம் நிறைய கேர்ள் ஃபேன்ஸ் கிடைச்சாங்க. அப்படியே சீரியல் பக்கமே இருந்திருந்தா, இப்போ வரைக்கும் பிஸியாவே இருந்திருப்பேன். ஆனா, என்னால அங்க இருக்க முடியலை.

சினிமா வாய்ப்பு தேடி அலைந்த சமயம், நான் பட்ட கஷ்டங்கள் நிறைய. எல்லாத்தையும் கடந்துதான் வாய்ப்புக்காகக் காத்திட்டிருந்தேன். நான் ஹீரோவா நடிச்ச படங்கள் எதுவும் சரியா போகாத சூழல்லதான், `ராஜாவுக்கு செக்' படத்துல வில்லனா நடிக்கிற வாய்ப்பு வந்தது. முதல்ல மறுத்துட்டேன். ஆனா, ஸ்க்ரிப்ட்டை படிச்சுப் பார்த்துட்டு பண்ணலாம்ங்கிற யோசனை வந்தது. `உனக்கு கேர்ள் ஃபேன்ஸ் அதிகம்; அவங்க எப்படி எடுத்துப்பாங்க தெரியலையே'னு எங்க வீட்டுலதான் பயந்தாங்க."

இர்ஃபான்
இர்ஃபான்
Photo: Rakesh.P / Vikatan

``இப்போ இந்தப் படம் ரிலீஸாகி, `உன்னுடைய பர்ஃபாமன்ஸ் நல்லா இருந்தது'னு சிலர் சொல்ல கேட்கும்போது, `நான் எடுத்த முடிவு தப்பா போகலை'னு சின்னதா நிம்மதி கிடைச்சிருக்கு. ஆனா, இண்டஸ்ட்ரியில இருந்துதான் இன்னும் என்னுடைய நடிப்பு பத்தி யாரும் சொல்லலை. அதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு" என்றவரிடம், ஷூட்டிங் அனுபவம் குறித்தும், சேரனோடு நடித்தது பற்றியும் கேட்டோம்.

``முதல் நாள் ஷூட்டிங்கிற்கு டைரக்டர் கேட்ட லுக்ல போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் அவராலே சிரிப்பை அடக்க முடியலை. `இந்தப் படத்துல நீங்க வில்லன். படத்தோட ஹீரோ சேரன்'னு சொன்னதும், யூனிட்ல இருந்த எல்லோரும் சிரிச்சிட்டாங்க. கஷ்டமா இருந்தாலும் `ப்ரண்ட்ஸ்' படத்துல எல்லோரும் தன்னைப் பார்த்து சிரிக்கிறப்போ, வடிவேலுவும் சேர்ந்து சிரிப்பாரே... அந்த மாதிரிதான் நானும் சிரிச்சு வெச்சேன்.

Vikatan

சேரன் சார்கூட நடிச்சப்போ, நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள்லாம் நடந்தது. இந்தக் கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கெட்டு உடம்பை வலுவாக்கியிருந்தேன். அதனால கலாய்ச்சாரா, உண்மையிலேயே பயந்தாரானு தெரியலை, `தம்பி, வெறித்தனமா இருக்கீங்க. ஸ்டன்ட் சீன்லாம் நிஜமா பண்றேன்னு இறங்கிடாதீங்க. கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க'னு கேட்டுகிட்டார். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன்" என்கிறார் இர்ஃபான்.

அடுத்த கட்டுரைக்கு